Friday, November 13, 2015

வட்டி....! அதிர்ச்சி....!!

வட்டி....! அதிர்ச்சி....!!


சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அடிக்கடி சந்திக்கும் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று சந்திக்க கூடிய வாய்ப்பு கிட்டியது.

என்ன சார் ரொம்ப நாளா ஆளையே பார்க்க முடியலே என கேட்டதுதான் தாமதம், அந்த நண்பர் மிகவும் வேதனையுடன் தம்முடைய தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததால் சொந்த ஊருக்கு சென்று விட்டு இப்போதுதான் சென்னை திரும்பி வந்ததாக கூறினார்.

எனக்கு மிகவும் மன வருத்தம் ஏற்பட்டது.

நண்பருக்கு ஆறுதல் கூறி எல்லாம் இறைவனின் நாட்டம் என்றேன்.

உங்களுக்கு இறைவன் கருணை புரிவான் என்று ஆறுதலாக சில வார்த்தைகள் கூறினேன்.

என்னுடைய வார்த்தைகள் மூலம் நண்பருக்கு சிறிது ஆறுதல் ஏற்பட்டதை அவரது முகத்தை பார்த்தபோது உணர முடிந்தது.

பிறகு இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்.

இந்த பேச்சின் போது நண்பருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது தெரியவந்தது.

அந்த வருத்தம் அவரிடம் இருப்பதை நண்பரின் பேச்சின் மூலம் அறிந்தேன்.

45 வயது நிரம்பி விட்ட அந்த நண்பர் தமக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு தம்முடைய குடும்பத்தில் தந்தை உட்பட சிலர் வட்டி தொழில் செய்ததே காரணம் என மறைமுகமாக கூறினார்.

தம் குடும்பத்தினர் அதிகமாக அநியாயமாக வட்டி வாங்கியதால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் விட்ட சாபம்தான் தம்மை துரத்துவதாக நண்பர் கூறினார்.

தம்முடைய நண்பர்கள் அனைவரும் திருமணமாகி வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆகிவிட்ட நிலையில் தாம் மட்டும் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதாக நண்பர் தமது பேச்சின் மூலம் மறைமுகமாக கூறியபோது எனக்கு உண்மையிலேயே வேதனையாக இருந்தது.

விரைவில் நல்லது நடக்கும் என நண்பருக்கு ஆறுதல் கூறி பேச்சை வேறு திசைக்கு திருப்பினேன்.

நண்பரிடம் பேசியதில் இருந்து ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது.

அது

தமக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு தமது குடும்பத்தினர் அநியாயமாக வட்டி வாங்கியதுதான் என நண்பர் உணருகிறார் என்பதுதான்.

தமது முன்னோர்கள் செய்த பாவம்தான் தம்மை துரத்திக் கொண்டிருப்பதாக நண்பர் நினைக்கிறார்.

வட்டி வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்தில் ஏன் தடை செய்யப்பட்டு உள்ளது என்பதையும் அதனால் எத்தகைய பாதிப்புகள் பின் விளைவுகள் ஏற்படும் என்பதையும் நண்பரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: