Friday, March 6, 2015

மூன்று பேர்...!

மூன்று பேர்...!
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நடந்த சம்பவம் இது.

நீண்ட தாடி வைத்துக் கொண்டிருந்த இஸ்லாமியவர் ஒருவர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை கீழே தள்ளி நையப்புடைத்துக் கொண்டிருந்தார்.

ஒரு இஸ்லாமியனைப் பார்த்து எப்படிடா அந்த வார்த்தை கூறலாம் என கூறிக்கொண்டு மேலும் மேலும் அடித்து கொண்டிருந்தார்.

பிரச்சினை அவருக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கு என்பது புரிந்தது.

ஆனால் அடித்துக் கொண்டிருந்த இஸ்லாமியரோ துணைக்கு இஸ்லாத்தையும் அழைத்துக் கொண்டார்.

மற்றொரு சம்பவம்.

ஒரு நாள் மாநகர பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். கூடவே மற்றொரு இஸ்லாமியரும் பயணம் செய்தார். நீண்ட தாடி இருந்தது.

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. உட்கார இடம் கிடைக்கவில்லை.

சிறிது தூரம் சென்றவுடன் அந்த இஸ்லாமியருக்கு இடம் கிடைத்தது. எனினும் பலர் நின்று கொண்டே பயணம் செய்து கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு பேருந்தில் இடம் காலி ஆனதும் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் அதில் உட்கார ஆயுத்தமானார்.

ஆனால் அந்த இடத்தில் அமர அனுமதிக்காத இஸ்லாமியர் பேருந்தின் கடைசி பகுதியில் இருந்த தம்முடைய உறவினரை குவி குவி அழைத்தார். அவர் வரும் வரை யாரையும் காலியாக இருக்கும் பகுதியில் அமர அனுமதிக்கவில்லை.

எனவே அந்த இஸ்லாமியர் மீது பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் வெறுப்பு அடைந்து வாக்குவாதம் செய்தனர்.

மூன்றாவது சம்பவம்.

திருவல்லிக்கேணி பாரதி மெஸ்ஸில் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.

அங்கேயும் நீண்ட தாடியுடன் வந்து இருந்த இஸ்லாமியர் அது சரியில்லை இது சரியில்லை என உரக்க உரக்க கூறி அட்டகாசம் செய்து கொண்டிருந்தார்.

மெஸ் ஊழியர்களைக் குறைக் கூறிக்கொண்டே இருந்தார்.

இதனால் அவரும் மெஸ்ஸில் இருந்த மற்றவர்களின் பார்வையில் நீண்ட நேரம் பட்டுக் கொண்டே இருந்தார்.

மூன்று சம்பவங்களிலும் அந்த மூன்று இஸ்லாமிய சகோதரர்கள் நடந்து கொண்ட விதம் இஸ்லாமியர்கள் எல்லோருமே இப்படிதான் போல என்ற அபிப்பிராயம் மாற்று மத சகோதரர்கள் மத்தியில் எழுந்தது.

அது நியாயம்தான்.

நம்முடைய ஒவ்வொரு செயல்கள் மூலம்தான் இஸ்லாம் குறித்து மற்றவர்களுக்கு நாம் எடுத்துச் சொல்ல முடியும் என்பதை பெரும்பாலான இஸ்லாமிய சகோதரர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: