Saturday, May 31, 2025

ஒரு ஏழை பெண் மீன் வியாபாரியின் ஹஜ் கனவு....!

 ஒரு ஏழை பெண் மீன் வியாபாரியின் ஹஜ் கனவு  நனவான தருணம்...!

உலகம் முழுவதும் இருந்து சவுதி அரேபியாவின் மக்கா நகருக்கு அல்லாஹ்வின் விருந்தினர்கள் குவிந்துள்ள நிலையில், ஹஜ் கடமைக்கான தயாரிப்புகளும் தீவிரம் அடைந்துள்ளன.  இந்தாண்டு சுமார் 30 லட்சம் ஹாஜிகள் தங்களுடைய ஹ்ஜ் கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து இறுதிக்கட்டமாக ஹஜ் கடமையை நிறைவேற்ற ஹாஜிகள் தங்களுடைய நாடுகளில் இருந்து சவுதி அரேபியாவிற்கு இன்னும் புறப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சவுதி அரேபியாவில் ஜுன் 5ஆம் தேதி அரஃபா நாளாகவும் ஜுன் 6ஆம் தேதி  தியாகத்திருநாள் எனப்படும் பெருநாளும் கடைப்பிடிக்கப்படுகிறது. 

அரஃபா நாள் என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல்ஹஜ் 9ம் தேதி கடைபிடிக்கப்படும் ஒரு சிறப்பு நாளாகும். ஹஜ் யாத்திரையின் ஒரு முக்கிய அங்கமாக இது கருதப்படுகின்றது. ஹஜ் யாத்திரையின் போது, புனித அரஃபா மலையில் ஹாஜிகள் தங்கி, ஏக இறைவனைப் போற்றி, தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் தேடுவர்.  இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், தம் இறுதி ஹஜ் யாத்திரையின் போது பிரியாவிடை சொற்பொழிவு செய்த நாளாகவும் அரஃபா நாள் கருதப்படுகிறது.  இந்த நாளில் அல்லாஹ் தனது அடியார்களின் மீது மார்க்கத்தை நிறைவு செய்தான் என்றும் கூறப்படுகிறது. இந்த நாளில், மக்கள் தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் தேடும் விதமாக, அதிக அளவில் துஆ செய்து ஏக இறைவனைப் போற்றுவர்.  எனவே அரஃபா நாள் இஸ்லாமிய நாட்காட்டியின் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருந்து வருகிறது. 

இதைத் தொடர்ந்து ஈத் அல்-அத்ஹா என்று அழைக்கப்படும் தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.  இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில்  துல் ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாள் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஜுன் 6ஆம் தேதியுடம், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஜுன் 7ஆம் தேதியும் தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.  இப்படி, புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள், மக்காவில் குவிந்துள்ள நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கானோர் இறுதிக்கட்டமாக மக்காவிற்குப் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தங்களின் ஹஜ் கனவை நிறைவேற்ற வேண்டும் என உயர்ந்த இலட்சியத்துடன் அவர்களின் பயணம் தொடங்கிக் கொண்டே இருக்கிறது. 

பெண் மீன் வியாபாரியின் ஹஜ் கனவு :

இந்தாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களில் பலரின் கதைகளை கேட்கும்போது, உண்மையிலேயே ஏக இறைவனின் கருணை மற்றும் அவன் செய்யும் ஆச்சரியம், அதிசயம் ஆகியவற்றை அறிந்து மனம் வியப்பு அடைக்கிறது. அந்த வியப்பான கதைகளில் ஒன்று தான் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் மீன் வியாபாரியின் ஹஜ் கனவாகும். உகாண்டாவைச்  சேர்ந்த 58 வயதான பெண்மணி காசிஃபா நங்கும்பாவிற்கு தம்முடைய வாழ்நாளில் எப்படியாவது ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. அந்த ஆசை மிகப்பெரிய கனவாக மாறியது. அதற்காக அவர் பல தியாகங்களைச் செய்ய முன்வந்தார். ஆம், தியாகங்கள் இல்லாமல், ஹஜ் கடமையை எப்படி நிறைவேற்ற முடியும். தியாகத்தின் முக்கிய அம்சத்துடன் தான் ஹஜ் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். 

இப்படி, புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற  வேண்டும் என்ற கனவும் ஆசையும் கொண்ட காசிஃபா நங்கும்பா, தன்னுடைய மீன் வியாபாரத்தில் நாள் தோறும் கிடைக்கும் வருவாயில் இருந்து, நாள் ஒன்றுக்கு ஒரு டாலரை சேமிக்க ஆரம்பித்தார். வாழ்க்கையை சிக்கனமாக மாற்றி அமைத்துக் கொண்டு, செலவுகளை குறைத்துகொண்டு, ஹஜ் பயணத்திற்காக அவர் சேமிப்பை தொடங்கினார். ஒருசில நாட்களில் 4 அல்லது 5 டாலர் வரை கூட அவர் ஹஜ் பயணத்திற்காக சேமித்தார். இப்படி சேமிக்கும் பணம் நூறு டாலர் அளவுக்கு வந்துவிட்டதும், உகாண்டாவில் உள்ள ஹஜ் கமிட்டியிடம் அந்த பணத்தை  வைப்பு தொகையாக முதலீடு செய்துவிடுவார்.  

பத்து ஆண்டுகள் வரை சேமிப்பு :

தனது ஹஜ் கனவை நிறைவேற்ற காசிஃபா நங்கும்பா தொடர்ந்து பத்து ஆண்டுகள் வரை சேமித்துக் கொண்டே இருந்தார். இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டே சென்றன. காசிஃபா நங்கும்பாவின் கனவும் வளர்ந்துகொண்டும், சேமிப்பு அதிகரித்துக் கொண்டும் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு அதிகாலை நேரத்தில் உகாண்டா ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து காசிஃபா நங்கும்பாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசிய ஹஜ் கமிட்டி மேலாளர் நங்கும்பாவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். ஆம், "ஹஜ் பயணத்திற்காக நீங்கள் சேமித்து வைத்த தொகை போதுமானது. இந்தாண்டு நீங்கள் ஹஜ் பயணம் செய்யலாம்" என்று மேலாளர் கூறியதை கேட்டதும், காசிஃபா நங்கும்பாவிற்கு ஏற்பட்ட இன்ப ஆனந்தத்திற்கு அளவே இல்லை என கூறலாம். அவர் கண்களில் மகிழ்ச்சியின் கண்ணீர் அருவியாக கொட்டியது. ஏக இறைவனுக்கு நன்றி செலுத்திய அவர், தனது கனவு நிறைவேற போகும் தருணத்தை 10 ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டு இருந்ததற்கு, தற்போது வாய்ப்பு கிட்டியதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து கருத்து கூறியுள்ள காசிஃபா நங்கும்பா "ஹஜ் கமிட்டி மேலாளர்  என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்தாண்டு ஹஜ் செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. நீங்கள் சேமித்தத் தொகை போதுமானது. எனவே, நீங்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம். பயணத்திற்கு தயாராக இருங்கள் என்று சொன்னபோது, உண்மையிலேயே எனக்கு இன்ப  அதிர்ச்சி ஏற்பட்டது. இறுதியாக என்னுடைய பிரார்த்தனையும் ஏக இறைவன் ஏற்றுக் கொண்டான் என்பதை உணர்ந்தபோது, உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டது" இப்படி கூறி அவர் பெரும் ஆனந்தம் அடைந்தார். இறுதியாக உகாண்டாவில் இருந்து விமானம் மூலம் ஹஜ் பயணம் செய்ய மக்காவிற்கு புறப்பட்டு சென்றார். 

யாருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்?

ஏழை நாடான உகாண்டாவில் வசிக்கும் ஒரு ஏழை முஸ்லிம் பெண் மீன் வியாபாரியான காசிஃபா நங்கும்பா தனது ஹஜ் கனவை நிறைவேற்ற பல தியாகங்களை செய்து இருக்கிறார். இறுதியில் அவருக்கு ஹஜ் செய்ய அல்லாஹ் தனது வீட்டிற்கு அழைத்துவிட்டான். அவரும் மகிழ்ச்சியுடன் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா சென்று, லட்சக்கணக்கான மக்களில் ஒருவராக தனது கடமையை நிறைவேற்ற உள்ளார். காசிஃபா நங்கும்பாவின் இந்த உண்மை கதையில் இருந்து ஒரு உண்மை மிகமிகத் தெளிவாக தெரியவருகிறது. யாருக்கு எந்த நேரத்தில் எப்படி வாய்ப்பு கிடைக்கும் என்பதை சொல்ல முடியாது. பொறுமை மற்றும் கடமையை சரியான முறையில் செய்துகொண்டே இருந்தால், ஏக இறைவனின் கருணை மூலம் வாழ்க்கையில் புனித ஹஜ் கடமையை அனைவரும் நிறைவேற்றலாம். அதுவும், அல்லாஹ்வின் அழைப்பு இருந்துவிட்டால், பிறகு யாரால் தான் தடுக்க முடியும்?

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Thursday, May 29, 2025

ஐ.நா.வில் பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் கண்ணீர்...!

  "தீப்பிழம்புகளும் பசியும் எங்கள் குழந்தைகளை விழுங்குகின்றன"

- ஐ.நா.வில் பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் கண்ணீர் -

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மக்கள் மீது மீண்டும் இஸ்ரேல் கொடூரமான தாக்குதல்களை தொடங்கி நடத்தி வருகிறது. கொஞ்சமும் மனிதநேயம் இல்லாமல் நடத்தப்பட்டுவரும் இந்த தாக்குதல்கள் காரணமாக நாள்தோறும் குழந்தைகள், பெண்கள், முதியவர்களின் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இஸ்ரேலின் அடாவடிச் செயல்களை சர்வதேச அமைப்புகள் கண்டும் காணாமல் அமைதியாக இருந்து வருகின்றன. 

காசாவை முற்றிலும் அழித்துவிட்டு, அதனை கைப்பற்ற வேண்டும் என இஸ்ரேல் துடித்துக் கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக காசா மக்களுக்கு தேவையான அத்தியாவசிப் பொருட்கள் எதுவும் கிடைக்காமல் இருக்க காசாவின் எல்லைகளை சீல் வைத்து முடியுள்ளது. சர்வதேச கண்டனங்களைத் தொடர்ந்து ஒப்புக்காக சிறிதளவு பொருட்களை காசாவிற்குள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது. இதனால், காசா மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை.  இதுஒருபுறம் இருக்க, நாள்தோறும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.

பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் கண்ணீர் :

இத்தகைய சூழ்நிலையில், கடந்த 27ஆம் தேதி செவ்வாயன்று நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் பங்கேற்று, தற்போது காசாவில் உள்ள நிலைமையை மனம் உடைந்து பேசினார். காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை கண்டித்து, குழந்தைகள் உயிரிழப்புகள் குறித்த துயரமான கணக்குகளையும் புள்ளிவிவரங்களையும் அவர் வேதனையுடன் பட்டியலிட்டு பகிர்ந்து கொண்டார்.

குரல் நடுங்கி பேசிய மன்சூர், அவசர வேண்டுகோளுடன் தனது பேச்சைத் தொடங்கினார். டாக்டர் அல் நஜாரின் குடும்பத்தினரின் மரணத்திற்கு முந்தைய இஸ்ரேலின் தாக்குதலைக் குறிப்பிட்டு பேசிய அவர், "தனது சொந்த குழந்தைகள் மருத்துவமனைக்கு வந்தபோது, ​​உயிர்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஒரு மருத்துவராக தனது உன்னத பணியை செய்த காசா மருத்துவரின் மரண அதிர்ச்சியை விவரித்தார் "அவர்களின் உடல்கள் எரிந்து ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டனர்.  இஸ்ரேலின் தாக்குதலில் டாக்டர் தனது 10 குழந்தைகளில் 9 பேரை இழந்தார். இந்த கொடூரத்தை அறியும்போது மனம் புரிந்து கொள்ள முடியாத ஒரு திகில் மற்றும் அதிர்ச்சி இதயத்தால் தாங்க முடியவில்லை" என்று ரியாத் மன்சூர் கண்ணீருடன் குறிப்பிட்டார். 

நாள்தோறும் கொல்லப்படும் வேதனை :

மார்ச் மாத போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததிலிருந்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் காரணமாக நாள்தோறும் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை மன்சூர் மேற்கோள் காட்டினார். "இதுவரை ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டனர். அத்துடன் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் குழந்தைகள், குழந்தைகள். இஸ்ரேல் குழந்தைகளை கொன்று இன்னும் காட்டுமிராண்டித்தனமான போரை நடத்திக் கொண்டு இருக்கிறது. மனிதநேயத்திற்கு எதிரான போரை நடத்தி குழந்தைகளை கொன்றுக் கொண்டு இருக்கிறது" என்று மன்சூர் மனம் உடைந்த பேசினார்.

பின்னர் அவர் பட்டினியின் பலியைக் குறிப்பிட்டார். “டஜன் கணக்கான குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர். தாய்மார்கள் அசைவற்ற உடல்களைத் தழுவி, தலைமுடியைத் தடவி, அவர்களிடம் பேசி, அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்” என்று கூறி காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் காரணைமாக ஏற்பட்டுள்ள நிலைமையை அவர் விவரித்தார். மேலும் தூதர் மன்சூர் தனது குடும்பத்தினரைக் குறிப்பிட்டு பேசினார்.  “இந்தத் துயரத்தை யாரால் எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்? எனக்குப் பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியும்” என்று கேள்வியை எழுப்பினார். 

உலகின் செயலற்ற தன்மை :

வேதனையிலும் கோபத்திலும் மன்சூர் மேடையைத் தட்டி, உலகின் செயலற்ற தன்மையை “எந்தவொரு சாதாரண மனிதனும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அப்பாற்பட்டது” என்று காட்டமாக தெரிவித்தார்.  “தீப்பிழம்புகளும் பசியும் பாலஸ்தீனக் குழந்தைகளை விழுங்கி வருகின்றன” என்று மன்சூர் கூறினார். இது உலகம் எங்கும் உள்ள பாலஸ்தீனியர்கள், நம்மில் 14 மில்லியன் ஆகியோருக்கு சீற்றத்தின் வேர்" என்று அவர் தெரிவித்தார்.  

“நாங்கள் எங்கள் குழந்தைகளை நேசிக்கிறோம். நாங்கள் எங்கள் மக்களை நேசிக்கிறோம். இந்த துயரத்தையும் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும் அவர்கள் கடந்து செல்வதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை” என்று மிகவும் கண்ணீருடன் பேசி தனது உரையை முடித்த பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர், “நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், பாலஸ்தீனத்தில் வேரூன்றிய ஆலிவ் மரங்களை விட, ரோமானிய மரங்களை விட, பாலஸ்தீனத்தில் நாங்கள் வேரூன்றி இருக்கிறோம். நாங்கள் ஒருபோதும் அங்கிருந்து எங்கும் போக மாட்டோம். நாங்கள் வாடிவிட மாட்டோம். நாங்கள் எங்கள் தாயகத்தில் தங்கியிருக்கிறோம்” என்று உறுதிப்பட திட்டவட்டமாக தெரிவித்தார். 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த மன்சூர், "ஏதாவது செய்யுங்கள். பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இந்தக் குற்றம், இந்த இனப்படுகொலை தொடர்வதைத் தடுக்க உடனடியாக ஏதாவது செய்யுங்கள்" என்றும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


History...!

 The Seven Masjid – Madinah 

Located near the site of the Battle of the Trench (Ghazwat al-Khandaq), the Sab’ah Masajid are a group of small historic mosques. They commemorate the Prophet Muhammad ﷺ and his companions who took part in this pivotal battle in Islamic history.



ஒரு ஹஜ் கதை...!

The plane won't fly without Amir!

Hajj flight turned back twice until Amir was boarded.

A young Libyan man named Amer was traveling for Hajj when he encountered a security issue regarding his name during airport procedures.
Security told him, “We will try to solve it for you, but you have to wait with us a little while.”

Meanwhile, the other pilgrims  completed their procedures, boarded the plane, and the door closed.
Minutes later, Amer’s issue was resolved — but the pilot refused to open the door for him, and the plane took off.

The security officers tried to comfort him, saying,
“Allah is victorious; He does not make things easy for you.”
But Amer, filled with determination, replied,
“I intend to perform Hajj, and In Sha Allah, I will go.”
Suddenly, they received a report: the plane had a malfunction  and was returning!
It landed and was repaired  but the pilot still refused to open the door.
The officer said, “It was not meant for you.”
Again, Amer stood firm:
“I intend to perform Hajj, and In Sha Allah, I will go.”
The plane started moving again…
Then came another report: a second malfunction!
It turned back once more.
At that moment, the pilot realized what was happening.
Finally, he said:
“I will not fly without Amer.”

At last, the plane took Amer to Saudi Arabia 🇸🇦, and his Hajj journey began.



Wednesday, May 28, 2025

ஒரு லிபிய ஹஜ் பயணியின் நம்பமுடியாத கதை....!

 ஏக இறைவன் நாடிவிட்டால்...!

- ஒரு லிபிய ஹஜ் பயணியின் நம்பமுடியாத கதை -

உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களின் இலட்சியக் கனவாக இருப்பது, தங்கள் வாழ்க்கையில் எப்படியாவது ஒருநாள், புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்பதாகும். ஹஜ் கடமையை தற்போது மிகவும் எளிமையான முறையில் நிறைவேற்றிட வாய்ப்புகள், வசதிகள் அதிகமாக இருந்தாலும், ஏக இறைவனின் பல்வேறு சோதனைகளை தாண்டி தான் ஹஜ் கடமையை நிறைவேற்றக் கூடிய நிலைகள் இருந்து வருகின்றன.  இந்தாண்டு 2025 உலகம் முழுவதும் இருந்து சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா புறப்பட்டு சென்று இருக்கிறார்கள். சவுதி அரேபியாவில் தற்போது கடுமையான வெப்ப காலம். கடும் வெப்பம் என்பது அசாதாரணமான மற்றும் நீண்ட கால வெப்ப நிலையாகும்.  இது பெரும்பாலும் தொடர்ச்சியான நாட்களுக்கு மேல் நீடிக்கும். இது வெப்ப அலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வெப்ப நிலை, ஒரு குறிப்பிட்ட பகுதியில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பநிலையை கொண்டிருக்கும். இத்தகைய ஒருநிலை வெப்பம் தான் தற்போது மக்கா, மதினா நகரங்களில் இருந்து வருகிறது. 

வெப்ப அலை இருந்தாலும், அதைப்பற்றி சிறிதும் கவலைக் கொள்ளாமல் ஹாஜிகள், தங்களுடைய கடமையை நிறைவேற்ற, ஏக இறைவனின் அருளைப் பெற மக்காவில் குவிந்து இருக்கிறார்கள். வரும் ஜுன்  4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளின் ஹாஜிகளுக்கு மிகவும் முக்கியமான நாட்களாகும். ஹஜ் கடமையை நிறைவேற்ற செய்ய வேண்டிய கடமைகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய நாட்களாகும். கடும் வெயில் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் இருந்தாலும், சவுதி அரேபிய அரசு  ஹஜ் பயணிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் தங்கள் கடமையை நிறைவேற்ற ஏற்பாடுகளை செய்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான், ஒரு லிபிய ஹஜ் பயணியின் நம்பமுடியாத கதை ஒன்று தற்போது உலகத்தின் பார்வைக்கு வந்துள்ளது. சோதனைகளுக்கு மத்தியில் அந்த லிபிய பயணி ஹஜ் கடமையை நிறைவேற்ற எப்படி மக்காவிற்கு சென்றார் என்பதை நாம் அறியும்போது, உண்மையில் ஏக இறைவனின் கருணையை நினைத்து மனம் வியப்பு அடைக்கிறது. 

நம்பமுடியாத விமான நிலைய சோதனை :

லிபியாவைச் சேர்ந்தவர் இளைஞர் அமீர் அல்-மஹ்தி மன்சூர் அல்-கடாபி. இந்த இளைஞருக்கு எப்படியும் இந்தாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அந்த விருப்பத்தின் பேரில், ஹஜ் கடமையை நிறைவேற்ற அவர் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஹஜ் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தனது நாட்டில் இருந்து அவர் புறப்பட்டார். அவரது பயணம் எதிர்பார்ப்பு மற்றும் ஆன்மீக நோக்கத்தால் நிறைந்த லிபிய விமான நிலையத்தில் இருந்து தொடங்கியது. இருப்பினும், அமீர் அல்-மஹ்தி மன்சூர் அல்-கடாபி விரைவில் எதிர்பாராத ஒரு சோதனையை எதிர்கொண்டார். அவரது குடும்பப்பெயர்  "கடாபி" என்று இருந்ததால், குடியேற்ற அதிகாரிகளிடையே குழப்பங்களை ஏற்படுத்தியது. அவர்கள் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக அவரது விமானப் பயணத்தைத் தடுத்து நிறுத்தினர்.

அமீரின் தோழர்கள் அனைவரும் விமானத்தில் ஏறும்போது, அவர் மட்டும் பின்தங்கினார். விமான நிலைய அதிகாரிகள் அவரது ஆவணங்களை மதிப்பாய்வு செய்தபோது பாதுகாப்பு காரணங்களுக்காக கவுண்டரில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டார். விமானம் புறப்பட வேண்டிய நேரம் கடந்துவிட்டது. இறுதியில், விமானத்தின் கதவுகள் அவரது கண்களுக்கு முன்பே மூடப்பட்டன. அவரது குழுவின் மற்ற தோழர்கள் புறப்பட்டிருந்தாலும், அமீரின் நம்பிக்கை அசைக்கப்படாமல் இருந்தது. அமைதியான உறுதியுடன், "இறைவன் நாடினால், நான் ஹஜ்ஜுக்கு புறப்படும் வரை இந்த விமான நிலையத்தை விட்டு வெளியேற மாட்டேன்" என்று அவர் அறிவித்தார். விமான நிலையத்திலேயே காத்திருந்தார். 

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு :

அதைத் தொடர்ந்து பின்னர் நடந்ததை அசாதாரணமானது என்று மட்டுமே விவரிக்க முடியும். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், ஆய்வுக்காக மீண்டும் விமான நிலையத்திற்குத் திரும்ப வேண்டியிருந்தது என்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. விமான நிலையத்திற்கு மீண்டும் விமானம் திரும்பிய நிலையில்,  இந்த நேரத்தில், அமீர் அல்-மஹ்தி மன்சூர் அல்-கடாபி  என்ற ஒரு ஹஜ் யாத்ரீகர் விமானத்தில் ஏற அனுமதிக்காமல் பின்னால் விடப்பட்டதாகவும், அவரை இப்போது ஏற அனுமதிக்க முடியுமா என்று விமானியிடம், விமான நிலைய அதிகாரிகளின் குழுவினர் கேட்டனர்.  ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, விமானி மறுத்துவிட்டார்.

நம்பிக்கையை இழக்கவில்லை :


ஆனாலும், அமீர் அல்-மஹ்தி மன்சூர் அல்-கடாபி நம்பிக்கையை இழக்கவில்லை. மக்காவை அடைவேன் என்ற நம்பிக்கையில் அவர் தொடர்ந்து விமான நிலையத்திலேயே காத்திருந்தார். இதன் பின்னர், ஒரு குறிப்பிடத்தக்க திருப்பத்தில், விமானம் மற்றொரு சிக்கலை எதிர்கொண்டது.  இதனால் விமானம் மீண்டும் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விமானத்திற்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. விமானத்தை முழுமையாக ஆய்வு செய்தபிறகு, விமானி ஒரு அதிர்ச்சியூட்டும் இன்ப அறிவிப்பை வெளியிட்டார். "அமீர் கடாபி விமானத்தில் ஏறாவிட்டால் இந்த விமானம் மீண்டும் பறக்காது" என்பது தான் அந்த அதிர்ச்சியூட்டும் மகிழ்ச்சியான இன்ப அதிர்ச்சி அறிவிப்பாகும். 

இதன் பின்னர், விரைவில், விமான நிலைய அதிகாரிகள் அமீரின் அனுமதி தொடர்பான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்யும் பணிகளை விரைவுபடுத்தினர். இறுதியாக அமீர் அல்-மஹ்தி மன்சூர் அல்-கடாபி விமானத்தில் ஏறினார். அதன் மூன்றாவது முயற்சியில், விமானம் வெற்றிகரமாக புறப்பட்டது . அமீர் கடாபியும் ஹஜ் யாத்ரீகர்களில் ஒருவராக அந்த விமானத்தில் பறந்துகொண்டு இருந்தார்.

ஏக இறைவனின் விருப்பம் :

அமீர் அல்-மஹ்தி மன்சூர் அல்-கடாபியின் ஹஜ் பயணம் ஒரு உத்வேகத்தின் ஆதாரமாக மாறியுள்ளது.  நம்பிக்கை, பொறுமை மற்றும் ஏக இறைவனின் விருப்பத்தின் சக்தியை மக்களுக்கு நினைவூட்டியுள்ளது. அமீரின் கதை தற்போது முஸ்லிம் உலகம் முழுவதும் உள்ள இதயங்களைத் தொட்டுள்ளது.  அதைக் கேட்ட பலருக்கு ஆன்மீக பிரதிபலிப்பை மீண்டும் தூண்டியுள்ளது.

இரண்டு முறை விமானம் திரும்பிய பிறகும் கூட  அமீர் கடாபி ஹஜ்ஜை செய்ய மக்கா அடைகிறார் என்றால், அது ஏக இறைவனின் விருப்பம் இல்லாமல் நடைபெறாது. ஏக இறைவன் நாடிவிட்டால், பிறகு யார் தான் தடுக்க முடியும். அந்த வகையில் லிபிய ஹஜ் பயணி அமீர் அல்-மஹ்தி மன்சூர் அல்-கடாபியின் இந்த ஹஜ் பயணக் கதையில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஏக இறைவனின் கருணை எத்தகையது என்பதை உலக இஸ்லாமியர்கள் வியப்புடன் அறிந்துகொள்ளும் வகையில் அமீர் கடாபியின் கதை உள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Question...!

 Congress Question...!

To legitimise your image, you will bring Col Sophia Qureshi, they will make her family shower flowers on you. But you will not take action against your minister for insulting Col Sophia Qureshi. You will not take action against your MLC for insulting IAS officer Fouzia Tarannum.



Monday, May 26, 2025

அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு சேவை செய்ய விரிவான ஏற்பாடுகள் தயார்....!

புனித ஹஜ் கடமை செய்யும் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு  சேவை செய்ய விரிவான ஏற்பாடுகள் அனைத்தும் தயார்....!

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சவுதி அரேபிய அரசு அறிவிப்பு....!!

ஜெத்தா, மே27- இந்தாண்டு புனித ஹஜ் பயணம் செய்ய சவுதி அரேபியாவிற்கு வந்துள்ள அனைத்து அல்லாஹ்வின் விருந்தினர்களான ஹாஜிகளுக்கு சேவை செய்வதை சவுதி அரேபியாவின் முதல் குடிமகன் முதல் அனைத்து மக்களும் பெருமையுடன் கருதுவதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஜெத்தாவில் நேற்று (26.05.2025) அன்று நடைபெற்றது. அப்போது அல்லாஹ்வின் விருந்தினர்களுக்காக அரசு செய்துள்ள ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

தலைமுறை தலைமுறையாக பெருமை :

புனித ஹஜ் கடமை செய்யும் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு சேவை செய்வது என்பது, நாட்டின் தலைமை முதல் அனைத்து குடிமக்கள் வரை தலைமுறை தலைமுறையாக பெருமையுடன் போட்டியிடும் ஒரு மரியாதையாகும்.  சவுதி விஷன் 2030 அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு சேவை செய்வதை முன்னுரிமைப்படுத்தும் நோக்கங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஹஜ் மூலம், வெகுஜன அமைப்பு மற்றும் கண்ணியமான சேவையில் உலகளவில் புகழ்பெற்ற அனுபவத்தை வழங்குவதற்கான அதன் திறனை ராஜ்யம் உலகிற்கு நிரூபிக்கிறது.

