Sunday, February 9, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (61)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!! "

நாள்  -  61

மதுக்கடைகளை உடனடியாக மூடி மக்களின் உயிரை காக்கவேண்டும்....!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.....!!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடந்த 9.2.2014 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘

அதில், தமிழ்நாட்டில் நிகழும் சாலை விபத்துக்கள் தொடர்பாக ஓரளவு நிம்மதியளிக்கும் செய்தி இப்போதுதான் வெளியாகியிருக்கிறது.

சாலை விபத்துக்கள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகிய இரண்டுமே
கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக குறைந்திருக்கின்றன என்பதுதான் அந்த செய்தியாகும்.

இந்திய அளவில் சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளில் தமிழ்நாடுதான் கடந்த 10ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வருகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த10 ஆண்டுகளாகவே தமிழகத்தில் விபத்து மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

கடந்த 2003 ஆம் ஆண்டில் 9275 ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு அதிகரித்து 16,175 ஆக உயர்ந்திருக்கிறது.

இதே காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை 52,508 என்ற அளவிலிருந்து 67,757 என்ற அளவுக்கு அதிகரித்திருப்பதாக தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



2012 ஆம் ஆண்டில் 15,072 ஆக இருந்த விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2013 ஆம்ஆண்டில் 14,504 ஆக குறைந்திருக்கிறது. விபத்துக்களின் எண்ணிக்கையும் 67,757 என்ற அளவில் இருந்து 66,238 என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 700 பேர் வீதம் அதிகரித்து வந்த நிலையில், 2013 ஆம் ஆண்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 612 குறைந்திருக்கிறது.

அதேபோல் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 1500 வீதம் அதிகரித்துவந்த நிலையில், கடந்த ஆண்டில் 1519 குறைந்துஷீமீளது. அதாவது 2013 ஆம் ஆண்டில் சுமார் 3,000 விபத்துக்களும், 1300 உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டிருக்கின்றன.

விபத்துத் தடுப்பில் இது ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும்.

தமிழ்நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகரித்ததற்கான முதல் காரணம் நெடுஞ்சாலையோரமதுக்கடைகள்தான். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல்தான் தமிழகத்தில் சாலை விபத்துக்கள்அதிகரித்தன என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அதே 2003 ஆம் ஆண்டில் தான் தமிழகத்தில் மதுக்கடைகளை எல்லாம் அரசுடைமையாக்கிய அ.தி.மு.க. அரசு, சாலை ஓரங்களில் அதிக
எண்ணிக்கையில் மதுக்கடைகளை திறந்தது.

இதிலிருந்தே சாலை விபத்துக்கள் அதிகரித்ததற்கு காரணம் என்ன? என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அதேபோல், சாலை விபத்துக்கள் குறைந்ததற்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததுதான் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.


நெடுஞ்சாலை ஓரங்களிலும், நெடுஞ்சாலைகளை ஒட்டியும் அமைந்துள்ள மதுக்கடைகளை மூட ஆணையிடக் கோரி பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் மூட
ஆணையிட்டது.

அதன்படி சில கடைகளை மூடிய அரசு பெரும்பாலானகடைகளை மூட வில்லை. நெடுஞ்சாலைகளை ஒட்டியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

100 கடைகள் மூடப்பட்டதாலேயே, 3000 விபத்துக்களும், 1300 உயிரிழப்புகளூம் தடுக்கப்பட்ட நிலையில், சாலையோர மதுக்கடைகள்  அனைத்தும் மூடப்பட்டால், தமிழ்நாட்டை சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகள் இல்லாத மாநிலமாக மாற்றியமைக்க அரசால் முடியும்.

முழு மதுவிலக்கு கொண்டுவரப்பட்டால் மதுவின் மற்ற தீமைகளையும்
அடியோடு ஒழித்து விட முடியும்.

இதை உணர்ந்து, தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் அனைத்தையும்உடனடியாக மூட வேண்டும்;


அடுத்த கட்டமாக தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தி, மக்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

பல தகவல்கள், பல புள்ளி விவரங்கள் கூறி, மதுவை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசு அவரது கோரிக்கையை ஏற்க முன்வர வேண்டும்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (60)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!!"

நாள்  -  60



போதை ஆசாமிகளை குறி வைத்து கொள்ளையடிக்கும் கும்பல்....

ஓர் அதிர்ச்சித் தகவல்......!!

மது குடிப்பதால் உடல்நலம் மட்டும் பாதிப்பு அடைவதில்லை.

பல தீமைகள் சமூகத்திற்கு கிடைத்து வருகின்றன.

இதையெல்லாம் விடுங்கள் சார்.... கொள்ளை கும்பல் ஒன்று, மதுப்பழக்கம் உள்ள போதை ஆசாமிகளை கொள்ளையடித்து வருகிறது...

ஆம்....

இந்த சம்பவத்தை கொஞ்சம் கவனத்துடன் படியுங்கள்...

உங்களுக்கே விஷயம் புரியும்...

சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் கடந்த 31-ந்தேதி  (31.01.14) நள்ளிரவு தனியார் நிறுவன ஊழியரான சிட்லபாக்கத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் மர்ம கும்பலால் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் ரெயில் நிலைய வளாகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது.

முதுகில் குத்திய கத்தியுடன் அவர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மறுநாள் காலை லோகநாதன் பரிதாபமாக இறந்தார்.


வழிப்பறிக்காக நடந்த இந்த கொலை சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரெயில் நிலைய போலீசாரிடம் கொலை செய்யப்பட்ட லோகநாதனின் மனைவி சினேகா லதா புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் கொலை சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைக்கு ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவிட்டார். இதையடுத்து எழும்பூர் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்ராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தீவிரமாக போலீசார் தேடிவந்தனர்.

லோகநாதன் தாக்கப்பட்ட தினத்தன்று, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் மணிபர்ஸ் ஆகியவற்றை கொலையாளிகள் எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து செல்போனை துருப்புச் சீட்டாக கொண்டு கொலையாளிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதன்மூலம் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த தமிம் அன்சாரி, கோபி,  மற்றும் சிவாஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிடிபட்ட 3 பேரும் போலீசாரிடம் வழிப்பறிக்காக லோகநாதனை கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டனர். பிடிபட்ட கொலையாளிகள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.


அதில், நாங்கள் 3 பேரும் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். சிறுவயதில் இருந்தே சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்தோம். நாளடைவில் ரெயில் நிலையங்களில் போதையில் நடமாடுபவர்களை குறிவைத்து திருடுவதையே குறிக்கோளாக கொண்டிருந்தோம்.

சம்பவத்தன்று லோகநாதன்(கொலை செய்யப்பட்டவர்) பயணம் செய்த அதே ரெயில்பெட்டியில் தான் நாங்களும் பயணம் செய்தோம். அவர் நன்றாக குடித்துவிட்டு புலம்பியபடியே வந்து கொண்டிருந்தார். பார்ப்பதற்கு வசதி உள்ளவர்போல் இருந்ததால் நாங்கள் அவரிடம் இருந்து பணத்தை அபகரிக்க திட்டமிட்டு தொடர்ந்து அவருடன் பயணம் செய்தோம்.

இரவு 11 மணிக்கு ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. வண்டியிலிருந்து லோகநாதன் இறங்கியதும், நாங்கள் அவரை பின்தொடர்ந்தோம். 7-வது நடைமேடையில் அவர் நடந்துசென்றபோது நாங்கள் அவரை வழிமறித்தோம்.


பின்னர் கத்தியை காட்டி பணத்தை கேட்டோம். அதற்கு அவர் பணத்தை தராமல் சத்தம்போட்டு கத்த நினைத்தார். எனவேதான் லோகநாதனை கத்தியால் முதுகில் பலமாக குத்தினோம். கத்தியால் குத்தப்பட்டதும் லோகநாதன் வலியால் அலறியபடியே ஓட முயன்றார்.

அப்போது அவரிடமிருந்த மணிபர்ஸ் மற்றும் 2 செல்போன்களை எடுத்துக் கொண்டு அவரை தள்ளிவிட்டு நாங்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டோம்.

மறுநாள் காலையில் நாளிதழ் மூலமாகத்தான் லோகநாதன் இறந்தது தெரியவந்தது. எங்களை போலீசார் பிடிக்க மாட்டர்கள் என்று தைரியமக இருந்தோம்.


லோகநாதனிடமிருந்து பறிக்கப்பட்ட மணிபர்சில் வெறும் 350 ரூபாய் தான் இருந்தது. ஆனால் நாங்கள் பறித்த செல்போனே எங்களுக்கு வினையாக அமையும் என்று நினைக்கவில்லை. பறிக்கப்பட்ட செல்போனில் ஒன்றை விற்றுவிட்டோம். மற்றொரு செல்போனையும் விற்க நினைத்தோம், ஆனால் அதற்குள் போலீசாரிடம் மாட்டிக்கொண்டோம்.

போதை மனிதனுக்கு எப்படியெல்லாம் துன்பங்களை அள்ளித் தருகிறது என்பது மேலே கண்ட உண்மை சம்பவமே போதுமானது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (59)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!!"

நாள்  -  59

மது அருத்த வேண்டாம் என கெஞ்சிய காந்திய மக்கள் இயக்க நிர்வாகி....!

டாஸ்மாக் கடை முன் காந்திய மக்கள் இயக்க நிர்வாகி கருப்பையா, மது அருந்த வந்தவர்களிடம், மது அருந்தாதீர்கள் என கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.

காந்திய மக்கள் இயக்கத்தின் மது ஒழிப்புப் பிரிவின் மாநில துணை செயலாளரான  பாண்டிச்சேரி கருப்பையா, கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், திருப்பூருக்கு வந்த அவர் பி.என்.சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன் அமர்ந்து, அங்கு வந்தவர்களிடம் மது அருந்த வேண்டாம் என கருப்பையா கெஞ்சிக்கேட்டார்.

கால்களை பிடித்து கெஞ்சுகிறோம், மதுவை குடித்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் நாசமாக்கிகொள்ளதீர்கள் என்ற வாசகம் அடங்கிய அட்டையை கருப்பையா தன் கழுத்தில் மாட்டியிருந்தார்.

கருப்பையா கூறியதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்காமல், அவரை வேடிக்கை பார்த்தவாறு பலரும் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.


தகவல் கிடைத்து அங்கு சென்ற திருப்பூர் வடக்குப் போலீஸார், கருப்பையாவை காவல் நிலைத்திற்கு அழைத்து சென்றனர்.

உரிய அனுமதியின்றி டாஸ்மாக் கடை முன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது, வேண்டுமானால், பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்துகொள்ளுமாறு கருப்பையாவிடம் போலீஸார் அறிவுறுத்தி, அவரை அனுப்பி வைத்தனர்.

மதுவிற்கு எதிராக குரல் கொடுத்து வரும் காந்திய மக்கள் இயக்க நிர்வாகி கருப்பையாவை நாம் பாராட்டுகிறோம்.

அவரது பணி தொடர வாழ்த்துகிறோம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....!! (58)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!!" 

நாள்  -  58



டாஸ்மாக் கடைகளால் குற்றங்கள் அதிகரிப்பு.... !

காந்தியவாதி சசிபெருமாள் வேதனை.....!!

காந்தியவாதியும் மது, போதை, ஊழலுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சசிபெருமாள், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முதல்கட்டமாக சென்னையில் உள்ள 36 டாஸ்மாக் கடைகளைத் தேர்ந்தெடுத்து அதன் முன்பு கடந்த 31-ம் தேதியிலிருந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

அவரது போராட்டம் 4-வது நாளாக தொடர்ந்தது. சூளைமேடு பகுதியில் உள்ள பெரியார் பாதை டாஸ்மாக் கடை எண் 469 முன்பு திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் கூறியதாவது:

டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது.


ஆனால், டாஸ்மாக் கடைகளில் மது அருந்துபவர்கள் நோய் ஏற்பட்டு இறந்துவிடுகின்றனர். இதனால், பெண்கள் பலர் சிறு வயதிலேயே கணவனை இழந்து கஷ்டப்படுகின்றனர்.

மேலும் மது அருந்துபவர்களால் சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

இதுபோன்ற சமுதாயப் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாமல், டாஸ்மாக் கடைகளின் மூலம் வரும் வருமானத்தை மட்டும் கணக்கில் கொள்வது அரசுக்கு அவமானம் ஆகும்.

இவ்வாறு காந்திவாதி சசிபெருமாள் கூறினார்.

காந்திவாதி சசிபெருமாளின் கூற்றில் உண்மை இருக்கிறது. டாஸ்மாக் கடைகளால் குற்றங்கள் அதிகரித்து வருவது கண்கூடாக காண முடிகிறது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================

Saturday, February 1, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (57)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!" 

 நாள் - 57

தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகம்........!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை.......!!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் பாமக சார்பில் மகளிர் மாநாடு நடந்தது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, புள்ளி விவரங்களின்படி இந்தியாவில், தமிழகத்தில்தான் 30 வயதுக்கும் குறைவான இளம் விதவைகள் அதிகம் உள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.

தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கியமாக மதுவே காரணம் என்றார் அவர்.

பாமக ஆட்சிக்கு வந்தால் சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் ராமதாஸ் உறுதி அளித்தார்.


இளைஞர்கள் மத்தியில் குடிக்க கூடாது என்ற உணர்வு மனதில் உதிக்க வேண்டும் என்றும், அவர்களிடம் மாற்றம் வந்தால்தான் நாட்டில் நன்மை பிறக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் 51 சதவிகிதம் பெண் வாக்காளர்கள் என்று குறிப்பிட்ட ராமதாஸ், பெண்கள் நினைத்தால் எதையும் செய்யலாம் என்றும், மதுவிற்கு எதிராக அவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....!(56)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் - 56


மது அருந்தி பலாத்காரம் செய்ய முயன்றதால் ஆத்திரம்......!

அக்காள் கணவரை கழுத்தை அறுத்து கொன்ற கல்லூரி மாணவி.....!!

சென்னையை அடுத்த மாதவரம், டெலிபோன் காலனி, முதல் தெருவைச் சேர்ந்தவர் மேத்யூபினோராஜ்.  இவர், ரியல் எஸ்டேட் தொழிலும், பழைய கார்களை வாங்கி, விற்கும் தொழிலும் செய்து வந்தார்.

இவர் ஹேமா என்ற பெண்ணை காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு மெர்லின்ஜோசப் என்ற மகன் உள்ளான். ஹேமா, மாதவரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை செய்து வருகிறார்.

ஹேமாவின் தாய்-தந்தை இருவரும் இறந்து விட்டதால், ஹேமாவின் தங்கை ஹரிபிரியா, தனது அக்கா வீட்டில் தங்கி இருந்து சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

மேத்யூபினோராஜ் தினமும் இரவு நேரங்களில் மது அருந்திவீட்டு, குடிபோதையில் வீட்டுக்கு வந்து தனது மைத்துனி ஹரிபிரியாவிடம் பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி ஹரிபிரியா தனது அக்காவிடம் தெரிவித்தார். அவர், கணவரை கண்டித்தார். ஆனாலும் மேத்யூபினோராஜ் தொடர்ந்து ஹரிபிரியாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேத்யூ பினோராஜ், மதுபாட்டில்களை வீட்டுக்கு வாங்கி வந்து குடித்தார். மைத்துனியை எப்படியாவது அடைந்துவிடும் திட்டத்துடன் அவர், தனது மனைவி ஹேமாவுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார். இதனால் அவர் அயர்ந்து தூங்கி விட்டார்.


அதிகாலை 3 மணியளவில் போதை மயக்கத்தில் விழித்த மேத்யூபினோராஜ், அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மனைவி மற்றும் மகனை வீட்டின் வெளியே தள்ளி கதவை பூட்டினார். பின்னர் வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டு இருந்த மைத்துனி ஹரிபிரியாவை பலாத்காரம் செய்ய முயன்றார். அக்காள் கணவரிடம் இருந்து தப்பிக்க ஹரிபிரியா போராடினார்.

ஆனால் மேத்யூபினோராஜ் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார். இதனால் ஹரிபிரியா தனது கற்பை காப்பாற்றிக்கொள்வதற்காக சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து அக்காள் கணவரான மேத்யூபினோராஜ் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல தரதரவென அறுத்து கொலை செய்தார்.


பின்னர் கதறி அழுதபடி கதவை திறந்து வெளியே வந்த ஹரிபிரியா, அங்கு மயக்கத்தில் இருந்த அக்கா ஹேமாவின் காலில் விழுந்து நடந்த விவரங்களை கூறி கதறி அழுதார். இதுபற்றி மேத்யூவின் தந்தை மோகன்ராஜ், தாயார் லில்லிக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து மாதவரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த கொலை குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி ஹரிபிரியாவை கைது செய்தனர்.


போலீஸ் விசாரணையில் கைதான கல்லூரி மாணவி குறித்து உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன. தாய் மற்றும் தந்தை ஆகிய இரண்டு பேரும் காலமாகி விட்டதால், அனாதை ஆன ஹரிபிரியாவை, அக்கா ஹேமா, தனது  வீட்டிலேயே தங்க வைத்து கடந்த 7 வருடங்களாக மகள்போல் பாவித்து வளர்த்து வந்தார்.

தனது வீட்டுக்கு வந்த நாள் முதல் மைத்துனி ஹரிபிரியா மீது மேத்யூக்கு தவறான மோகம் ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்தார்.

இதுபற்றி ஹரிபிரியா தனது அக்காவிடம் கூறி அழுதார். அவர் கணவரை கண்டித்தார். இதனால் ஹேமாவுக்கும், மேத்யூவுக்கும் தகராறு ஏற்பட்டது. தன்னால் தனது அக்காவின் வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்று கருதிய ஹரிபிரியா, தான் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று படிப்பதாக அக்காவிடம் கூறினார். ஆனால் அதற்கு ஹேமா மறுத்து விட்டார்.
இதை அறிந்த மேத்யூ, “நீ விடுதி சென்று படித்தால் உனது அக்காவை நான் விவாகரத்து செய்து விடுவேன். கொலையும் செய்து விடுவேன்” என்று ஹரிபிரியாவை மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் பயந்து போன அவர், அக்காள் கணவரின் பாலியல் தொந்தரவுகளை தாங்கிக்கொண்டு வீட்டில் தங்கி கல்லூரி சென்று வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் சரியாக படிக்க முடியாமலும் தவித்து வந்து உள்ளார்.


உச்சகட்டமாக ஜனவரி 31ஆம் தேதி அதிகாலை பலாத்காரம் செய்ய வந்த அக்காள் கணவரிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக வேறு வழியின்றி கத்தியால் கழுத்தை அறுத்து மேத்யூவை கொலை செய்து உள்ளார் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதுபற்றி மேத்யூவின் தந்தை மோகன்ராஜ் மற்றும் தாயார் லில்லி ஆகியோர் கூறும்போது, “ஹேமா, ஹரிபிரியாவை நாங்கள் எங்களின் மகள் போல் பார்த்துக் கொண்டோம். எங்கள் மகனின் வக்கிர புத்தி காரணமாக ஒரு கல்லூரி மாணவியின் வாழ்க்கை சீரழிந்து விட்டது. எங்கள் மகன் இறந்ததால் எங்களுக்கு வருத்தம் இல்லை. இதுபோன்ற கொடிய செயலில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்க முயன்ற அவன், சமுதாயத்தில வாழ்வதைவிட சாவதே மேல்” என்றனர். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “கல்லூரி மாணவி திட்டமிட்டு கொலை செய்யவில்லை. தன்னை பாதுகாத்து கொள்ளவே கொலை செய்து உள்ளார். எனவே அவருக்கு கருணை அடிப்படையில் குறைந்தபட்ச தண்டனை வழங்கவேண்டும்” என்றனர்.

மதுப்பழககம் ஒரு மனிதனை எப்படி மிருகமாக்கி, வாழ்க்கை முடித்து வைக்கிறது என்பதற்கு இந்த உண்மை சம்பவமே போதுமானதாக உள்ளது.

(நன்றி தினத்தந்தி நாளிதழ்)

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (55)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!" 

 நாள் - 55



பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் கூட்டு பிரார்த்தனை......!

மது, போதை, ஊழலுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது....!!

மது, போதை, ஊழலுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் 30.01.2014 அன்று கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

இது குறித்து மது, போதை, ஊழலுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சசிபெருமாள் கூறியபோது, பூரண மதுவிலக்கு கோரி கடந்த 2013-ம் ஆண்டு சென்னை மெரினா காந்தி சிலை அருகே தனிமனித சத்தியாகிரகத்தை நடத்தியதாக தெரிவித்தார்.


அதேபோன்று இந்த ஆண்டு காந்தி சுடப்பட்ட நாளான ஜனவரி 30-ந்தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், முறையான நதி நீர் சேமிப்பின் மூலம் மக்கள் அனைவருக்கும் நிறைவான விலையில்லா குடிநீர் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினா காந்தி சிலை அருகே கூட்டுபிரார்த்தனை நடத்தியதாக சசிபெருமாள் கூறினார்.


இந்த கூட்டுபிரார்த்தனையில் தமிழ்நாடு காங்கிரஸ், பா.ஜ.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., உள்பட பல கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் கொடுத்ததாகவும் அந்த கட்சிகளைச் சேர்ந்த சிலர் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து 31.01.2014 அன்று சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோட்டில் உள்ள, அரசு மதுக்கடை முன்பு காந்தியவாதி சசிபெருமாள் திடீரென்று சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் மாரியப்பன் கைது செய்தார். அவருடன் மேலும் 7 பேரும் கைதானார்கள்.


மதுவிற்கும் போதைக்கும் எதிராக தொடர்ந்து போராடும் காந்தியவாதி சசிபெருமாளின் முயற்சிகள், போராட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================