Tuesday, December 8, 2015

வெள்ளச் சேதம்...! ஓர் அனுபவம்...!!

வெள்ளச் சேதம்...! ஓர் அனுபவம்...!!


சென்னையில் கொட்டிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஊரே அறிந்ததே.

புறநகர் பகுதிகள் மட்டுமல்லாமல் சென்னையின் இதயமாக, வணிக கேந்திரமாக கருத்தப்படும் தியாகராய நகர் வெள்ளத்தால் அல்லோல் பட்டுவிட்டது.

தியாகராய நகரை ஒட்டியுள்ள மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன.

வீடுகளில் வெள்ளம் புகுந்தால் அங்குள்ள மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

குறிப்பாக, பெண்கள் குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

மெட்லி சுரங்கப்பாதை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.


நண்பர் எஸ்.ஆர்.கே. மாம்பலம் பகுதியில் வசிப்பதால் அவரைப் பல முறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன்.

ஆனால் செல்பேசி சேவைகள் சரியாக இயங்காத காரணத்தால் என்னால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

கடைசியாக, நேரில் சென்று பார்த்து வந்துவிடலாம் என நினைத்து இன்று (7.12.15) காலை தியாகராய நகர் வழியாக சென்றேன்.

அப்போது நான் கண்ட காட்சிகள் என்னை பெரும் அதிர்ச்சி அடையச் செய்தன.

எப்போதும் பிசியாக இருக்கும் தியாகராய நகரில் வெள்ள நீர் இன்னும் வடியவே இல்லை.

ஆங்காங்கே குப்பைகள் மலை போல குவிந்து கிடந்தன.


மழை நீருடன் சாக்கடை தண்ணீரும் கலந்து தி.நகர் சாலைகளில் ஆறாக ஓடிக் கொண்டிருந்தது.

இதையெல்லாம் தாண்டி மெட்லி சுரங்கப்பாதையை அடைந்தபோது எனக்கு மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம்

மெட்லி சுரங்கப்பாதை வெள்ள நீரால் சூழப்பட்டு சேறும் சகதியுமாக காட்சி அளித்தது.

அந்த பாதை வழியாக செல்லவே முடியாது என்பதால் மூடப்பட்டு இருந்த ரயில்வே கேட் வழியாக சாகசம் செய்து குதித்து எஸ்.ஏ.கே. வீட்டிற்கு சென்றேன்.

அங்கு நிலைமை இன்னும் மோசமாக இருந்தது.

குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்து இருந்தது.

கீழ் தளத்தில் வசிக்கும் மக்கள் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

நண்பர் எஸ்.ஆர்.கே. அங்குள்ள நிலைமையை விவரித்த போது மனம் மிகவும் வேதனை அடைந்தது.


எஸ்.ஆர்.கே.வின் கார் மற்றும் இருசக்கர வாகனம் வெள்ளத்தில் மூழ்கி முற்றிலும் சேதம் அடைந்து இருந்தது.

இதேபோல் பலரது வாகனங்கள் சேதம் அடைந்து இருந்தன.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் உணவு உறக்கம் இல்லாமல் அப்பகுதி மக்கள் கடந்த ஐந்து நாட்களாக அனுபவித்து வரும் துயரங்களை நேரில் பார்த்த போது இறைவா இதுபோன்ற ஒரு துயரத்தை எங்களுக்கு மீண்டும் தந்துவிடாதே. எங்களை வேதனைப்பட வைக்காதே என என் மனம் அங்கேயே பிரார்த்தனை செய்தது.

இவ்வளவு துன்பங்கள் துயரங்களை சந்தித்து பிறகும் நண்பர் எஸ் .ஆர்.கே. நமது தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தினார்.

நான் எவ்வளவோ மறுத்தும் கூட முதலில் தேனீர் கொடுத்து உபசரித்த அவர், பின்னர் காலை சிற்றுண்டியை தம்முடன் சேர்ந்து சாப்பிட்டுதான் செல்ல வேண்டும் என கூறி நல்ல உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று இட்லி தோசை வடை ஆகியவற்றை வாங்கி கொடுத்து தாமும் என்னுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நண்பரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய இந்த நாள் என் வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாது.

அத்துடன் துயர நேரத்திலும் விருந்தோம்பல் குணத்தை வெளிப்படுத்திய எஸ்.ஆர்.கே.வின் நல்ல பண்பையும் நிச்சயம் மறக்க முடியாது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: