Friday, March 6, 2015

சிதைக்கப்படும் உறவுகள்...!

சிதைக்கப்படும் உறவுகள்...!


இது சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்.

நெருங்கி பழகிய நண்பர் ஒருவர் சட்டம் படித்து வழக்கறிஞராக பதிவு செய்தார்.

நம்முடைய சமுதாயத்தில் உள்ள இளைஞர்கள் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருக்கும் நிலையில் நமக்கு நெருக்கமான நண்பர் வழக்கறிஞராக மாறியது உண்மையிலேயே மகிழ்ச்சி அளித்தது.

நண்பர் வழக்கறிஞராக பதிவு செய்த நாளில் என் சொந்த செலவில் சென்னைக்கு சென்று அவரை வாழ்த்தினேன்.

பல நண்பர்கள் வாழ்த்த நேரில் வரவில்லை.

சரி. விஷயத்திற்கு வருகிறேன்.

வழக்கறிஞராக மாறிய நண்பரின் போக்கில் சிறிது நாட்களிலேயே மாற்றங்கள் காண முடிந்தது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்ச்சிகளில் என்னை புறக்கணிக்க ஆரம்பித்தார்.

தம்முடைய தகுதிக்கும் அந்தஸ்துக்கு நான் ஏற்றவன் இல்லை என்பது அவரின் ஒவ்வொரு செயல்களும் உணர்த்தின.

என்னிடம் பேசுவதையும் நிறுத்திக் கொண்டார்.

இருந்தும் நான் நண்பரிடம் வழக்கம் போலதான் அன்பு பாராட்டி வந்தேன்.

ஈத் பெருநாள் வந்த போது நண்பர் வழக்கமாக வரும் குறிப்பிட்ட அந்த அலுவலகத்திற்கு சென்றேன்.

நண்பர் அன்று அங்கு வரவில்லை. சிறிது நேரம் காத்திருந்தேன். நண்பர் அலுவலக ஊழியருக்கு தொலைபேசி செய்தார்.

நான் வந்திருப்பதை அலுவலக ஊழியர் நண்பரிடம் தெரிவித்தார்.
நான் பேச விரும்புவதாகவும் கூறினார்.

நண்பர் பேசுவார். அவருக்கு ஈத் பெருநாள் வாழ்த்து தெரிவிக்கலாம் என ஆவலுடன் காத்திருந்தேன்.

நண்பர் என்ன செய்தார் தெரியுமா...!

தொலைபேசியில் பேசிய அலுவலக ஊழியரிடம் அவருக்கு நீயே வாழ்த்து சொல்லிடுப்பா என கூறி தொலைபேசி இணைப்பை தூண்டித்தார்.

சார் உங்களுக்கு லாயர் சார் வாழ்த்து சொல்ல சொன்னார் சார் என்றார் அலுவலக ஊழியர்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

நல்ல நாளிலும் வாழ்த்துக்களை அன்பைப் பரிமாற்றிக் கொள்ள நண்பர் விரும்பவில்லை. அவருக்கு மனம் இருக்கவில்லை.

என்னிடம் பழகுவதை கவுரவ குறைச்சலாக கருதினார். தமது அந்தஸ்துக்கு ஏற்றதில்லை என எண்ணினார்.

அந்த நண்பரின் நட்பை அன்றே உதறி தள்ளினேன்.

மதிக்காதவர்களின் வீட்டில் பிணமாக கூட படுக்காதே என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

வசதி வாய்ப்புகள் குறைவாக இருக்கும் போது ஒரு மாதிரியாகவும் செல்வம் அந்தஸ்து உயரும் போது வேறு மாதிரியாகவும் கண்டும் காணாமல் போகும் இத்தகைய மனிதர்களின் நட்பு தொடர்ந்தால் என்ன தொடராமல் போனால் என்ன.

உறவுகளைச் சிதைக்கும் இத்தகைய நபர்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் எனக்கு அனுபவம் சொல்லித் தந்த பாடம் இது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: