Saturday, February 22, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (64)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...!" 

நாள் - 64 



மதுவுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் களம் இறங்கி பணிபுரிந்து வருகின்றன.

இதேபோன்று, மதுவுக்கு எதிராக போராட்டத்தை நீதியரசர் சந்துரு அவர்கள் தொடங்கியுள்ளார்.

அவரின் போராட்டம் குறித்து ஜுனியர் விகடன் இதழில் சக பத்திரிகையாளர் ஜோ.ஸ்டாலின் எடுத்த பேட்டி வந்திருக்கிறது.

அதை இங்கு கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மதுவுக்கு எதிராக யார் போராடினாலும் நமது ஆதரவு அவர்களுக்கு என்றும் உண்டு.

வாருங்கள்.....பேட்டியை படித்து பயன் பெறுங்கள்.......

==============

மதுவுக்கு எதிரான போராட்டம்! தொடங்கினார் நீதியரசர் சந்துரு

சட்டப்படி மதுவை ஒழிக்க முடியாது. ஆனால், சட்டப்படி மதுக்கடைகளை மூட முடியும்.

அதைத்தான் தமிழகம் முழுவதும் செய்ய இருக்கிறது 'விழி தமிழ்நாடு’ அமைப்பு.

மூத்த பத்திரிகையாளர் ஞாநி ஒருங்கிணைப்பாளராக உள்ள இந்த அமைப்பின், பரப்புரைக் குழுத்தலைவராகவும் சட்ட ஆலோசகராகவும் இருக்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு. அவரிடம் பேசினோம்.



''விழி தமிழ்நாடு அமைப்பு மது ஒழிப்பைக் கையில் எடுத்துக்கொண்ட காரணம் என்ன?''

''பூரண மதுவிலக்கை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம். மது என்பது இன்றைய சமூகத்தில் ஒரு அறநெறி சார்ந்த பிரச்னையாக மட்டுமல்ல; உடல்நலம், குடும்பம், பொருளாதாரம், கல்வி என்று அனைத்துடன் தொடர்புடைய ஒரு பிரச்னையாகவும் அது உருவெடுத்துள்ளது. உலகச் சுகாதார நிறுவனம், மதுவை விஷம் என்று அறிவியல்ரீதியாக வரையறுத்துள்ளது. ஆனால், அந்த விஷயத்துக்குப் பள்ளி மாணவர்கள்கூட இன்று அடிமையாகி உள்ளனர். ஆண்டுதோறும் தமிழகத்தில் 65 ஆயிரம் சாலை விபத்துகள் நடக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 70 சதவிகிதம் சாலை விபத்துகள் அதிகரித்து உள்ளன. இது மதுவால்தான் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும்கூட மது அருந்துவது தீங்கு என்றோ, தவறு என்றோ யாரும் நினைப்பது இல்லை. சினிமா அந்த மனோபாவத்தை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலை நீடித்தால், தமிழகம் மது அடிமை மாநிலமாக மாறிவிடும். அப்போது செயல்திறனுடைய தொழிலாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் அறிஞர்களாகவும் உருவாக வேண்டியவர்களை நாம் இழந்துவிடுவோம். அந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்தவே இந்த முயற்சி.''

''மதுவை ஒழிக்கவே முடியாது என்று சொல்கிறார்களே?''

''திருவள்ளுவரே கள்ளுண்ணாமை என்று மதுவின் தீங்கை உணர்த்தும் பொருட்டு ஒரு அதிகாரத்தையே எழுதியிருக்கிறார் என்றால், மது எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளது உண்மை என்பது புரியும். அதே சமயம் எல்லாக் காலத்திலும் அதற்கு எதிரான போராட்டங்களும் இருந்து வந்துள்ளன. அதனால்தான், அது ஒரு கட்டுப்பாட்டில் இருந்தது. எல்லாக் காலத்திலும் இருக்கிறது என்பதாலேயே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் கிடையாது அல்லவா? அதன் தாக்கமும் அதன் வீரியமும் அதிகரித்து சமூகத்தைப் பாழ்படுத்தும் நேரத்தில அதைக் கட்டுப்படுத்தும் வேலைகளை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகிறது.

இப்போது தமிழகத்தில் அந்த வேலையை மிக வேகமாகவும் தீவிரமாகவும் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. காரணம், வரும் ஆண்டில் தமிழகத்தின் மது வருவாய் 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகச் சொல்கிறார்கள். இதற்காக சராசரியாக 70 லட்சம் முதல் ஒரு கோடி தமிழர்கள் குடிக்கிறார்கள். இதை அனுமதித்தால் 'ஒரு குடும்பம்... ஒரு மது அடிமை’ என்ற நிலை உருவாகிவிடும். அதனால், இது ஒழிக்கப்பட வேண்டும்.''

''இதற்கு என்ன செயல்திட்டங்களை வகுத்துள்ளீர்கள்?''

''விழி அமைப்பு, ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அங்குள்ள மதுக்கடைகளை சட்டப்படி அகற்ற, அந்த மக்களுக்கு உள்ள சட்ட வாய்ப்புகளைப் பிரசாரம் செய்யும். நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும், கட்சிகளும் மதுக்கடைகளை மூடுவது பற்றி தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஒவ்வொரு தொகுதியிலும் வற்புறுத்தப்படும். அதை ஏற்றுக்கொள்ளாத வேட்பாளர்கள், கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம். 49(ஓ)-வில்தான் வாக்களிப்போம் என்று உறுதிபடத் தெரிவிக்கும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்படும். அதுபோல், தேர்தல் முடியும்வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அரசாங்கத்திடமும் தேர்தல் ஆணையத்திடம் வற்புறுத்துவோம்.

மதுவின் கொடுமையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள், பெண்கள்தான். எனவே, அவர்களிடம் அதிகளவில் இந்த இயக்கத்தில் பங்கேற்கும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவோம். அதன் பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்தப் பிரசாரத்தை முன்னெடுப்போம். அதன் பிறகு மதுக்கடைகளை அகற்றுவதற்காக வழக்குகள் தொடுப்போம். அந்த வழக்குகளை அரசாங்கத்தின் செலவிலேயே செய்ய வைப்போம். அதாவது, இலவச சட்ட உதவி மையத்தினை நாடி, அந்த வழக்குரைஞரை வைத்தே நீதிமன்றத்தில் வாதாடுவோம். அதன் பிறகு, பெரிய அளவில் மதுக்கடைகள் முன்பு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டு உள்ளன.''



''மது ஒழிப்பை வலியுறுத்தி ஏற்கெனவே பல தன்னார்வலர்கள், அமைப்புகள் செயல்படுகிறார்களே?''

''ஒரு தீய விஷயத்தை எதிர்த்து யார் வேண்டுமானாலும் போராடலாம். அவர்களையும் எங்கள் இயக்கத்தில் இணைத்துக்கொண்டுதான் போராட உள்ளோம். எங்களால் இயன்ற பங்களிப்பை நிச்சயமாக அவர்களுக்கும் செய்ய உள்ளோம். சாதி, மதம், மொழி, பால், இனம், வர்க்கம் என்று எந்த வேறுபாடுகளும் இன்றி மனித சமூகத்தை அழித்துவரும் மது வணிகத்துக்கு எதிராகப் போராடி, பூரண மதுவிலக்கை செயல்படுத்தச் செய்வோம்.''
நல்ல விஷயம். நாமும் வரவேற்போம்!

- ஜோ.ஸ்டாலின்

நன்றி...ஜுனியர் விகடன்  (26.02.2014 )



எஸ்.ஏ. அப்துல் அஜீஸ்
=======================

No comments: