Thursday, November 26, 2015

சபாஷ் நிதிஷ் குமார்...!

வாழ்க நிதிஷ் குமார்...!


பீகார் மாநிலத்தில் வரும் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மது விற்பனைக்கு தடை என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

இந்த செய்தி உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டதால்தான் நிதிஷ் குமாரை ஐந்தாவது முறையாக முதலமைச்சர் பதவியில் அமர்த்தி பீகார் மக்கள் அழகு பார்க்கிறார்கள்.

அதற்கு உடனடியாக பலன் கிடைத்துள்ளது.

பக்கத்து மாநிலங்களில் மது விற்கிறார்கள்.

அதனால் பீகாரில் மது விற்பனைக்கு தடை விதிக்க முடியாது என்ற சப்பை காரணங்களை நிதிஷ் கூறவில்லை.

தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி பீகாரில் மது விலக்கு அமல்படுத்த துணிந்து முடிவு எடுத்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார்.
'
மக்கள் நலனில் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் நலனில் அதிக அக்கறை கொண்ட நிதிஷ் குமார் வாழ்க பல்லாண்டு.

அவரது மக்கள் நலப்பணிகள் மேலும் சிறக்கட்டும்

மது கொள்கையில் கேரளா, பீகார் மாநிலங்கள் எடுத்த முடிவை போன்று தமிழகமும் விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

இதுதான் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நல்ல முடிவை எடுத்து மதுவால் தள்ளாடும் தமிழகத்தை காப்பற்ற வேண்டும்.

எஸ் ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

தெறி......!

தெறி......!


தமிழக காட்சி ஊடகத்துறையின் (Visual Media) மிகப் பெரிய ஆளுமை ஹரி கிருஷ்ணன்.

அவர் ஒரு துடிப்பான இளம் பத்திரிகையாளர்.

சன் டி.வி.யில் ஹரிருடன் இணைந்து பணிபுரிந்தபோது,கிருஷ்ணனின் திறமையை பலமுறை நேரில் கண்டு வியந்து இருக்கிறேன்.

ஒரு செய்தியை எப்படி மிக வேகமாக கொடுக்க வேண்டும் என்பதில் கில்லாடி அவர்.

டி.வி.யில் செய்தி ஓடிக் கொண்டே இருக்கும்போது, புதிய செய்தி ஒன்றை சேர்க்க ஹரி மிக துடிப்புடனும், வேகத்துடனும் செயல்படுவார்.

எப்படியும் அந்த புதிய செய்தியை கொணடு வந்துவிடுவார். .

இப்படி, பல திறமைகளை கொண்டு மிக வேகத்துடன் இயங்கும் ஹரி கிருஷ்ணன், ஒரு தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் பொறுப்புக்கு மிகவும் தகுதியானவர் என்பதில் எந்தவித சந்தேகமும்இல்லை.

ஆனால்,

இன்றோ, தமிழக ஊடகத்துறையில் நிலைமை வேறு விதமாக உள்ளது.

சில டம்மி டப்பாசுகள், தலைமை பொறுப்புக்கு வந்துவிட்டு ஆட்டம் போடுகிறார்கள்.

டி.வி.யில் செய்தியை வாசித்துவிட்டால் போதும் அவர்தான் எல்லாமே என்ற தவறான கருத்து மற்றும் நினைப்பு சில ஊடக முதலாளிகளுக்கு இருப்பதே இதற்கு காரணம் எனலாம்.

செய்தியை எப்படி கொடுக்க வேண்டும், எந்த நேரத்தில் எந்த செய்தியை கொடுக்க வேண்டும் என்பன போன்ற அடிப்படை விவரங்கள் எதையும் அறியாமல், அனுபவம் இல்லாமல் சில அரை வேக்காடுகள் தொலைக்காட்சி நிறுவனங்களில் தற்போது ஆட்டம் போட்டு வருகின்றன.

இதுபோன்ற காரணங்களால் ஹரி கிருஷ்ணன் போன்ற திறமை மிக்க பலர் வாய்ப்புகளை இழந்து விடுகின்றனர்.

அல்லது வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

எனினும் ஊடகத்துறையில் ஹரி கிருஷ்ணன் நிச்சயம் சாதிப்பார்.

சன் டி.வி.யில் பணிபுரிந்தபோது, அவருடன் ஏற்பட்ட நட்பு, பழகிய நாட்கள் என்றும் மறக்க முடியாதவை.

இந்த நட்பு நம் இருவருக்கு இடையே இன்னும் தொடர்கிறது.

சிறந்த ஊடக பண்பாளர் ஹரி கிருஷ்ணனுக்கு இன்று பிறந்த நாள்.

இந்த இனிய நாளில் எங்கள் தங்கள் ஹரி கிருஷ்ணனுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்ல உடல் நலத்துடனும், நல்ல வளத்துடனும், நல்ல மன ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

ஹரி கிருஷ்ணனின் திறமைகள் இனி தெறி போல மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

இத்தனை நிபந்தனைகளா....!

சுதந்திர போராட்ட தியாகி திப்பு சுல்தான் பிறந்த நாளுக்கு இத்தனை நிபந்தனைகளா....!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில், மைசூர் வேங்கை மாவீரன் திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

இதை எதிர்த்து தமிழக மக்கள் ஜனநயாக கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த போலீசார் 17 நிபந்தனைகளின் பேரில் விழா நடத்த அனுமதி வழங்கலாம் என தெரிவித்து இருந்தனர்.

அவை,

திப்பு சுல்தானின் வரலாறு, தியாகம் தவிர வேறு எதையும் விழாவில் பேசக்கூடாது.

மற்ற மதம், சாதிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய கைப்பிரதிகளை வெளியிடக்கூடாது. பேசவும் கூடாது.

தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேசக்கூடாது.

அரசையோ, அரசின் கொள்கைகளையோ எதிர்த்து உரையாற்றக்கூடாது.

சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் போலீசின் அறிவுரையைக் கேட்டு உடனடியாக விழாவை மனுதாரர் நிறுத்திவிட வேண்டும்.

கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துக் கொள்ளக் கூடாது.

நகரத்துக்கு உள்ளேயும், வெளியேயும் வாடகை வாகனங்களில் வரக்கூடாது.

மின்சார வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.

கலசார நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.

தனிப்பட்ட காரணங்களுக்காக விழாவை மனுதாரர் நிறுத்தினால் மற்றொரு நாளில் விழாவிற்கான அனுமதியை கோரக்கூடாது.

பட்டாசு கொளுத்க்கூடாது.

போக்குவரத்து பொது அமைதியைக் கெடுக்காமல் கூட்டத்தை நடத்த வேண்டும்.

ஊர்வலம் கூடாது.

பாக்ஸ் போன்ற ஒலிபெருக்கிகளை வைக்கக்கூடாது.

போலீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடன் பிளக்ஸ் போர்டு, கொடிகள் கட்டப்பட வேண்டும்.

விழா முடிந்த ஒரு மணி நேரத்தில் அவை அகற்றப்பட வேண்டும்.

தகாத சம்பவம் நடந்துவிட்டால் அதனால் பொதுச்சொத்துக்கு ஏற்படும் இழப்புகள் அனைத்துக்கும் மனுதாரரே பொறுப்பு ஏற்க வேண்டும்.

இப்படி பல நிபந்தனைகளை தமிழக போலீசார் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆக ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது.

முதல் சுதந்திர போராட்ட தியாகி, மாவீரன் திப்பு சுல்தானின் பிறந்த நாள் விழாவை, மக்கள் கொண்டாடுவதை அரசு விரும்பவில்லை என்பது புரிகிறது.

இந்த வேதனையை, கொடுமையை யாரிடம் போய் சொல்வது....?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ
பத்திரிகையாளர்.

மீண்டும் அடி....!

மோடிக்கு மீண்டும் அடி....!


பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி.

உத்தரப் பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் கடும் பின்னடைவு.

இதைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அண்மையில் நடந்த இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் வலிமையான கட்சியாகவும் ஆளும் கட்சியாகவும் இருந்து வரும் பாஜகவிற்கு இந்த தோல்வி ஏற்பட்டு இருக்கிறது.

அங்குள்ள ரட்லம் மக்களவை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் கந்திலால் பூரியா வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோன்று, தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது.

இந்த தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வேட்பாளர் தயாகர் வெற்றி பெற்றுள்ளார்.

ஆக, பிரதமர் மோடியின் செல்வாக்கு நாடு முழுவதும் மிக வேகமாக சரிந்து வருவது இதன்மூலம் உறுதியாகிறது.

உலகம் சுற்றும் வாலிபனாக சுற்றிவரும் பிரதமர் மோடி, இனி உள்நாட்டில் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தினால் நல்லது.

இல்லையென்றால், மக்கள் தொடர்ந்து பாடம் புகுத்திக் கொண்டே இருப்பார்கள்.

இதுதான் தற்போது நடந்து முடிந்த தேர்தல்கள் தரும் படிப்பினை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Tuesday, November 24, 2015

கழகங்களின் மீது வெறுப்பு...!

கழகங்களின் மீது வெறுப்பு...!


தமிழகத்தில் தொடர்ந்து கொட்டிவரும் கனமழை, ஒரு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

அது, திமுக, அதிமுக ஆகிய இரண்டு கழக ஆட்சிகளின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் பாழாய் போனதாக மக்கள் தற்போது நன்றாக உணர்கிறார்கள்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளும் அதிமுக மீது குற்றம் சுமத்தும் மக்கள், திமுகவிற்கும் இதில் பங்கு உண்டு என பேசிக்கொள்கின்றனர்.

தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த கழகங்கள் மாநிலத்தை உண்மையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவில்லை என்பது அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக இருக்கிறது.

சுயநலம், அரசியல் லாபம் உள்ளிட்ட பல காரணங்களால் திமுகவும் அதிமுகவும் தமிழகத்தை வஞ்சித்து விட்டன என்பது மக்களின் குற்றச்சாட்டு.


இரு கழகங்களின் ஆட்சியின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது.

கோபம் அதிகமாக உள்ளது.

எனவே மாற்று அரசியல் சக்தியை தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் தமிழகத்தின் சாபகேடோ என்னவோ தெரியவில்லை, மாநிலத்தில் வலுவான அரசியல் சக்தி இன்னும் உருவாகவே இல்லை.

அனைத்து அரசியல் கட்சிகளும் கழகங்களின் ஆட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினாலும் அவர்களிடையே நல்ல புரிந்துணர்வு, ஒற்றுமை அறவே இல்லை.

எல்லோரும் அமைச்சர் பதவி மீதே குறியாக இருக்கிறார்கள்.

எனவே கழகங்களைத் தவிர பிற கட்சிகள் ஆட்டம் கண்டு வருகின்றன.

இதனால் வேறு வழியில்லாமல் திமுக, அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டிய கட்டாயம் மக்களுக்கு மறுபடியும் ஏற்பட்டுள்ளது.

சரி, ஆளும் அதிமுகவை அகற்றி விட்டு திமுகவிற்கு வாய்ப்பு அளித்தால் என்ன நடக்கும்.


மீண்டும் அனைத்து துறைகளிலும் திமுக தலைமையின் குடும்ப ஆதிக்கம் மேலோங்கும்.

சினிமா, ரியல் ஸ்டேட், ஊடகம் என பல்வேறு முக்கிய துறைகளில் குறிப்பிட்ட ஒரு குடும்பம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும்.

மாநிலம் முழுவதும் திமுக கவுன்சிலர்கள் மீண்டும் தங்களது அட்டகாசங்களை ஆரம்பித்து விடுவார்கள்.

சென்னை சங்கமம் விழா மீண்டும் களைக் கட்டிவிடும்.

வாக்குறுதி அளித்தப்படி மாநிலத்தில் மது விலக்கை அமல்படுத்துவார்களா என்பது சந்தேகம்தான்.

சரி, அதிமுகவிற்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் என்னவாகும், தமிழகத்தில் துதி பாடும் கூட்டம் அதிகரிக்கும்.

பழைய பாணிலேயே தமிழகம் நடைபோடும்.

இதுதான் நடக்கும்.

ஆக, வலிமையான மாற்று சக்தி உருவாகாத நிலையில் திமுகவா அதிமுகவா என்ற கேள்வியே மக்கள் முன் தற்போது நிற்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத அரசை தேர்ந்தெடுப்பதுதான் தமிழகத்திற்கு நல்லதாக இருக்கும்.

இதைத்தான் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழக மக்கள் செய்வார்கள் என்பது நமது கணிப்பு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

மெண்டல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக ஆசையா....!

கீழ்பாக்கம் மெண்டல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக உங்களுக்கு ஆசையா....!


சென்னை கோடம்பாக்கம் ஏரியாவில் சினிமா ஆசையில் நிறைய பேர் அரை லூஸ் தனமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என கேள்விப்பட்டு இருக்கிறேன்.

முதலில் அதை நான் நம்பவில்லை.

ஆனால் டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தைப் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை வந்து விட்டது.

உங்களுக்கு பைத்தியம் பிடித்து கீழ்பாக்கம் மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்தால் இந்த படத்தை நிச்சயம் பாருங்கள்.

நிச்சயமாக கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்ந்து விடுவீர்கள்.

இந்த படத்தின் இயக்குநர் பக்கா அரை லூசாக இருப்பார் என தெரிகிறது.

அதை படம் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளார்.

சரி, இந்த திரைப்படம் எப்போ வந்தது.

எந்த திரையரங்குகளில் ஓடியது.

என்ற விவரம் யாருக்கும் தெரியாது.

அனேகமாக ஒரு காட்சி கூட ஓடி இருக்காது.

பின்னே என்ன சார், லூசு தனமா ஒரு படத்தை எடுத்தால் யார் தான் பார்ப்பார்கள்.

டம்மி டப்பாசு படத்தின் இயக்குநர் ஓ.எஸ்.ரவி, உங்கள் பார்வையில் கிடைத்தால் எனக்கு சொல்லுங்கள்.
தகவல் தாருங்கள்.

நாலு சாத்து சாத்தலாம்.

நீங்களும் என்னுடன் சேர்ந்து அந்த அரை லூசு இயக்குநரை பின்னி பெடல் எடுங்க.

உலக சினிமா பல்வேறு பரிமாணங்களை கடந்து ராக்கெட் வேகத்தில் சென்றுக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், இப்படி அரை லூசு தனமாக படம் எடுப்பவர்களை சாத்துவதில் ஒன்றுமே தவறில்லை.

தப்பி தவறி இதுபோன்ற திரைப்படங்களை பார்த்து விடாதீர்கள்.

அப்படி பார்த்து விட்டால் மெண்டல் ஆஸ்பத்திரியில் உங்களுக்கு சீட் கன்பெர்ம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

சமூக அக்கறை....!

சமூக அக்கறை....!


தமிழகம் உட்பட நாடு முழுவதும் தற்போது கல்வி வணிக மயமாகிவிட்டது.

காசு, பணம், துட்டு கொடு கல்வியை பெற்றுக் கொள் என்கின்றனர் கல்வி நிறுவன அதிபர்கள்.

சரி, பணத்தை பெற்றுக் கொண்டு கல்வியை அளிக்கும் இந்த கல்வி வணிகர்கள், படிப்பு முடிந்ததும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை அளிக்க முயற்சி செய்கிறார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றே கூறலாம்.

ஒருசில கல்வி நிறுவனங்கள் பெயரளவில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துகின்றன.

அவ்வளவுதான்.

அதில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்து அவர்கள் வாழ்க்கையில் நிறைவு அடைகிறார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றை அண்மையில் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிட்டியது.

அதில் தாம் நடத்தும் இசை கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியரின் ஒழுக்கம் மற்றும் நல்ல பண்புகள் குறித்து அக்கறையுடன் பேசிய ரஹ்மான், தமது இசைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு எப்படி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதுதான் தமது கவலை என்றும் தெரிவித்தார்.

இசைத் துறையில் ஆர்வம் செலுத்தும் மாணவர்களுக்கு பிற துறைகளில் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை போன்று கிடைப்பதில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

எனவே தமது இசை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை ஈட்ட வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளில் தாம் கடுமையாக ஈடுபட்டு இருப்பதாகவும் ரஹ்மான் கூறினார்.

தமது கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை நலனில் என்ன ஒரு அக்கறை இசைப்புயலுக்கு.

உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மானின் சமூக அக்கறையை நாம் பாராட்டதான் வேண்டும்.

கல்வி நிறுவங்களை நடத்தி பணத்தை கொள்ளை அடிக்கும் கல்வி வணிகர்கள் மத்தியில் ஏ.ஆர.ரஹ்மான் ஒரு வித்தியாசமான மனிதர்தான்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.