Wednesday, November 18, 2015

என்ன உரிமை இருக்கிறது...?

என்ன உரிமை இருக்கிறது...?


சென்னையில் விடாது பெய்த கனமழையால் மாநகரின் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக் காடாக மாறின.

குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் இன்னும் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சந்தித்து வரும் இன்னல்களை சொல்ல முடியாது.

அப்படி ஒரு நரக வேதனையை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் மழைக் காலங்களில் வெள்ளக் காடாக மாற யார் காரணம்.

அரசின் நிர்வாக சீர்கேடா அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததா என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்.


சென்னையின் அவல நிலைக்கு அரசு ஒரளவுக்கு பொறுப்பு என கூறினாலும் முழுக்க முழுக்க பொதுமக்களின் சுயநலமே இத்தகைய நிலைக்கு காரணம் என்பது என்னுடைய வாதம்.

குறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு கிடைக்கிறது என்றதும் அது நீர்நிலை பகுதியாக இருந்தாலும் சரி ஏரி குளமாக இருந்தாலும் சரி வாங்கி குவித்த மக்கள் அங்கு வீடுகளைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

சரி ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகளை கட்டடங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி போராட்டங்களை நடத்துகிறார்கள் சம்பந்தப்பட்ட பகுதி மக்கள்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஏரி குளங்களை உடனடியாக மீட்டு நீர் ஆதாரங்களை மேம்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றமே உத்தரவிட்டாலும் பல்வேறு அரசியல் காரணங்களால் மாநில அரசால் அதை நிறைவேற்ற முடியவில்லை.


இதற்கு எல்லாமே பொதுமக்களின் சுயநலம் தான் முக்கிய காரணம்.

பிறகுதான் அரசியல் கட்சிகள் இங்கு வருகின்றன.

இப்படிப்பட்ட நிலையில் மழை காலங்களில் சென்னை வெள்ளக் காடாக மாறாமல் என்ன செய்யும்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஏரி குளம் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் வேறு எங்கு தேங்கும்.
ஐய்யய்யோ தண்ணீர் தேங்கி நிற்கிறது.

அரசு கண்டுகொள்ளவே இல்லை என கூறி அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது..?

ஆக்கிரமிப்பு பகுதிகளில் வாழும் மக்களுக்கு என்ன உரிமை இருக்கிறது..?

இதுதான் நமது கேள்வி.

அதேநேரத்தில் நீர் ஆதாரங்களை மீட்கவும் பாதுகாக்கவும் மழைக்காலங்களில் எப்படி தண்ணீரை சேமிப்பது என முன்னோக்கு திட்டங்களை செயல்படுத்தாமல் இருக்கும் மாநில அரசின் மெத்தனத்தை நாம் கண்டிக்கவே வேண்டும்.

இத்தகைய போக்கு திமுக அதிமுக ஆகிய இரண்டு கழகங்களின் ஆட்சியில் தொடர்வதை யாரும் மறுக்கவே முடியாது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: