Thursday, April 24, 2025

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு - நேர்காணல்...!

"இணைப்பே இலக்கியம்" என்ற முழக்கத்துடன்  திருச்சியில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடத்தும்  உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு -

- மணிச்சுடர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் பேராசிரியர் சேமுமு முகமதலி தகவல் -

தமிழகத்தில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் கடந்த 1973ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் தொடங்கி, கடந்த 50 ஆண்டுகளாக சிறப்பான இலக்கியச் சேவையை ஆற்றி வருகிறது. 1973ஆம் ஆண்டு முதல் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்திய இஸ்லாமிய இலக்கியக் கழகம், அதனைத் தொடர்ந்து 8 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி, தற்போது வரும் மே 9, 10, 11 ஆகிய தேதிகளில் திருச்சியில் எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் 9வது மாநாட்டை நடத்த இருக்கிறது. எல்லா மாநாடுகளிலும் அறிஞர்கள், பேராளர்கள், ஆய்வுரையாளர்கள், கவிஞர்கள், இலக்கியப் புலிகள் பங்கேற்று சிறப்பித்ததைப் போன்று இந்த 9வது மாநாட்டிலும், உலகம் முழுவதிலும் இருந்து தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்  பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்கள். 

9வது மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், மாநாட்டு நெறியாளர்கள் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பேராசிரியர் முனைவர் தி.மு.அப்துல் காதர், நீதியரசர் ஜி.எம்.அக்பர் அலி ஆகியோரின் அருமையான ஆலோசனைகளை பெற்று, மாநாட்டு அமைப்பாளர்கள் பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி, பேராசிரியர் முனைவர் மு.இ.அகமது மரைக்காயர், எஸ்.எஸ்.ஷாஜஹான் ஆகியோர் சிறப்பாக பணிகளைச் செய்துவருகிறார்கள். அதன்படி, மாநாட்டுப் பணிகள் வேகமாக நடைபெற்றுவரும் நிலையில், இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் சேமுமு முகமதலி அவர்களிடம், உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டின் நோக்கம், அதில் பங்கேற்கும் அறிஞர் பெருமக்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அறிய முற்பட்டு, மணிச்சுடர் நாளிதழுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். மிகவும் பிஸியான நேரத்திற்கு இடையே கூட, எந்தவித தயக்கமும் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியுடன் நேர்காணலை அளிக்க ஒப்புக் கொண்டு, சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் அவர்களுக்கு, பேராசிரியர் சேமுமு முகமதலி அவர்கள், மூன்று நாள் மாநாடு குறித்து, பல சுவையான தகவல்களை தெரிவித்தார். அதை மணிச்சுடர் வாசகர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ் சமுதாயத்திற்கும் வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். 

இஸ்லாமிய இலக்கியக் கழகமும் மாநாடுகளும்:

தமிழ்ச் சமுதாயத்திற்கு மிகச் சிறந்த முறையில் இலக்கியச் சேவையை ஆற்றி வரும் இஸ்லாமிய இலக்கியக் கழகம், கடந்த 1973ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட அந்த ஆண்டிலேயே திருச்சியில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய முதல் மாநாட்டை இரண்டு நாட்கள் இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடத்தியது. பின்னர் இரண்டாவது மாநாட்டை சென்னை புதுக் கல்லூரியில் 1974, ஜுன் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தியது. மூன்றாவது மாநாடு 1978 ஜனவரி 13, 14, 15 ஆகிய தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெற்றது. 

நான்காவது மாநாடு 1979, ஜுன் 29, 30 மற்றும் ஜுலை ஒன்று ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் இலங்கை கொழும்பு நகரில் நடைபெற்றது. ஐந்தாவது மாநாடு கீழக்கரையில் 1990, டிசம்பர் 29, 30, 31 ஆகிய மூன்று நாட்கள் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஆறாவது மாநாடு மற்றும் இஸ்லாமிய இலக்கியக் கழக வெள்ளி விழா கூத்தாநல்லூர் புரவலர்கள் சார்பாக சென்னையில் 1999 நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஏழாவது மாநாடு, மீண்டும் சென்னையில் 2007, மே 25, 26,27 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு உமறுப்புலவர் விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 8வது மாநாடு, 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 14, 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் கும்பகோணத்தில் கிஸ்வா அமைப்பின் ஒத்துழைப்போடு நடைபெற்றது. தற்போது உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய  ஒன்பதாம் மாநாடு திருச்சியில் உள்ள  எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் மே 9, 10, 11 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அதற்காக சிறப்பான  ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு:

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொன்விழாவுடன் நடத்தப்படும், உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டின் தொடக்க விழா, மே 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் சேமுமு முகமதலி தலைமையில் நடைபெறுகிறது. இந்த தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், தொடக்க உரையாற்றுகிறார். மாநாட்டின் முதல் நாளில் பங்கேற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தொடக்க விழா பேருரையை ஆற்றுகிறார்.  தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, 9வது மாநாட்டின் சிறப்பு மலர் மற்றும் ஆய்வு கோர்வை, யார், எவர் ஆகிய நூல்களை வெளியிடுகிறார்.  முதல் நாள் மாநாட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். 

இதனைத் தொடர்ந்து சமய நல்லிணக்கக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் மௌலவி அப்துல் காதர் பாகவி, கும்பகோணம் திருவடிக் குடில் சுவாமி அவர்கள், கிறித்துவ மத போதக்ர் ஜெகத் காஸ்பர் ராஜ், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு, சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். 

பின்னர், கவியருவி பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது.  இந்த கவியரங்கில் 20 கவிஞர்கள் பங்கேற்று, தங்களுடைய அழகிய கவிதைகளை வாசித்து, தமிழ் உள்ளங்களை கவர இருக்கிறார்கள். 

வெளிநாடுகளில் இருந்து குவியும் தமிழ் அறிஞர்கள்:

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டில், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, பஹ்ரான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்கள், சமய பெரியவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்தியாவில் இருந்து 600 பேராளர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.  

இணைப்பே இலக்கியம் என்ற முழக்கம்:

இணைப்பே இலக்கியம் என்ற இலட்சிய முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாடு, மத ரீதியாக மக்களை பிரிக்கும் ஆதிக்கச் சக்திகளின் உண்மையான முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, சமய நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வழி வகுக்கும். மாநாட்டில் முக்கிய அம்சமாக மார்க்க அறிஞர்களின் அரங்கம் நடைபெறுகிறது. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில தலைவர் மௌலானா பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த சிறப்பு அரங்கில், பல சமய நல்லறிஞர்கள் கலந்துகொண்டு தங்களுடைய உரைகளுடன் ஆய்வு அறிக்கைகளையும் சமர்ப்பிக்க இருக்கிறார்கள். 

மாநாட்டின் இரண்டாம் நாள் தொடக்க நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கோவி.செழியன், ஆவடி நாசர், சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.  இதனைத் தொடர்ந்து நடைபெறும் 11 அமர்வுகளில் 110 பேர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் தங்களுடைய ஆய்வுகளை சமர்ப்பிக்க இருக்கிறார்கள். குறிப்பாக, மார்க்கம், வரலாறு, பண்பாடு, இலக்கியம், நாட்டு நடப்பு என பல்வேறு தலைப்புகளில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். 

இதேபோன்று மகளிர் அரங்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி தேசிய தலைவர் பாத்திமா முசப்பர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் புகழ்பெற்ற தமிழ் பேராசிரியை பர்வீன் சுல்தானா உட்பட 150 பெண்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். 

மாநாட்டின் முக்கிய அம்சமாக ஊடக அரங்கம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். இதில் பங்கேற்றும் புகழ்பெற்ற ஊடகவியலாளர்கள், ஊடகம் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் குறித்தும் அதன் பொறுப்புகள் குறித்தும் தங்களுடைய கருத்துகளை எடுத்துக் கூற இருக்கிறார்கள்.  இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., ஆளுர் ஷாநவாஸ் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரத்தின் தலைவர் ஜனாப் என்.எம்.அமீன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். 

இரண்டாம் நாள் இரவு தீன் இசை நிகழ்ச்சி எம்.எம்.அப்துல் குத்தூஸ் என்ற இறையன்பன் குத்தூஸ் தலைமையில் நடைபெறுகிறது. புகழ்பெற்ற இஸ்லாமிய பாடகர் நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா நினைவாக நடைபெறும் இந்த தீன் இசை நிகழ்ச்சியில் 12க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பாடகர்கள் கலந்துகொண்டு, அனைவரின் காதுகளுக்கும் தீன் இசையை வழங்க இருக்கிறார்கள். 

மூன்றாவது நாள் நிகழ்ச்சிகளின் சிறப்பு:

மாநாட்டின் மூன்றவாது நாள், நாடு நடப்பும் என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.  மனித நேய மக்கள் கட்சித் தலைவர் முனைவர் பேராசிரியர் மு. ஹி. ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.  இதனைத் தொடர்ந்து வாழ்த்தரங்கம் நடைபெறுகிறது. இதில், உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து கலந்துகொண்டு சிறப்பிக்கும் அறிஞர் பெருமக்கள் வாழ்த்தி உரையாற்ற இருக்கிறார்கள். 

மாநாட்டின் நிறைவாக நடைபெறும் நிறைவு நிகழ்ச்சி, நீதியரசர் ஜி.எம்.அக்பர் அலி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. இதில், நீதிபதி கே.என்.பாஷா, திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., ஆகியோர் கலந்துகொண்டு, சிறப்பித்து, தங்களுடைய கருத்துகளை முன்வைக்க இருக்கிறார்கள். 

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகிய 26 பேருக்கு 20 ஆயிரம் ரூபாய் பொற்கிழிவுடன் இலக்கியச் சுடர் விருது அளிக்கப்படுகிறது இதேபோன்று, 10 பேருக்கு இலக்கியப் புரவலர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு விருதுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்துகிறார். இறுதியில் பல முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளன. 

- சந்திப்பு: சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: