Saturday, November 9, 2013

" சிதறிக் கிடக்கும் தமிழக இஸ்லாமிய அமைப்புகள்.....!!"



"ஒற்றுமை என்னும் கயிற்றைப் பலமாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து நிற்காதீர்கள்."

மனித சமுதாயத்திற்கு இஸ்லாம் கூறும் அறிவுரை இது...

ஆனால், இந்த அறிவுரையை இஸ்லாமிய சமுதாயம் பின்பற்றுகிறதா...கடைப்பிடிக்கிறதா..

குறிப்பாக, தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் இடையே ஒற்றுமை இருக்கிறதா என்ற கேள்விக்கு, பதில் இல்லை என்றே வருகிறது...

தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகளின் எண்ணிக்கைதான் எவ்வளவு...

நாட்டிலேயே அதிக இஸ்லாமிய அமைப்புகள் உள்ள மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது எனலாம்...

தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் குறித்து ஆராய்ந்தால் அதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது...

மாநிலத்தில் ஏகப்பட்ட இஸ்லாமிய கட்சிகள்...மேலும் அடிக்கடி புதிது புதிதாக முளைக்கும் புதிய அமைப்புகள்....


75 ஆண்டுகள் பராம்பரியம் உள்ள கட்சி இந்தியன் யூனியன் முஸ்லிக் லீக்...


தற்போது அந்த கட்சிக்கு பலர் சொந்தம் கொண்டாடுகிறார்கள்...

அது பல துண்டுகளாக பிரிந்து கிடக்கிறது...

நாங்கள்தான் உண்மையான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள்...

இதேபோன்று, இந்திய தேசிய லீக் கட்சி,  பல துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது...



தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,



பின்னர் மனித நேய மக்கள் கட்சி,

அதில் இருந்து சிலர் பிரிந்து புதிய கட்சி என தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து சிலர் பிரிந்து


இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் தனி அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்...

தமிழ்மாநில முஸ்லிம் லீக்...

இப்படி பல்வேறு பெயர்களில் 60க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன...

எல்லோரும் நாங்கள்தான் இஸ்லாமியர்களின் நலன்களுக்காக, உரிமைகளுக்காக உண்மையாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள்...

போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என சொல்கிறார்கள்...


எங்கள் அமைப்புதான், சிறுபான்மை முஸ்லிம்களுக்கு உண்மையாக சேவை செய்யும் அமைப்பு என்பது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகளின் வாதம்...

கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஒரு அமைப்பு போராட்டம் நடத்தினால், மற்றொரு அமைப்பு, நீங்கள் நடத்தும் போராட்டத்தைவிட நாங்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்திக் காட்டுகிறோம் என முழக்கமிடுகிறார்கள்...

நாங்கள் நடத்திய போராட்டத்தால் சென்னையே குலுங்கியது என பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் பலர் பேட்டி கொடுக்கிறார்கள்...



இப்படி, பல்வேறு போராட்டங்களை தனித்தனியாகவே நடத்தி, தங்களது பலத்தை ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகளும் வெளிப்படுத்தி வருகின்றன...

மது கடைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களும் தனித்தனியாகதான் நடக்கின்றன...

ஒரே பகுதியில் வசித்தாலும், மதுக்கடையை அகற்ற ஒருவர் நடத்தும் போராட்டத்தில் மற்றொருவர் பங்கேற்பதில்லை...

அதனை கவுரவக் குறைவு என கருதுகிறார்கள்...


பொது பிரச்சினையில் ஒன்றுபட்டு குரல் கொடுக்க ஏனோ இஸ்லாமிய அமைப்புகள் இடையே மனம் இல்லை...

இதற்கு முக்கிய காரணம் ஈகோ பிரச்சினைதான்...

ஒருசில விஷங்களில் ஒன்றுபட்டாலும், அதிலும் கூட ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டும் போக்கே அதிகம் இருந்து வருகிறது...

ஒரு இஸ்லாமிய கட்சி, திமுகவின் சிறுபான்மை பிரிவு அமைப்பாக செயல்படுகிறது என்றால், மற்றொரு இஸ்லாமிய கட்சி, அதிமுகவின் சிறுபான்மை பிரிவு அமைப்பாக செயல்படுகிறது.

அரசியலில் மட்டும் இந்த நிலை என்று இல்லை...

அழைப்பு பணி செய்வதிலும் இதே நிலைதான் இருந்து வருகிறது...

நாங்கள்தான் உண்மையாகவே, அழைப்பு பணியை செய்து வருகிறோம்...


இஸ்லாம் குறித்து சகோதர சமுதாய மக்களிடம் எங்கள் அமைப்புதான் சரியான தகவல்களை தெரிவிக்கிறது என ஒரு அமைப்பு கூறினால், இல்லை இல்லை, நாங்கள்தான் உண்மையாக உழைத்து வருகிறோம் என்கிறது மற்றொரு இஸ்லாமிய அமைப்பு...

தேர்தல் நேரங்களில் திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அலையும் இஸ்லாமிய கட்சிகளின் எண்ணிக்கைதான் எத்தனை...

கூட்டணி முடிவாகிவிட்டதும், அந்த கூட்டணி சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்ட மேடைகளை நாம் கூர்ந்து கவனித்து பார்த்ததால், அதில்  எத்தனை இஸ்லாமிய கட்சிகளின் கொடிகள் பறக்கின்றன என்பதை கவனிக்கலாம்...

ஏன் இந்த நிலை....

இஸ்லாமிய அமைப்புகள் ஒற்றுமையாக செயல்படாமல் இருப்பதற்கு யார் காரணம்...

இப்படி சிதறிக் கிடக்கும் இஸ்லாமிய அமைப்புகளை கண்டு எந்த கட்சிதான் அச்சம் கொள்ளும்...

இஸ்லாமிய அமைப்புகள் இடையே ஒற்றுமை இல்லாததால், தேர்தல் காலங்களில், சிறிய ரொட்டி துண்டை வீசுவதைப்  போன்று ஒரு சீட் மட்டும் கொடுத்துவிட்டு, சிறுபான்மை மக்களுக்கு மிகப் பெரிய அளவுக்கு நீதி செய்துவிட்டதாக முக்கிய கட்சிகள் கூறி விடுகின்றன...

சரி,

தமிழகத்தில் இருக்கும் பல்வேறு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் குறித்து மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இடையே நல்ல கருத்து இருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம்..

அந்தந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், தங்களது அமைப்புகளை புகழ்ந்து பேசிக் கொள்ளலாம்...

ஆனால், முஸ்லிம்களிடையே ஒருவித வெறுப்புணர்வு இருப்பதை, இந்த அமைப்புகள் ஏனோ இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை....

ஒருவர் மீது ஒருவர் புகார் கூறுவதை நிறுத்திவிட்டு, சமுதாயத்தின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு, செயல்பட இனியாவது இஸ்லாமிய அமைப்புகள் முன்வர வேண்டும்...

உரிமைகளை பெற,

உரிமைகளை மீட்க


ஒற்றுமை முக்கியம் என்பதை இஸ்லாமிய அமைப்புகள் உணர்ந்து கொள்ள வேண்டும்...

அப்போதுதான், ஆளும் வர்க்கம் இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்...

வளர்ந்து வரும் இளம் இஸ்லாமிய சமுதாயம் நல்ல வழியை நோக்கி செல்ல, இஸ்லாமிய அமைப்புகள்தான் வழி காட்ட வேண்டும்....

இல்லையென்றால், எதிர்காலத்தில் இஸ்லாமிய இளைஞர்களுக்கு, அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டிய நிலை ஏற்படும்...

கடைசியாக,


மீண்டும் ஒருமுறை இஸ்லாத்தின் அறிவுரையை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகளில் உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைத்து இஸ்லாமியர்களும் தங்களது உள்ளத்தில் அழமாக பதிவு செய்ய முயற்சி செய்வோம்......

"ஒற்றுமை என்னும் கயிற்றைப் பலமாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து நிற்காதீர்கள்."

இந்த அழகிய அறிவுரையை மனதில் உள்வாங்கி, வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் கடைப்பிடித்து அனைவரும் நல்ல வெற்றியை சுவைப்போம்....

என்ன.....சரிதானே....


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=======================

Wednesday, November 6, 2013

பாலியல் கொடுமைகள்.....!

"அதிகரித்து வரும் பாலியல் 

கொடுமைகள்.....! தீர்வுதான் என்ன ? "



ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்....ஆசிரியர் கைது....

ஓடும் பேருந்தில் பெண்களிடம் குறும்பு....வாலிபருக்கு தர்ம அடி....

காரில் கடத்திச் சென்று இளம் பெண் கற்பழிப்பு....நான்கு பேர் கைது.....

இப்படி, பெண்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்த செய்திகள் எதுவும் இல்லாமல் இன்றைய நாளிதழ்களை நாம் தற்போது படிக்க முடியாது..

தொலைக்காட்சி ஊடகங்களிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்த செய்திகள் தினந்தோறும் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன...


டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்தது.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகள்.....கோப முழக்கங்கள்....எழுந்தன.


அந்த சம்பவத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் மட்டுமல்ல, நாட்டின் முக்கிய நகரங்களில் பெண்கள், சமூக அமைப்பு சேர்ந்தவர்கள் என பலர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போது, பெண்களுக்கு எதிராக நடப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் கூட, பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கிலிட வேண்டும் என குரல் எழுப்பினர்...


இப்படி, ஒட்டு மொத்த சமுதாயமும், பெண்களுக்கு ஆதரவாக திரண்டபோதும், பெண்கள் மீது நடத்தப்படும் கொடுமைகள் நின்று விட்டதா என்றால் இல்லவே இல்லை எனலாம்...

செய்தி ஊடகங்களில் இப்போதுகூட நாள்தோறும் பெண்கள் அனுபவிக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த தகவல்கள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன...

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க என்னதான் வழி...?

கடுமையான சட்டங்கள் மட்டும் மக்களின் மனங்களை மாற்றி விடுமா....


நாட்டில் தற்போது மது ஆறாக ஓடுகிறது...

மதுவை அருந்திவிட்டு, பெண்களை கொடுமைப்படுத்துவோர் அதிகரித்து வருகின்றனர்...

இது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு...உண்மைதான்...ஆய்வும் அது உண்மை என ஒப்புக் கொள்கிறது...

திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள், பத்திரிகைகளில் வரும் ஆபாசப் படங்கள், கதைகள் இவையெல்லாம் முக்கிய காரணம் என்பது மற்றவர்களின் புகார்...

நம் நாட்டில் சுதந்திரம் அதிகம்...சட்டங்களை யாரும் மதிப்பதில்லை...

பல நாடுகளில் சட்டங்களை மக்கள் மதிக்கிறார்கள்...அங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும், இந்தியாவை போன்று அதன் எண்ணிக்கை குறைவு என்பது சிலரின் வாதம்...


பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை அரபு நாடுகளில் உள்ளது போன்று கடுமையாக தண்டிக்க வேண்டும் என டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது, ஒரு சமூக ஆர்வலர் வலியுறுத்தினார்...

இதனால் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியுமா....

பெண்ணை போதை பொருளாக மட்டும் பார்க்கும் சமூகம் எப்படி திருந்தும்...

பெண்ணை, தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, தோழியாக, பார்க்க பலருக்கு இன்னும் மனம் இல்லை....

அதுதான் பிரச்சினை....

மதங்கள், மார்க்கங்கள், பெண்களை கண்ணியப்படுத்துகின்றன....


ஆனால், நீதி நூல்களை படிக்கும் பலர், அவற்றை ஏனோ, தங்களது வாழ்வில் கடைப்பிடிப்பதில்லை...

படித்து, அத்தோடு விட்டுவிடுகின்றனர்....

இதனால், மதங்கள், மார்க்கங்களால் மட்டுமே குற்றங்களை தடுத்துவிட முடியாது என்பது தெளிவாகிறது...

நமது செயல்கள் ஒவ்வொன்றிற்கும் நாம் பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற நினைப்பு நம் ஒவ்வொருவரின் மனதில் ஆழமாக பதிய வேண்டும்...

எப்படி, ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் சரி பார்க்கப்பட்டு ஆடிட் செய்யப்படுகிறதோ, அதுபோன்று, நம்முடைய வாழ்வும், ஆடிட் செய்யப்படும் என்பதை மறந்து விடக்கூடாது.

நாம் செய்த நல்ல செயல்கள், பண்புகள், தீமைகள், ஆகியவற்றிற்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நினைவில் உறுதியாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும்....

அப்போதுதான், நாம் உண்மை மனிதர்களாக வாழ முடியும்...

இதன்மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்...


எல்லாவற்றிற்கும் மேலாக, மனித மனங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்...

பெண்களை மதிக்க, நேசிக்க மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும்...

தன் தாய், தன் மகள், தன் சகோதரி, தன் மனைவி, தன் தோழி கற்பழிக்கப்பட்டால், எப்படி ஒருவன் துடிதுடித்து போவானோ, அப்படி, வேறு பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் கதறி அழ வேண்டும்.. துடிக்க வேண்டும்...




இப்படிப்பட்ட மனநிலை மனித மனங்களில் ஏற்பட்டால் ஒழிய பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மட்டுமல்ல, அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடரவே செய்யும்....

இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க....

இனியும் நாம் பெண்களை மதிக்க கற்றுக் கொள்வோம்....


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

===================================

Sunday, November 3, 2013

" காலத்தின் மீது சத்தியமாக ! "


புது டெல்லியில் பணிபுரிந்த காலம் அது.....

டெல்லியில் புகழ் பெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஜாமியா நகரில், மற்றொரு பிரபல இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

ஆம்... ஐ.ஓ.எஸ். (I.O.S.) என்று அழைக்கப்படும் அந்த ஆராய்ச்சி நிறுவனத்தில், கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.

அந்த நிறுவனத்தின் சேர்மன் (தலைவர்) டாக்டர் மன்சூர் ஆலம், பொருளாதாரத்துறையில் ஆய்வுகள் பல மேற்கொண்டு, முனைவர் பட்டங்களை குவித்தவர்...

இஸ்லாமிய பொருளாதாரம் குறித்து பன்னாட்டு அளவில் நடைபெறும் கருத்தரங்கங்களில் பங்கேற்று, இஸ்லாமிய வங்கி முறை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என்பதை, இஸ்லாமிய அடிப்படையில் விளக்கம் அளிப்பவர்...

நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் மன்சூர் ஆலமுக்கு நல்ல மதிப்பு உண்டு...

சரி விஷயத்திற்கு வருகிறேன்...

ஐ.ஓ.எஸ். நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு, சிந்தனையை சீராக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,  வாரத்தின் முதல்நாள், திருக்குர்ஆனின் அத்தியாயங்களில் இருந்து சில வசனங்கள் ஓதி, அதற்கு விளக்கம் அளிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.


ஐ.ஓ.எஸ். நிறுவனத்தில் உள்ள கருத்தரங்க அறையில், ஊழியர்கள் அனைவரும் கூடியதும், சேர்மன் மன்சூர் ஆலம், திருக்குர்ஆனை ஓதி, எளிய உர்தூவில் விளக்கம் அளிப்பார்.

அதை கேட்கும்போது, உள்ளத்தில் ஒருவித மகிழ்ச்சி பிறக்கும்....சிந்தனைகள் சீராகும்...

இப்படிதான் ஒருநாள், திருக்குர்ஆனின் 103வது அத்தியாயமான அல் அஸ்ர் அத்தியாயத்தின் மூன்று வசனங்கள் ஓதி, அதற்கு உர்தூ மொழியில் மிக எளிமையாக விளக்கம் அளித்தார் மன்சூர் ஆலம்....

"அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்."

என கூறிவிட்டு,

" காலத்தின் மீது சத்தியமாக !
  மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான்.
 ஆனால்,
 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும்,
 நற்செயல்கள் புரிந்து கொண்டும்,
 மேலும்,
 ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும்,
 பொறுமையை கடைப்பிடிக்குமாறு
 அறிவுரை கூறிக் கொண்டும்
 இருந்தார்களோ அவர்களைத் தவிர ! "

என்று அல் அஸ்ர் அத்தியாயத்தை அரபி மொழியில் வாசித்து, அதற்கு உர்தூவில் விளக்கம் அளிக்க தொடங்கினார் மன்சூர் ஆலம்...

நண்பர்களே, இந்த அத்தியாயம் மனிதனின் மனங்களில் சுருக்கமாக, ஆழமாக பதிக்கும் வகையில் அமைந்துள்ளதை நீங்கள் கவனிக்கலாம்...

சுருக்கமான வார்த்தைகளில் அதிக கருத்துகள் இந்த அத்தியாயத்தில் உண்டு...

வெற்றி, அழிவுக்கு செல்லும் பாதை எது என்பதை இந்த அத்தியாயம் கூறுகிறது...

அதாவது,


மனிதன் முதலில் இறைநம்பிக்கை கொள்ள வேண்டும்...

உலகை படைத்து பரிபாலித்து வரும் ஓர் இறைவன் மீது முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும்...

இறைநம்பிக்கை வைப்பது மட்டுமல்ல, நற்செயல்கள் புரிந்து வரவேண்டும்...

அது சின்ன சின்ன செயல்களாக இருந்தாலும் சரி... மகிழ்ச்சியுடன் அவற்றை செய்ய வேண்டும்...

அத்தோடு, ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டும்...

நாம் மட்டும் நல்லவர்களாக வாழ்ந்தால் போதும் என நினைக்கக் கூடாது....

மற்றவர்களும், அதாவது, நமது உறவினர்கள், சொந்தங்கள், அண்டை வீட்டார்கள், ஊர் மக்கள், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்கள், உலகில் வாழும் மக்கள் என அனைத்து தரப்பினரும், நல்லவர்களாக, வல்லவர்கள், அமைதியாக வாழ வேண்டும்...

அதற்காக அனைத்து தரப்பு மக்களிடமும் சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டும்...

அடுத்து, பொறுமையை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும்...


முதலில்  பொறுமை என்ற உயர்ந்த குணத்தை நம்மிடையே வளர்த்து கொண்டால்தான் மற்றவர்களிடம் அதுகுறித்து சொல்ல முடியும்...

எனவே, எந்த நேரத்திலும் பொறுமையை நாம் கையாள வேண்டும்...

அதற்காக நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்...

முதலில் இறைநம்பிக்கை,
அடுத்து நற்செயல்கள் புரிந்து வருவது,
பிறகு மற்றவர்களிடம் சத்தியத்தை எடுத்துரைப்பது,
இறுதியாக பொறுமையை கடைப்பிடிப்பது....

மேற்குறிப்பிட்ட இந்த பண்புகள் ஒரு மனிதனிடம் இருந்து விட்டால் பிறகு  மனிதர்களிடையே எங்கே வெடிக்கும் கலவரம்...வன்முறை...

உலகம்  அமைதி பூங்காவனமாக மாறிவிடும் அல்லவா....

இறைநம்பிக்கை இல்லாமல், நற்செயல்கள் புரியாமல், சத்தியத்தை எடுத்துரைக்காமல், பொறுமையை கடைப்பிடிக்காமல் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சிறிது கற்பனை செய்து பாருங்கள்...


நிச்சயம் அது, நரக வாழ்க்கையாகவே இருக்கும்...

உலக வாழ்க்கையில் மட்டுமல்ல, மறுமை வாழ்க்கையிலும் நிம்மதி கிடைக்காது...

எனவே, தோழர்களே, அல் அஸ்ர் அத்தியாயத்தின் மூன்று வசனங்களை நன்கு படித்து அதனை உணர்ந்து உங்கள் வாழ்க்கையில் ஒளிரச் செய்யுங்கள்....

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதனை கடைப்பிக்க முயற்சி செய்யுங்கள்...

பிறகு, வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள்...

நிச்சயம், மனதில் அமைதி பிறந்து என்னென்றும் நிலைத்து இருக்கும்...

போட்டி, பொறாமை நிறைந்த உலகத்தில், மனம் தடுமாறினாலும், பின்னர் தனது இயல்பு நிலைக்கு வந்துவிடும்...

பிறரை நேசிக்க தூண்டும்...

உதவிக்கரம் நீட்ட ஆசை பிறக்கும்....


எந்த துன்பம் ஏற்பட்டாலும், இறைவன் மீது கொள்ளும் உறுதியான நம்பிக்கையால் அவற்றை தாங்கிக் கொள்ளும் வலிமை உள்ளத்திற்கு கிடைக்கும்....

எந்த நேரத்திலும் பொறுமையை கடைப்பிடிப்பதால், துன்பங்களை கண்டு மனம் கலங்காது....

அனைவரையும் நேசிப்பதால், பொறாமை, புறம் பேசுதல் போன்ற குணங்கள் நம்மை விட்டு அகலும்...

இவையெல்லாம்தான், இந்த அல் அஸ்ர் அத்தியாயம் நமக்கு சொல்லித்தருகிறது...

எனவே, மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்....

" காலத்தின் மீது சத்தியமாக !
  மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான்.
 ஆனால்,
 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும்,
 நற்செயல்கள் புரிந்து கொண்டும்,
 மேலும்,
 ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும்,
 பொறுமையை கடைப்பிடிக்குமாறு
 அறிவுரை கூறிக் கொண்டும்
 இருந்தார்களோ அவர்களைத் தவிர ! "



இந்த அத்தியாயத்தை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளுங்கள்...

வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள்...

வெற்றியாளர்களாக மாறுங்கள்...

இறைவன், குறிப்பிடும்படி நஷ்டத்தில் இருக்காதீர்கள்.....என்றார் டாக்டர் மன்சூர் ஆலம்....

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஓடோடி விட்டன. அவரது வார்த்தைகள் இன்னும் என்னுடைய காதில் ரிங்காரம் செய்துக்  கொண்டிருக்கின்றன....

ஒவ்வொரு நாளும் பலமுறை அல் அஸ்ர் அத்தியாசத்தை ஓதி, அதன் மொழியாக்கத்தை மனதில் நான் உள்வாங்கிக் கொண்டே இருக்கிறேன்....

அதன்மூலம், உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்கிறது....



வாழ்வில் அமைதி கிடைக்கிறது...

பிறரை நேசிக்க தூண்டுகிறது...

உள்ளம் தடுமாறும்போது, இறைநம்பிக்கை, அதனை தடுக்கிறது..

நீங்களும் இந்த அத்தியாயத்தின் கருத்தை உள்வாங்கி, உங்கள் வாழ்விலும் அமைதியை தேட வேண்டும் என்பது எனது விருப்பம்.....

இறைவன் விரும்பினால் எல்லாமே நன்றாக நடக்கும்....


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
==============================

Saturday, November 2, 2013

" ஊடக பண்பாளர்கள்........! "

ஊடகத்துறையில் மனசாட்சிக்கு விரோதமாக செயல்படும், நபர்கள் நிறைய பேர் இருந்து வருவதாக ஏற்கனவே எழுதியிருந்தேன்.

உண்மை உழைப்பாளர்களின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல், பல ரூபங்களில் இறங்கி வேலை செய்பவர்கள் இங்கு அதிகம் உண்டு...

அலுவலகத்திற்கு வருவதே, மற்றவர்களின் பணிகள் குறித்து உளவு வேலை பார்த்து, அதை தலைமைச் செய்தி ஆசிரியரின் காதில் போடுவதை கலையாக கொண்டு செயல்படுபவர்கள் ஊடகத்துறையில் அதிகம்...

அதன்மூலம், சொற்ப லாபம் சிலருக்கு கிடைக்கிறது.... மேலும், வேலை செய்யாமலேயே ஊதியம் பெறவும் செய்கிறார்கள்....

இப்படி, ஊடகத்துறையின் புனிதத்தை சிலர் கெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், பல நல்ல உள்ளம் கொண்ட பண்பாளர்களும் ஊடகத்துறையில் இருக்கத்தான் செய்கிறார்கள்...

பல ஜாம்பவான்கள் ஊடகத்துறையை நேசிக்கிறார்கள்...அதன்மூலம், அமைதியாக பணிபுரிந்து வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்....பிடித்தார்கள்...

ஊடகத்துறையில் சாதனை படைத்த ஜாம்பவான்கள் ஏராளம் இருக்க, நான் சந்தித்த
எளிய பண்பாளர்கள், வெளிச்சத்திற்கு வராத நல்லவர்கள், ஒருசிலரை பற்றி இங்கு குறிப்பிடுகிறன்....

என்னை போன்று, ஊடகத்துறையில் இருக்கும் பலரும், இவர்களை போன்ற நல்ல பண்பாளர்களை தங்களது வாழ்க்கையில், அனுபவத்தில் சந்தித்து இருக்கலாம்...

நான் சந்தித்த பல நல்ல பண்பாளர்களில் ஒருசிலர் இதோ.....

சம்பந்தன் முரளி (கலைஞர் தொலைக்காட்சி)

 
ஹரிகிருஷ்ணன் (பாலிமர் தொலைக்காட்சி)


இளம்பரிதி (தந்தி தொலைக்காட்சி)


சிவக்குமார் (சன் நியூஸ் தொலைக்காட்சி)



சங்கரலிங்கம் (புதுயுகம் தொலைக்காட்சி)



சிராஜுல் ஹசன் (சமரசம் இதழ்)



செந்தில் ராஜ்குமார் சிவலிங்கம் (பத்திரிகையாளர்)



ஜெயக்குமார் (ராஜ் தொலைக்காட்சி)


மசூத் அகமது (பத்திரிகையாளர்)

விஜய் தேவ் (தினமலர் நாளிதழ்)

மேலே நான் குறிப்பிட்ட இவர்கள், மற்றவர்களின் வளர்ச்சியில் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைபவர்கள்....

போட்டி, பொறாமை நிறைந்த ஊடகத்துறையில், எங்கே நமது நண்பர் வளர்ச்சி அடைந்து விடுவரோ என்று சிறிதும் மனதில் நினைக்காதவர்கள்....

திறமையை அறிந்து ஊக்குவிப்பவர்கள்....

பல நேரங்களில் எனக்கு ஆறுதல் கூறுபவர்கள்...

நிறைய எழுது தூண்டுபவர்கள்....

வீழ்ச்சியை சந்திக்கும்போது, ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டுபவர்கள்.

இந்த பண்பாளர்களின் பண்புகள், குணங்கள், அவர்களின் சமூக அக்கறை ஆகியவை குறித்து தனித்தனியாக நிறைய எழுதலாம்..

ஆனால், அதனை சிறிதும் இவர்கள் விரும்பாததால், சுருக்கமாக மட்டுமே அவர்களைப் பற்றி சில வார்த்தைகள் மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன். நல்ல பண்பாளர்கள் என்று....

இவர்கள் மட்டுமல்ல, உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தாலும், தங்களுடைய சூழல் காரணமாக  அதனை செய்ய முடியாத நிலையில் இருக்கும் நிறைய நண்பர்களை நான் ஊடகத்துறையில் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்...

இவர்கள் மற்றவர்களின் வளர்ச்சியை நேசிப்பவர்கள்....பொறாமை கொள்ளாதவர்கள்...

குறிப்பாக,

மைக்கல் ஜார்ஜ் (சன் தொலைக்காட்சி)

ஸ்ரீதர் (சன் நியூஸ் தொலைக்காட்சி)

சுரேஷ்குமார் (சன் தொலைக்காட்சி)

மணிமாறன் (கலைஞர் தொலைக்காட்சி)

ரங்கபாஷ்யம் (பத்திரிகையாளர்)

சங்கரபாண்டியன் (கலைஞர் தொலைக்காட்சி)

பிரம்மா (தந்தி தொலைக்காட்சி)

மாரியப்பன் (மக்கள் தொலைக்காட்சி)

ஆனந்த்குமார் (மக்கள் தொலைக்காட்சி)

கார்த்திகேயன் ( ஜி செய்தி தொலைக்காட்சி)

மேலே நான் பட்டியலிட்டது ஒருசிலரை மட்டுமே....

நிறைய ஜாம்பவான்களையும் சந்தித்து இருக்கிறேன்....அவர்களை பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை...

எளிமையானவர்கள் மட்டும் இங்கு இடம் பெற்றிருக்கிறார்கள்...

இப்படிப்பட்டவர்களின் பட்டியல் நீளுகிறது. அது மிகப் பெரியது....

இந்த பண்பாளர்கள் பல ஊடகங்களில் அமைதியாக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்...

இவர்களின் பணிகள் இன்னும் வெளிச்சத்திற்கு வராமலேயே இருக்கிறது....

சில அரை வேக்காடுகள், ஒருசில ஊடகங்களில் புகுந்து அட்டகாசம் செய்துக் கொண்டிருக்கும் நிலையில், குறைந்த சம்பளம் வாங்கினாலும், மன திருப்தியுடன்
இவர்கள் பணிபுரிந்து கொண்டிருப்பது, பல நேரங்களில் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்...



இதுபோன்ற பண்பாளர்கள் இருப்பதால்தான், ஊடகத்துறையின் புனிதம் இன்னும் காப்பாற்றப்பட்டு வருகிறது...

சமூகத்தில் ஊடகத்துறை குறித்து நல்ல எண்ணம் மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில், இதுபோன்ற நல்ல பண்பாளர்கள் ஊடகத்துறையில் வலம் வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது...

இவர்களை போன்ற நல்ல பண்பாளர்கள், நிச்சயம் ஊடகத்துறையை தூக்கி நிறுத்துவார்கள்...

உண்மைதானே நண்பர்களே....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
========================

Thursday, October 31, 2013

ஊடகங்களில் உலாவும் நாதாரிகள்.....!  உஷார்.....!!


என்னது.....

தலைப்பு ஒரு மாதிரியாக இருக்கிறது...?

நீங்கள் கேள்வி எழுப்பலாம்....

தமிழக ஊடகங்களில் (ஒருசில) அண்மை காலமாக நடைபெறும் சில நிகழ்வுகள்....

எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள்....

அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்....

பிறகு நீங்களே தீர்மானித்து விடுங்கள்....

நான் சொல்வது உண்மையா, இல்லையா என்பதை....

நான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வந்த நேரம் அது...

அந்த நிறுவனத்தில் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கப்படுவதில்லை...

எனவே, வேறு ஒரு நல்ல நிறுவனத்தில் சேர முயற்சி செய்துக் கொண்டிருந்தேன்...

பல நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அளித்திருந்தேன்...

இப்படிப்பட்ட நேரத்தில்தான், நல்ல நிறுவனம் ஒன்றில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த, எனக்கு அறிமுகமான நண்பர் (அவரை அப்படி அழைக்கக்கூடாது) ஒருவர் என்னிடம் அடிக்கடி செல்பேசியில் தொடர்பு கொண்டு மணிக்கணக்கில் பேசுவார்.

அந்த நிறுவனம் குறித்து தப்பு தப்பாக விவரங்களை கூறுவார்....


அங்கு பணிபுரியும் ஊழியர்களின் திறமைகள் குறித்து குறைத்து மதிப்பிட்டு நிலைமை சரியில்லை என்பார்.

நீங்கள் வேறு ஒரு நல்ல நிறுவனத்திற்கு முயற்சி செய்யுங்கள் என தினமும் ஆலோசனைகள் தருவார்....

நானும் அந்த நபர் மீது நல்ல மதிப்பு வைத்திருந்ததால், என்னுடைய நலனை கருத்தில் கொண்டு சொல்கிறார் என்று நம்பினேன்.

இந்த நிலையில்தான், நான் மேற்குறிப்பிட்டபடி, அந்த நிறுவனத்தில் இருந்து ஒருநாள் எனக்கு அழைப்பு வந்தது...

நானும், சென்றுதான் பார்ப்போமே என்று நினைத்து அங்கு சென்றேன்...

அந்த தொலைக்காட்சியில்,  அப்போது தலைமை செய்தி ஆசிரியராக இருந்த நல்ல மனிதரை சந்தித்து பேசினேன்...

அவர் எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி பணியில் சேரும்படி அறிவுறுத்தினார்...

நானும், சேர்ந்துவிடலாம் என நினைத்து அங்கிருந்து கிளம்பினேன்...

திருவல்லிகேணியில் இருந்த என்னுடைய அறைக்கு வந்த சிறிது நேரத்தில், அந்த நண்பரின் செல்பேசி என்னை அழைத்தது...

எதிர்முனையில் பேசி அந்த நபர், சார் என்ன சொன்னார்கள்....அந்த சம்பளத்திற்கு நீங்கள் ஓ.கே. சொல்லாதீர்கள்...அதிக சம்பளம் கேளுங்கள்...இங்கு நிலைமை சரியில்லை...

இப்படி சொன்னபோது, உண்மைதான் என நானும் நினைத்தேன்...அந்த நபரின் ஆலோசனையை ஏற்று, அந்த நிறுவனத்தில் சேரவில்லை...

பிறகு, நான் பணிபுரிந்த நிறுவனத்தில் சம்பள பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

மூன்று, நான்கு மாதங்கள் என சம்பளம் கொடுக்கப்படவில்லை...

மீண்டும், முதலில் சென்று வந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் முயற்சி செய்யலாம் என நினைத்து, மற்றொரு நண்பர் மூலம் முயற்சி செய்தேன்.



அவரும், தலைமை செய்தி ஆசிரியரிடம் பேசி என்னை போக சொன்னார்...

நானும் சென்று வந்தேன்.... நான் வந்து சென்ற விஷயம் கேள்விப்பட்டதும், அந்த நபர், மீண்டும் என்னை தொடர்பு கொண்டு, சார் நீங்கள் இங்கே வரவே வேண்டாம் சார். என்றார். சன்னுக்கு, கலைஞருக்கு முயற்சி செய்யுங்கள் என்றார்..

அப்போதுதான், அந்த நபர், நான் அங்கு வருவதை சிறிதும் விரும்பவில்லை என்பது என்னுடைய அறிவுக்கு எட்டியது...

என்ன கோல்மால் செய்தாரோ, எனக்கு அங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

நல்ல வாய்ப்பு....கைநிறைய சம்பளம்...சிறப்பான இடத்தில் அமர வேண்டிய நிலை...

இதை அனைத்தையும் அந்த நண்பர் கெடுத்துவிட்டார்...

அப்போது எனக்கு,  "கூடா நட்பு கேடாய் முடியும்.."  என்ற பழமொழிதான் ஞாபத்திற்கு வந்தது.

இப்போது சொல்லுங்கள் இவரை நான் எப்படி அழைப்பது.....

இதேபோன்று, ஊடகத்துறையில் பணிபுரியும் சிலர், தவறான வழிகளில் பலரை மிரட்டி பல லட்சம் ரூபாய் சுருட்டிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

பாதிக்கப்பட்ட சிலர், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எழுதும் கடிதங்கள் இதற்கு சாட்சிகளாக உள்ளன...

இப்படிப்பட்டவர்களை எப்படி அழைப்பது...

ஒருசில தொலைக்காட்சிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அணிந்து வரும் உடை, இந்திய கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவ்ற்றிற்கு வேட்டு வைக்கும் வகையில் இருநது வருகிறது...

இவற்றை சம்பந்தப்பட்டவர்கள் தடுத்து நிறுத்துவதில்லை...அதனால், அங்கு ஒழுக்க சீர்கேடுகள் அரங்கேற்றப்படுகின்றன....

ஒருசிலர், பெண் ஊழியர்களிடம் நடந்து கொள்ளும் முறை, ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை....

இதேபோன்று,  அடிக்கடி, ஒவ்வொரு நிறுவனத்திற்கு தாவும் சிலர், அங்கு யாரையும் வாழ விடாமல் மற்றவர்களையும் வெளியேற்றிவிட்ட ஆனந்தம் கொள்கிறார்கள்...இரண்டு மாதம், மூன்று மாதம் என பணிபுரிந்து விட்டு, காசு பார்த்து விட்டு, பெரிய ஜாம்பவான்கள் போன்று வேஷமிடுகிறார்கள்...இது அண்மை காலமாக ஊடகத்துறையில் நடக்கும் கூத்துகள்...


இவையெல்லாம், ஊடகத்துறையில் மட்டுமல்ல,  எல்லா துறைகளிலும் நடக்கிறது எனலாம்...

ஆனால், ஜனநாயகத்தின் முக்கிய தூணாக விளங்கும் ஊடகத்துறை, மேற்குறிப்பிட்டவர்களால், சமூகத்தில் தற்போது மதிப்பு குறைந்து வருகிறது...

பத்திரிகை துறை குறித்து முகநூலில் அன்பர் ஒருவர், எழுதும்போது, பத்திரிகையாளர்களின் நடவடிக்கைகளால், அவர்கள் மீது இருந்த மதிப்பு, மரியாதை குறைந்து விட்டது என குறிப்பிட்டார்...

உண்மைதான்...

சமூகத்தில் பத்திரிகையாளர்களை மதிக்கும் போக்கு குறைந்து வருகிறது...

எல்லாவற்றிற்கும் காரணம் தலைப்பில் நான் குறிப்பிட்ட நபர்களால்தான்....

சரி, ஊடகத்துறையில் நல்ல பண்பாளர்கள் இல்லையா.... என நீங்கள் கேட்கலாம்....

நிறைய பேர் இருக்கிறார்கள்...அந்த நல்ல பண்பாளர்கள்..அமைதியாக பணிபுரிந்து பத்திரிகை துறைக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்...

ஊடகத்துறையில் நான் சந்தித்த சில நல்ல பண்பாளர்கள் குறித்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்....


ஏஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
==================================

Sunday, October 27, 2013

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான

அ.தி.மு.க. அரசு... 

இரண்டரை ஆண்டுகள் 

சாதனை என்ன ?



மக்களால் நான்.....மக்களுக்காக
நான்...

இது அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா சொல்லும் வார்த்தைகள்....

மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா.

பொதுவாக அவரை அம்மா என்று எல்லோரும் தற்போது அழைக்க ஆரம்பித்துள்ளதால், நானும் இந்த கட்டுரையில், அம்மா என்றே குறிப்பிட்டு எழுதுகிறேன்....

அம்மாவின் இரண்டரை கால ஆட்சி எப்படி இருக்கிறது...

தமிழகம் அமைதி பூங்காவனமாக திகழ்கிறது.....

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன....

குறிப்பாக, தொழிலாளர்களின் வசதிக்காக கொண்டு வரப்பட்டுள்ள அம்மா உணவகம் திட்டம், சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய மாநகராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.



இந்த திட்டத்திற்கு ஏழை, எளிய, தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது...

ஒருநாள், தேனாப்பேட்டையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பேருந்திற்காக காத்திருந்தேன்.

அப்போது, இரண்டு தொழிலாளர்கள் பேசிக் கொண்டது என்னுடைய காதில் விழுந்தது...

அம்மா உணவகம் திட்டம் குறித்து அவர்கள் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்...

ஆக, அம்மா உணவகம் திட்டம் ஏழை மக்களை சென்று சேர்ந்துள்ளது... குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளது தொழிலாளர் வர்க்கம்...



பல நேரங்களில் விரைவிலேயே உணவு வகைகள் அனைத்தும் விற்பனையாகி விடுவதால், பலருக்கு உணவு கிடைப்பது இல்லை என்ற புகார் இருந்தாலும், இந்த திட்டம் அதிமுக அரசின் சாதனை திட்டம் என்றே சொல்லாம்....

அடுத்து, பெண்களை கவரும் வகையில் கொண்டு வரப்பட்ட பண்ணை பசுமை காய்கறி நுகர்வோர் கடைகள்....

காய்கறி விலைகள் விண்ணை தொட்டு வரும் நிலையில், மலிவு விலையில் தரமான காய்கறிகள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்களின் ஆசை....




உடனே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பண்ணை பசுமை காய்கறி நுகர்வோர் கடைகள் திறக்கப்பட்டன.

தரமான காய்கறிகள், குறைந்த விலைக்கு கிடைப்பதால், பெண்கள், குறிப்பாக ஏழை, மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...

அடுத்து, அம்மா மினரல் வாட்டர்....

10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர்....தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது அம்மா மினரல் வாட்டர்....






இந்த திட்டமும் ஏழை, எளிய மக்களின் வசதிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது...நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது...

அடுத்து, காமதேனு கூட்டுறவு கடைகளில் ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டம்.... ரேஷ்ன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

எனினும் வெளிமார்க்கட்டுகளில் அரிசி விலை கூடுதலாக இருப்பதால், நடுத்தர மக்கள் குறைந்த விலையில் அரிசி வாங்க என்ன வழி...

 அம்மா புதிய திட்டத்தை அறிவித்தார்....

ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம் என்பதுதான் அந்த திட்டம்...

இதுவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்...

அடுத்து, சென்னையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள மினி பேருந்து திட்டம்...

சாலைகளில், வீதிகளில் மினி பேருந்துகள் செல்வது சென்னைவாசிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது....

பல பத்திரிகைகளில் வரும் பொதுமக்களின் பேட்டிகள், தொலைக்காட்சிகளில் வரும் நேர்காணல்கள், மினி பேருந்துகளுக்கு கிடைத்துள்ள வரவேற்பை படம் பிடித்து காட்டுகின்றன....

இதேபோன்று, இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் திட்டமும் மக்களை சென்று அடைந்துள்ளது......



இதுபோன்று, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வசதிக்காக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம், மக்களிடையே ஆட்சிக்கு வரவேற்பு கிடைத்து உள்ளதாகவே கூறலாம்...

மின் தட்டுப்பாடு தற்போது குறைந்துள்ளது....பல மாதங்கள் மின் வெட்டால் அவதிப்பட்ட பொதுமக்கள், இப்போது, வீடுகளில் மின்வெட்டு இல்லை என்பதால், அதிமுக அரசை பாராட்ட தொடங்கியுள்ளனர்...

காவிரி நதி நீர் விவகாரம்....

இலங்கை தமிழர் விவகாரம்....

மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகள்....

கச்சத்தீவு விவகாரம்...

இப்படி பல விவகாரங்களிலும், முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்களின் அணுகுமுறைகள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன....

விஸ்வரூபம் திரைப்படம் விவகாரத்தில், சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை ஏற்று, தீர்வு கண்டது....

சிறுபான்மை மக்களின் நலன்களில் அக்கறை...

திரைப்படத்துறையினர் மீது அவர் கொண்டுள்ள பாசம்...

தமிழக காவல்துறையை உலகத்தரத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சி...



ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே, ஆதிக்கம் செலுத்தி வந்த திரைப்படத்துறை, தற்போது, அனைத்து தரப்பு கலைஞர்களின் கைகளில் தவழ்கிறது....

அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகுதான், புதிய தொலைக்காட்சி ஊடகங்கள் பிறந்தன..

தற்போது,.சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன...

தொழில் வளர்ச்சியில் கூட தமிழகம் முன்னேறி வருகிறது....

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

அதிமுக ஆட்சியில் குறைகளே இல்லையா.....இந்த கேள்வி எல்லோருக்கும் எழும்...

ஒருசில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன...மறுப்பதற்கு இல்லை...

ஆனால்....



ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகம், பண்ணை பசுமை காய்கறி நுகர்வோர் திட்டம், அம்மா மினரல் வாட்டர், மினி பேருந்து திட்டம்....குறைந்த விலையில் அரிசி விற்பனை...

இதுபோன்ற மக்களை கவரும் திட்டங்களால், அதிமுக அரசின் ஒருசில குறைகள் மக்களால் மறக்கப்பட்டுள்ளன...

இதனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவிற்கு நல்ல மகசூல் கிடைக்கப் போகிறது என்றே சொல்லலாம்....

காரணம்.... மக்களின் நாடி அறிந்து, பல திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்று சேரும் வகையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன....

கோடிக்கணக்கில் நிதி செலவிட்டு பெரிய பெரிய கட்டிடங்களை கட்டி வரலாற்றில் இடம் பெற வேண்டும் என அதிமுக அரசு நினைக்கவில்லை என தெரிகிறது....

எனவேதான், அதில் அக்கறை செலுத்தாமல், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.....



அதனால்தான் கூறுகிறேன்...அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியை சூவைக்கும்...

மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும்....

நரேந்தர மோடியின் பிரதமர் கனவுகள் எல்லாம் சிதைந்து போகும்....

இறைவன் விரும்பினால்......

நாட்டில் நல்லதே நடக்கும்.....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

ஊடக முதலாளிகளை ஏமாற்றும் 

அரை வேக்காடுகள்......


வுட்புட் எடிட்டர்(Output Editor)......அப்படியன்னா என்ன...?
அன்கட் பைட் (uncut Byte).....அது என்ன ?
மாலாலாவை தெரியுமா....அது யாரு?

இந்த கேள்விகள் எல்லாம் அண்மையில் தொடங்கப்பட்ட ஒரு தொலைக்காட்சியின் செய்திப்பிரிவுக்கு நேர்முக தேர்வுக்கு சென்றவரிடம் கேட்டகப்பட்டவை...

நேர்முக தேர்வில் கலந்து கொண்டவருக்கு நிச்சயம்  பதில் தெரியவில்லை...

வேலை கிடைக்கப் போவதில்லை என்று உறுதியாக நம்பினார் அந்த நபர்..

ஆனால் என்ன ஆச்சரியம்.....40 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் உடனே பணியில் சேரும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
வாய்ப்பு அளிக்கப்பட்டது.  நேர்முக தேர்வில் கலந்து கொண்டவருக்கு ஒன்றுமே புரியவில்லை...

ஆனால், செய்திப்பிரிவில் தலைமை பொறுப்பில் இருந்தவருக்கு இப்படிப்பட்ட ஆட்கள்தான் தேவைப்பட்டது.

காரணம்....

அவரது பதவிக்கு யாரும் போட்டியாக வந்துவிடக் கூடாது... திறமைசாலிகளை, அனுபவசாலிகளை பணிக்கு எடுத்துவிட்டால், தன்னுடைய, திறமை வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிடும்,  வெளிப்பட்டுவிடும் என்ற அச்சம் அந்த நபருக்கு...

எனவே,

சுறுசுறுப்பாக வேலை செய்பவர்கள்....

உண்மை உழைப்பாளிகள்....

செய்தியை பல்வேறு கோணங்களில் அளிக்கும் திறமை பெற்றவர்கள்...

மற்ற தொலைக்காட்சிகளில் வருவதற்கு முன்பே, முதலில் தான் பணிபுரியும் நிறுவனத்தில் செய்தி வந்துவிட வேண்டும் என துடிப்பவர்கள்...

மற்றும்,

விஷயம் தெரிந்தவர்களை பக்கத்தில் அவர் சேர்த்துக் கொள்வதே இல்லை...

செய்தி எழுத தெரியவில்லை என்றாலும் பராவயில்லை...

தனக்கு அடங்கி நடந்து செல்பவர்களை உடனே பணியில் சேர்த்து கொள்வதுதான் அந்த தலைமை செய்தி ஆசிரியர் வழக்கமாக கொண்டிருக்கிறார்...



மேலே கூறிய வார்த்தைகள் கற்பனையாக நீங்கள் நினைக்கலாம்...அப்படியும் இருக்கலாம்....இருக்காமல் போகலாம்...(கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது அல்லவா)

ஆனால், தற்போது விஷுவல் மீடியாவில் இந்த போக்குதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது...

ஊடக முதலாளிகளை ஒரு கும்பல், தவறான வழியில் அழைத்து சென்றுக் கொண்டிருக்கிறது...

பணத்தை பற்றி கவலைப்படாமல், தொலைக்காட்சி முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசையில், ஊடக முதலாளிகள் ஆர்வம் செலுத்தும்போது, அவர்களின் ஆசையை உன்னிப்பாக கவனிக்கும் சிலர், தங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து விட்டதாக நினைத்து உடனே காரியத்தில் இறங்கி விடுகின்றனர்.

ஊடக முதலாளிகளின் பணத்தை எப்படி வீண் வழியில் செலவழிக்க முடியுமா...அப்படி  செய்கிறார்கள்....செய்தி வழங்குகிறோம் என்ற பெயரில் பணத்தை பிடுங்கி  செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்...

விமானத்தில் பறப்பது.....நட்சத்திர விடுதிகளில் அறைகளை போட்டு தங்குவது....அனைத்து வசதிகளையும் அனுபவிப்பது.....பல லட்சம் ரூபாய் மாத சம்பளம் வாங்கிக் கொண்டு, உல்லாச வாழ்க்கை அனுபவிப்பது....

ஒரு வரியில் செய்தியை சொல்லிவிட்டு, அலுவலகத்தில் நேரத்தை வீணாக செலவழிப்பது இதுதான், தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருசிலரின் வாடிக்கையாக தற்போது இருக்கிறது....

அதுவும் ஒருசில குறிப்பிட்ட தொலைக்காட்சிகளில் மட்டும்தான் இந்த போக்கு  இருந்து வருகிறது....

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சிகளில் மட்டும்தான், இந்த அரை வேக்காடுகளின் ஆதிக்கம் தலைதூக்கி உள்ளது...

இதற்கு எப்போது விடிவு கிடைக்குமோ......நிச்சயம் யாருக்கும் தெரியாது....

ஆனால்....

இயற்கை மேல் நம்பிக்கை கொள்பவர்களுக்கு,  நிச்சயம் காலம் ஒருநாள் மாறும் என்பது தெரியும்....



ஊடக முதலாளிகள் விழித்துக் கொள்ளும்போது, அரை வேக்காடுகளின் வேடம் வெளிச்சத்திற்கு வரும்...

அப்போது, ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைவார்கள்....

காலம் அப்படிதான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது....

உண்மை உழைப்பாளிகளே...

பொறுமையை கடைப்பிடியுங்கள்....

பொறுமையாளர்கள் நிச்சயம் வெற்றியை பெற்றிருக்கிறார்கள்....

வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள்....

விரைவில், அரை வேக்காடுகளின் அட்டகாசங்கள், ஒருநாள் நிச்சயம் அடங்கிவிடும்...

இதற்கு, அண்மை கால நிகழ்வுகளே சாட்சிகளாக உள்ளன...


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்