Friday, December 11, 2015

ஓசி பயணம்....!

மாநகர பேருந்தில் ஓசி பயணம்....!


சென்னையில் கொட்டிய பேய் மழையை தொடர்ந்து மாநகர பேருந்துகளில் 4 நாட்களுக்கு இலவசமாக மக்கள் பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

கடந்த 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டது.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைவாசிகளுக்கு, குறிப்பாக அலுவலகப் பணிகளுக்கு செல்வோருக்கு இந்த சலுகை உண்மையிலேயே பலன் அளித்தது என்றே கூறலாம்.

நானும் அந்த நான்கு நாட்களில், மாநகர பேருந்தில் ஓசியில் பயணம் செய்து அலுவலகம் சென்று வந்தேன்.

இந்த ஓசி பயணம் மூலமாக, குறிப்பிட்ட ஒரு பேருந்திற்காக மணிக்கணக்காக காத்திருக்காமல், எந்த பேருந்து வருகிறதோ அதில் ஏறி, மீண்டும் மற்றொரு பேருந்தில் ஏறி அமர்ந்து குறிப்பிட்ட நேரத்திற்கு மிக விரைவாக அலுவலகம் வந்து சேர முடிந்தது.

பேருந்திற்காக காத்திந்து அதனால் ஏற்படும் டென்ஷன் இந்த நான்கு நாட்களில் ஏற்படவில்லை.

ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கலகலப்பாக பேசி கொண்டே வந்தார்கள்.

பயணிகள் மீது எரிச்சல் அடையவில்லை. எறிந்து விழவில்லை.

முன்னாடி போ, பின்னாடி ஏறு என பயணிகளை நச்சரிக்கவில்லை.

டிக்கெட்டுக்கு சரியான சில்லரை கொடு என கோபத்தோடு பேசவில்லை.


பேருந்துகளிலும் நெரிசல் அதிகமாக இருக்கவில்லை.

விருப்பப்பட்ட பேருந்துகளில் மக்கள் பயணம் செய்ததே இதற்கு காரணம் எனலாம்.

ஆக, மழைக்காலத்தில் மாநகர பேருந்தில் ஓசியில் பயணம் செய்தது தனி சுகம் அளிக்கவே செய்தது.

சென்னையின் மழைக்காலத்தில் அரசு அறிவித்த இந்த சலுகை, மழைக்கால அனுபவங்களில் ஓர் தனி அனுபவம் என்றே கூறலாம்.

இதுபோன்ற சுகமான அனுபவங்கள் நமக்கு அடிக்கடி கிடைக்காது அல்லவா.

கிடைக்கும்போது அனுபவித்தால்தான் சரி.

என்னைப் போலவே, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்த புதிய அனுபவத்தை மாநகர பேருந்துகளில் அனுபவித்து இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

மருந்துகள் இலவசமாக அளிப்பு...!

பூவிருந்தவல்லி மருத்துவ முகாமிற்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் இலவசமாக அளிப்பு...!

சென்னை அண்ணாசாலை மெக்கா பள்ளிவாசல் இமாம் தாராளம்....!!


சென்னை பூவிருந்தவல்லியில் வரும் சனிக்கிழமை (12.12.15) வெள்ளத்தால் பாதிக்கப்ப்டட மக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட இருக்கிறது.

ஆனால், மருத்துவ முகாமிற்கு தேவையான போதிய மருந்துகள் இல்லை.

இதனால் முகாமை ஏற்பாடு செய்து இருக்கும் சமூக ஆர்வலர்களுக்கு கவலை தொற்றிக் கொண்டது.

உடனே, தம்பி ஜீவா சகாப்தனை (என்னுடன் இணைந்து பணிபுரிந்தவர். அவரை தம்பி என்றுதான் நான் அழைப்பது வழக்கம்) முகாம் ஏற்பாட்டாளர்கள் செல்பேசி மூலம் தொடர்பு கொள்கிறார்கள்.

தம்பி ஜீவா சகாப்தனும் உடனே முயற்சி செய்கிறார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள புகழ் பெற்ற மெக்கா பள்ளிவாசல் இமாம் மவுலானா சம்சுதீன் காஸிமியை செல்பேசியில் தொடர்பு கொள்கிறார்.

என்ன ஆச்சரியம்.

மறுமுனையில் பேசிய மவுலானா சம்சுதீன் காஸிமி


தம்மிடம் இருக்கும் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான உயிர் காக்கும் மருந்துகள் இருப்பதாக கூறி எநத வித தயக்கமும் காட்டாமல் அதை உடனே அனுப்பி வைத்தார்.

இந்த பதிலை, உதவியை கேட்ட தம்பி ஜீவா சகாப்தன் மகிழ்ச்சியில் உறைந்து போனார்.

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இஸ்லாமிய அமைப்புகள் தன்னலம் பார்க்காமல் உதவி செய்தும், நிவாரணப் பணிகளை ஆற்றியும் வரும் நிலையில், மருத்துவ முகாமிற்கு 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயிர் காக்கும் மருந்துகளை இலவசமாக அளித்தது மேலும் ஒரு மைல்கல் எனலாம்.

இதன்மூலம் தம்முடைய ஈகை குணத்தை வெளிப்படுத்தியுள்ளார் மெக்கா பள்ளிவாசல் மவுலானா இமாம் சம்சுதீன் காஸிமி.

5 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயிர் காக்கும் மருந்துகளை வழங்கிய சென்னை அண்ணாசாலை மெக்கா பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும், அதன் தலைமை இமாம் மவுலானா சம்சுதீன் காஸிமிக்கும் எனது பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள்.

பேரழிவு காலங்களில் மதம், இனம், மொழி, சாதி, என எதையும் எதிர்பார்க்காமல், உதவ வேண்டும் என்ற இஸ்லாமிய நெறிகளுக்கு ஏற்ப உதவி கரம் நீட்டி மவுலானா இமாம் சம்சுதீன் காஸிமி, உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியவர்.

அவரது பணிகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

மருத்துவ முகாமிற்கு மருந்துகள் கிடைக்க உதவியாக இருந்த தம்பி ஜீவா சகாப்தனுக்கு, சக ஊடகவியலாளர் என்ற முறையில் எனது வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Wednesday, December 9, 2015

நிஜ ஹீரோக்கள்....!

நிஜ ஹீரோக்கள்....! பலே பலே ஊடக சொந்தங்களே...!!


சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

இன்னும் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

அதனால் மக்களின் துயரங்கள், துன்பங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது எனலாம்.


இந்த பேரழிவின் போது நமது ஊடக சொந்தங்களும் ஆற்றிய மிகப் பெரிய பணிகளை யாரும் மறக்க முடியாது.

மறைக்க முடியாது.


24 மணி நேர தொலைக்காட்சிகளுக்கு நிகராக முகநூலில் நிவாரணப் பணிகள் தொடர்பான தகவல்களை நமது சொந்தங்கள் தொடர்ந்து அளித்துக் கொண்டே இருந்தார்கள்.


இன்னும் வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.


சென்னையில் எங்கேங்கே கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.


யாருக்கு நிவாரணப் பொருட்கள் தேவை.

எங்கே தங்கும் வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.


எந்த செல்பேசியில் தொடர்பு கொண்டால், உரிய நிவாரண உதவிகள் கிடைக்கும்.


எந்த செல்பேசியில் தொடர்பு கொண்டால், நிவாரணப் பொருட்கள் வழங்கலாம்.


என

இப்படி பல முக்கிய, அத்தியாவசி, அவசியமான தகவல்களை மற்றும் வானிலை தொடர்பான விவரங்களை நமது ஊடக சொந்தங்கள் தொடர்ந்து அளித்துக் கொண்டே இருந்தார்கள்.


இன்னும் வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.


குறிப்பாக,


Elumalai Venaktesan
விஷ்வா விஸ்வநாத்
Aravind Akshan
Senthil vel
Shabbir Ahmed
Pal murukan A
J Sam Daniel Stalin
Manoj Savarimuthuraj
Mahalingam Ponnusamy
Parthiban Kumar
Peer Mohamed
Abdul Muthaleef
Shankar Ganesh
Thangamani Govindaraj
Tharai Ilamathi
Rafeeq Friend
Siraj Ul Hasan
Shanthi Subramani
Subash Prabhu
Nabil Ahamed
Abdul Kareem


என ஏராளமான ஊடக சொந்தங்கள் தொடர்ந்து அளித்து வந்த தகவல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் கிடைக்க நல்லவாய்ப்பு கிடைத்தது.


சிரமம் இல்லாமல் மக்கள் நிவாரண உதவிகளை பெற முடிந்தது.


நிவாரண உதவி செய்ய முன் வந்தவர்களுக்கும் போதிய தகவல்கள் கிடைத்ததால் அவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரண உதவிகளை, பணிகளை முழு வீச்சில் செய்தார்கள்.


இங்கு ஊடக சொந்தங்கள் பலரின் பெயர்கள் விடுபட்டு இருக்கலாம்.

அவர்கள் கோபம் அடையக் கூடாது.


என்னுடைய கவனத்தில் வந்த நமது சொந்தங்களின் பெயர்களை மட்டும் மேலே குறிப்பிட்டுள்ளேன்.


இன்னும் நிறைய ஊடக சொந்தங்கள் நல்ல தகவல்களை அளித்து கனமழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிகளை செய்தார்கள்.

செய்துக் கொண்டே இருக்கிறார்கள்.


இதை யாரும் மறுக்க முடியாது.

இப்படி நல்ல பணிகளை செய்த, செய்துக் கொண்டே இருக்கும் இவர்கள் அனைவரும் நிஜ ஹீரோக்கள்.


கடுமையான அலுவலக ஊடகப் பணிகளுக்கு இடையே, எந்த வித சலிப்பும் அடையாமல், சிரமம் கொள்ளாமல், சமூக நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, நமது ஊடக சொந்தங்கள் செய்த இன்னும் செய்துக் கொண்டு இருக்கும் இந்த மகத்தான பணிக்கு ஒரு பலே பலே பாராட்டுக்கள்.


வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

ஒற்றுமை எனும் குடைக்குள்....!

ஒற்றுமை எனும் குடைக்குள்....!


கனமழை வெள்ளத்தில் சின்னாபின்னமான சென்னையில் இஸ்லாமிய அமைப்புகள், முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், முஸ்லிம் இளைஞர்கள் செய்த, தொடர்ந்து செய்துகொண்டு இருக்கும் மனித நேய நிவாரணப் பணிகளை, தொண்டுகளை பாராட்டாதே மக்களே இல்லை.

இஸ்லாமிய அமைப்புகளின் மனித நேயப் பணிகள் சென்னைவாசிகளை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள மக்களை கவர்ந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இக்கட்டான நேரத்தில் ஒவ்வொரு முஸ்லிம் அமைப்புகளும் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்கி ஆற்றிய தன்னலமற்ற சேவையைக் கண்டு பலர் மூக்கின் மீது விரல் வைத்து வியப்பு அடைந்துள்ளனர்.

உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தையும் கிடைக்க ஏற்பாடு செய்த இஸ்லாமிய அமைப்புகள் சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பைகளயும் அகற்றி நகரை தங்களால் முடிந்த அளவிற்கு தூய்மை செய்து வருகின்றன.

தூய்மை இந்தியா திட்டத்திற்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து விளம்பரம் தேடிக் கொண்ட பல பிரபலங்கள், தற்போது வீடுகளில் ஒளிந்து கிடக்க இஸ்லாமிய அமைப்புகளின் இளைஞர்கள் கவுரவம் எதையும் பார்க்காமல் களத்தில் இறங்கி மாநகரை தூய்மை செய்து வருவது உண்மையிலேயே பலரது புருவங்களை மேலே தூக்கி வைத்துள்ளது.

இப்படி மகத்தான மக்கள் நலப்பணிகளை செய்து வரும் இஸ்லாமிய அமைப்புகள் ஓர் விஷயத்தில் மட்டும் இன்னும் முரட்டு பிடிவாதம் பிடித்து வருகிறது.

அது....


ஒற்றுமை என்ற கயிற்றைப் பலமாக பற்றிப் பிடித்து ஓர் அணியில் வர இஸ்லாமிய அமைப்புகள் மறுத்து வருவதுதான்.

ஓர் குடைக்குள் வர இஸ்லாமிய அமைப்புகள் இன்னும் ஏன் தயக்கம் காட்டி வருகின்றன.

அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் பணிகளை உலகமே வியந்து பாராட்டி வரும் நிலையில் அனைவரும் ஓர் அணியில் திரண்டு வந்து நின்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

தமிழகத்தில் எவ்வளவு பெரிய அரசியல், சமூக மாற்றத்தை கொண்டு வர முடியும்.

இஸ்லாமியர்கள் குறித்து பிற மத சகோதரர்களிடம் இருக்கும் தவறான எண்ணங்களை, கருத்துக்களை இன்னும் உடைத்து எறியலாம் அல்லவா.

அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் அல்லவா.

அதன்மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை தயக்கம் இல்லாமல் பெறலாம் அல்லவா.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஓர் அணியின் கீழ் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

இஸ்லாமிய அமைப்புகளும் முஸ்லிம் கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை, ஈகோ பிரச்சினைகளை சிறிது ஓரத்தில் வைத்து விட்டு ஒற்றுமை என்ற குடைக்குள் வர கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

அதுதான் சமுதாயத்திற்கு நலம் பயக்கும்.

எனவே,

ஓர் அணியில் திரள இஸ்லாமிய தலைவர்கள் முன் வருவார்களா.

இதுதான் இஸ்லாமிய சமுதாயத்தின் தற்போதைய மிக முக்கிய வினா.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Tuesday, December 8, 2015

பேரழிவுக்கு காரணம் மனிதனே...!

பேரழிவுக்கு காரணம் மனிதனே...!


சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டிய, இன்னும் கொட்டி வரும் பேய் மழைக்கு யார் காரணம் ?

இயற்கையின் இந்த கோர தாண்டவத்திற்கு யார் பொறுப்பு?

வழக்கத்திற்கு மாறாக மிக மிக கூடுதலாக கனமழை பெய்ய முக்கிய காரணம் என்ன ?

இப்படி பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனால் எல்லாவற்றிற்கும் மனிதனே காரணம் என்றும் பொறுப்பு என்றும் பதில் வந்து விழுகிறது.

மனிதனின் சுயநலமே இயற்கை பொங்கி எழ காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

வழக்கமாக பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை குறைவாகவும் வடமேற்கு பருவ மழை இம்முறை அதிகமாக கொட்டியதற்கும் பூமி வெப்பம் அடைந்ததே முக்கிய காரணம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.


முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நடப்பு 2015ஆம் ஆண்டில் பூமியில் அதிகமாக வெப்பம் நிலவியதாகவும் இதனால் பருவநிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுவிஸர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அண்மையில் நடந்த மாநாட்டில் விஞ்ஞானிகள் இதைத் தான் கோடிட்டு காட்டினார்கள்.

பூமி அதிக வெப்பம் அடைந்ததால், இந்திய பெருங்கடலும் கூடுதலாக வெப்பம் அடைந்தது.

இதனால் தெற்கு வங்க கடல் வெப்பம் அடைந்தது.

பொங்கியது.

இதனால், அதிலிருந்து ஆவியாக வெளியேறிய வெப்பமே சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் கொட்டிய பேய் மழைக்கு முக்கிய காரணம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது.

இயற்கை வளங்களை எல்லாம் தனது சுயநலத்திற்காக மனிதன் அழித்து வருகின்றான்.

பல நூறு ஆண்டுகளாக மனிதனுக்கு நன்மையை வழங்கி பலன் அளித்த மரங்களை மனிதன் வெட்டி சாய்த்து விட்டான்.

நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட மரங்களைப் பார்ப்பது தற்போது அரிதாகி விட்டது.


புதிதாக மரங்களை வளர்க்க மனிதன் ஆர்வம் செலுத்தவில்லை.

அக்கறை காட்டவில்லை.

இதனால் பூமி நாளுக்கு நாள் வெப்பம் அடைந்து வருகிறது.

இப்படி வெப்பம் அடையும் பூமி பின்னர் மனிதனுக்கு பல்வேறு இன்னல்களை, பேரழிவுகளை பரிசாக கொண்டு வந்து தருகிறது.

இனி, மனிதன் இயற்கை விதிகளுக்கு மாறாக நடப்பதை கைவிட்டு விட வேண்டும்.

இதுதான் தற்போதைய பேரழிவு சொல்லியுள்ள எச்சரிக்கை.

இந்த எச்சரிக்கை மணிக்கு பிறகும் மனிதன் தனது சுயநலத்தை தொடர்ந்தால்.....!

வேறு என்ன சொல்ல முடியும் ?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

சன் டி.வி.யின் தேர்தல் பிரச்சாரம்....!

சன் டி.வி.யின் தேர்தல் பிரச்சாரம்....!


அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் இன்னும் தொடங்காத நிலையிலும், சன் டி.வி. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தனது பிரச்சாரத்தை தொடங்கி விட்டது.

ஆம்

தமிழகத்தில் எப்போது மழை கொட்ட துவங்கியதோ அப்போதிலிருந்தே அந்த நாளில் இருந்தே ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக வரிந்துக் கட்டிக்கொண்டு செய்திகளை ஒளிபரப்பி வருகிறது சன் டி.வி.

இயற்கை சீரழிவை வைத்துக்கொண்டு கல்லா கட்டும் சன் டி.வி. வன்முறை, மோதல், மறியல், என பல விதங்களில் ஆளும் கட்சிக்கு எதிரான செய்திகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது.

கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீரழிவுகளின் போது எந்த ஒரு அரசாலும் உடனடியாக முழுமையான நிவாரணப் பணிகளை செய்ய முடியாது.

மின்சாரம், குடிநீர், பால் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மக்களுக்கு கிடைக்க பல தடைகள் உருவாகத்தான் செய்யும்.

ஆனால் இதையெல்லாம் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு ஆளும் தரப்புக்கு எதிராக மக்களை தூண்டி விடும் அளவுக்கு சன் டி.வி. செய்திகளை ஒளிபரப்பி வருகிறது.

அப்படித்தான் அனைத்து செய்திகளும் இருக்கின்றன.


சோக இசையுடன் வெள்ளப் பாதிப்புகளின் விஷுவலை ஒளிபரப்பும் சன் டி.வி., கனமழையால் ஏதோ தமிழகமே அழிந்து விட்டது போன்ற ஒரு கற்பனை காட்சியை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

தமிழக அரசு செய்து வரும் நிவாரணப் பணிகளை ஒளிபரப்பாமல் இருக்கும் சன் டி.வி., எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்கள் நலனை மட்டுமே முக்கியமாக கருதி இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்துவரும் சிறப்பான நிவாரணப் பணிகளையும் கண்டுகொள்ளவே இல்லை.

எப்படியும் அதிமுக அரசை வீழ்த்துவது என கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கியுள்ள சன் டி.வி. அதற்கு தற்போது ஆயுதமாக பயன்படுத்தி வருவது கனமழை வெள்ளத்தைத் தான்.

இப்படிப்பட்ட சன் டி.வி.யைத்தான், தமிழக மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

என்ன ஒரு வேதனை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

இரண்டும் வேண்டாம்.....!

இரண்டும் வேண்டாம்.....!


சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக அவ்வப்போது கொட்டி வரும் கனமழையால் அனைத்து தரப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு அடைந்துள்ளது.

வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் சரியாக இயங்கவில்லை.

பல்கலைக் கழக தேர்வுகள் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்படவில்லை.

இப்படி, கனமழை வெள்ளத்தால் மக்களின் துயரங்கள் தொடர்கதை ஆகியுள்ளது.

கனமழை வெள்ளத்தை வைத்து ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி பூசிக்கொண்டு புகார்களை கூறிக்கொண்டு அலைகின்றன.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் நிவாரணம் கிடைக்கவில்லை.


நிவாரணப் பணிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டது போல அதிமுக, திமுக தொண்டர்கள் யாரும் இறங்கி வேலை செய்யவில்லை.

வைகோ, விஜயகாந்த், தொல்.திருமாவளவன், ஜி.கே.வாசன், குஷ்பூ, பேராசிரியர் காதர் மொகிதீன், எம்.எல்.ஏ.ஜவாஹிருல்லா போன்றவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்தது போல திமுக, அதிமுக தலைவர்கள் யாரும் செய்யவில்லை.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையில் சில பகுதிகளில் சென்றாலும் அவரது கவனம் முழுவதும் அதிமுக அரசு மீது குற்றம் சுமத்துவதிலேயே இருந்தது.

அத்துடன் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட நிவாரணப் பணிகளில் அக்கறை செலுத்தவில்லை.


இதனால் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் மீதும் மக்கள் மிகவும் கோபத்துடன் இருப்பது நன்றாக தெரிகிறது.

இரண்டு கழகங்களும் வேண்டாம் என தற்போது பொதுஜனம் பேச ஆரம்பித்து விட்டது.

மாற்று சக்திக்கு வாய்ப்பு அளிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.

ஆனால் வேதனையான விஷயம் என்னவென்றால் வலுவான மாற்று அரசியல் சக்தி தமிழகத்தில் இன்னும் உருவாகவில்லை.

ஒவ்வொரு கட்சித் தலைமையும் முதலமைச்சர் பதவி மீதே குறியாக இருக்கின்றன.

கூட்டு சேர அவர்களுக்கு இடையே ஈகோ பிரச்சினை இருந்து வருகிறது.

இரண்டு கழகங்களும் வேண்டாம் என மக்கள் முடிவு எடுத்தப் பிறகும்கூட வலுவான மாற்று அணி இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் பொதுஜனம் குழப்பம் அடைந்துள்ளது.

இதுதான், கனமழை வெள்ளத்திற்கு பிறகு தமிழகத்தில் உள்ள அரசியல் நிலவரம்.

தேர்தல் நெருங்க நெருங்க என்னென்ன கூத்துகள் அரங்கேறும் என்பது வேறு விஷயம்.

அது போக போக தான் தெரியவரும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.