Sunday, December 8, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (11)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! "  நாள்: 11



17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் !

இந்திய இளம் தலைமுறையினர் 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகி வருவதாக இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (பி.எச்.எப்.ஐ.) எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மது, புகையிலைப் பழக்கம் வளர்ந்த நாடுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால் வளரும் நாடுகளான இந்தியா, சீனாவில் மதுப் பழக்கம் இளைஞர்களை ஆட்டிப் படைத்து வருகிறது.

வார விடுமுறை என்றால் மது விருந்து என்பது இப்போது பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. இப்போது டிசம்பர் மாதம். இந்த சீஷனில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் அணிவகுக்கின்றன. இதனால் மது வியாபாரம் செழித்து கொழிக்கிறது.

இந்தியர்களைப் பொறுத்தவரை பீர், ஒயின் மது வகைகளைவிட ஆல்கஹால் அதிகம் கலந்த விஸ்கி, ரம் மதுபானங்களையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் அவர்களின் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.


குடி குடியைக் கெடுக்கும், குடலையும் கெடுக்கும் என்று டாக்டர்கள் எச்சரித்தாலும் குடியில் மூழ்கிய குடிமகன்களால் அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை.

நாடு முழுவதும் மது போதையால் நேரிடும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமூகவிரோத செயல்கள், வன்முறைச் சம்பவங்களுக்கும் மதுவே முக்கியக் காரணமாக உள்ளது. தொழிலாளர்களின் போதைப் பழக்கத்தால் பணியிடங்களில் உற்பத்தித் திறன் குறைகிறது.

மாயாஜால விளம்பரங்கள்

இந்திய இளைஞர்களிடம் மதுப் பழக்கம் அதிகரிப்பதற்கு மதுபான நிறுவனங்களின் மாயாஜால விளம்பர தந்திரங்களும் வலுவற்ற சட்டங்களுமே முக்கிய காரணம் என்று பி.எச்.எப்.ஐ. சுட்டிக் காட்டியுள்ளது.


நமது நாட்டில் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுபான நிறுவனங்கள் வேறு பொருள்களின் பெயரில் தங்கள் சரக்குகளை விளம்பரப்படுத்துகின்றன. குடிநீர் பாட்டில், சோடா, சி.டி.க்கள், குளிர்பானங்களின் பெயர்களில் மதுபான வகைகளுக்கு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.

இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் தோன்றி இளம் வயதினரை எளிதாக ஈர்க்கின்றனர். சில முக்கிய விருது நிகழ்ச்சிகளுக்கும் மதுபான நிறுவனங்கள், தங்களின் கிளை நிறுவனங்கள் மூலம் நிதியுதவி அளித்து மறைமுகமாக விளம்பரம் தேடிக் கொள்கின்றன.

திரைப்படங்களில் சரக்குகளின் பெயர்

இப்போது வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களின் பாடல்கள், வசனங்களில் மதுபான வகைகளின் பெயர்கள் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன. சில படங்களில் மதுபானங்களுக்கு மறைமுகமாக விளம்பரமும் செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைத்தளங்களிலும் மதுபான விளம்பரங்கள் விதைக்கப்படுகின்றன.

இதனால் இந்திய இளைஞர்கள் 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் கொடுமை அரங்கேறி வருகிறது.


இதே நிலை நீடித்து போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறினால் நாட்டின் மனித வளம் மிக மோசமாகப் பாதிக்கப்படக் கூடும் என்று பி.எச்.எப்.ஐ. எச்சரித்துள்ளது.

எனவே, இப்போதுள்ள சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும், புதிய மதுபான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கக் கூடாது, மறைமுக விளம்பரங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பி.எச்.எப்.ஐ. அறிவுறுத்தியுள்ளது.

நன்றி:  தி இந்து தமிழ் நாளிதழ் (08.12.2013)

தொகுப்பு:  எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=================================

Saturday, December 7, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்..! (10)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! "  நாள்: 10


" டாஸ்மாக் கலாச்சாரம் வருத்தமா இருக்கு !  இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வேதனை !!

தற்போதைய பல திரைப்படங்களில் மதுக்கு ஆதரவான காட்சிகள்... நடிகர்கள் மது அருந்தும் காட்சிகள் நிச்சயம் இடம் பிடிப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது....

ஆனால், இந்திய திரைப்படத்துறையில் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தி, பல சாதனைகளை புரிந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். மது குறித்து என்ன சொல்கிறார் தெரியுமா....

வாருங்கள், முதலில் அவரது கருத்தை பார்ப்போம்...

"பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட டாஸ்மாக்கிற்கு போகும் கலாச்சாரம் தற்போது      உருவாகியுள்ளது.

இந்தியாவில், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே எனக்கு புரியவில்லை..

இதைப் பார்க்கும்போது, மிகவும் வருத்தமா இருக்கு...

இதையெல்லாம் மாற்றுவதற்கு யார் வரப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.."


திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒருவர் மதுவுக்கு எதிராக கருத்தை தெரிவிக்கும் நிலையில் கூட, மதுக்கு ஆதரவான காட்சிகள், பாடல்கள் இன்னும் சினிமாவில் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அண்மையில் வந்த ஒருசில திரைப்படங்களின் பாடல் வரிகள் இதோ...


இது கானா பாலா பாடிய பாடல் வரிகள்...

"கொடுக்கிறாடா டார்ச்சரூ...
போய்ச்சு என் ஃபிச்சாரு (future)
இதுக்கு எதுக்கு டாக்டரு
ஊத்து இன்னும் ஒரு குவார்டரு"

மற்றொரு பாடலில்

"நிம்மதியே இல்லே மச்சா
போனா அவ வீட்டுக்கு
அதுக்கு தண்டா
வந்து போறேன்
தினமும் ஓயின் ஷாப்புக்கு"

இந்த பாடல் வரிகளை கேட்டு இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை கை தட்டுகிறார்கள்...

விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்...ரசிக்கிறார்கள்...

ஆனால், மதுவுக்கு ஆதரவான இந்த பாடல்கள் இருப்பதை அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை...

இதேபோன்றுதான் மதுவுக்கு ஆதரவாக சில நடிகர்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள்...


சிரிப்பு நடிகர் சந்தானம், தான் நடிக்கும் படங்களில் நிச்சயம் மது அருந்தும் காட்சியில் வந்து செல்கிறார்...

சந்தானம் மட்டுமல்ல, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட புதுமுக நடிகர்கள் பலர் மது அருந்தும் காட்சிகள் சர்வசாதாரணமாக நடித்துச் செல்கிறார்கள்...

அதன்மூலம், இளைஞர்கள் இடையே மது அருந்தும் பழக்கத்தை எளிதாக கற்றுத் தருகிறார்கள்...

பழைய நடிகர்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உட்பட பலர் மது அருந்தும் காட்சிகளில் சர்வசாதாரணமாக நடித்து சென்றார்கள்...


வாழ்க்கையில் மதுப்பழகத்திற்கு ஆளாகாத சில நடிகர்கள் கூட மதுக்காட்சிகளில் நடித்துள்ளார்கள்...

எனினும், ஒருசிலர் விதிவிலக்காக இருந்துள்ளார்கள்..

குறிப்பாக, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மது அருந்தும் காட்சிகளை தன்னுடைய படத்தில் தவிர்த்து வந்தார்.


அப்படியே மது அருந்தும் காட்சியில் நடித்துவிட்டால், அந்த படத்திலேயே அதற்கு எதிராக காட்சியை அமைத்து, மதுவின் தீமை குறித்து மக்களிடையே பிரச்சாரம் செய்தார்.

ஒளிவிளக்கு என்ற திரைப்படத்தில் மது அருந்தும் காட்சியில் எம்.ஜி.ஆர். நடித்து இருப்பார்.

ஆனால், எம்.ஜி.ஆரை, அவரது மனச்சாட்சி குற்றம் சுமத்தி பாடும் பாடல் ஒன்று உடனே வரும்...


இதோ, கவிஞர் வாலி எழுதிய அந்த பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு....


"தைரியமாக சொல் நீ மனிதன் தானா?
மனிதன் தானா?
இல்லை!
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்
மனமும் நல்ல குணமும்
உன் நினைவை விட்டு விலகும்
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்

மானை போல் மானம் என்றாய்-
நடையில் மத யானை நீயே என்றாய்
வேங்கை போல் வீரம் என்றாய்-
அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய்
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

அலையாடும் கடலை கண்டாய்
குடித்து பழகாமல் ஆடக் கண்டாய்
மலராடும் கொடியை கண்டாய்
மதுவை பருகாமல் ஆடக் கண்டாய்
நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

பொருள் வேண்டிதிருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய்
துணிவோடு உயிரை கொல்வாய்
எதற்கும் துணையாக மதுவை கொள்வாய்
கேட்டால் நான்தானே மனிதன் என்பாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா -இல்லை மனிதன் தானா
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும் நேரம்........"

என்ன அருமையான வரிகள்....மதுவுக்கு எதிராக கவிஞர் வாலி எழுதிய வரிகள் இன்னும் நம் உள்ளத்தில் ஆழமாக ரிங்காரம் செய்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன...


ஆனால்,  தற்போது நிலைமை தலைகீழாக அல்லவா உள்ளது....

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வேதனையாக குறிப்பிட்டது போன்று, இதையெல்லாம் மாற்றுவதற்கு யார் வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================

http://www.youtube.com/watch?v=GscOC7aw97k

www.youtube.com/watch?v=GscOC7aw97k

Thursday, December 5, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர் ! (9)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! "  நாள்: 9



மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ (5.12.2013 அன்று) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில் மதுக்கடைகளை அகற்றக்கோரி பல்வேறு இடங்களில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் போராடிக்கொண்டிருக்கின்ற செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில்தான் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கிக் கொண்டிருப்பதாகவும், ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி, இலவசங்களை வாரி வழங்குவதன் மூலம் தமிழக அரசு பண்பாட்டை குழிதோண்டி புதைத்து வருவதுடன், சமூக அமைதியையும் சீர்குலைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அனைத்துக்கும் மதுதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்றும் நெஞ்சைப் பிளக்கும் வகையில், 5 வயது, 6 வயது சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள்கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கொடூரங்கள் நடக்கின்றன என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.  நாட்டின் எதிர்கால ஒளி விளக்குகளாக பிரகாசிக்க வேண்டிய இளைஞர்களும், மாணவர்களும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு ஜெயலலிதா அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


ஈரோடு அருகே பள்ளி இறுதி ஆண்டில் பயிலும் மாணவிகள் டாஸ்மாக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எண்ணி கவலை அடையச் செய்வதாக வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.  மதுக்கடைகள் இருக்கும் பகுதியில் பெண்கள் சென்றுவரவே அச்சப்படுகிற நிலைமை இருப்பதால், பொதுமக்களின் போராட்டங்கள் வெடிக்கின்றன என்றும் மக்கள் நலனில் சிறிதும் அக்கரையற்ற தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் மூலம் அதன் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றவே கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறியுள்ளார். ஆட்சியாளர்களுக்கு கொடிய அரக்கக் குணம் இருந்தால்தான் இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்க முடியும் என்றும் இந்த அரசு ஒருபோதும் திருந்தப்போவது இல்லை என்பதற்கு இதுவே தக்க சான்று ஆகும் என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.


இந்த ஆண்டு பிப்ரவரி 25 இல், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மார்ச் 31க்குள் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு ஆறுமாத காலம் அவகாசம் கேட்ட அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்தது மட்டுமின்றி, நெடுஞ்சாலைகளில் இருக்கும் 504 மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் இந்த அரசு மதிக்கத் தயாராக இல்லை என அவர் கூறியுள்ளார்.


மேலும், உயர் ரக மதுவகைகளை விற்பனை செய்திட ‘எலைட்’ பார் திறக்கவும், கிராமப் புற டாஸ்மாக் கடைகளில் கூட, விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்களை விற்பதற்கும் ஜெயலலிதா அரசு திட்டமிட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.

மக்கள் வாழ்வையே சூறையாடி, மதுக்கடைகள் மூலம் வருமானம் திரட்டி, இலவச போதைக்கு மக்களை ஆட்சியாளர்கள் அடிமைப்படுத்துகிறார்கள் என்று அவர் குற்றச்சாட்டியுள்ளார்.


தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் பேராபத்தை தடுப்பதற்காகத்தான் மதுக்கடைகளை மூட வலிறுத்தி, 1,200 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டதாகவும், அப்போது வழி நெடுகிலும் பல்லாயிரக் கணக்கான தாய்மார்கள் அழுகையும், கண்ணீருமாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கதறி அழுத காட்சிகள் தம் நெஞ்சை உருக்க வைத்ததாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.


பேரழிவிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பும் கடமையும் தமிழ்ச் சமுகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள வைகோ,  மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, நிரந்தரமாக மதுக்கடைகளை மூடுவதுதான் தமிழ்நாட்டை சீரழிவிலிருந்து காப்பாற்ற ஒரே வழி என்றும் தெரிவித்துள்ளார்.


தொகுப்பு : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=================================

Wednesday, December 4, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (8)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! "  நாள்: 8



மது பழக்கத்தால் சின்னாபின்னமான கலீல் பாய் குடும்பம்....!

வேலூரில் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் வசித்தவர் கலீல் பாய்...

தலையனை, மெத்தை தயாரிக்கும் தொழிலை செய்து வந்தார்.

நல்ல வருமானமும் கிடைத்து வசதியாக வாழ்க்கையை நடத்தினார்..

அன்பான மனைவி, மூன்று ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை என அவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர்...

அனைவரையும் பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு கல்வி வழங்க ஏற்பாடும் செய்தார் கலீல் பாய்...

இப்படி கலீல் பாயின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்தபோது, நண்பர் ஒருவரின் கூடப் பழக்கம் அவருக்கு கிடைத்தது..

அந்த நண்பரின் வழியாக மதுப்பழக்கத்திற்கு ஆளானார் கலீல் பாய்...

ஆரம்பத்தில் மெல்ல மெல்ல தொடங்கிய மதுப்பழக்கம், பின்னர் நாள்தோறும் என்ற நிலைக்கு எட்டியது...

மது அருந்தாமல் அவரால் இருக்க முடியவில்லை...

இரவு நேரத்தில் மட்டும் மதுவை அருந்தி வந்த கலீல் பாய், பின்னர், பகல் நேரத்திலும் மதுவை கட்டாயம் அருந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்...


மது அருந்திவிட்டு தொழிலை கவனித்து வந்த கலீல் பாய்க்கு அதில் முழு கவனமும் செலுத்த முடியவில்லை...

இதனால், மெல்ல மெல்ல வருமானம் குறைந்தது...

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், கலீல் பாய் தான் மட்டும் மது அருந்தாமல், தன்னுடைய மனைவிக்கும் அந்த பழக்கத்தை கற்று கொடுத்ததுதான்...

கணவனின் கட்டாயம் காரணமாக, மது அருந்த தொடங்கிய கலீல் பாயின் மனைவி, பின்னர், தொடர் குடிக்காரியாக மாறினார்...


கணவன், மனைவி இருவரும் வீட்டில் மது அருந்தி மகிழ்ந்தபோது, பிள்ளைகள் என்ன செய்வது என்று அறியாமல் தவிப்பார்கள்...

இதனால், கலீல் பாயின் வீட்டில் மெல்ல மெல்ல மகிழ்ச்சி கரைந்தது....வருமானம் குறைந்தது...

வறுமை மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது...

அழகான, அன்பான குடும்பம், சாத்தானின் இல்லமாக மாறியது...

தொடர்ந்து மதுவை குடித்த கலீல் பாய், நாளடைவில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நோய்வாய் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்...

மருத்துவமனையில் அவரை கவனிக்க ஆள் இல்லை...

மதுப்பழகத்திற்கு ஆளான  மனைவியின் உடல் நலமும் பாதிப்பு அடைந்தது.


கொஞ்சம் நாட்களிலேயே மதுப்பழகத்திற்கு அடிமையாகி, உடல்நலம் கெடுத்துக் கொண்டு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட கலீல் பாய் உயிரிழந்தார்...

அவரைத் தொடர்ந்து கலீல் பாயின் மனைவியும், தொடர்ந்து மது அருந்தியதால், அவரும் விரைவிலேயே மரணம் அடைந்தார்...

கலீல் பாயின் பிள்ளைகள் நான்கு பேரை கவனிக்க ஆளில்லை..

பெண் பிள்ளை மீது பாசம் கொண்ட கலீல் பாயின் சகோதரர், அவரது பெண் பிள்ளையை தத்து எடுத்துக் கொண்டார்..

ஆனால், மூன்று ஆண் பிள்ளைகள்... இஸ்மாயில், கலீல்...இக்பால்... ஆகிய மூன்று பேரும் செய்வது அறியாமல் திகைத்தனர்...

தவறான வழியில் அவர்கள் கால் பதித்தனர்...வழித்தவறி சென்றனர்.


கலீல் பாயின் பிள்ளைகள் மூன்று பேரும், பின்னர் மதுப்பழகத்திற்கு ஆளாகி, குற்றச் செயல்களில் இறங்கினர்...

வாழ்க்கை சின்னாபின்னமாகியது....

இருள் சூழ்ந்தது...

அமைதி வழியில் செல்ல வேண்டியவர்கள், தவறான பாதையில் செல்லத் தொடங்கினர்...

ஆறுதல் கூற, வழிக்காட்ட ஆள் இல்லாததால், இஸ்மாயில், கலீல், இக்பால் ஆகிய மூன்று பேரின் வாழ்க்கையும் மதுப்பழக்கத்தால் கரைந்து போனது...

மூன்று பேருமே இளம் வயதிலேயே மரணம் அடைந்தனர்.

ஆக,  மதுப்பழக்கதால் ஒரு நல்ல குடும்பம் சிதைந்து போனது....

கலீல் பாய் மட்டுமல்ல, இதுபோன்று பலர் இன்று மதுப்பழகத்திற்கு ஆளாகி குடும்பங்களை சிதைத்து வருகின்றனர்....

வாழ்க்கையை கெடுத்துக் கொண்டு, அமைதி இழந்து தவிக்கின்றனர்...

மேலே நான் சொன்னது ஏதோ கற்பனை கதை என்று நினைத்து விட வேண்டாம்...


இது உண்மை சம்பவம்....நான் நேரில் பார்த்த அதிர்ச்சி சம்பவம்...

மது என்ற அரக்கண் ஒவவொருவரின் வாழ்க்கையை எப்படி அழிக்கிறது என்பதற்கு நல்ல சாட்சியம் கூறும் உண்மை சம்பவம்...

சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொண்டால் நன்மை அவர்களுக்கே....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (7)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! "  நாள்: 7


மக்களின் உணர்வுகளை மதித்து மதுக்கடைகளை மூட வேண்டும்!
டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்...

 தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை எக்காரணத்தைக் கொண்டும் இடமாற்றம் செய்யக்கூடாது என்று டாஸ்மாக் நிறுவனத்தின் மண்டல மேலாளர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இதை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்திருக்கிறது.

தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த ஆணைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் (04.12.2013) வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் இல்லாத ஊர்களில் கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் மட்டுமே அமைக்கப்பட்டிருந்த மதுக்கடைகள் இப்போது மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவில் திறக்கப்பட்டுள்ளன. கோவில்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்ற விதி காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது என புகார் தெரிவித்துள்ளார்.


பல இடங்களில் பெண்களும், குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இதைக் கண்டித்து பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களாலும், உயர்நீதிமன்ற தலையீடுகளாலும் ஏராளமான மதுக்கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் சூழலில் தான் இப்படி ஓர் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது என்றும் அரசின் இந்த உத்தரவு முற்றிலும் தவறானதாகும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.


தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அகற்றும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால், நூற்றுக்கணக்கான மதுக்கடைகள் நெடுஞ்சாலை ஓரங்களில் இன்றும் செயல்பட்டு வரும் நிலையில் எந்த மதுக்கடையையும், எக்காரணத்தைக் கொண்டும் மாற்றக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பிப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத செயலாகும் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


டாஸ்மாக் மதுக்கடைகளை ஏன் இடமாற்றம் செய்யக்கூடாது? என்பது குறித்து அந்த உத்தரவில் விளக்கமளித்துள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சவுண்டையா, மதுக்கடைகளை இடமாற்றம் செய்வதால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார் என்றும்,  மதுக் கடைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், உடல்நலக் கேடுகள், சாலை விபத்துக்கள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.  அதிக வருவாய் ஈட்டுவது மட்டும் தான் அரசின் நோக்கம் என்பது இந்த உத்தரவில் இருந்து தெளிவாகிறது என்று தெரிவித்துள்ள ராமதாஸ், மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் மதுவணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.


மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் மக்களுக்கு எவ்வளவு தான் இலவசங்களைக் கொடுத்தாலும் அதனால் சமூகத்திற்கு பயன் ஏற்படப் போவதில்லை என்றும், இவ்வாறு செய்வதன் மூலம் சில வாக்குகளை வேண்டுமானால் வாங்கலாமே தவிர, மக்களின் வாழ்த்துக்களை ஒரு போதும் வாங்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


மதுவின் தீமைகளால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மது அரக்கன் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, மதுக்கடைகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்பது போன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதை விட்டுவிட்டு, மக்களின் உணர்வுகளை மதித்து அனைத்து மதுக்கடைகளையும் மூடி, முழுமதுவிலக்கை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தொகுப்பு: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
================================

Sunday, December 1, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்..! (6)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! " நாள்: 6



மதுப்பிரியரை விழுங்கிய மலைப்பாம்பு....!

என்ன அதிர்ச்சியாக  இருக்கிறதா....!

இது, உண்மையாக நடந்த சம்பவம் தோழர்களே...

மதுப்பழக்கத்திற்கு ஆளாகி வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருக்கும் சமூகம், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது..

குறிப்பாக, உடல் உழைப்பில் ஈடுபடும் கூலித் தொழிலாளிகள், தங்கள் பணத்தை மதுவிற்காக செலவழித்து குடும்பத்தில் வறுமையை தானாக தேடிக் கொள்கின்றனர்..


அது மட்டுமல்ல, நன்றாக குடித்து விட்டு வீதிகளில், சாலைகளில், மயங்கி கிடக்கின்றனர்.

இதுபோன்ற காட்சிகள் நாள்தோறும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்...

அப்போது நம்மில் பலர் வேதனை அடைகிறோம்.....


தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் மகா குடிகாரர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..

அளவுக்கு மீறி மதுவை அருந்திவிட்டு, தங்களையே இழந்துவிட்டு, சுய நினைவு இன்றி சாலைகளில் பல மணி நேரம் மயங்கி கிடக்கிறார்கள் சில மதுப்பிரியர்கள்...

இப்படிதான்,


கேரளாவில் உள்ள அட்டப்பாடியில் குடித்துவிட்டுப் போதையில் மயங்கி கிடந்தார்  ஒரு மதுப்பிரியர்..

அப்போது அருகில் இருந்த ஒரு மலைப்பாம்பு அந்த மதுப்பிரியரை விழுங்கி விட்டது.

அனேகமாக அவருக்கு உணர்வு வந்திருக்கும் நேரத்தில் அவர் முழுமையாக மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்திருப்பார் போலும்..



ஊடகங்களில் புகைப்படத்துடன் வந்த செய்தியை பார்த்தபோது, நான் அதிர்ச்சி அடைந்தேன்...

அதை உங்கள் பார்வைக்கும் வைத்துவிட்டேன்...


மதுவால், எப்படியெல்லாம் தீமைகள், கொடுமைகள், பிரச்சினைகள், ஏற்படுகின்றன என்பதற்கு இதுபோன்ற செய்திகள் சாட்சிகளாக இருந்து கொண்டிருக்கின்றன.

இதை பார்த்தாவது, ஆபத்தில் இருந்து விலக மதுப்பிரியர்கள் முன்வர வேண்டும்...

மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=======================

திருமண வாழ்த்து (2)....!


புதுயுகம் தொலைக்காட்சியில் விஷுவல் எடிட்டராக கலக்கிக் கொண்டிருப்பவர் நண்பர் வேல்முருகன்....

அண்மையில் இவருக்கு சிவகாசியில் திருமணம் இனிதாக நடந்து முடிந்தது..

வழக்கம் போல, சூழ்நிலைகள் காரணமாக திருமணத்திற்கு நான் செல்ல முடியாது நிலை...

எனவே, சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள வேல்முருகனின் இல்லத்திற்கு ஊடக பண்பாளர் செந்தில் ராஜ்குமாருடன் சென்று நேரில் சந்தித்து மணமக்களை வாழ்த்தினேன்.

அப்போது எடுத்தப் புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு...


மணமக்களுக்கு வாழ்த்து...


மணமக்களின் அறிவு பசிக்காக திருக்குர்ஆன் தமிழாக்கம் நூல் அன்பளிப்பு...


நண்பர் செந்தில் ராஜ்குமார் அளிக்கும் அன்பு பரிசு....


மற்றொரு கோணத்தில் எடுத்தப்படம்...


மேலும் ஒரு படம்...


மணமக்களுடன் நான், செந்தில் ராஜ்குமார்....


மற்றொரு படம்...


மற்றொரு கோணத்தில் எடுத்தப்படம்...



மற்றொரு படம்


புதுமண தம்பதிகளை நேரில் சந்தித்து வாழ்த்திய நாள் (1.12.2013) வாழ்க்கையில்
மறக்க முடியாத நாள்... மகிழ்ச்சியை அளித்த நாள்...



எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

========================