Saturday, February 1, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (55)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!" 

 நாள் - 55



பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் கூட்டு பிரார்த்தனை......!

மது, போதை, ஊழலுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது....!!

மது, போதை, ஊழலுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் 30.01.2014 அன்று கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

இது குறித்து மது, போதை, ஊழலுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சசிபெருமாள் கூறியபோது, பூரண மதுவிலக்கு கோரி கடந்த 2013-ம் ஆண்டு சென்னை மெரினா காந்தி சிலை அருகே தனிமனித சத்தியாகிரகத்தை நடத்தியதாக தெரிவித்தார்.


அதேபோன்று இந்த ஆண்டு காந்தி சுடப்பட்ட நாளான ஜனவரி 30-ந்தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், முறையான நதி நீர் சேமிப்பின் மூலம் மக்கள் அனைவருக்கும் நிறைவான விலையில்லா குடிநீர் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினா காந்தி சிலை அருகே கூட்டுபிரார்த்தனை நடத்தியதாக சசிபெருமாள் கூறினார்.


இந்த கூட்டுபிரார்த்தனையில் தமிழ்நாடு காங்கிரஸ், பா.ஜ.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., உள்பட பல கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் கொடுத்ததாகவும் அந்த கட்சிகளைச் சேர்ந்த சிலர் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து 31.01.2014 அன்று சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோட்டில் உள்ள, அரசு மதுக்கடை முன்பு காந்தியவாதி சசிபெருமாள் திடீரென்று சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் மாரியப்பன் கைது செய்தார். அவருடன் மேலும் 7 பேரும் கைதானார்கள்.


மதுவிற்கும் போதைக்கும் எதிராக தொடர்ந்து போராடும் காந்தியவாதி சசிபெருமாளின் முயற்சிகள், போராட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: