Wednesday, June 8, 2016

பாமகவிற்கு கிடைத்த வெற்றி...!

பாமகவிற்கு கிடைத்த வெற்றி...!


தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் பணி நேரம் குறைப்பு.

500 டாஸ்மாக் கடைகள் மூடல்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் இந்த உத்தரவை பாராட்டி வரவேறுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இது பாமகவின் மதுவிலக்கு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

உண்மைதான்.

அதில் மாறுபட்ட கருத்தே இல்லை.

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி பாமக நடத்தி வரும் போராட்டங்களை யாரும் மறந்து விட முடியாது.

இதேபோல், மதிமுக, காங்கிரஸ், பிஜேபி, இடதுசாரி கட்சிகள், தமாகா, முஸ்லிம் இயக்கங்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட கட்சிகள், தொண்டு இயக்கங்கள், சமூக அக்கறை கொண்ட தனி மனிதர்கள், ஏன் நான் மதுவிற்கு எதிராக நானும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறேன்.

எனவே தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், மதுவிற்கு எதிராக போராடிய அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்று கூட தாராளமாக கூறலாம்.

அதில் பாமக முதல் இடம் என்பதால் மருத்துவர் ராமதாசை நிச்சயம் பாராட்டிதான் ஆக வேண்டும்.

S.A.Abdul Azeez 
Journalist.

ஒரு கணம் யோசியுங்கள்...!

ஒரு கணம் யோசியுங்கள்...! ஓட்டுப்போடுமுன்....!!


கடந்த 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு உலக புகழ் பெற்ற குமுதம் வார இதழ் வாசகர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தது.

எம்.எல்.ஏ.வுக்கு வேண்டிய பத்துத் தகுதிகள் என்ன ? என்பதுதான் அந்த போட்டி.

நாமும் ஒரு கட்டுரையை அனுப்பி வைத்தோம்.

என்ன ஆச்சரியம்.

எமது கட்டுரை தேர்வு குழுவால் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு குமுதம் இதழில் பிரசுரிக்கப்பட்டது.

பரிசு தொகையும் காசோலையில் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

27 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய, வைத்த கோரிக்கை இதோ உங்கள் பார்வைக்கு...!

1. எம்.எல்.ஏ.வாக வருபவருக்கு கல்வித் தகுதி அவசியம். குறைந்தபட்சம் பட்டதாரியாக இருக்க வேண்டும்.

2. ஓரே கட்சியில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் அங்கம் வகிப்பவராக இருக்க வேண்டும்.

3. எம்.எல்.ஏ. நம்ம சாதியைச் சேர்ந்தவர் அல்லது மதத்தைச் என்று மக்கள் சொல்லாமல் நம்ம ஊரைச் சேர்ந்தவர் என்று பெருமையுடன் சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும்.

4. சட்டப்பேரவையில் கண்ணியமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ளும் பொறுமைசாலியாக இருக்க வேண்டும். மைக், பேப்பர் வெயிட் போன்ற பொருட்களைத் தூக்கி வீசுபவராக இருக்கக்கூடாது.

5. ஆடம்பரம் இல்லாதவராக ஏழை எளியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உதவி செய்யக்கூடியவராக எம்.எல்.ஏ. என்ற பந்தாவெல்லாம் இல்லாமல் மக்கள் பார்த்துப் பேசக்கூடியவராக இருக்க வேண்டும்.



6. சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் நாட்களைத் தவிர, மற்ற நாட்களில் தன்னுடைய தொகுதியில் இருப்பவராக இருக்க வேண்டும். மாதம் ஒருமுறை தொகுதியின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள குறைகளை அறிந்து வர வேண்டும்.

7. பணத்திற்கு விலை போகக் கூடியவராக இருக்கக்கூடாது. நீதி, நேர்மை, உண்மை எங்கும் இல்லை என்றால் பதவியை ராஜினாமா செய்யக்கூடிய துணிச்சல்காரராக இருக்க வேண்டும்.

8. நல்ல ஆரோக்கியமான உடல்நலம் பெற்றவராக இருக்க வேண்டும். மது மற்றும் இதர கெட்ட பழக்கங்கள் கூடாது.

9. எம்.எல்.ஏ. பதவியினால் வரும் வருமானத்தில் தன்னுடைய வாழ்க்கையை நடத்துபவராக இருக்கக்கூடாது. தனக்கென்று ஒரு தனித் தொழிலைக் கொண்டவராக இருக்க வேண்டும். அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்துபவராக இருக்க வேண்டும். எம்.எல்.ஏ. பதவி மூலம் தன்னை அபிவிருத்தி செய்துகொள்ளலாம் என்று நினைக்காமல், மக்களுக்கு சேவை செய்யக் கிடைத்த ஒரு வாய்ப்புத்தான் இந்த எம்.எல்.ஏ. பதவி என்று கருதக்கூடியவராக இருக்க வேண்டும்.

10. தன்னுடைய பதவிக் காலத்தில் தொகுதிக்கு என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிப்பவராக இருக்க வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

அந்த உத்தமர் எங்கே....?


என்னை அரைவேக்காடு என விமர்சனம் செய்த அந்த உத்தமர் எங்கே....?


கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நான் பதிவு செய்த கருத்து ஒன்றில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளும் மிகவும் பலவீனமானவை என பலரும் பேசிக் கொள்கிறார்களே, உண்மையா...!

வாணியம்பாடி, கடையநல்லூர், பூம்புகார், விழுப்புரம், மணப்பாறை ஆகிய 5 தொகுதிகளில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றும், கடையநல்லூர் தொகுதியில் மட்டுமே, அந்த கட்சிக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஊடக நண்பர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அதுவும், கடையநல்லூரில் அதிமுக அணியில், ஷேக் தாவூத் போட்டியிடுவதால்தான், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இந்த வெற்றியும் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

என ஊடக நண்பர்கள் சொன்ன கருத்து மற்றும் அனுபவ அடிப்படையில் ஒரு கருத்தை பதிவு செய்து இருந்தேன்.

மேலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மீது இயற்கையாகவே எனக்கு இருந்த பற்று காரணமாக, வலுவான தொகுதிகளை திமுகவிடம் இருந்து கட்சி தலைமை பெற்று இருக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தேன்.

இதற்கு உடனே Iuml Central Chennai என்ற ஒரு உத்தமர், யாரோ ஒரு பைத்தியம் சொன்னதை வைத்து நீங்கள் உண்மயா உண்மையா என கேட்கிறிர்களே நீங்கள் ஒரு அரைவேக்காடு பத்திரிகையாளர் என சொல்கிறார்களே உண்மையா என என்னை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இப்போது, நான் கணித்தப்படி, கடையநல்லூர் தொகுதியில் மட்டும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சகோதரர் முகமது அபுபக்கர் வெற்றி பெற்று இருக்கிறார்.

மற்ற நான்கு தொகுதிகளில், அதாவது, வாணியம்பாடி, பூம்புகார், விழுப்புரம், மணப்பாறை ஆகிய 4 தொகுதிகளில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தோல்வி அடைந்து இருக்கிறது.

உண்மையை சொன்னதற்காக என்னை அரைவேக்காடு, அரை லூஸ் என கடுமையாக விமர்சனம் செய்த அந்த Iuml Central Chennai என்ற அந்த உத்தமர் இப்போது என்ன சொல்ல போகிறார்.

மீண்டும் ஏதாவது பாணியில் திட்ட போகிறாரா...இல்லை, பத்திரிகையாளர்களின் கணிப்பில் ஒரளவுக்கு உண்மை இருக்கும் என ஒப்புக் கொள்ள போகிறாரா...!

இதுதான் எனது கேள்வி...!

S.A.Abdul Azeez
Journalist.

இஸ்லாமிய வாக்கு வங்கி...!

இஸ்லாமிய வாக்கு வங்கியால் வென்ற கார்த்திகேயன்....!


வேலூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் 25 ஆயிரத்து 588 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் தொகுதியை திமுக மீண்டும் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.

இந்த சாதனைக்கு முக்கிய காரணமே, இஸ்லாமியர்களின் வாக்குகள் என்பது நிதர்சன உண்மை.

வேலூர் சட்டப்பேரவை தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகள் எப்போதும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு மிக அதிகமாக இருந்து வருகிறது.

இந்த தொகுதியில் யார் இஸ்லாமியர்களின் வாக்குகளை அதிகமாக பெறுகிறார்களோ, அவர்களுக்கே வெற்றி என்பது கடந்த கால வரலாறு.

காங்கிரஸ் சார்பில் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட ஞானசேகரன், இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற்றே தொடர்ந்து வெற்றியை ஈட்டி வந்தார்.

அதேபோன்று, கடந்த முறை அதிமுக சார்பில் நின்ற டாக்டர் விஜய்யும் வெற்றி பெற்றார்.

இந்த முறை, திமுக சார்பில் நின்ற கார்த்திகேயன், இஸ்லாமியர்களின் வாக்குகளை கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.

இதன்மூலம், 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வேலூர் தொகுதியை கைப்பற்றியுள்ளது.

இந்த தொகுதியில் அதிமுக சார்பில், ஹாரூன் ரஷீத் நின்றாலும், அவர் வெளியூர்காரர் என்பதால், அவருக்கு இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் தங்களது வாக்குகளை அளிக்கவில்லை.

குறிப்பாக, ஆர்.என்.பாளையம், கஸ்பா, கொணவட்டம், சைதாபேட்டை, சத்துவாச்சாரி, உள்ளிட் பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் எங்களை ஊரை சேராத, ஹாரூன் ரஷீத்திற்கு நாங்கள் வாக்கு அளிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், மண்ணின் மைந்தன் கார்த்திகேயனுக்கு இஸ்லாமிய மக்கள் கண்ணியம் வழங்கி, மதிப்பு அளித்து தங்களது வாக்குகளை அளித்துள்ளனர்.

இதனை திமுகவும், வேலூர் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ள கார்த்திகேயனும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வேலூர் நகரில் இஸ்லாமியர்கள் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதுவே நமது வேண்டுகோள். கோரிக்கை.

S.A.Abdul Azeez
Journalist.

நம்ம எம்.எல்.ஏ.....!

நம்ம எம்.எல்.ஏ.....!


1996ஆம் ஆண்டு சென்னை வாலஸ் கார்டன் பகுதியில் இருந்த மணிச்சுடர் நாளிதழ் அலுவலகத்தில்தான் நான் முதல்முதலாக முகமது அபூபக்கரை சந்தித்தேன்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக இருந்து மறைந்த சிராஜுல் மில்லத் அவர்களின் அழைப்பின் பேரில், வேலூரில் இருந்து சென்னைக்கு வந்து, மணிச்சுடர் நாளிதழில் பணியில் சேர்ந்த நேரம் அது.

அப்போது, ஒருமுறை மணிச்சுடர் அலுவலகத்திற்கு வந்த அபூபக்கரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிட்டியது.

நல்ல இளைஞர்.

எப்போதும் பாசத்துடன் பழகும் பண்பாளர்.

என்ன அஜீஸ் பாய் என உரிமையுடன் அவர் அழைக்கும்போது அதில் ஒரு அன்பு இருக்கும். நேசம் இருக்கும்.

இப்படி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அபூபக்கருடன் நல்ல நட்பு தொடர்கிறது.

தற்போது நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கடையநல்லூர் தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.வாக முகமது அபூபக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உண்மையிலேயே இது எனக்கு மட்டுமல்ல, முஸ்லிம் சமுதாயத்திற்கே மகிழச்சி அளிக்கும் ஒரு அருமையான நிகழ்வு ஆகும்.

அதற்காக ஏக இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பேரவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினராக அடியெடுத்து வைக்கும் அபூபக்கருக்கு எமது வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர் நிச்சயம் குரல் கொடுப்பார் என உறுதியாக நம்புகிறோம்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்று, முஸ்லிம் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமாக தீர்வு காண அபூபக்கர் நிச்சயம் முயற்சி செய்வார்.

அதற்காக அவரை மீண்டும் வாழ்த்துகிறோம்.

அவரது பணிகள் சிறப்பாக அமைய வேண்டும்.

முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல், தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட கடையநல்லூர் தொகுதி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களின் நலனுக்காகவும் அபூபக்கர் உழைக்க வேண்டும்.

இதுவே எமது வேண்டுகோள்.

S.A.Abdul Azeez
Journalist.

மறக்க முடியுமா....!

எடிட்டர் சார்.....!


இன்று (27.05.2016) மாலை 5.30 மணிக்கு நண்பர் ஆனந்த்திடம் இருந்து செல்பேசி அழைப்பு வந்தது.

சார் விஷயம் தெரியுமா என்றார் ஆனந்த்.

இல்லையே சார் என்றேன் நான். என்ன தகவல் என அவரிடம் மேலும் கேள்வி எழுப்பினேன்.

நம்ம அன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டாராம் சார் என்றார் ஆனந்த்.

ஒரு நிமிடம் அப்படியே அதிர்ந்து போனேன்.

என்ன சார் சொல்றீங்கே என ஆனந்திடம் கேட்டேன்.

ஆமாம் சார். உண்மையான தகவல்தான் என்றார் அவர்.

அந்த நிமிடம் முதல், என் மனம் சோகத்தில் மூழ்கிவிட்டது.

அன்பு என்ற பெயருக்கு ஏற்ப, எல்லோரிடமும் உண்மையான அன்பை செலுத்தி பழகியவர் அன்பரசன்.

எடிட்டர் சார், எடிட்டர் சார் என நான் அவரை பாசத்துடன் அழைக்கும்போது, உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவார்.

என்னைவிட வயதில் சின்னவர் என்றாலும், அவரிடம் விஷுவல் எடிட்டங் திறமை சிறப்பாக இருந்ததால், அந்த திறமைக்கு மதிப்பு அளிக்கும் வகையில் அன்பரசனை எடிட்டர் சார் என்றே அழைத்து வந்தேன்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவரிடம் பழகிய நாட்கள் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதவை.

இரவு நேர பணியின்போது, பல விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொள்வோம்.

கலைத்துறையில் ஆர்வத்துடன் இருந்த அவரை, திரைப்பட இயக்குநர் ஒருவரிடம் அறிமுகம் செய்து வைத்து வாய்ப்பு தரும்படி கேட்டுக் கொண்டேன்.

அவரும் நிச்சயம் தருவதாக உறுதி அளித்து இருந்தார்.

இப்படி, வாழ்க்கையில் பல கட்டங்களை தாண்டி உயரத்திற்கு செல்ல வேண்டிய அன்பு, இன்று (27.05.2016) சாலை விபத்தில் பலியான சம்பவம் எனக்கு மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்திவிட்டது.

எல்லாம் இறைவனின் நாட்டம் என்றாலும், சில மரணங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்திவிடுகின்றன.

அப்படிப்பட்ட ஒரு சோகத்தைதான் அன்பரசனின் மரணம் ஏற்படுத்திவிட்டது.

அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை.
அன்பரசனின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.

இதுவே எமது பிரார்த்தனை.

மறக்க முடியுமா....!



ராஜ் டீவியில் பணி புரிந்த செய்தி பிரிவு படத்தொகுப்பாளர் அன்பு என்கிற அன்பரசு சாலை விபத்தில் மரணம் அடைந்த துயரச் செய்தி நம்மை மேலும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.

எடிட்டர் சார் என நான் அன்புடன், பாசத்துடன் அழைத்த அன்பு இன்று நம்மிடம் இல்லை.

எனினும் அவருடன் பழகிய இனிய நாட்கள் எம் கண் முன்வந்து செல்கின்றன.

நிழலாடுகின்றன.

அந்த இனிய நாட்களை மறக்க முடியுமா.

அத்துடன் நல்ல பண்பாளர் அன்புவையும் மறக்க முடியுமா..
.
நிச்சயம் முடியாது.

S.A.Abdul Azeez
Journalist.

ரமலான் நோன்பு - சில டிப்ஸ்கள்......!

ரமலான் நோன்பு - சில டிப்ஸ்கள்......!


ரமலான் நோன்பு இருக்கும் போது, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒருசில டிப்ஸ்களைப் பார்க்கலாம்.

புனித ரமலான் நோன்பு ஆரம்பமாகி விட்டது. ரமலான் நோன்பு இருக்கும் போது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
.
பொதுவாக ரமலான்  நோன்பின்போது இஸ்லாமியர்கள் 16 மணிநேரத்திற்கு மேலாக உணவு, தண்ணீர் என்று எதையுமே சாப்பிடாமல் இருப்பார்கள்.

எனவே இக்காலத்தில் அவர்கள் அதிகம் சுற்றாமல் ஓய்வு எடுப்பதோடு, அதிகாலையில் சாப்பிடும் போது ஒருசில உணவுகளை சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

ரமலான் நோன்பு இருக்கும் போது, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒருசில டிப்ஸ்களைப் பார்க்கலாம்.

1. உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை குறைப்பாடு மற்றும் உடல்நல பாதிப்பு உள்ளவர்கள், ரமலான் நோன்பு இருக்கும் முன், மருத்துவரை சந்தித்து உடல்நலத்தை பரிசோதித்து, நோன்பு இருக்க உங்களின் உடல்நலம் ஒத்துழைப்பு தருமா என்று கேட்டுக் கொள்வது நல்லது.

2. நோன்பு காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு உண்ணும் உணவை சரியாக திட்டமிட வேண்டும். ஏனெனில் நீண்ட நேரம் உணவை உட்கொள்ளாமல் இருந்து, உணவை உட்கொள்ளும் போது சரியான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இதனால் நோன்பு காலத்தில் உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கலாம்

3. விடியற்காலையில் எழுந்து உண்பது என்பது கடினம். இருப்பினும் இந்நேரத்தில் சாப்பிடுவதால், பல நன்மைகள் கிடைக்கும். மேலும் விடியற்காலையில் ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பே உணவை உட்கொண்டுவிட வேண்டும். விடியற்காலையில் உட்கொள்ளும் போது அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் கார்போஹைட்ரேட், புரோட்டீன் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதோடு, போதிய அளவில் நீரையும் குடிக்க வேண்டும்.

4. நோன்பு இருக்கும் போது வெயிலில் அதிகம் சுற்றுவதைத் தவிர்ப்பது நல்லது. முடிந்த அளவில் ஓய்வு எடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமான உடல் உழைப்பில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

5. சூரிய அஸ்தமனத்திற்கு பின் நோன்பு விடும் போது, உணவை அள்ளி அள்ளி விழுங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் பேரிச்சம் பழம் மற்றும் பால் அல்லது தண்ணீர் குடித்து நோன்பை விட்டு, பின் மஃரிப் தொழுகைக்கு பின் எந்த ஒரு உணவையும் உட்கொள்ள வேண்டும்.

6. நோன்பு விடும் போது, அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் இரத்த சர்க்கரை அளவை திடீரென்று அதிகரிக்கும் உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்வதைத் தவிர்த்து, பொறுமையாகவும், நிதானமாகவும் உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி நீரை அதிகம் குடிக்க வேண்டும்.

7. மாலை வேளையில் டீ, காபி மற்றும் சோடாவை குடிக்கத் தோன்றும். இருப்பினும், அவற்றைத் தவிர்த்து, தண்ணீரை மட்டும் குடித்து வந்தால், நோன்பு காலத்தில் ஆரோக்கியமாக இருக்கலாம்.

8. நோன்பு விட்ட பின்னர், ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், பழங்கள் மற்றும் நட்ஸை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவது நல்லது.

9. நோன்பு விட்ட பின்னர், தூங்க செல்லும் முன், 8 டம்ளர் நீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள். இதனால் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

10, மாலை வேளையில் நோன்பு விட்ட பின்னர், 15-20 நிமிடம் ஈஸியான உடற்பயிற்சியை அளவாக செய்து வாருங்கள்.

11. எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகள் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த உணவுகள் நெஞ்செரிச்சல் அல்லது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

12. ரமலான் நோன்பு மேற்கொள்வதற்கான நோக்கங்களில் ஒன்று, கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும் என்பது தான். எனவே இக்காலத்தில் புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பதை தவிர்த்திடுங்கள்.

13. உண்ணும் உணவில் மட்டும் திட்டம் தீட்டக் கூடாது. சரியான நேரத்தில் தூங்கி எழவும் திட்டம் தீட்ட வேண்டும்.