Tuesday, December 8, 2015

இரண்டும் வேண்டாம்.....!

இரண்டும் வேண்டாம்.....!


சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக அவ்வப்போது கொட்டி வரும் கனமழையால் அனைத்து தரப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு அடைந்துள்ளது.

வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் சரியாக இயங்கவில்லை.

பல்கலைக் கழக தேர்வுகள் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்படவில்லை.

இப்படி, கனமழை வெள்ளத்தால் மக்களின் துயரங்கள் தொடர்கதை ஆகியுள்ளது.

கனமழை வெள்ளத்தை வைத்து ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி பூசிக்கொண்டு புகார்களை கூறிக்கொண்டு அலைகின்றன.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் நிவாரணம் கிடைக்கவில்லை.


நிவாரணப் பணிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டது போல அதிமுக, திமுக தொண்டர்கள் யாரும் இறங்கி வேலை செய்யவில்லை.

வைகோ, விஜயகாந்த், தொல்.திருமாவளவன், ஜி.கே.வாசன், குஷ்பூ, பேராசிரியர் காதர் மொகிதீன், எம்.எல்.ஏ.ஜவாஹிருல்லா போன்றவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்தது போல திமுக, அதிமுக தலைவர்கள் யாரும் செய்யவில்லை.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையில் சில பகுதிகளில் சென்றாலும் அவரது கவனம் முழுவதும் அதிமுக அரசு மீது குற்றம் சுமத்துவதிலேயே இருந்தது.

அத்துடன் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட நிவாரணப் பணிகளில் அக்கறை செலுத்தவில்லை.


இதனால் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் மீதும் மக்கள் மிகவும் கோபத்துடன் இருப்பது நன்றாக தெரிகிறது.

இரண்டு கழகங்களும் வேண்டாம் என தற்போது பொதுஜனம் பேச ஆரம்பித்து விட்டது.

மாற்று சக்திக்கு வாய்ப்பு அளிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.

ஆனால் வேதனையான விஷயம் என்னவென்றால் வலுவான மாற்று அரசியல் சக்தி தமிழகத்தில் இன்னும் உருவாகவில்லை.

ஒவ்வொரு கட்சித் தலைமையும் முதலமைச்சர் பதவி மீதே குறியாக இருக்கின்றன.

கூட்டு சேர அவர்களுக்கு இடையே ஈகோ பிரச்சினை இருந்து வருகிறது.

இரண்டு கழகங்களும் வேண்டாம் என மக்கள் முடிவு எடுத்தப் பிறகும்கூட வலுவான மாற்று அணி இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் பொதுஜனம் குழப்பம் அடைந்துள்ளது.

இதுதான், கனமழை வெள்ளத்திற்கு பிறகு தமிழகத்தில் உள்ள அரசியல் நிலவரம்.

தேர்தல் நெருங்க நெருங்க என்னென்ன கூத்துகள் அரங்கேறும் என்பது வேறு விஷயம்.

அது போக போக தான் தெரியவரும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: