Sunday, February 9, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (60)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!!"

நாள்  -  60



போதை ஆசாமிகளை குறி வைத்து கொள்ளையடிக்கும் கும்பல்....

ஓர் அதிர்ச்சித் தகவல்......!!

மது குடிப்பதால் உடல்நலம் மட்டும் பாதிப்பு அடைவதில்லை.

பல தீமைகள் சமூகத்திற்கு கிடைத்து வருகின்றன.

இதையெல்லாம் விடுங்கள் சார்.... கொள்ளை கும்பல் ஒன்று, மதுப்பழக்கம் உள்ள போதை ஆசாமிகளை கொள்ளையடித்து வருகிறது...

ஆம்....

இந்த சம்பவத்தை கொஞ்சம் கவனத்துடன் படியுங்கள்...

உங்களுக்கே விஷயம் புரியும்...

சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் கடந்த 31-ந்தேதி  (31.01.14) நள்ளிரவு தனியார் நிறுவன ஊழியரான சிட்லபாக்கத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் மர்ம கும்பலால் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் ரெயில் நிலைய வளாகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது.

முதுகில் குத்திய கத்தியுடன் அவர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மறுநாள் காலை லோகநாதன் பரிதாபமாக இறந்தார்.


வழிப்பறிக்காக நடந்த இந்த கொலை சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரெயில் நிலைய போலீசாரிடம் கொலை செய்யப்பட்ட லோகநாதனின் மனைவி சினேகா லதா புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் கொலை சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைக்கு ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவிட்டார். இதையடுத்து எழும்பூர் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்ராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தீவிரமாக போலீசார் தேடிவந்தனர்.

லோகநாதன் தாக்கப்பட்ட தினத்தன்று, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் மணிபர்ஸ் ஆகியவற்றை கொலையாளிகள் எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து செல்போனை துருப்புச் சீட்டாக கொண்டு கொலையாளிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதன்மூலம் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த தமிம் அன்சாரி, கோபி,  மற்றும் சிவாஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிடிபட்ட 3 பேரும் போலீசாரிடம் வழிப்பறிக்காக லோகநாதனை கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டனர். பிடிபட்ட கொலையாளிகள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.


அதில், நாங்கள் 3 பேரும் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். சிறுவயதில் இருந்தே சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்தோம். நாளடைவில் ரெயில் நிலையங்களில் போதையில் நடமாடுபவர்களை குறிவைத்து திருடுவதையே குறிக்கோளாக கொண்டிருந்தோம்.

சம்பவத்தன்று லோகநாதன்(கொலை செய்யப்பட்டவர்) பயணம் செய்த அதே ரெயில்பெட்டியில் தான் நாங்களும் பயணம் செய்தோம். அவர் நன்றாக குடித்துவிட்டு புலம்பியபடியே வந்து கொண்டிருந்தார். பார்ப்பதற்கு வசதி உள்ளவர்போல் இருந்ததால் நாங்கள் அவரிடம் இருந்து பணத்தை அபகரிக்க திட்டமிட்டு தொடர்ந்து அவருடன் பயணம் செய்தோம்.

இரவு 11 மணிக்கு ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. வண்டியிலிருந்து லோகநாதன் இறங்கியதும், நாங்கள் அவரை பின்தொடர்ந்தோம். 7-வது நடைமேடையில் அவர் நடந்துசென்றபோது நாங்கள் அவரை வழிமறித்தோம்.


பின்னர் கத்தியை காட்டி பணத்தை கேட்டோம். அதற்கு அவர் பணத்தை தராமல் சத்தம்போட்டு கத்த நினைத்தார். எனவேதான் லோகநாதனை கத்தியால் முதுகில் பலமாக குத்தினோம். கத்தியால் குத்தப்பட்டதும் லோகநாதன் வலியால் அலறியபடியே ஓட முயன்றார்.

அப்போது அவரிடமிருந்த மணிபர்ஸ் மற்றும் 2 செல்போன்களை எடுத்துக் கொண்டு அவரை தள்ளிவிட்டு நாங்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டோம்.

மறுநாள் காலையில் நாளிதழ் மூலமாகத்தான் லோகநாதன் இறந்தது தெரியவந்தது. எங்களை போலீசார் பிடிக்க மாட்டர்கள் என்று தைரியமக இருந்தோம்.


லோகநாதனிடமிருந்து பறிக்கப்பட்ட மணிபர்சில் வெறும் 350 ரூபாய் தான் இருந்தது. ஆனால் நாங்கள் பறித்த செல்போனே எங்களுக்கு வினையாக அமையும் என்று நினைக்கவில்லை. பறிக்கப்பட்ட செல்போனில் ஒன்றை விற்றுவிட்டோம். மற்றொரு செல்போனையும் விற்க நினைத்தோம், ஆனால் அதற்குள் போலீசாரிடம் மாட்டிக்கொண்டோம்.

போதை மனிதனுக்கு எப்படியெல்லாம் துன்பங்களை அள்ளித் தருகிறது என்பது மேலே கண்ட உண்மை சம்பவமே போதுமானது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================

No comments: