Tuesday, June 10, 2025

குர்பானி இறைச்சி ஏழை நாடுகளுக்கு எப்படி வினியோகம் செய்யப்படுகிறது?

ஹஜ்ஜின்போது ஹாஜிகள் கொடுக்கும் குர்பானி இறைச்சி  ஏழை நாடுகளுக்கு எப்படி வினியோகம் செய்யப்படுகிறது?

2025ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் கடமையை உலகம் முழுவதும் இருந்து சுமார் 17 லட்சம் இஸ்லாமியர்கள் மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்தாண்டு கோடை வெப்பம் அதிகளவு இருந்தபோதும், சவுதி அரேபிய அரசு ஹஜ் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. இதன்மூலம் எந்தவித சிரமமும் இல்லாமல், ஹஜ் கடமையை 17 லட்சம் முஸ்லிம்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். வயது முப்பு, கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களால் குறைந்தளவு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் முந்தைய ஆண்டுகளை விட மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கை இருப்பதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

கடும் நடவடிக்கையால் உயிரிழப்புகள் குறைந்தன :

2025 ஜூன் 4 முதல் 9 வரை நடைபெற்ற ஹஜ் யாத்திரையின்போது 17 லட்சம் ஹாஜிகள் தங்களது கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள். இது கொரோனா தொற்றுநோய் காலத்தைத் தவிர்த்து 30 ஆண்டுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். வரலாற்று ரீதியாக கடுமையான வெப்பம் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக ஹஜ் காலத்தில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு இறுதி இறப்பு எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், தனிப்பட்ட நாடுகள் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவு செய்துள்ளன. உள்ளூர் அறிக்கைகளின்படி, 175 இந்தோனேசிய ஹாஜி இறந்தனர். மலேசியாவைச் சேர்ந்த 10 பேர், ஈரானைச் சேர்ந்த 13 பேர் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த ஏழு பேரும் உயிரிழந்தனர். பாகிஸ்தான் மற்றும் இந்தியா உட்பட ஹஜ்ஜில் பரவலாக பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பிற நாடுகளைச் சேர்ந்த இறப்பு எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

2024 ஆம் ஆண்டில், இறந்தவர்களில் 83 சதவீதம் பேருக்கு அதிகாரப்பூர்வ அனுமதி இல்லை. இது அவர்கள் குளிரூட்டும் அமைப்புகள் அல்லது சுகாதார சேவைகளை அணுகுவதைத் தடுத்தது. இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு முன்னதாக, சவுதி அதிகாரிகள் சோதனைகளை நடத்தி, பதிவு செய்யப்படாத யாத்ரீகர்களை அடையாளம் காணவும், மோசடியான பயண வழங்குநர்களைக் கட்டுப்படுத்தவும் ட்ரோன் கண்காணிப்பைப் பயன்படுத்தினர். விளம்பரப் பலகைகள், ஊடகங்கள் மற்றும் வெகுஜன குறுஞ்செய்தி எச்சரிக்கைகள்  "அனுமதி இல்லாமல் ஹஜ் செய்ய முடியாது" என யாத்ரீகர்களை எச்சரித்தன. இதன் காரணமாக 17 லட்சம் ஹாஜிகள் மிகச் சிறந்த முறையில் தங்களது ஹஜ் பயணத்தை எளிதாக நிறைவேற்ற முடிந்தது. 

இந்தாண்டு ஹஜ் காலத்தில் ஒரு லட்சத்து 47 ஆயிரம்  சுகாதார சேவை மையங்கள் அமைக்கப்பட்டன.  இதனால் ஹாஜிகளின் பயணம் மிகவும் எளிதாக அமைய வாய்ப்பு உருவானது.  வரும் ஆண்டுகளில் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதால், ஹஜ் பயணம் செய்யும் ஹாஜிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு உருவாகும் என சவுதி அரேபிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

குர்பானி இறைச்சி வினியோகம் :

மிகவும் பாதுகாப்புடன் நிறைவேற்றப்பட்ட ஹஜ் கடமையின்போது சுமார் 17 லட்சம் ஹாஜிகள் குர்பானி கொடுத்து, தங்களது தியாக உணர்வை மிகவும் சிறந்த முறையில் வெளிப்படுத்தினர்.  அதன்படி, இந்தாண்டு, 9 லட்சத்து 50 ஆயிரம் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை குர்பானியாக கொடுக்கப்பட்டன. சுமார் 84 மணி நேரத்தில் குர்பானிக்காக அறுக்கப்பட்ட ஆடு, மாடு, ஓட்டகம் ஆகியவற்றின் இறைச்சியை மிகச் சிறந்த முறையில் வினியோகம் செய்ய ஏற்கனவே சவுதி அரேபியாவின் ஹாடி மற்றும்  அதாஹியைப் பயன்படுத்துவதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

மக்கா நகரம் மற்றும் புனித தலங்களுக்கான ராயல் கமிஷனின் திட்டங்களில் ஒன்றான இந்தத் திட்டம், புனித மஸ்ஜித்துக்கு வரும் யாத்ரீகர்களுக்கு ஹாடி மற்றும் ஃபித்யா சடங்குகளைச் செய்வதை எளிதாக்குவதையும், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தங்கள் சார்பாக உதியா (தியாகம்), சதகா (தொண்டு) மற்றும் அகீகா (புதிதாகப் பிறந்தவருக்கான தியாகம்) சடங்குகளைச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பின்னர் குர்பானி இறைச்சி ராஜ்ஜியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தகுதியான ஏழைப் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

சவுதி அரேபியாவின் அதாஹி திட்டம், அதன் சொந்த விநியோக நடவடிக்கைகள் மூலமாகவும், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், பல நாடுகளில் உள்ள ஏழை தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு குர்பானி (தியாக) இறைச்சியை விநியோகிக்கிறது. பெரும்பாலும் ஹஜ் கடமையில் இருந்து வரும் இறைச்சி, பதப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக தொகுக்கப்பட்டு, தகுதியான ஏழைகளுக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பாக ஹஜ் காலத்தில், இறைச்சியின் விநியோகம் ஹராம் ஷெரீப் பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள ஏழைகளுக்கு கொடுப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  அத்துடன் உலகம் முழுவதும் உள்ள  27 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் குர்பானி இறைச்சி அனுப்பி வைக்கப்படுகிறது. 

விநியோக வலையமைப்பு :

அதாஹி திட்டம் நேரடியாக விநியோகத்தை மேற்பார்வையிடுகிறது. சவுதி அரேபிய தூதரகங்கள் மற்றும் பயனடையும் நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.    இந்த விநியோகம் வங்கதேசம், பாகிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் உட்பட 27 நாடுகளுக்கு நீண்டுள்ளது.    ஹஜ் காலத்தில் அதிக எண்ணிக்கையிலான குர்பானி கொடுக்கப்படும்போது, இந்த திட்டம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் அதாஹி இறைச்சி திறம்பட விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய உதவுகிறது.   

மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு இறைச்சியை விநியோகிக்க அதாஹி உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் மற்றும் வக்ஃப் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இறைச்சி பதப்படுத்தப்பட்டு, பேக் செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்வதற்கான விரிவான திட்டம் இந்த திட்டத்தில் உள்ளது என்று அதாஹி திட்டத்தின் பொறுப்பாளர்கள் கூறுகிறார்கள். 

குர்பானி இறைச்சி சரியான முறையில் ஏழைகளுக்கு சென்று சேர வேண்டும் என்பதால், சட்டவிரோத இடைத்தரகர்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். எனவே, ஷரியா மற்றும் சுகாதார விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அதாஹி தளத்தைப் பயன்படுத்த தனிநபர்களை ஊக்குவிக்கின்றனர்.   

இப்படி மிகச் சிறந்த முறையில் குர்பானி இறைச்சி வினியோகம் செய்யப்படுவதால் உலகம் முழுவதும் சுமார் 3 கோடிக்கும் அதிகமான ஏழைகள் பாதுகாப்பான முறையில் இறைச்சியை பெற்று உண்டு மகிழ்கிறார்கள். 

அடுத்த 25 ஆண்டுகளில் ஹஜ் காலம் :

இதுஒருபுறம் இருக்க, அடுத்த 25 ஆண்டுகளில் ஹஜ் காலம் கோடை பருவத்தில் வராது என சவுதி அரேபியா அரசு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, வரும் 2026ஆம் ஆண்டு முதல் 2050 ஆம் ஆண்டு வரை மிகப்பெரிய அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 25 ஆண்டுகளில்  ஹஜ் செல்லும் ஹாஜிகள் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கடுமையான குளிர், மழை உள்ளிட்ட பருவ காலங்களை ஹாஜிகள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனினும், தியாகம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் செய்யப்படும் ஹஜ் கடமையின்போது, எந்தவித சிரமங்களையும் எதிர்கொள்ள முஸ்லிம்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் உண்மையாகும். எனவே, கடும் கோடை, அதிக குளிர், கன மழை என எது வந்தாலும், அனைத்தையும் எதிர்கொண்டு, தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்றுவதில் தான் ஹாஜிகள் எப்போதும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதன்மூலம் ஹஜ் கடமையை பெரும் ஆனந்தமாக நிறைவேற்றிய நிம்மதியை அவர்கள் பெறுகிறார்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: