அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு எதிரொலி : மதரஸா அன்வாருல் உலூம் மீண்டும் திறப்பு....!
பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் முஸ்லிம்களின் கல்வியை கேள்விக்குறியாக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வக்பு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, இந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரம் அடைந்துள்ளன. தற்போது வக்பு திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் கூட, உத்தரப் பிரதேச அரசு, மதரஸாக்களை குறிவைத்து அவற்றை மூட பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறது. இப்படி சட்டத்திற்கு புறம்பாக மூடப்பட்ட ஒரு மதரஸாதான் உத்தரப் பிரதேச மாநிலம் ஜமுனாஹாவின் பங்காய் பஜார் பகுதியில் அமைந்துள்ள மதரஸா அன்வாருல் உலூம் ஆகும்.
மதரஸா சீல் வைப்பு :
உத்தரப் பிரதேசத்தின் ஜமுனாஹாவின் பங்காய் பஜார் பகுதியில் அமைந்துள்ள மதரஸா அன்வாருல் உலூமிற்கு கடந்த ஏப்ரல் 27 அன்று வந்த அதிகாரிகள், அந்த மதரஸா சரியான ஆவணங்கள் இல்லாமல் இயங்குவதாகக் கூறி சீல் வைத்தனர். இருப்பினும் சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம், மதரஸாவின் இயக்குனர் முஹம்மது காசிம், கடந்த 1974 ஆம் ஆண்டு அடிப்படைக் கல்வி உரிமையின் அடிப்படையில் கல்வி அதிகாரியால் தமது கல்வி நிறுவனத்திற்கு (மதரஸாவிற்கு) நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டதைக் காட்டும் பதிவுகளை வழங்கினார். ஆனால் காசிமின் வார்த்தைகளை கேட்கவோ, அல்லது ஆவணங்களை சரிபார்க்கவே அதிகாரிகள் விரும்பவில்லை.
தங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டளையை, உத்தரவை நிறைவேற்ற துடித்துக் கொண்டு இருந்த அவர்கள், மதரஸாவின் கதவுகளை இழுத்து மூடி சீல் வைத்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முஹம்மது காசிம், "ஆவணங்கள் சரியாக உள்ளன என்று நான் அவர்களிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் எங்களை குற்றவாளிகளைப் போல நடத்தி கட்டிடத்தை (மதரஸாவை) பூட்டினர்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு :
பின்னர் முஹம்மது காசிம், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மதரஸாவை மூடி தன்னிச்சையாக சீல் வைப்பதை எதிர்த்து ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆவணங்களின் சரியான சரிபார்ப்பு இல்லாமல் சீல் வைக்கப்பட்ட ஷ்ரவஸ்டியில் உள்ள மதரஸா அன்வாருல் உலூமை மீண்டும் திறக்க உத்தரவிட்டது. மேலும், உத்தரபிரதேச சிறுபான்மை நலத்துறைக்குஅலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் மதரஸாக்கள் மூடப்படுவது குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு முஸ்லிம் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளித்துள்ளது.
இந்த வழக்கில் கடந்த மே 14 அன்று, உயர்நீதிமன்றம் மூடல் உத்தரவை நிறுத்தி வைத்து, மதரஸாவை உடனடியாக மீண்டும் திறக்க உத்தரப் பிரதேச நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவு மே 17 அன்று முஹம்மது காசிமுக்கு வந்து சேர்ந்தது. இறுதியாக மே 28 அன்று மூத்த மாவட்ட அதிகாரிகள் முன்னிலையில் மதரஸா வளாகம் திறக்கப்பட்டது.
மதரஸா மீண்டும் திறக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ள முஹம்மது காசிம், "நீதி வெல்லும் என்பதை நீதிமன்றம் நிரூபித்துள்ளது" என்று பெருமையுடன் கூறியுள்ளார். மேலும், "எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை, குழந்தைகளை மீண்டும் மதரஸாவிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு உரிய கல்வியை சொல்லி தருவதாகும். மதரஸா சீல் வைக்கப்பட்டதால், அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இனி அவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்" என்றும் காசிம் உறுதி அளித்துள்ளார்.
முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மட்டுமே குறி :
இந்த சம்பவம், குறிப்பாக நேபாள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள மதரஸாக்கள் மீதான பரந்த அளவிலான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகும். ஷ்ரவஸ்தியில் மட்டும், 297 மதரஸாக்களில் 105 மட்டுமே அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாதவற்றில், இதுவரை 68 மதரஸாக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. சமூகத் தலைவர்கள் இந்த நடவடிக்கை தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், ஒருதலைப்பட்சமாகவும் இருப்பதாக வாதிடுகின்றனர்.
முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மட்டுமே குறிவைத்து மூடப்படுவதற்கு பல்வேறு மார்க்க அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. “எதற்கும் ஒரு முறை உள்ளது. முறையான விசாரணை இல்லாமல், முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மட்டுமே குறிவைக்கப்படுகின்றன” என்று மூத்த மௌலானா அப்துல் ரஹ்மான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மதரஸா சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு முக்கியமான முன்னுதாரணமாக சட்ட வல்லுநர்கள் பார்க்கிறார்கள். “முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் எந்த ஒரு கல்வி நிறுவனத்தையும் மூட எந்த அதிகாரத்திற்கும் உரிமை இல்லை” என்று வழக்கறிஞர் இக்பால் அகமது உறுதிப்பட கூறியுள்ளார்.
மதரஸா மாணவர்கள் மகிழ்ச்சி :
மதரஸா அன்வாருல் உலூமில் 5 ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது பைசான் போன்ற மாணவர்களுக்கு, மதரஸா மீண்டும் திறப்பது இயல்பு நிலைக்குத் திரும்புவதாகும். “எனது நண்பர்களையும் எனது ஆசிரியரையும் நான் மிஸ் செய்தேன். நான் மீண்டும் படிக்க விரும்புகிறேன்” என்று அந்த மாணவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளான்.
ஷகீலா பானு போன்ற பெற்றோர்கள் இந்த உணர்வை எதிரொலித்தனர். “இந்த மதரஸா மட்டுமே எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும். ஒரே வழி. தனியார் பள்ளிகளில் எங்கள் குழந்தைகளை எங்களால் சேர்க்க முடியாது. மதரஸாவின் மூடல் எங்களுக்கு ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட தாக்குதலாக நான் உணர்ந்தேன்” என்று ஷகீலா பானு கூறியுள்ளார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மதரஸா மீண்டும் திறக்கப்பட்டாலும், பாஜக அரசின் நடவடிக்கையால், இதேபோன்ற மூடல்கள் வேறு இடங்களில் தொடர்வதால் உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் சமூகம் மத்தியில் தொடர்ந்து அச்சம் நீடிக்கிறது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment