Wednesday, March 11, 2015

அரை லூஸ்களின் கூடாரம்...!

அரை லூஸ்களின் கூடாரம்...!


நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னைக்கு வந்த அந்த நண்பரைச் சந்தித்தேன்.

காட்பாடியில் இருந்து வந்திருந்தார்.

தம்முடைய பணிகளை முடித்துக் கொண்டு என்னை செல்பேசியில் அழைத்தார்.

இருவரும் மதிய உணவை ஒன்றாக சாப்பிட்டோம்.

பெரியமேட்டில் உள்ள பிரியாணிக்கு புகழ் பெற்ற அந்த ஓட்டலில் நீண்ட நேரம் பேசிக் கொண்டே சுவையான பிரியாணியை ஒரு பிடி பிடித்தோம்.

பேச்சின் இடையே முகநூலில் நீங்கள் இணையவில்லையா என நண்பரிடம் கேட்டேன்.
நண்பர் சிரித்துக் கொண்டே இப்படி சொன்னார்.

அது அரை லூஸ்களின் கூடாரம்.
அதனால் தமக்கு ஆர்வம் இல்லை என்றார்.

என்னது அரை லூஸ்களின் கூடாரமா என நண்பரின் முகத்தை ஆச்சரியத்துடன் நோக்கினேன்.

ஆமாம் தலைவா (என்னை நண்பர் அப்படி அழைப்பதுதான் வழக்கம்) ஒரு நாள் அலுவலகத்தில் மற்றொரு நண்பர் முகநூலில் மூழ்கி இருந்த போது நானும் கூட அமர்ந்து என்னதான் இருக்கிறது என ஆவலுடன் கவனித்தேன்.

ஒரு சிலர் நல்ல கருத்துக்களை பதிவு செய்திருந்தார்கள்.

பலர் நான் இப்போது ரயிலில் பயணம் செய்கிறேன்.

நான் இப்போது கமலா திரையரங்கில் அனேகன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான் இப்போது தயிர் சாதம் சாப்பிடுகிறேன்.

நான் இப்போது வாக்கிங் போய் கொண்டிருக்கிறேன்.

என்ற பாணியில் பதிவு செய்திருந்தார்கள்.

சிலர் பார்க்க தகுதி இல்லாத படங்களை போட்டு இருந்தார்கள்.

சிலர் சினிமா நடிகர் நடிகை படங்களை போட்டு ஜே என்று எழுதி இருந்தார்கள்.

இதற்கு ஒரு கூட்டம் லைக் வேறு போட்டு இருந்தது.

முகநூலில் நல்ல கருத்துக்களை பதிவு செய்யாமல் அதை சிலர் பாழ்ப்படுத்தி வருகிறார்கள்.

அதனால் தமக்கு அதில் ஆர்வம் இல்லை என்றார் நண்பர்.

நண்பரின் குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதாக எனக்கு தோன்றியது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

No comments: