Friday, November 13, 2015

பாழாய் போன சென்னை...!!

கழகங்களின் ஆட்சி...! பாழாய் போன சென்னை...!!


தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்துவரும் திமுக அதிமுக சென்னை மாநகரத்தின் நிலையை கொஞ்சமாவது மாற்றி இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினால் நிச்சயமாக இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்.

பருவமழை காலங்களில் சென்னை மாநகர மக்கள் சந்திக்கும் இன்னல்களை சவால்களை சொல்ல வார்த்தைகள் இல்லை.

கடந்த 10 நாட்களாக சென்னையில் அவ்வப்போது கொட்டி வரும் கனமழை காரணமாக நகரின் அனைத்து பகுதிகளும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன.

இதனால் பெண்கள் குழந்தைகள் வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் வெள்ளத்தில் நீந்தி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது..


மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து விடுவதால் அதில்தான் மக்கள் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் வேறு.

சரி சென்னை மாநகர அரசு பேருந்துகளில் ஏறி அமர்ந்தால் அங்கேயும் வானம் பிளந்து மழை கொட்டுகிறதோ என நினைக்கும் அளவுக்கு பேருந்துகளின் நிலை உள்ளது.

மழை காலங்களில் சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

போக்குவரத்து நெரிசலில் சிக்கும் பலர் தங்களது உயிரையும் இழக்க வேண்டிய நிலை வேறு.

அத்துடன் மழை கால நோய்களுக்கு சென்னையில் பஞ்சமே ஏற்படுவதில்லை.


மழை நீரை சேமிக்கவோ வடிகால் செய்யவோ எந்த ஒரு முன்மாதிரியான செயல்திட்டங்களை கழகங்களின் ஆட்சி நிறைவேற்றவில்லை.

இதனால் மழை நீர் அனைத்தும் வீணாக கடலில் போய் கலக்கிறது.

இதன் காரணமாக கோடைகாலங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு மக்கள் தண்ணீருக்காக அலைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கும் அரசு மழை கால பிரச்சினைகளை தீர்க்க முன்கூட்டியே இலக்கு நிர்ணயித்து எந்த பணிகளையும் செய்வதில்லை.

இரண்டு கழகங்களின் ஆட்சியில் இதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது.

வரலாற்றில் இடம் பெறுவதற்காக பாலங்கள் வானுயர்ந்த கட்டிடங்கள் கட்டுவதற்காக ஆர்வம் செலுத்தும் கழகங்கள் மழைநீர் பிரச்சினைக்கு தொலைநோக்கு பார்வையுடன் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவே இல்லை.


இதனால் சென்னை வாழ் மக்கள் பருவமழை காலங்களில் நரக வேதனையை சந்திக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தொடர்ந்து தள்ளப்பட்டு வருகிறார்கள்.

சென்னை மாநகரம் பாழாய் போனதற்கு கழகங்களின் ஆட்சிகள்தான் காரணம்.

இந்த லட்சணத்தில் சிங்கார சென்னை என்ற கோஷம் வேறு.

வாழ்க கழகங்களின் ஆட்சி.

தொடரட்டும் சென்னை மக்களின் இன்னல்கள். அவலங்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: