Friday, August 22, 2014

சென்னையில் நான்........!

சென்னையில் நான்........!



சென்னைக்கு வயது 375.

சென்னையின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு தரப்பினரும் சென்னை குறித்தும், சென்னையில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

பத்திரிகையாளனான எனக்கு சென்னை கற்றுத்தந்த பாடங்கள் என்ன....?

சென்னையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என்ன....?

சென்னையின் ஓர் அங்கமாக தற்போது நாமும் மாறிவிட்டதால்,  நமது அனுபவங்களை எழுதாமல் போனால், அது சென்னை மாநகருக்கு நாம் செய்யும் அநீதியாகவே இருக்கும் என்பதால், ஒருசில கருத்துக்கள் இதோ......



இனி.....

சென்னையில் நான்.....!

சென்னைக்கு நான் முதன்முதலாக எப்போது வந்தேன் என்பது குறித்து எனக்கு சரியாக நினைவில் இல்லை...

பள்ளிப்பருவத்திலேயே நான் சென்னைக்கு வந்திருக்கலாம்....

ஆனால், கல்லூரி நாட்களில் சென்னைக்கு அடிக்கடி வந்து சென்றது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.

ஆம்...

திரைப்படத்துறையில் ஆர்வம் அதிகமாக இருந்ததால், சென்னையில் ரிலீஸ் ஆகும், இந்தி திரைப்படங்களை பார்ப்பதற்காக, கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு, பஸ் ஏறி, சென்னைக்கு வந்து திரைப்படங்களை பார்த்துவிட்டு வீட்டுக்கு நேரம் கழித்து சென்று அம்மாவிடம் திட்டு வாங்கியது இன்னும் மனக்கண் முன்வந்து செல்கிறது.

சென்னை அண்ணா சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்திருந்த,  சினிமா நடிகர்களின் வானுயர கட்அவுட்களை கண்டு வியந்து போன காலம் அது....


அண்ணா மேம்பாலம் அருகே இருந்த சபையர் திரையங்கில் படம் பார்த்து விட்டு (தற்போது இடிக்கப்பட்டு விட்டது) அங்கிருந்து கிளம்பி நேராக தேவி திரையரங்கிற்கு  கால் நடையாக சென்று மீண்டும் ஒரு படம் பார்த்து மகிழ்ந்து நேரத்தை வீணடித்தது இன்னும் அடிக்கடி நினைத்து பார்ப்பது உண்டு...

பிறகு, எழுத்து துறையில் கவனம் திரும்ப, சென்னை வாலஸ் கார்டன் பகுதியில் இருந்து மணிச்சுடர் நாளிதழ் அலுவலகத்தில் பணிபுரிந்து, அந்த அலுவலகத்திலேயே தங்கியது மறக்க முடியாது அனுபவம்.

இங்குதான்,  மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியராக இருந்த மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சீராஜுல் மில்லத் ஏ.கே.ஏ.அப்துல் சமத் சாஹிப் அவர்களிடம் பத்திரிகை துறை தொடர்பாக ஏராளமான பாடங்களை கற்றுக் கொண்டேன்.


இதே வாலஸ் கார்டன் மணிச்சுடர் அலுவலகத்தில்தான் தற்போதைய அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழக தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை சந்தித்து அவருடன் நெருங்கி பழகக் கூட வாய்ப்பும் கிட்டியது.

இருவரும் இந்த அலுவகத்திலேயே தங்கியதால், இரவு நேர கொசுக்கடிகளுக்கு ஆளாகி, இரவு தூக்கத்தை இழந்தது இன்னும் நினைவில் வந்து செல்கிறது.

பின்னர், சன் தொலைக்காட்சியில் பணி கிடைத்து, அண்ணா அறிவாலயத்தில் இருந்த அந்த அலுவலகத்திற்கு வந்து சென்றபோது, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் என பல அரசியல் பிரபலங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தது உண்டு...

இதேபோன்று, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக செல்லும்போது, அங்கு அதிமுக நிர்வாகிகளுடன் சந்தித்து பேசி மகிழ்ந்த காலம் இன்னும் பசுமையாக உள்ளது.


மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முதன்முதலான முதலமைச்சராக பொறுப்பு ஏற்றபோது, அதனை காண, வேலூரில் இருந்து ரயில் ஏறி, சென்னைக்கு வந்து, அண்ணா சாலையின் ஜன நெரிச்சலில் சிக்கி தவித்ததை மறக்க முடியுமா...

இப்படி பல அனுபவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்....

இன்னும் பல சுவையான அனுபவங்கள் பல உண்டு....

அவற்றை பிறகு பார்க்கலாம்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: