Tuesday, November 24, 2015

கழகங்களின் மீது வெறுப்பு...!

கழகங்களின் மீது வெறுப்பு...!


தமிழகத்தில் தொடர்ந்து கொட்டிவரும் கனமழை, ஒரு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

அது, திமுக, அதிமுக ஆகிய இரண்டு கழக ஆட்சிகளின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் பாழாய் போனதாக மக்கள் தற்போது நன்றாக உணர்கிறார்கள்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளும் அதிமுக மீது குற்றம் சுமத்தும் மக்கள், திமுகவிற்கும் இதில் பங்கு உண்டு என பேசிக்கொள்கின்றனர்.

தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த கழகங்கள் மாநிலத்தை உண்மையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவில்லை என்பது அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக இருக்கிறது.

சுயநலம், அரசியல் லாபம் உள்ளிட்ட பல காரணங்களால் திமுகவும் அதிமுகவும் தமிழகத்தை வஞ்சித்து விட்டன என்பது மக்களின் குற்றச்சாட்டு.


இரு கழகங்களின் ஆட்சியின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது.

கோபம் அதிகமாக உள்ளது.

எனவே மாற்று அரசியல் சக்தியை தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் தமிழகத்தின் சாபகேடோ என்னவோ தெரியவில்லை, மாநிலத்தில் வலுவான அரசியல் சக்தி இன்னும் உருவாகவே இல்லை.

அனைத்து அரசியல் கட்சிகளும் கழகங்களின் ஆட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினாலும் அவர்களிடையே நல்ல புரிந்துணர்வு, ஒற்றுமை அறவே இல்லை.

எல்லோரும் அமைச்சர் பதவி மீதே குறியாக இருக்கிறார்கள்.

எனவே கழகங்களைத் தவிர பிற கட்சிகள் ஆட்டம் கண்டு வருகின்றன.

இதனால் வேறு வழியில்லாமல் திமுக, அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டிய கட்டாயம் மக்களுக்கு மறுபடியும் ஏற்பட்டுள்ளது.

சரி, ஆளும் அதிமுகவை அகற்றி விட்டு திமுகவிற்கு வாய்ப்பு அளித்தால் என்ன நடக்கும்.


மீண்டும் அனைத்து துறைகளிலும் திமுக தலைமையின் குடும்ப ஆதிக்கம் மேலோங்கும்.

சினிமா, ரியல் ஸ்டேட், ஊடகம் என பல்வேறு முக்கிய துறைகளில் குறிப்பிட்ட ஒரு குடும்பம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும்.

மாநிலம் முழுவதும் திமுக கவுன்சிலர்கள் மீண்டும் தங்களது அட்டகாசங்களை ஆரம்பித்து விடுவார்கள்.

சென்னை சங்கமம் விழா மீண்டும் களைக் கட்டிவிடும்.

வாக்குறுதி அளித்தப்படி மாநிலத்தில் மது விலக்கை அமல்படுத்துவார்களா என்பது சந்தேகம்தான்.

சரி, அதிமுகவிற்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் என்னவாகும், தமிழகத்தில் துதி பாடும் கூட்டம் அதிகரிக்கும்.

பழைய பாணிலேயே தமிழகம் நடைபோடும்.

இதுதான் நடக்கும்.

ஆக, வலிமையான மாற்று சக்தி உருவாகாத நிலையில் திமுகவா அதிமுகவா என்ற கேள்வியே மக்கள் முன் தற்போது நிற்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத அரசை தேர்ந்தெடுப்பதுதான் தமிழகத்திற்கு நல்லதாக இருக்கும்.

இதைத்தான் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழக மக்கள் செய்வார்கள் என்பது நமது கணிப்பு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: