Tuesday, December 8, 2015

சன் டி.வி.யின் தேர்தல் பிரச்சாரம்....!

சன் டி.வி.யின் தேர்தல் பிரச்சாரம்....!


அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் இன்னும் தொடங்காத நிலையிலும், சன் டி.வி. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தனது பிரச்சாரத்தை தொடங்கி விட்டது.

ஆம்

தமிழகத்தில் எப்போது மழை கொட்ட துவங்கியதோ அப்போதிலிருந்தே அந்த நாளில் இருந்தே ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக வரிந்துக் கட்டிக்கொண்டு செய்திகளை ஒளிபரப்பி வருகிறது சன் டி.வி.

இயற்கை சீரழிவை வைத்துக்கொண்டு கல்லா கட்டும் சன் டி.வி. வன்முறை, மோதல், மறியல், என பல விதங்களில் ஆளும் கட்சிக்கு எதிரான செய்திகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது.

கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீரழிவுகளின் போது எந்த ஒரு அரசாலும் உடனடியாக முழுமையான நிவாரணப் பணிகளை செய்ய முடியாது.

மின்சாரம், குடிநீர், பால் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மக்களுக்கு கிடைக்க பல தடைகள் உருவாகத்தான் செய்யும்.

ஆனால் இதையெல்லாம் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு ஆளும் தரப்புக்கு எதிராக மக்களை தூண்டி விடும் அளவுக்கு சன் டி.வி. செய்திகளை ஒளிபரப்பி வருகிறது.

அப்படித்தான் அனைத்து செய்திகளும் இருக்கின்றன.


சோக இசையுடன் வெள்ளப் பாதிப்புகளின் விஷுவலை ஒளிபரப்பும் சன் டி.வி., கனமழையால் ஏதோ தமிழகமே அழிந்து விட்டது போன்ற ஒரு கற்பனை காட்சியை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

தமிழக அரசு செய்து வரும் நிவாரணப் பணிகளை ஒளிபரப்பாமல் இருக்கும் சன் டி.வி., எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்கள் நலனை மட்டுமே முக்கியமாக கருதி இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்துவரும் சிறப்பான நிவாரணப் பணிகளையும் கண்டுகொள்ளவே இல்லை.

எப்படியும் அதிமுக அரசை வீழ்த்துவது என கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கியுள்ள சன் டி.வி. அதற்கு தற்போது ஆயுதமாக பயன்படுத்தி வருவது கனமழை வெள்ளத்தைத் தான்.

இப்படிப்பட்ட சன் டி.வி.யைத்தான், தமிழக மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

என்ன ஒரு வேதனை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: