Saturday, February 1, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....!(56)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் - 56


மது அருந்தி பலாத்காரம் செய்ய முயன்றதால் ஆத்திரம்......!

அக்காள் கணவரை கழுத்தை அறுத்து கொன்ற கல்லூரி மாணவி.....!!

சென்னையை அடுத்த மாதவரம், டெலிபோன் காலனி, முதல் தெருவைச் சேர்ந்தவர் மேத்யூபினோராஜ்.  இவர், ரியல் எஸ்டேட் தொழிலும், பழைய கார்களை வாங்கி, விற்கும் தொழிலும் செய்து வந்தார்.

இவர் ஹேமா என்ற பெண்ணை காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு மெர்லின்ஜோசப் என்ற மகன் உள்ளான். ஹேமா, மாதவரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை செய்து வருகிறார்.

ஹேமாவின் தாய்-தந்தை இருவரும் இறந்து விட்டதால், ஹேமாவின் தங்கை ஹரிபிரியா, தனது அக்கா வீட்டில் தங்கி இருந்து சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

மேத்யூபினோராஜ் தினமும் இரவு நேரங்களில் மது அருந்திவீட்டு, குடிபோதையில் வீட்டுக்கு வந்து தனது மைத்துனி ஹரிபிரியாவிடம் பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி ஹரிபிரியா தனது அக்காவிடம் தெரிவித்தார். அவர், கணவரை கண்டித்தார். ஆனாலும் மேத்யூபினோராஜ் தொடர்ந்து ஹரிபிரியாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேத்யூ பினோராஜ், மதுபாட்டில்களை வீட்டுக்கு வாங்கி வந்து குடித்தார். மைத்துனியை எப்படியாவது அடைந்துவிடும் திட்டத்துடன் அவர், தனது மனைவி ஹேமாவுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார். இதனால் அவர் அயர்ந்து தூங்கி விட்டார்.


அதிகாலை 3 மணியளவில் போதை மயக்கத்தில் விழித்த மேத்யூபினோராஜ், அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மனைவி மற்றும் மகனை வீட்டின் வெளியே தள்ளி கதவை பூட்டினார். பின்னர் வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டு இருந்த மைத்துனி ஹரிபிரியாவை பலாத்காரம் செய்ய முயன்றார். அக்காள் கணவரிடம் இருந்து தப்பிக்க ஹரிபிரியா போராடினார்.

ஆனால் மேத்யூபினோராஜ் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார். இதனால் ஹரிபிரியா தனது கற்பை காப்பாற்றிக்கொள்வதற்காக சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து அக்காள் கணவரான மேத்யூபினோராஜ் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல தரதரவென அறுத்து கொலை செய்தார்.


பின்னர் கதறி அழுதபடி கதவை திறந்து வெளியே வந்த ஹரிபிரியா, அங்கு மயக்கத்தில் இருந்த அக்கா ஹேமாவின் காலில் விழுந்து நடந்த விவரங்களை கூறி கதறி அழுதார். இதுபற்றி மேத்யூவின் தந்தை மோகன்ராஜ், தாயார் லில்லிக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து மாதவரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த கொலை குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி ஹரிபிரியாவை கைது செய்தனர்.


போலீஸ் விசாரணையில் கைதான கல்லூரி மாணவி குறித்து உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன. தாய் மற்றும் தந்தை ஆகிய இரண்டு பேரும் காலமாகி விட்டதால், அனாதை ஆன ஹரிபிரியாவை, அக்கா ஹேமா, தனது  வீட்டிலேயே தங்க வைத்து கடந்த 7 வருடங்களாக மகள்போல் பாவித்து வளர்த்து வந்தார்.

தனது வீட்டுக்கு வந்த நாள் முதல் மைத்துனி ஹரிபிரியா மீது மேத்யூக்கு தவறான மோகம் ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்தார்.

இதுபற்றி ஹரிபிரியா தனது அக்காவிடம் கூறி அழுதார். அவர் கணவரை கண்டித்தார். இதனால் ஹேமாவுக்கும், மேத்யூவுக்கும் தகராறு ஏற்பட்டது. தன்னால் தனது அக்காவின் வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்று கருதிய ஹரிபிரியா, தான் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று படிப்பதாக அக்காவிடம் கூறினார். ஆனால் அதற்கு ஹேமா மறுத்து விட்டார்.
இதை அறிந்த மேத்யூ, “நீ விடுதி சென்று படித்தால் உனது அக்காவை நான் விவாகரத்து செய்து விடுவேன். கொலையும் செய்து விடுவேன்” என்று ஹரிபிரியாவை மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் பயந்து போன அவர், அக்காள் கணவரின் பாலியல் தொந்தரவுகளை தாங்கிக்கொண்டு வீட்டில் தங்கி கல்லூரி சென்று வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் சரியாக படிக்க முடியாமலும் தவித்து வந்து உள்ளார்.


உச்சகட்டமாக ஜனவரி 31ஆம் தேதி அதிகாலை பலாத்காரம் செய்ய வந்த அக்காள் கணவரிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக வேறு வழியின்றி கத்தியால் கழுத்தை அறுத்து மேத்யூவை கொலை செய்து உள்ளார் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதுபற்றி மேத்யூவின் தந்தை மோகன்ராஜ் மற்றும் தாயார் லில்லி ஆகியோர் கூறும்போது, “ஹேமா, ஹரிபிரியாவை நாங்கள் எங்களின் மகள் போல் பார்த்துக் கொண்டோம். எங்கள் மகனின் வக்கிர புத்தி காரணமாக ஒரு கல்லூரி மாணவியின் வாழ்க்கை சீரழிந்து விட்டது. எங்கள் மகன் இறந்ததால் எங்களுக்கு வருத்தம் இல்லை. இதுபோன்ற கொடிய செயலில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்க முயன்ற அவன், சமுதாயத்தில வாழ்வதைவிட சாவதே மேல்” என்றனர். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “கல்லூரி மாணவி திட்டமிட்டு கொலை செய்யவில்லை. தன்னை பாதுகாத்து கொள்ளவே கொலை செய்து உள்ளார். எனவே அவருக்கு கருணை அடிப்படையில் குறைந்தபட்ச தண்டனை வழங்கவேண்டும்” என்றனர்.

மதுப்பழககம் ஒரு மனிதனை எப்படி மிருகமாக்கி, வாழ்க்கை முடித்து வைக்கிறது என்பதற்கு இந்த உண்மை சம்பவமே போதுமானதாக உள்ளது.

(நன்றி தினத்தந்தி நாளிதழ்)

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: