Friday, May 15, 2015

கருணை காட்டு..!

சித்தராமையா கருணை காட்டு..!

காவிரியில் தமிழகத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுத்தபோது அம்மாநில முதலமைச்சரை நேரில் சந்தித்து தண்ணீர் திறந்து விடும்படி கோரிக்கை மனு அளிக்கப்படவில்லை.

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பகள் வெறியாட்டம் நடத்தியபோது இந்த போராட்டங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என நேரில் சந்தித்து வலியுறுத்த மனம் வரவில்லை.

பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தபோது நாம் அனைவரும் அண்ணன் தம்பிகள். எனவே இதுபோன்ற போராட்டங்கள் தேவையில்லை என கர்நாடக தலைவர்களிடம் நேரில் கோரிக்கை விடப்படவில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் கூட பிரச்சினையை தீர்க்க நேரில் மனு அளிக்கப்படவில்லை.

கர்நாடக அரசுக்கு எதிராக கன்னட அமைப்புகளுக்கு எதிராக அறிக்கைகள் தமிழகத்தில் போராட்டங்கள் என்ற அளவில் மட்டுமே செயல்பாடுகள் இருந்தன.

ஆனால் ஜெயலலிதா வழக்கு விவகாரத்தில் மட்டும் அவசர அவசரமாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து பாமக தலைவர் ஜி.கே.மணி மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த மனுவை அளிக்க சென்ற ஜி.கே.மணி உள்ளிட்ட பாமகவினரை மரியாதைக்கு கூட உட்கார சொல்லாமல் நிற்க வைத்தே மனுவை வாங்கியுள்ளார் கர்நாடக முதலமைச்சர்.

எப்படிப்பட்ட அவமானம் ஏற்பட்டாலும் சரி ஜெயலலிதாவை ஒழித்து கட்ட வேண்டும்.

அவர் மீது வழக்கு போடு என்று கர்நாடகவிற்கு கோரிக்கை விட வேண்டும் என்ற நிலை தமிழக எதிர்க்கட்சிகளிடம் இருந்து வருகிறது.

எல்லாவற்றிற்கும் ஓரே காரணம்.

ஜெயலலிதாவின் விடுதலையால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் எதையும் சாதிக்க முடியாது என்ற பயம்தான்.

ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக சந்திக்க துணிவு இல்லாதவர்கள் அவரை எப்படியும் சிறையில் அடைக்க துடியாய் துடிக்கிறார்கள்.

அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் ஊழல்.

இந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைப்பட பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்கள் தானா சொல்லுங்கள்.

உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: