Friday, November 20, 2015

தீவிரவாதம் - அமைச்சர் கருத்து...!

தீவிரவாத செயல்களை குறிப்பிட்ட ஒரு மதத்துடன் இணைத்து பேசக் கூடாது...!

மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி...!!


முஸ்லிம்கள் உட்பட நாட்டில் இருக்கும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதில் வல்லவர் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி.

இந்தியாவில் உள்ள அனைவரும் ராமனின் பிள்ளைகள் என்று கருத்து தெரிவித்த அவர், இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சாத்வி நிரஞ்சன் ஜோதி,  உலகம் முழுவதும் தீவிரவாதம் வேகமாக பரவி வருவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

அதேநேரத்தில் தீவிரவாத செயல்களை குறிப்பிட்ட ஒரு மதம் மற்றும் ஜாதியுடன் இணைத்து பேசக் கூடாது என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது உண்மையெனில், பாகிஸ்தானில் அப்பாவி குழந்தைகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்து இருக்க மாட்டார்கள் என்றும் சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறினார்.

அப்பாடா, ஒரு வழியாக தீவிரவாத செயல்களுக்கு அப்பாவி முஸ்லிம்கள் காரணம் இல்லை என்பதை இப்போதாவது உணர்ந்துக் கொண்ட மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, தீவிரவாத செயல்களை குறிப்பிட்ட ஒரு மதத்துடன் இணைந்து பேசுவது சரியல்ல என தெரிவித்து இருப்பது உண்மையிலேயே மகிழச்சி அளிக்கிறது.

அவரது கருத்துதான் சமூகத்தில் அக்கறை உள்ள அனைவரும் ஏற்கனவே திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர். 

No comments: