Tuesday, August 26, 2014

தோசை+இட்லி = தத்துவம்.......!

தோசை+இட்லி = தத்துவம்.......!





என்னது... 

தோசை+இட்லி = தத்துவமா....!

என ஆச்சரியத்தில் நீங்கள் புருவத்தை உயர்த்துவது நன்றாக தெரிகிறது.

தோசை, இட்லி ஆகியவற்றை ருசித்து சாப்பிடுவதற்கு மட்டுமல்ல...

அதில், பல தத்துவங்களும் அடங்கி இருக்கிறது என்கிறார்கள் நமது இளைஞர்கள்...

தோசை, இட்லியை வைத்து நிறைய தத்துவங்களை படைக்கலாம் என்கிறார்கள் நமது இளம் சிங்கங்கள்.



ஆம் நண்பர்களே,

ஒருநாள் எனக்கு வந்த எஸ்.எம்.எஸ். அதைத்தான் சொல்லியது.

வழக்கமாக வரும் எஸ்.எம்.எஸ்.தானே என நினைத்து படித்தேன்.

அதை படிக்க படிக்க என்னால் சிரிப்பு அடங்க முடியவில்லை...

அப்படி என்ன எஸ்.எம்.எஸ். அது என நீங்கள் கேட்பீர்கள்..

இதோ அதை உங்கள் பார்வைக்கும் வைக்கிறேன்.

அதை படிக்கும் நீங்களும் நிச்சயம் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்...



அந்த குறுச்செய்தி இதோ...

" பெண்ணுங்க மனசு
 தோசை மாதிரி
  ஒன் சைட் வைட், (White)
 அண்ட்
  அனதர் சைட் பிளாக்....(Black)
 பட்,
 பசங்க மனசு
 இட்லி மாதிரி
 சுத்தி, சுத்தி
 பார்த்தாலும்,
 வெள்ளையாதான்
 இருக்கும்....! "




தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த மொழியில், மிகச் ஜாலியாக இருக்கும் இந்த குறுஞ்செய்தியை படித்த பிறகு, நீங்களும் நிச்சயம் சிரித்து இருப்பீர்கள்.....!

இந்த குறுச்செய்தியில் அப்படி என்ன பெரிய என்ன தத்துவம் இருக்கிறது என நீங்கள் கேட்கலாம்...

பெண்களை சிறுமைப்படுத்தி அல்லவா குறுச்செய்தி இருக்கிறது என குற்றம் சாட்டலாம்...

ஆனால், உண்மை அப்படி இல்லை.

பெண் இனத்தை சிறுமைப்படுத்தும் நோக்கில் இந்த குறுச்செய்தி இல்லை என்றே கூறலாம்...


வாழ்க்கை போராட்டத்தில் இன்பம், துன்பம் ஆகிய இரண்டும் சகஜம்.

அந்த இரண்டையும் தாங்கிக் கொள்ளும் குணம் பெண் இனத்திற்குதான் அதிகம்.

பெண்கள்தான், இன்பம், துன்பம் ஆகியவற்றை அதிகம் தாங்கிக் கொண்டு, ஆண்களுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள்.

வாழ்கிறார்கள்.

ஆனால், ஆண் இனம் இன்பத்தை மட்டுமே அனுபவிக்கும் குணம் கொண்டது

துன்பத்தை மட்டும், பெண்ணிடம் தள்ளிவிடும் சுபாவம் கொண்டவர்கள் ஆண்கள்


இப்படி, சொல்லாமல் சொல்கிறது இந்த தமாஷான குறுச்செய்தி...

உலக நடப்புகள், அன்றாட செய்திகள், தொலைக்காட்சிகளில் வரும் தொடர்கள் ஆகியவற்றை காணும்போது, இது உண்மைதான் என நினைக்க தோன்றுகிறது.

என்ன சரிதானே.....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Sunday, August 24, 2014

சென்னையில் நான்........! (3)

சென்னையில் நான்........! (3)



மதராஸ்...... மெட்ராஸ்...... 

இப்படி பல பெயர்களில் சென்னை அழைககப்பட்ட காலம் அது.

ஏன் இன்றும் பலர் சென்னையை மதராஸ் என்றே அழைத்து வருகின்றனர்...

வடமாநிலங்களில், சென்னைவாசிகளை மதராஸி என அழைப்பது வழக்கமாகவே இருந்து வருகிறது.

நம்ம பையன் மெட்ராஸ்லே வேலை பார்க்கிறான்...

இப்படி பெருமையாக பேசும் தமிழகத்தின் பெற்றோர்களை இன்றும் காணலாம்...

இப்படி, பலருக்கு பெருமையை சேர்க்கும் சென்னை, எனக்கும் பெருமையை சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

சென்னையில் நான் பல ஊடக ஜாம்பவான்களை சந்தித்து இருக்கிறேன்.

ஏன் இன்றும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அவர்களில் ஒருசிலரின் பட்டியல் இதோ....



பொன்.மகேந்திரன் (ராஜ் டி.வி. தலைமை செய்தி ஆசிரியர்)
=======================================================

இவரை பற்றி நிறைய எழுதலாம்...

ஆனால் ஒருசில வரிகளில் மட்டும் சில தகவல்கள்,...

நல்ல பண்பாளர்...

பணி நேரத்தில், சில நேரங்களில் கடுமையாக நடந்து கொண்டாலும் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி, சகோதரத்துடன் பழகும் குணம் கொண்டவர்...

ஈகைத் திருநாள்... தியாகத் திருநாள் உள்ளிட்ட முக்கிய திருநாள்களில், நான் மறந்தாலும், தான் மறக்காமல்,  எனக்கு தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக வாழ்த்துச் செய்தியை அனுப்பி என் மகிழ்ச்சியில் தானும் பங்கெடுத்து கொள்ளும் நல்ல சகோதரர்.

விஷுவல் மீடியாவில் செய்திகளை எப்படி சுருக்கமாக தர வேண்டும் என்பதை இவரிடம் இருந்து நிறைய நாம் கற்றுக் கொள்ளலாம்....

எந்த செய்தி இருந்தாலும், அதை நான்கு வரிகளில் தர வேண்டும் என கூறி, செய்திகளை அழகாக, நேர்த்தியாக நேயர்களிடம் கொண்டு சேர்க்கும் திறமை. பொன்.மகேந்திரனுக்கு நிறைய உண்டு.



ராஜா (சன் டி.வி.)
================

சன் தொலைக்காட்சியின் செய்திகளுக்கு மக்களிடம் இன்றும் ஒரு ஈர்ப்பு இருக்க முக்கிய காரணமாக இருந்தவர்.

செய்திகளில் வரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், விஷுவலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சொல்லி,  விஷுவலை கண்முன் கொண்டு வந்து நிறுத்த இவர் படுத்தும்பாட்டால், பலர் சன் டி.வி.யின் வேலையே வேண்டாம் என கூறி நடையை கட்டியது உண்டு.

செய்தி அறையில் இவர் இருக்கும்போது, வீண் பேச்சுக்கே இடம் இருக்காது.

வெறும் அமைதி மயமாகதான் செய்தி அறை இருக்கும்...

பல காரணங்களால் நான் சன். டி.வியின் பணியில் இருந்து விலக முடிவு செய்து என்னுடைய பணி விலகல் கடிதத்தை ராஜாவிடம் அளித்தபோது, அதை வாங்கி தூக்கி எறிந்தவர்.

உங்களை வேலையை விட்டு அனுப்ப முடியாது என கண்டிப்பாக கூறியவர்.

ராஜாவின் இந்த செயலே, சன் டி.வியில்  நான் உண்மையாக உழைத்ததற்கு அடையாளம்.

விஷுவல் மீடியா குறித்து இவரிடமும் நான் நிறைய பாடங்களை கற்று கொண்டேன்.



டாயல் (தலைமை செய்தி ஆசிரியர், கலைஞர் டி.வி.)
================================================

மணிச்சுடர் நாளிதழின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்தபோதே, டாயல் எனக்கு அறிமுகமானவர்.

அன்று முதல் இன்று வரை அவரிடம் தொடர்ந்து பழகி வருகிறேன்.

தமிழக ஊடக வரலாற்றில் டாயலின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

சன் டி.வி.யின் 24 மணி நேர செய்திப்பிரிவின் தலைமை செய்தி ஆசியராக இருந்து பல சாதனைகளை புரிந்த இவர், தற்போது, கலைஞர் டி.வி.யின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வரலாறு படைத்து வருகிறார்.





தில்லை (ஜெயா தொலைக்காட்சி + புதிய தலைமுறை தொலைக்காட்சி)
===================================================================

ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்த தில்லை, தற்போது, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

ஜெயா தொலைக்காட்சியில் எனக்கு பணிபுரிய வாய்ப்பு அளிகக இவர், பல முறை முயற்சி செய்து இருக்கிறார்.

இவரை ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போது, இரண்டே நாட்களில் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்பார்.

நெகடிவ்வாக எதையும் பேசமாட்டார்.

இறுதியாக என்னை எப்படியும் ஜெயா டி.வி.யில் ஊழியனாக சேர்த்துவிட வேண்டும் என இவர் முடிவு செய்து,  அதற்காக முயற்சி செய்த நேரத்தில், இவரே, புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

எனக்கு ஜெயா தொலைக்காட்சியில் மீண்டும் சேரும் வாய்ப்பு பறிபோனது.



ஜலால் (ஜி தமிழ் தொலைக்காட்சி)
================================

ஜலாலும் எனக்கு மணிச்சுடர் நாளிதழ் அலுவலகத்தில் அறிமுகமானவர்தான்.

மிகச் சிறந்த பண்பாளர்.

சன் டி.வி. ராஜ் டி.வி. என பல ஊடகங்களில் பணிபுரிந்த இவர், பின்னர், ஜி தமிழ் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராக பொறுப்பு ஏற்று, சாதனைகள் பல புரிந்தவர்.

தற்போது, ஊடக துறையில் இருந்து இவர் ஒதுங்கி இருந்தாலும், இவரை சுற்றி இன்னும் ஊடக துறை சுற்றிக் கொண்டே இருக்கிறது.



பாஸ்கர் சந்திரன் (தலைமை செய்தி ஆசிரியர் மக்கள் தொலைக்காட்சி)
=================================================================

மக்கள் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டபோது, முதல் ஊழியராக சேர்ந்த பாஸ்கர் சந்திரன், இன்று அதன் தலைமை செய்தி ஆசிரியராக உயர்ந்து இருக்கிறார்.

சன் டி.வி.யில் இருந்து மக்கள் தொலைக்காட்சிக்கு நான் இடம் மாறியபோது, என்னிடம் அன்பு பாராட்டி பழகியவர்.

இன்றும் அவருடன் எனக்கு நல்ல நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இவர்கள் மட்டுமல்ல,



ஜெயசீலன் (தந்தி டி.வி.)
ஜார்ஜ். (சன் டி.வி)
ஸ்ரீதர் (சன் டி.வி.)
ராஜராஜராஜன், (மெகா டி.வி.)
மதிவாணன் (ஜி தொலைக்காட்சி)
மதிவாணன் (ஜெயா தொலைக்காட்சி)
பார்த்திபன் (தந்தி தொலைக்காட்சி)

இப்படி பல ஊடக ஜாம்பவான்களை நான் சந்தித்தது இந்த சென்னையில்தான்.

ஊடக துறை குறித்து நிறைய அனுபவங்களை பெற்றதும் இந்த சென்னையில்தான்...

இன்னும் பல சுவையான அனுபவங்கள் பின்னர் பார்க்கலாம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Saturday, August 23, 2014

சென்னையில் நான்.........! (2)

சென்னையில் நான்.........! (2)

பலரின் கனவு நகரமாக இருக்கும் சென்னையை சுற்றி பார்க்க யாருக்குதான் ஆசை இல்லை...

கல்லூரி நாட்களில் எனக்கும் இந்த ஆசை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

அப்படிதான் ஒருநாள், கல்லூரி தோழர்  ஒருவருடன் இணைந்து வேலூரில் இருந்து சென்னைக்கு கிளம்பினேன்.


அப்போது, பாரி முனையில் இருந்த பேருந்து நிலையத்திற்கு இருவரும் வந்து சேர்ந்தோம்.

அங்கிருந்த பல கடைகளை சுற்றி பார்த்த நண்பர், பூக்கடை பகுதியில் இருந்த பழக்கடை அங்காடிக்குள் நுழைந்தார்.

நான் வெளியே நின்றுக் கொண்டு, சென்னையில் சாலைகளில் மாநகர பேருந்துகள் வேக வேகமாக சென்றுக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.



பழக்கடை அங்காடிக்குள் நுழைந்த நண்பர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை...

என்ன நேர்ந்தது பழக்கடையே விலைக்கு பேசுகிறாரா என சந்தேகம் அடைந்த நான், அங்காடிக்குள் நுழைந்தேன்...

அங்கிருந்த பழ வியாபாரி ஒருவரிடம் நண்பர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்...


பிறகு ஒருவழியாக வெளியே வந்த அவர், பழ வியாபாரியை கடுமையாக சாடிக் கொண்டே இருந்தார்...

என்ன நடந்தது என நான் கேட்க, பொரிந்து தள்ளினார் நண்பர்...

ஐந்து ஆப்பிள் பழங்களை அடுக்கி கூறு வைத்த பழ வியாபாரி,  ஒன்று பத்து, ஒன்று பத்து என கூற, ஆசையில் 5 கூறுகளை வாங்கியுள்ளார் நண்பர்.

ஐந்து கூறுகளுக்கு 50 ரூபாயையும் நீட்டியுள்ளார்...


ஆனால், பழ வியாபாரியோ, 250 ரூபாய் கேட்க அதிர்ச்சி அடைந்த நண்பர், என்னப்பா 50 ரூபாய்தானே கொடுக்க வேண்டும் என கேட்க,

ஒரு பழம் பத்து ரூபா சார்.... 5 கூறுக்கு 25 பழங்கள்... 250 ரூபா கொடுங்க சார்...என விளக்கம் அளிக்க

இருவருக்கும் தொடர்ந்தது வாக்குவாதம்...


கடைசியாக 50 ரூபாய் கொடுத்து ஒரு கூறு மட்டும் வாங்கிக் கொண்டு பழ வியாபாரியை வசைப்பாடிக் கொண்டே திரும்பினார் நண்பர்...

நடந்த விஷயம் என்னிடம் சொல்லி, பழ வியாபாரியை கோபத்தில் பொரிந்தும் தள்ளினார்.

எனக்கு நீண்ட சிரிப்பு அடங்க முடியவில்லை....

பழ வியாபாரியின் புத்திசாலிதனத்தை நினைத்து வியந்தேன்...



அது புத்திசாலிதனம் இல்லை....

சென்னையின் ஏமாற்றும் வித்தைகளில் ஒன்று என்பது பிறகுதான் புரிந்தது.

இதுபோன்ற அனுபவங்கள் சென்னையில் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் நேர்ந்து இருக்கலாம்...

எனினும்,  சென்னையின் இனம் புரியாத ஈர்க்கும் தன்மையால், அதை நாம் இன்றும் சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருக்கிறோம்...

இது போன்ற அனுபவங்கள் தொடர்ந்து பார்க்கலாம்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Friday, August 22, 2014

சென்னையில் நான்........!

சென்னையில் நான்........!



சென்னைக்கு வயது 375.

சென்னையின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு தரப்பினரும் சென்னை குறித்தும், சென்னையில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

பத்திரிகையாளனான எனக்கு சென்னை கற்றுத்தந்த பாடங்கள் என்ன....?

சென்னையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என்ன....?

சென்னையின் ஓர் அங்கமாக தற்போது நாமும் மாறிவிட்டதால்,  நமது அனுபவங்களை எழுதாமல் போனால், அது சென்னை மாநகருக்கு நாம் செய்யும் அநீதியாகவே இருக்கும் என்பதால், ஒருசில கருத்துக்கள் இதோ......



இனி.....

சென்னையில் நான்.....!

சென்னைக்கு நான் முதன்முதலாக எப்போது வந்தேன் என்பது குறித்து எனக்கு சரியாக நினைவில் இல்லை...

பள்ளிப்பருவத்திலேயே நான் சென்னைக்கு வந்திருக்கலாம்....

ஆனால், கல்லூரி நாட்களில் சென்னைக்கு அடிக்கடி வந்து சென்றது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.

ஆம்...

திரைப்படத்துறையில் ஆர்வம் அதிகமாக இருந்ததால், சென்னையில் ரிலீஸ் ஆகும், இந்தி திரைப்படங்களை பார்ப்பதற்காக, கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு, பஸ் ஏறி, சென்னைக்கு வந்து திரைப்படங்களை பார்த்துவிட்டு வீட்டுக்கு நேரம் கழித்து சென்று அம்மாவிடம் திட்டு வாங்கியது இன்னும் மனக்கண் முன்வந்து செல்கிறது.

சென்னை அண்ணா சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்திருந்த,  சினிமா நடிகர்களின் வானுயர கட்அவுட்களை கண்டு வியந்து போன காலம் அது....


அண்ணா மேம்பாலம் அருகே இருந்த சபையர் திரையங்கில் படம் பார்த்து விட்டு (தற்போது இடிக்கப்பட்டு விட்டது) அங்கிருந்து கிளம்பி நேராக தேவி திரையரங்கிற்கு  கால் நடையாக சென்று மீண்டும் ஒரு படம் பார்த்து மகிழ்ந்து நேரத்தை வீணடித்தது இன்னும் அடிக்கடி நினைத்து பார்ப்பது உண்டு...

பிறகு, எழுத்து துறையில் கவனம் திரும்ப, சென்னை வாலஸ் கார்டன் பகுதியில் இருந்து மணிச்சுடர் நாளிதழ் அலுவலகத்தில் பணிபுரிந்து, அந்த அலுவலகத்திலேயே தங்கியது மறக்க முடியாது அனுபவம்.

இங்குதான்,  மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியராக இருந்த மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சீராஜுல் மில்லத் ஏ.கே.ஏ.அப்துல் சமத் சாஹிப் அவர்களிடம் பத்திரிகை துறை தொடர்பாக ஏராளமான பாடங்களை கற்றுக் கொண்டேன்.


இதே வாலஸ் கார்டன் மணிச்சுடர் அலுவலகத்தில்தான் தற்போதைய அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழக தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை சந்தித்து அவருடன் நெருங்கி பழகக் கூட வாய்ப்பும் கிட்டியது.

இருவரும் இந்த அலுவகத்திலேயே தங்கியதால், இரவு நேர கொசுக்கடிகளுக்கு ஆளாகி, இரவு தூக்கத்தை இழந்தது இன்னும் நினைவில் வந்து செல்கிறது.

பின்னர், சன் தொலைக்காட்சியில் பணி கிடைத்து, அண்ணா அறிவாலயத்தில் இருந்த அந்த அலுவலகத்திற்கு வந்து சென்றபோது, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் என பல அரசியல் பிரபலங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தது உண்டு...

இதேபோன்று, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக செல்லும்போது, அங்கு அதிமுக நிர்வாகிகளுடன் சந்தித்து பேசி மகிழ்ந்த காலம் இன்னும் பசுமையாக உள்ளது.


மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முதன்முதலான முதலமைச்சராக பொறுப்பு ஏற்றபோது, அதனை காண, வேலூரில் இருந்து ரயில் ஏறி, சென்னைக்கு வந்து, அண்ணா சாலையின் ஜன நெரிச்சலில் சிக்கி தவித்ததை மறக்க முடியுமா...

இப்படி பல அனுபவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்....

இன்னும் பல சுவையான அனுபவங்கள் பல உண்டு....

அவற்றை பிறகு பார்க்கலாம்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Thursday, August 21, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (91)

மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...!  

நாள் - 91 

கேரளம் வழி காட்டுகிறது....!

பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு முடிவு: கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி அறிவிப்பு

கேரளாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் இதனை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்திட முடிவு செய்திருப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாய முன்னணி ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன்சாண்டி உள்ளார்.

இம்மாநிலத்தில் லைசென்ஸ் பெற்ற மதுக்கடை பார்கள் மற்றும் மதுபான விடுதிகள் உள்ளன. தவிர 3 ஸ்டார், 4 ஸ்டார், மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கும் பார் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திட உம்மன்சாண்டி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக விவாதிப்பதற்காக கூட்டணி கட்சிகளின் உயர்மட்டக்குழுக் கூட்டம் (21.08.2014) நடந்தது. இதில் புதிய மது கொள்கையை அமல்படுத்திட முடிவு செய்யப்பட்டது.

அதன்படிமுதல்கட்டமாக 3 ஸ்டார் மற்றும் 4 ஸ்டார் ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள்து. இதன் மூலம் மாநிலத்தில் 730 பார்கள் இழுத்து மூடிவிடவும், 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கு மட்டும் லைசென்ஸ்கள் வழங்கிடவும், இவற்றில் 312 பார்களுக்கான லைசென்ஸ் காலம் மார்ச் 31 ,2015-ம் ஆண்டு முடிவடைகிறது. இவற்றின் லைசென்ஸ்களை மேலும் புதுப்பிக்க தடை விதித்திடவும், இத்திட்டம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்திடவும், அடுத்த 5ஆண்டுகளில் மதுபானவிடுதிகளை மூடிடவும், படிப்படியாக அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து முதலமைச்சர் உம்மன்சாண்டி கூறுகையில், புதிய மதுகொள்கை மூலம் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.


சில்லறை மதுபான் கடைகளைப் பொறுத்தவரை, ஆண்டுதோறும் 10 சதவீத கடைகள் மூடப்படும் என்றும் மாதத்தின் முதல் நாள், மதுவுக்கு விடுமுறை நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அனைத்து சண்டேயும் மது விடுமுறை நாட்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சாண்டி தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஆண்டு 52 நாட்களுக்கு மேல் மது விடுமுறை நாட்களாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மதுவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் மாபெரும் பிரச்சாரம் செய்யப்படும் என்றும் இதற்காக மாநில மதுபான கழகத்தின் விற்பனை வருவாயில் ஒரு சதவீதம் பிரச்சார செலவுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மது பார்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சுயவேலைவாய்ப்பு மூலம் மாற்று ஏற்பாடு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

கேரள அரசின் இந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே பாராட்டு வேண்டிய ஒன்று.

மதுவை ஒழிக்க படிப்படியாக நடவடிக்கை எடுத்து, மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த உம்மன் சாண்டி அரசு எடுத்த முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். கேரளம் மது இல்லாத மாநிலமாக விரைவில் மலரும்.

தமிழகத்தில் இந்த நிலை எப்போது ஏற்படும் என்ற ஏக்கம் நம் எல்லோருக்கும் பிறந்துள்ளது.

மாநில முதலமைச்சர் அம்மா (ஜெயலலிதா) மனது வைத்தால் நிச்சயம் நடக்கும்...


தமிழகத்தில் இருந்த மதுவை ஒழிக்க முதலமைச்சர் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்.

தமிழக பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அதிரடி நடவடிக்கையை அம்மா அவர்கள் எடுப்பார் என தமிழக மக்கள் நம்புகிறார்கள்...


நம்பிக்கைதான் வாழ்க்கை...

விரைவில் நல்லது நடக்கட்டும்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Friday, August 15, 2014

ஒரு பொன்மாலை பொழுது....!

இது ஒரு பொன்மாலை பொழுது.......!
=================================

தலைப்புக்கும் இந்த புகைப்படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை....

ஏதாவது ஒரு தலைப்பு போட வேண்டும் என்ற எண்ணத்தில் மூளையை குழப்பாமல் போட்ட தலைப்புதான் இது.

இளம் செய்தியாளர், ஏன் இளம் புகைப்பட கலைஞர் என்றே சொல்லலாம்...

ஆம்...இளம் புகைப்பட கலைஞர் சுபாஷ் பிரபு எடுத்த அருமையான புகைப்படங்களைதான் நீங்கள் கீழே காணப் போகிறீர்கள்...

பாருங்கள்...

அவருடைய ஆர்வத்தை, கலை நுணுக்கத்தை பாராட்டுக்கள்...

கூடவே என்னுடைய அழகையும் கண்டு  ஆச்சரியபடுங்கள்...(சிரிப்பு)


மற்றொரு புகைப்படம்...



மற்றொரு கோணத்தில்....


இது எப்படி இருக்கு....


சகோதரர் ஐயப்பனுடன்....



இதுவும் ஐயப்பனுடன் எடுத்துக் கொண்ட படம்தான்...


இளம் கவிஞர் + மருத்துவர் அய்யம்பெருமானுடன்....


அய்யம்பெருமாளுக்கு அன்பு பரிசு வழங்கியபோது....


மற்றொரு கோணத்தில்...


இது எப்படி இருக்கு......


மற்றொரு கோணத்தில் எடுத்தப்படம்...


நான்....


நல்ல அழகாக உள்ளதா...


நிமிர்ந்து நில்...


பணியின்போது....


ரிலாக்ஸ் பிளீஸ்...

மேலே நீங்கள் பார்த்து ரசித்த புகைப்படங்கள் எல்லாமே சுபாஷ் பிரபுவின் கை வண்ணத்தில் எடுக்கப்பட்ட படங்கள்...

நன்றாக உள்ளது அல்லவா...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================

Saturday, August 2, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (90)

மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....! 

நாள் - 90



நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என போராடி வருபவர்களில் மிகவும் முக்கியமானவர் காந்தியவாதி சசிபெருமாள் ஒருவர் ஆவார்.

தமிழகத்தில் பல போராட்டங்களை நடத்தி வரும் அவர், தற்போது தலைநகர் டெல்லியிலும் போராட்டத்தில் குவித்துள்ளார்.

நாடு முழுவதும் பூரண மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், காந்தியவாதியுமான சசிபெருமாள் டெல்லியில் 4-ஆவது நாளாக (2.8.14) கொட்டும் மழையில் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.

அவர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். இந்த நிலையில், டெல்லியில் பல இடங்களில் ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.

இருப்பினும், அவர் தன் உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மது, போதைப் பொருள்களை தடை செய்ய வேண்டியது அரசின் கடமை என்றார்.

நம் நாட்டில் மதுபானங்கள் தாராளமாகக் கிடைக்கும் வகையில், மாநில அரசுகளே அவற்றை விற்பனை செய்து வருவதாக சசிபெருமாள் கூறினார்.  குறிப்பாக தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களும் மதுக்கடையை நோக்கி செல்லும் நிலையை அரசு ஏற்படுத்திவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.

மது அருந்துவதை ஒரு கலாசாரமாக சமூகம் மாற்றியுள்ளது வேதனை அளிப்பதாக கூறிய அவர்,  இதனால், பல குடும்பங்கள் சீரழிந்துள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, நாடு முழுவதும் பூரண மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தினால், மக்கள் நன்னெறிப்படுத்தப்படுவார்கள் என்றும் சசிபெருமாள் கூறினார்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் சசிபெருமாள் தெரிவித்தார்.

மதுவுக்கு எதிராக போராட்டத்தில் குவித்துள்ள காந்தியவாதி சசிபெருமாளின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

அவருக்கு என்றும் நமது ஆதரவு உண்டு...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================