நாட்டின் தலைமையின் தொலைநோக்கு பார்வை ஹஜ் யாத்ரீகர்களுக்கு சேவை செய்வதை ஒரு கௌரவமாகவும், அவர்களின் சடங்குகளை எளிதாக்குவதை ஒரு இலக்காகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை ஒரு முன்னுரிமையாகவும் ஆக்கியுள்ளது. சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட ஹஜ் குழு, அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு மிக உயர்ந்த தரமான சேவைகளை உறுதி செய்வதில் துல்லியமாக செயல்படுகிறது. 'நோ பர்மிட், நோ ஹஜ்' என்ற பிரச்சாரம் புனித தலங்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கிறது. அத்துடன் அனைத்து யாத்ரீகர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது :

ஹஜ் காலத்தில் ஒரு வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்க சவுதி அரேபியா அதன் அனைத்து தொழில்நுட்ப திறன்களையும் பயன்படுத்துகிறது. கூட்ட நெரிசலை நிர்வகிக்கவும், யாத்ரீகர்களின் சீரான இயக்கத்தை எளிதாக்கவும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) நிலவரப்படி, சர்வதேச  நாடுகளில் இருந்து வந்த மொத்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மக்கா பாதை வழியாக வரும் மொத்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 25ஆம் தேதி வரை 2 லட்சத்து 50 ஆயிரத்தை எட்டியுள்ளது.

ஹஜ் காலத்தில் ஆண் மற்றும் பெண் என 25 ஆயிரம் தன்னார்வலர்களை இலக்காகக் கொண்டுள்ளோம். தினமும் 12 லட்சம் கன மீட்டருக்கு மேல் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. வர்த்தக அமைச்சகம் மக்கா மற்றும் மதீனா முழுவதும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனை ஆய்வுகள் அமைக்கப்பட்டு, சுற்றுப்பயணங்களுடன் அதன் ஆய்வுகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஹஜ் காலத்தை முன்னிட்டு நகராட்சி விவகார அமைச்சகம் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித வளங்களை உருவாக்கியுள்ளது.  யாத்ரீகர்கள் தங்கள் சடங்குகளை எளிதாகவும் வசதியாகவும் செய்வதை உறுதி செய்வதற்கு சவுதி அரேபிய அரசு, அதன் தலைமை மற்றும் மக்கள் இருவரும் ஹஜ்ஜுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். ஊடக பிரச்சாரங்கள் பரந்த நிறுவன முயற்சிகளில் ஒரு பகுதி மட்டுமே ஆகும். 

மீறல்கள் பொறுத்தக்கொள்ள முடியாது :

யாத்ரீகர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும் திறனைப் பாதிக்கக்கூடிய எந்த மீறல்களையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். தவறான தகவல்களை எதிர்க்க 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் ஊடக பிரச்சாரங்கள் உள்ளன. இதுவரை 17  லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் சவுதி அரேபியா வந்துள்ளனர்.  இதில் 94 சதவீதம் பேர் விமானம் வழியாக வந்துள்ளனர். ஒருங்கிணைந்த சேவை அமைப்பின் ஆதரவுடன் அவர்கள் சடங்குகளை எளிதாகவும் மன அமைதியுடனும் செய்ய உதவுகிறது.

1446 ஹிஜ்ரி காலத்திற்கான ஒருங்கிணைந்த ஹஜ் ஊடக செயல்பாட்டு மையம் அனைத்து நிறுவனங்களிலும் ஊடக முயற்சிகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைக்கத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஹஜ் ஊடக மன்றம் ராஜ்ஜியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து 5 ஆயிரத்திறகும் மேற்பட்ட பார்வையாளர்களை வரவேற்கிறது.

உலகிற்கு ஹஜ் செய்தியை தெரிவிக்க நடவடிக்கை :

இஸ்லாம் மற்றும் அமைதியின் மதிப்புகளைப் பிரதிபலிக்கும் ஹஜ் செய்தியை உலகிற்கு தெரிவிக்க 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை தகவல் அமைச்சகம் வரவேற்கிறது. இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கான தயாரிப்பில் கிராண்ட் மஸ்ஜித்தியில் பருவகால தயார்நிலை மற்றும் திறனை நாங்கள் அதிகரித்துள்ளோம். மேலும் "என்னை கேளுங்கள்" வழிகாட்டுதல் சேவை உருவாக்கப்பட்டு இப்போது 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கிடைக்கிறது.

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக 400க்கும் மேற்பட்ட மின்சார வண்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஹஜ் முடிந்த உடனேயே, சேவைகளை மேம்படுத்தவும், பாதுகாப்பான மற்றும் சுமூகமான புனித யாத்திரையை உறுதி செய்யவும் ஹஜ் 1446 ஹிஜ்ரிக்கான ஏற்பாடுகள் தொடங்கின. அதன்படி இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கான கள ஏற்பாடுகள் முன்கூட்டியே தொடங்கின.

துல் க’தா மாதத்தில் மிக உயர்ந்த தரம் மற்றும் சேவை தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக 37 ஆயிரத்திற்கும்மேற்பட்ட ஆய்வு சுற்றுப்பயணங்கள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக 3 ஆயிரத்து 400 விவரங்கள் கிடைத்தன. இவை அனைத்தும் உடனடியாக தீர்க்கப்பட்டன. போலி ஹஜ் பிரச்சாரங்களை எதிர்த்துப் போராடுவதில் பல நாடுகளின் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம்.

சிறப்பான ஏற்பாடுகள் தயார் : 

பயணத்திற்கு முந்தைய பயிற்சியை வழங்குவதற்காக நாடுகளில் உள்ள யாத்ரீக விவகார அலுவலகங்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுகிறோம். மேலும் புனித தலங்களில் தொலைந்து போன யாத்ரீகர்களுக்கு சுமார் 120 வழிகாட்டுதல் நிலையங்களை நாங்கள் நியமித்துள்ளோம். ஹஜ் திட்ட அலுவலகம் விஷன் 2030 நிர்வாகத் திட்டங்களில் ஒன்றான அல்லாஹ்வின் விருந்தினர்கள் சேவைத் திட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிபுணர்கள் யாத்ரீகர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க அணிதிரட்டப்பட்டுள்ளனர். இந்த ஹஜ் பருவத்தில் சாலைகளின் தரத்தை மேம்படுத்தவும் வெப்ப அழுத்தத்தைக் குறைக்கவும் ரப்பர்மயமாக்கப்பட்ட சாலைகளின் பயன்பாடு 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஹஜ்ஜில் டிஜிட்டல் மாற்றம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. இது யாத்ரீகர்களுக்கு சடங்குகளை எளிதாக்குகிறது. 14 லட்சத்திற்கும் அதிகமான "நுசுக்" (செல்பேசி) அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. அவை யாத்ரீகர்களின் அத்தியாவசிய தகவல்களைக் கொண்டுள்ளன மற்றும் அவர்களின் இயக்கத்திற்கு உதவுகின்றன. இந்த ஆண்டு ஹஜ்ஜுக்காக குறிப்பாக நுசுக் பயன்பாட்டில் 30 க்கும் மேற்பட்ட புதிய சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்து போக்குவரத்துத் திட்டங்களிலும் ஒருங்கிணைப்பு  மற்றும் கண்காணிப்பை உறுதி செய்வதற்காக "பொது போக்குவரத்து மையம்" இந்த ஹஜ் பருவத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் மற்றும் போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகளைக் கொண்ட மையத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிட ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஹரமைன் ரயிலில் 20 லட்சத்துக்கும் அதிகமான இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 4 லட்சம் இருக்கைகள் அதிகமாகும்.  மஷைர் ரயில் ஹஜ்ஜின் போது முக்கிய போக்குவரத்து முறைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ரயிலும் சுமார் 3 ஆயிரம் யாத்ரீகர்களை ஏற்றிச் செல்லும், 72 ஆயிரம் பயணிகள் வரை பயணிக்கும் திறன் கொண்டது. புனித மஸ்ஜித்துக்கு யாத்ரீகர்களின் வருகை சீராகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் நடைபெறுகிறது.  திட்டமிடப்பட்ட விமான நேரங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். யாத்ரீகர்களின் இயக்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இராச்சியத்தின் நில எல்லைக் கடக்கும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள், கணக்கெடுப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு சவுதி அரேபியா அரசு விளக்கம் அளித்துள்ளது.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Sunday, May 25, 2025

"ஆடு மேய்க்கும் காஷ்மீரி பெண் ஷப்னம் சாதிக்கின் ஐ.ஏ.எஸ் கனவு"

"ஆடு மேய்க்கும் காஷ்மீரி குடும்பத்தின் இளம் பெண் ஷப்னம் சாதிக்கின் ஐ.ஏ.எஸ் கனவு"

உலகின் ஒரு அழகான, அற்புதமான  பூமியாக நமது இந்திய நாட்டின் ஜம்மு-காஷ்மீர் இருந்து வருகிறது. காஷ்மீரின் அழகில் மயங்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அத்தகைய அழகான பூமியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? எத்தகைய சூழ்நிலையில் அவர்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள்? என்ற பல கேள்விகள் நம்முன் எழுந்துகொண்டே இருக்கின்றன. வெளி உலகத்தில் நாம் வளமான ஒருசில காஷ்மீர் மக்களை மட்டுமே பார்த்துவிட்டு, காஷ்மீரிகள் அனைவரும் வசதியானவர்கள் என்ற கற்பனையில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் உண்மையான காஷ்மீரிகள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களின் ஆசைகள், இலட்சியங்கள் என்ன? ஏழ்மையில் கூட, வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் காஷ்மீரிகளுக்கு இருப்பதை அறிவும்போது உண்மையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

இப்படி வாழ்க்கையில் சாதிக்க புறப்பட்ட ஒரு இளம் பெண்ணின் கதை தான்இந்த கட்டுரையாகும். ஆம், "ஆடு மேய்க்கும் காஷ்மீரி குடும்பத்தின் இளம் பெண் ஷப்னம் சாதிக், தாம் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வர வேண்டும்" என்று நாள்தோறும் கனவு கண்டு வருகிறார். அதற்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார். வாருங்கள், ஷப்னம் சாதிக் எப்படி வாழ்ந்து வருகிறார்? அவரின் குடும்பம் எப்படி உள்ளது? தாம் காணும் கனவிற்காக ஷப்னம் சாதிக் எப்படி தன்னை தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்? என்பன போன்ற பல கேள்விக்கான பதில்களை அறிந்துகொள்வோம். 

மலை கிராமத்தில் கூடாரத்தில் வாழ்க்கை :

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியான பன்னர் கிராமத்தில் இருக்கும் ஒரு கூடாரத்தில் தான் ஷப்னம் சாதிக் வாழ்ந்து வருகிறார். அவரது குடும்பத்தினர் ஆடு மேய்க்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை முஹம்மது சாதிக், ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். மிகப்பெரிய அளவுக்கு வருமானம் இல்லை. இருந்தும் மலைப்பகுதியில் ஒரு கூடாரத்தில் வசிக்கும் ஷப்னம் ஐ.ஏ.எஸ். கனவு காண்கிறார். இதற்கு குடும்பத்தினர் ஆதரவாக நிற்கிறார்கள்.

அண்மையில் நடந்துமுடிந்த 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிப் பெற்ற இளம் பெண் ஷப்னம் சாதிக், தன்னுடைய வாழ்க்கை குறித்த ஒரு தீர்க்கமான முடிவு எடுத்துவிட்டார். ஆம், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக மாற வேண்டும் என்பது தான் அந்த தீர்க்கமான முடிவாகும். 12ஆம் வகுப்பில் 92 புள்ளி 60 சதவீதம் (சுமார் 93 சதவீதம்) மதிப்பெண்களைப் பெற்று ஷப்னம் பள்ளியில் முதல் மாணவியாக வந்து சாதித்துள்ளார்.  தன்னுடைய இலட்சியம் குறித்து இனி ஷப்னம் சாதிக் கூறுவதைக் கேட்போம். 

ஐ.ஏ.எஸ். கனவுக்காக உழைப்பு :

"12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக  நான் கடுமையாக உழைத்தேன். என்னுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருந்ததால், இந்தளவுக்கு நல்ல மதிப்பெண்களை என்னால் பெற முடிந்தது. மலைப்பகுதி கிராமத்தில் நாங்கள் ஒரு சிறிய கூடாரத்தில் வசித்து வருகிறோம். மின்சார வசதி இல்லை. பள்ளிக்கு நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. சாலை இணைப்பு வசதிகள் எதுவும் இல்லை. இதனால் பல்வேறு சிரமங்களை நாங்கள் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், நான் அனைத்தையும் எதிர்கொண்டேன். கவலைப்படாமல், படிப்பில் கவனம் செலுத்தினேன். கடுமையாக உழைத்தேன். அதற்காக ஏக இறைவன் எனக்கு நல்ல பலன் கொடுத்து இருக்கிறான்" என்று கூறி தன்னுடைய உழைப்பு குறித்து ஷப்னம் மகிழ்ச்சி அடைகிறார். 

மேலும் தொடர்ந்து பேசும் அவர், "என்னுடைய மேல்படிப்புக்காக ஒரு முடிவு செய்து இருக்கிறேன். பட்டப்படிப்பு முடித்தபிறகு, யு.பி.எஸ்.சி. தேர்வில் கலந்துகொள்வேன். காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் வரலாறு, அரசியல் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம் என இருக்கிறேன். என்னுடைய மாமா ஒரு ஆசிரியர். அவர் எனக்கு பல்வேறு நல்ல ஆலோசனைகளை கூறி வழிநடத்தினார்.  நான் ஐ.ஏ.எஸ். கனவு காண்பதற்கு, பலர் எனக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார்கள். குறிப்பாக, காஷ்மீரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று சாதனை புரிந்து காஷ்மீர் பெண்கள், ஆகியோர் எனக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார்கள். எங்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்த முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகியோரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவர்கள் அனைவரும் எனக்கு முன்மாதிரியாக  இருந்து வருகிறார்கள்" இப்படி கூறும் ஷப்னம், கனவுகள் நிறைவேற ஏழ்மை ஒரு தடையாக இருக்காது என்றும் உறுதிப்பட தெரிவிக்கிறார். 

"எந்தவொரு இலட்சியத்தையும், இலக்கையும் அடைய கனவு காண்பதில் தவறு இல்லை. இந்த கனவுகளுக்கு ஏழ்மை உள்ளிட்ட அம்சங்கள் ஒருபோதும் தடையாக இருக்காது. அந்த இலட்சியத்திற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அதில் முழு கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் இலட்சியத்தில் நம்மால் வெற்றி பெற முடியும் என்பதை நான் நன்கு உணர்ந்து இருக்கிறேன். தெளிவாக அறிந்து இருக்கிறேன். அதன் காரணமாக கடின உழைப்பை மட்டுமே நான் நம்புகிறேன்" என்று தனது உழைப்பின் மீது ஷப்னம் முழு நம்பிக்கை வைத்துள்ளார். 

ஏழ்மையிலும் வளமான எண்ணங்கள் :

மலைக் கிராமத்தில் மிகவும் சிறிய கூடாரத்தில் எந்தவித வசதியும் இல்லாமல் வாழ்ந்து வந்தாலும், ஷப்னமின் பெற்றோர்கள், வளமான உள்ளம் கொண்டவர்களாக இருந்து வருகிறார்கள். காஷ்மீரின் கலாச்சாரம் மற்றும் பராம்பரியம் ஆகியவற்றின் வழக்கப்படி அவர்கள் விருந்தாளிகள் வரவேற்கிறார்கள்.  நன்கு உபசாரிக்கிறார்கள். ஷப்னமின் தாய் கராமத் ஜாஹான், கல்வியறிவு இல்லாதவராக இருந்து வருகிறார். ஏழ்மை மற்றும் காஷ்மீரிகளின் வழக்கப்படி, பள்ளியில் சேர்ந்து அவர் படிக்கவில்லை. இளம் வயதிலேயே அவருக்கு, அவரது பெற்றோர் திருணம் செய்து வைத்துவிட்டார்கள். 

இந்த நிலையில், தன்னுடைய மகள் ஷப்னம், படிப்பில் சிறந்து விளங்குவது தங்களுக்கு மிகப்பெருமையாக இருக்கிறது என்று அவரது தாயார் கராமத் ஜாஹான் கூறி பெருமை அடைகிறார். அது இறைவனின் கருணை என்றும் அவர் கூறி மகிழ்ச்சி அடைகிறார். "காஷ்மீரில் இளம் வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். ஆனால், ஷப்னம் படிப்பில் ஆர்வத்துடன் இருப்பதால், அவளின் விருப்பத்தின்படி பட்டப்படிப்பு படிக்க வைக்க நாங்கள் விரும்புறோம்.  படிப்பில் மிகப்பெரிய அளவுக்கு ஷப்னத்திற்கு ஆர்வம் இருந்து வருகிறது. அதற்காக மிகவும் கடினமாக அவர் உழைக்கிறார். இரவு 12 மணி வரை கண் விழித்து படிப்பாள். டிரால் பள்ளியில் படித்து வந்தார். 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு ஷப்னம் கால்நடையாகவே சென்று விடுவார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக மாற வேண்டும் என்ற ஆர்வம் ஷப்னத்திற்கு அதிகமாக இருந்து வருகிறது. இனி ஏக இறைவனின் கருணையும் விருப்பமும் இருக்க வேண்டும்" என்று கராமத் ஜாஹான் கூறுவதைக் கேட்கும்போது பெண் கல்விக்கு எந்தளவுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஷப்னத்தின் பெற்றோர்கள் கல்வி பெறாத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருந்தும் தங்களுடைய மகளின் விருப்பதை நிறைவேற்ற அவர்கள் துடிக்கிறார்கள். 

குடும்பத்தினருக்கு பெருமை :

93 வயதான ஷப்னத்தின் பாட்டனார், குலாம் நபி போக்ரா,  தன்னுடைய பேத்தியைப் பற்றி  குறிப்பிடும்போது, "ஷப்னம் கடுமையான உழைப்பாளி. படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவள். இரவு ஒரு மணி வரை கண் விழித்து படிப்பதை நான் பார்த்து இருக்கிறேன். எப்போதும் படிப்பு படிப்பு தான். ஓய்வு என்பதே ஷப்னத்திற்கு கிடையாது. அவள் ஆசிரியர் பணிக்கு செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம். அதில் ஒரு மரியாதை இருக்கும். மற்றவர்களுக்கு கல்வி கற்று தருவதில் ஆனந்தம் கிடைக்கும். இந்த பகுதியில் இந்தளவுக்கு படித்த முதல் பெண் எங்கள் ஷப்னம் தான். மற்றவர்கள் இப்படி கல்வியில் ஆர்வம் செலுத்தவில்லை" என்று கூறி பெருமை அடைகிறார். ஷப்னமின் தந்தை முகமது சாதிக், மிகப்பெரிய அளவுக்கு கல்வி கற்கவில்லை. எனவே தன்னுடைய குழந்தைகள் நல்ல கல்வி பெற வேண்டும் என விரும்புகிறார். குறிப்பாக ஷப்னம் கல்வியில் மிகவும் ஆர்வத்துடன் இருந்து வருவது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

"ஒரு குழந்தை கல்வியில் ஆர்வத்துடன் இருக்கும்போது, பெற்றோர்கள் முடிந்த அளவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். கல்வியை சொல்லித் தர முன்வர வேண்டும். நாங்கள் ஆடு மேய்க்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு நிரந்தரமான பணி எதுவும் கிடைப்பது இல்லை. இருந்தும் பிள்ளைகள் கல்வி கற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியூரில் கிடைத்த வேலையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, குழந்தைகள் ஊக்குவிக்க அவர்களுடன் நான் இங்கேயே இருந்து வருகிறேன். அவ்வப்போது பாம்புராவிற்குச் சென்று கூலித் தொழில் செய்கிறேன்.   எனக்கு மூன்று ஆண் குழந்தைகள். ஒரே பெண் குழந்தை. அவள் எப்போதும் படிப்பு என்றே இருப்பாள். அதிகாலை நேரத்தில் கூட எழுந்துவிட்டு படிப்பாள். கடுமையான உழைப்பின் காரணமாக 12ஆம் வகுப்பு தேர்வில் அவள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளாள்.  தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் முக்கியம். படிப்பு இல்லையென்றால் எதையும் நாம் சாதிக்க முடியாது. எனவே இளம் வயதில் ஷப்னத்திற்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஷப்னம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வர வேண்டும் என கனவு காண்கிறாள். அந்த கனவு நிறைவேற நாங்கள் துணையா இருப்போம்" என்று ஷப்னம் காணு ம் கனவுக்கு அவரது தந்தையும் துணை நிற்கிறார். 

ஏழ்மையான சூழ்நிலை. மலைப்பகுதியில் ஒரு ஓரத்தில் வசதியில்லாத கூடாரத்தில் வாழ்க்கை. பெற்றோர்கள் மிகப்பெரிய படிப்பாளிகள் இல்லை. வாழ்க்கையில் எந்தவித வசதியும், வாய்ப்புகளும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட, ஷப்னம் சாதிக், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வர வேண்டும் என்று கனவு காண்பது உண்மையில் காஷ்மீரிகள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும். ஷப்னம் சாதிகின் இலட்சியக் கனவு நிறைவேற வேண்டும். அதன்மூலம் காஷ்மீரிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உருவாக வேண்டும். காஷ்மிரி பெண்கள், படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் சாதிக்க முன்வர வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்....!

"அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், மதரஸத்-உல்-உலூமின் 150வது நிறுவன தினம் கொண்டாட்டம்"

உலகில் உள்ள மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் வரிசையில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழம் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் உள்ள இந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில், மே மாதம் 24ஆம் தேதி 2025 அன்று, அங்குள்ள சர் சையத் அகாடமியில், மதரஸத்-உல்-உலூமின் 150வது நிறுவன தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  கடந்த 1875 ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி, தொலைநோக்கு பார்வை கொண்ட சீர்திருத்தவாதி சர் சையத் அகமது கானால் நிறுவப்பட்ட முன்னோடி நிறுவனமான மதரஸத்-உல்-உலூம், பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முகமது ஆங்கிலோ-ஓரியண்டல் (MAO) கல்லூரியாகவும், இறுதியில் 1920 இல் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமாகவும் (AMU) உருவானது.  இத்தகைய பெருமைக்குரிய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், மதரஸத்-உல்-உலூமின் 150வது நிறுவன தினத்துடன் ஒரு வரலாற்று மைல்கல்லைக் கொண்டாடி பெருமை அடைந்துள்ளது. 

முதன்மையான நோக்கம் :

முஸ்லிம்களிடையே நவீன கல்வியை மேம்படுத்துதல் மற்றும் இஸ்லாமிய விழுமியங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு இந்த கல்வி நிறுவனத்தை சர் சையத் அகமது கான், 1875ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி நிறுவினார். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை அந்தஸ்து பெற்ற ஒரு மத்திய பல்கலைக்கழகம். இதன் சிறுபான்மை அந்தஸ்தைப் பறிக்க பல்வேறு சதித் திட்டங்கள் நடைபெற்றன. வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை அந்தஸ்து பெற்ற ஒரு பல்கலைக்கழகம் என  தீர்ப்பு வழங்கியது. 

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். என்.ஐ.ஆர்.எஃப். (NIRF) -  2024 தரவரிசையில் இந்த பல்கலைக்கழகம் 8வது இடத்தைப் பிடித்துள்ளது. உலக புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில், பல இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகள் மற்றும் மருத்துவப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பல வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் உள்ளன. குறிப்பாக சையது ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரி மற்றும் சில கல்லூரிகளின் கட்டடங்கள் இஸ்லாமிய கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் மரபு படி கட்டப்பட்டு அழகுடன் காட்சி அளிக்கின்றன.  மேலும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பல மாணவர் சங்கங்கள் உள்ளன. அவை சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் கல்வி சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. 

150வது நிறுவன தினம் :

அலிகர் பல்கலைக்கழகத்தின் சர் சையத் அகாடமியில் மே 24ஆம் தேதி நடைபெற்ற 150வது நிறுவன தின விழாவில், வளமான அஞ்சலிகள், சிந்தனை உரைகள் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான பல்கலைக்கழகத்தின் நிறுவனக் கண்ணோட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்துதல் ஆகியவை இடம்பெற்றன. அலிகர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரலுமான (டிஜிசிஏ),  ஃபைஸ் அஹ்மத் கித்வாய், ஐஏஎஸ், விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், கடந்த 1875 ஆம் ஆண்டில் மதரஸத்-உல்-உலூம் பின்னர் முகமது ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியாகவும் பின்னர் இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும் மாறியதை அழகாக விவரித்தார். “அடித்தளத்தை அமைத்த எளிமையான மதரஸாவை முதலில் அங்கீகரிக்காமல் இந்த நிறுவனத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை நாம் முழுமையாகப் பாராட்ட முடியாது. அந்த ஆரம்ப படிகள் இல்லாமல், முதல் துணிச்சலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாமல், முகமது ஆங்கிலோ-ஓரியண்டல்  கல்லூரி  பின்னர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகியவை ஒருபோதும் தோன்றியிருக்காது. இது ஒரு பயணத்தின் முடிவல்ல. ஆனால் இன்னும் பலவற்றின் தொடக்கமாகும்” என்று ஃபைஸ் அஹ்மத் கித்வாய் குறிப்பட்டார். 

முகமது ஆங்கிலோ-ஓரியண்டல்  கல்லூரியின் கட்டடக்கலைத் திறமை மற்றும் கல்விச் சிறப்பை எடுத்துரைத்த கித்வாய், அதன் உள்ளடக்கிய அறிவுசார் கலாச்சாரம் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜிலிருந்து புகழ்பெற்ற பேராசிரியர்களை ஈர்த்தது என்றும், வளமான கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை வளர்த்தது என்றும் குறிப்பிட்டார்.

சர் சையத் அகமது கானின் நோக்கம் :

"கல்வி அதன் மையமாக இருந்தாலும், நிறுவனர் சர் சையத் அகமது கானின் நோக்கம் கல்விக்கு அப்பாற்பட்டது என்று அவர் தெரிவித்தார். 1857 ஆண்டில் ஏற்பட்ட கிளர்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக, அரசியல் மாற்றங்களுக்கான பிரதிபலிப்பாக சர் சையத் அகமது கானின் முயற்சிகளை அவர் சுட்டிக் காட்டினார். இதில் நிர்வாக மொழியாக பாரசீக மொழி இழப்பு, பாரம்பரிய கற்றல் வீழ்ச்சி மற்றும் பொது வாழ்வில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைந்தது ஆகியவை அடங்கும். தேசிய விவகாரங்களில் முஸ்லிம்களின் கண்ணியத்தையும் பங்கேற்பையும் மீட்டெடுப்பதற்கான உறுதியான பாதை நவீன கல்வி என்பதை சர் சையத் அகமது கான் உணர்ந்தார்" என்று  கூறிய அவர்,  அலிகர் இன்ஸ்டிடியூட் கெஜட்டில் நிறுவனர் எழுதியவற்றை மேற்கோள் காட்டினார். மேலும், ஒரு அறிஞர் மற்றும் சீர்திருத்தவாதியாக சர் சையத் அகமது கானின்  பன்முக பங்களிப்புகளையும் ஃபைஸ் அஹ்மத் கித்வாய்  எடுத்துரைத்தார்.

"அலிகரின் கல்விப் பணியின் மதச்சார்பற்ற மற்றும் உள்ளடக்கிய உணர்வு அத்தகைய சவால்களுக்கு நம்மைத் தயார்படுத்துகிறது. விமானப் போக்குவரத்து போன்ற கல்வி, எல்லைகளை விரிவுபடுத்துதல், கற்பனையை விடுவித்தல் மற்றும் மனிதகுலத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்தகைய பயணங்களில் நிலையான, ஆனால் இரக்கமுள்ள வழிகாட்டிகளாக இருக்க  அலிகர் பல்கலைக்கழகம் நமக்குக் கற்றுக் கொடுத்தது" என்றும் அவர் பெருமையுடன் கூறினார். 

விழாவிற்குத் தலைமை தாங்கிய அலிகர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நைமா காதூன், மே 24, 1875 அன்று மதர்சத்-உல்-உலூமின் அடித்தளத்தை 1857க்குப் பிறகு அதிகாரம் இழந்த சமூகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு துணிச்சலான முயற்சியாக விவரித்தார். "சர் சையத் அகமது கான் ஒரு கலாச்சார மற்றும் கல்வி விழிப்புணர்வின் விதைகளை விதைத்துக் கொண்டிருந்தார். கிழக்கு ஞானம் மற்றும் மேற்கத்திய பகுத்தறிவின் சிறந்ததை ஒருங்கிணைக்கும் ஒரு நிறுவனத்தை அவர் கற்பனை செய்தார்" என்று அவர் கூறினார். மதரஸாவிலிருந்து பல்கலைக்கழகமாக மாறுவதை, கல்வி மூலம் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுப்பதைக் குறிக்கும் ஒரு மறுமலர்ச்சி என்று துணை வேந்தர் விவரித்தார்.

“தொட்டிலிலிருந்து கல்லறை வரை அறிவைப் பெறுங்கள்” என்ற சர் சையத் அகமது கானின் புகழ்பெற்ற அறிவுரையை மேற்கோள் காட்டி, கல்வி என்பது ஒரு தார்மீக மற்றும் குடிமைப் பொறுப்பு, விமர்சன சிந்தனை, மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் மற்றும் நெறிமுறை குடியுரிமையை ஊக்குவிக்கும் ஒரு பொறுப்பு என்ற அவரது நம்பிக்கையை அவர் வலியுறுத்தினார். பல்கலைக்கழகத்திற்கு நிறுவனர் மற்றும் அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட உடைமைகளை வழங்கிய சர் சையத் அகமது கானின்  சந்ததியினரான ஷெஹெராசாட் மசூத் மற்றும் ஷாஹெர்னாஸ் மசூத் ஆகியோருக்கு துணைவேந்தர் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். மதரஸத்-உல்-உலூமின் 150வது ஆண்டுகளுக்கான நிகழ்வுகள் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என்றும் துணைவேந்தர் அறிவித்தார்.

கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட துணைவேந்தர் பேராசிரியர் முகமது மொஹ்சின் கான், மதரஸாட்-உல்-உலூமின் கதை உலகளாவிய மாற்றத்தை எதிர்கொள்ளும் கல்வியின் திறனுக்கு ஒரு சான்றாகும் என்று குறிப்பிட்டார். மற்றொரு கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற மரியாதைக்குரிய கல்வியாளர் பேராசிரியர் ஜாகியா சித்திக், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பயணத்தில் பெண் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களின் பங்களிப்புகளைப் பாராட்டி, பல்கலைக்கழகத்திற்குப் பெருமை சேர்ப்பதில் அவர்களின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

முன்னதாக, விருந்தினர்களை வரவேற்ற சர் சையத் அகாடமியின் இயக்குனர் பேராசிரியர் ஷாஃபி கித்வாய், மதர்சத்-உல்-உலூமின் வரலாற்று கண்ணோட்டத்தை வழங்கினார். அலிகர் பல்கலைக்கழகம் மலர்ந்ததற்கான விதை இது என்று அவர் விவரித்தார். மேலும் ஒரு பாரம்பரிய மதர்சாவிலிருந்து உலகளாவிய கல்வித் தரங்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு நிறுவனமாக அலிகர் பல்கலைக்கழகத்தின் தொலைநோக்குப் பாய்ச்சலையும் அவர் எடுத்துக்காட்டினார். துணை இயக்குநர் டாக்டர் முகமது ஷாஹித் நன்றியுரையை முன்மொழிந்தார். மதர்சத்-உல்-உலூமின் ஸ்தாபனம் குறித்த நுண்ணறிவுகளையும் அவர் வழங்கினார். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஃபிரோஸ் நக்வி எழுதிய "சர் சையத் இன் ஆக்ரா" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை நூல் வெளியிடப்பட்டது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

வாழ்க்கையை ஒழுங்கமைக்க ....!

வாழ்க்கையை ஒழுங்கமைக்க என்ன செய்ய வேண்டும்?

உலகில் நம்மைச் சுற்றி நடப்பதைப் பார்க்கும்போது, வெற்றியை அடைய அனைவரும் அதிவேகத்தில் ஓடுகிறார்கள் என்பதை நாம் உணர்கிறோம். அதேநேரத்தில் வெற்றிக்கான ரகசியம் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் ஆகும் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். வாழ்க்கையை ஒழுங்கமைக்க செய்ய வேண்டிய அம்சங்களின் பட்டியலை உருவாக்குவதன் மூலம் இதை அடைய முடியும். வெற்றியை நோக்கி சரியான திசையில் பயணிக்க முடியும். வெற்றிக்கனியை நிச்சயம் எட்டிப் பறித்துவிட முடியும். 

செய்ய வேண்டிய அம்சங்களின் பட்டியல் :

உங்கள் மனதில் நிறைய விஷயங்கள் இருக்கும்போது, ​​எல்லாவற்றையும் நினைவில் கொள்வது கடினம். இந்த சூழ்நிலையில், 'செய்ய வேண்டிய முக்கியப் பணிகளின் பட்டியல்' என்பது உங்கள் சிறந்த நண்பராக இருக்க முடியும். ஒரு சிறந்த நல்ல நண்பன் உண்மையில் வெற்றிக்கு நிச்சயம் உதவிக்கரம் நீட்டுவான். அந்த வகையில் முக்கியப் பணிகளின் பட்டியல், உங்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு உதவும். 

நீங்கள் காலையில் எழுந்தவுடன், நாள் முழுவதும் செய்ய வேண்டிய அனைத்து முக்கியமான பணிகளையும் உங்களுடைய பட்டியலில் எழுதுகிறீர்கள். உதாரணமாக, வங்கிக்குச் செல்வது, உங்கள் தாயின் மருந்தைப் பெறுவது அல்லது ஒரு திட்டத்தை முடிப்பது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பட்டியல் உங்கள் முழு நாளையும் ஒழுங்கமைப்பது மட்டுமல்லாமல், ஒரு பணியை முடித்தவுடன் அதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் பெறும் மன அமைதியும் ஒரு சாதனைதான் என்பதை உணர வைக்கும். இந்தப் பழக்கம் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மன அமைதியையும் தரும்.

பட்டியல் ஏன் முக்கியமானது? 

ஒரு நாளில் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நாம் நேரத்தை வீணாக்குவதில்லை. நம்மிடம் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. ஒரு பணி முடிந்தவுடன், மற்றொரு பணிக்கான திட்டமிடல் தொடங்குகிறது. மிக முக்கியமான பணிகள் முதலில் எழுதப்படுகின்றன.  எனவே அவை விரைவாக முடிக்கப்படுகின்றன. செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலை உருவாக்குவதற்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் சொந்த வழி இருக்கலாம். சிறந்த செய்ய வேண்டிய பணி பட்டியல் என்பது உங்கள் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். இருப்பினும், சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது முக்கியமாகும். 

ஒவ்வொரு நாளும் காலையிலோ அல்லது இரவிலோ ஒரு பட்டியலை உருவாக்குங்கள். சிலர் காலையில் 'செய்ய வேண்டிய கடமைகள் தொடர்பான பட்டியல் தயாரிப்பதன் மூலம் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். மற்றவர்கள் இரவில் மறுநாள் திட்டமிடுகிறார்கள். உங்கள் வசதிக்கேற்ப பகல் அல்லது இரவை நீங்கள் தேர்வு செய்யலாம்.

பட்டியலில் எப்போதும் மிக முக்கியமான மற்றும் நேரத்தில் எடுத்துக்கொள்ளும் பணிகளை முதலில் எழுதுங்கள். மக்கள் பொதுவாக காலையில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எனவே காலையில் மிக முக்கியமான பணிகளை முடிப்பது நல்லது. எப்போதும் கடினமான பணிகளை மட்டும் முதலில் பட்டியலிடாதீர்கள். பெரியது, சிறியது என அனைத்து பணிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் நாளின் இறுதியில் நீங்கள் போதுமான அளவு சாதித்துவிட்டதாக உணருவீர்கள். கடினமான வேலைகளுக்கு இடையில் எளிதான வேலைகளைச் செய்வது கொஞ்சம் நிம்மதியைத் தருகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். 

ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு நேரம் ஆகும் என்பதை முன்கூட்டியே நாம் மதிப்பிடலாம்.  எனவே, ஒவ்வொரு பணிக்கும் முன்கூட்டியே ஒரு நேரத்தை நிர்ணயிக்கவும். இது நீங்கள் சிறப்பாக வேலை செய்ய உதவும். அதேநேரத்தில், அனைத்து பணிகளும் எளிதாக முடிக்க இந்த நேரப் பயன்பாடு நிச்சயம் உதவும். ஒரு பணி முடிந்ததும், அதற்கு அருகில் ஒரு 'டிக்' போடவும்.  இது உங்கள் செயல்திறனைப் பற்றிய ஒரு யோசனையைத் தரும். மேலும் நீங்கள் நன்றாக உணருவீர்கள். அதேநேரத்தில், அடுத்த பணியை முடிக்கவும் நீங்கள் உந்துதல் பெறுவீர்கள்.

எளிதான மற்றும் பயனுள்ள வழி :

ஒவ்வொரு நாளும் 'செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல்' உருவாக்குவது உங்கள் பணிகளை ஒழுங்கமைக்க மிகவும் எளிதான மற்றும் பயனுள்ள வழியாகும். இது நாள் முழுவதும் உங்கள் செயல்திறனைப் பற்றிய ஒரு யோசனையை உங்களுக்குத் தரும்.  மேலும் உங்கள் நேரத்தை திறம்படப் பயன்படுத்த முடியும். 'செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல்' என்ற பழக்கத்தை ஏற்றுக்கொள்வது வாழ்க்கையில் வெற்றியை அடைவதை சாத்தியமாக்குவது மட்டுமல்லாமல், நீங்கள் ஒழுக்கமாக மாறவும் உதவுகிறது. இது வேலை மற்றும் வாழ்க்கை சமநிலைக்கு உதவுகிறது. இந்தப் பழக்கத்தின் காரணமாக உலகில் பல பிரபலமானவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நீங்களும் இந்த மக்களில் ஒருவராக இருக்கலாம்.

ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய கடமைகள் குறித்த பட்டியலின் நன்மைகள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு பட்டியலின்படி வேலை செய்வது மனதில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தாது. பதற்றத்தை உருவாக்காது. மேலும் அனைத்து பணிகளும் எளிதாக முடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை என்பதால் அந்த பழக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்று உறுதியாக கூறலாம். 

ஒரு பணி முடிந்ததும் நீங்கள் அதில் 'டிக்' இடும்போது, ​​அது உங்களுக்கு உந்துதலைத் தருவதோடு, மீதமுள்ள வேலையைச் செய்ய உங்களை உற்சாகப்படுத்துகிறது. இதனால் மனதில் தைரியம் பெருகும். அன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் உங்களிடம் இருக்கும்போது, ​உங்கள் கவனம் கையில் இருக்கும் பணியில் மட்டுமே இருக்கும். இதனால் வேலையில் கவனம் செல்லும்.  செய்ய வேண்டிய பணிகள் குறித்த பட்டியலைத் தொடர்ந்து தயாரித்து பின்பற்றுவது நினைவாற்றலை பலப்படுத்துகிறது. பட்டியல் உதவியுடன், சிக்கலான மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் பணிகளைப் பிரிக்கலாம். இது முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துகிறது. பட்டியல் படி பணிகளை முடிப்பதன் மூலம், அனைத்து பணிகளும் சரியான நேரத்தில் முடிக்கப்படுகின்றன.

வாழ்க்கையை ஒழுங்கமைக்க :

வாழ்க்கையை ஒழுங்கமைக்க ஒவ்வொரு நாளும் சரியாக திட்டமிட்டு, அன்றாடம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பட்டியலைத் தயாரித்து, அந்த பட்டியலின்படி, பணிகளை முடித்தால்,  உங்கள் பணிகளை ஒழுங்கமைக்க மிகவும் எளிதான மற்றும் பயனுள்ள வழியாக இந்த பட்டியல் இருக்கும். இது நாள் முழுவதும் உங்கள் செயல்திறனைப் பற்றிய ஒரு யோசனையை உங்களுக்குத் தரும். மேலும், உங்கள் நேரத்தை திறம்படப் பயன்படுத்த முடியும். செய்ய வேண்டிய பணிகள் என்ற பட்டியல் பழக்கத்தை ஏற்றுக்கொள்வது வாழ்க்கையில் வெற்றியை அடைவதை சாத்தியமாக்குவது மட்டுமல்லாமல், நீங்கள் ஒழுக்கமாக மாறவும் உதவுகிறது என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Saturday, May 24, 2025

வலியுறுத்தல்...!

 சாதிவாரிக் கணக்கெடுப்பு...!

காங்கிரஸ் கோரிக்கை...!



இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களுடன் பசி, பட்டினியால் செத்து மடியும் காசா மக்கள்...!

"இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களுடன், நாள்தோறும் பசி, பட்டினியால் செத்து மடியும்  காசா மக்கள்"

பாலஸ்தீனியர்கள் தங்களது சொந்த பூமியில் இருந்து வெளியேற்றப்பட்டு 77 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 1948 ஆம் ஆண்டு யூத பயங்கரவாதிகளால், பாலஸ்தீனியர்கள் இன அழிப்பு தொடங்கப்பட்டு இன்னும் அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 1948-இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர், நக்பாவின் விளைவாக பாலஸ்தீனியர்கள் நிரந்தரமாக பெருமளவில் இடம்பெயர்ந்தனர். காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இன்று வரலாறு மீண்டும் நிகழ்கிறது. மீண்டும் திரும்பி இருக்கிறது. காசா பகுதியில் இருந்து பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் அப்பாவி குழந்தைகள், பெண்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். காசா முழுவதும் மக்கள் பசியால் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பாமல், இஸ்ரேல் காசாவை சீல் வைத்து தடுத்துள்ளது. 

இத்தகைய கொடுமையான சூழ்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (23.05.2025) அன்று  அதிகாலை முதல் காசா முழுவதும் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 76 பேர் கொல்லப்பட்டனர். மேலும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. காசாவின் ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஒரு குடும்ப வீட்டின் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்தியதில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். "இஸ்ரேலிய இராணுவம் வேடிக்கைக்காக பொதுமக்களைக் கொல்கிறது" என்று காசா முஸ்லிம் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

மனிதக் கேடயங்களாக பாலஸ்தீனர்கள் :

இஸ்ரேலிய துருப்புக்கள், காசாவில் பாலஸ்தீனியர்களை மனிதக் கேடயங்களாகச் செயல்படுமாறு திட்டமிட்டு கட்டாயப்படுத்துவதாகவும், குண்டுகள் மற்றும் போராளிகளைச் சரிபார்க்க கட்டிடங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்குள் அனுப்புவதாகவும் பல பாலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளனர்.

19 மாதப் போரின் போது இந்த நடைமுறை எங்கும் பரவிவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். இஸ்ரேலிய ராணுவத்தினர், தங்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டபோது மட்டுமே தாம் கட்டப்பட்டிருக்கவில்லை அல்லது கண்களைக் கட்டப்படவில்லை என்று ஒரு பாலஸ்தீனிய நபர் கூறியுள்ளார். "நாங்கள் சொல்வதைச் செய்யுங்கள். இல்லையெனில் நாங்கள் உங்களைக் கொன்றுவிடுவோம்" என்று காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் மிரட்டிக் கொண்டே இருக்கிறது. “அவர்கள் என்னை அடித்து, ‘உனக்கு வேறு வழியில்லை; இதைச் செய் அல்லது உன்னைக் கொன்றுவிடுவோம்’ என்று என்னிடம் சொன்னார்கள்” என்று 36 வயதான காசாவாசி வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், ஐ.நா.வின் அல்பானீஸ் மருத்துவர்களின் குடும்பத்தினரை குறிவைப்பது இனப்படுகொலையின் ‘துரோகப் போக்கை’ காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா.வின் கண்துடைப்பான கண்டிப்பு :

கடந்த வெள்ளிக்கிழமை பாலஸ்தீன மருத்துவர்கள் அலா மற்றும் ஹம்டி அல்-நஜ்ஜருக்குச் சொந்தமான வீட்டின் மீது இஸ்ரேல் குண்டுவீசியதை, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களுக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ், கண்டிதுள்ளார். இந்த தாக்குதலில், அலா மற்றும் ஹம்டி அல்-நஜ்ஜர் குடும்பத்தில் 10 குழந்தைகளில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்தில் தன்னார்வத் தொண்டு செய்யும் நார்வே மருத்துவர் மேட்ஸ் கில்பர்ட் வெளியிட்ட வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள அல்பானீஸ், "இந்தத் தாக்குதல் இனப்படுகொலையின் புதிய கட்டத்தின் தனித்துவமான துரோகப் போக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக்"  கண்டித்துள்ளார். 

இஸ்ரேலிய குடியேறிகளின் பழிவாங்கும் கும்பல்கள் பாலஸ்தீனியர்களை அவர்களின் வீடுகளில் இருந்து விரட்டியடித்துள்ளன.  காசா மீதான போருக்குப் பிறகு, இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்கள் மிகவும் வெட்கக்கேடானதாகிவிட்டன. “எங்கே பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் (இஸ்ரேலிய குடியேறிகள்) கற்கள், மொலோடோவ் காக்டெய்ல்கள் மற்றும் வெடிபொருட்களை வீசினர். அவர்கள் மோதியபோது, ​​கார் உடனடியாக தீப்பிடித்தது” என்று ப்ருகின்னில் வசிக்கும் பாலஸ்தீனிய குடியிருப்பாளரும் கடந்த வெள்ளிக்கிழமை அங்கு நடந்த தாக்குதலுக்கு சாட்சியுமான ஃபாடி சமாரா தெரிவித்துள்ளார்.  “அவர்கள் சரியாக என்ன பயன்படுத்துகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இதுதான் நீங்கள் உங்கள் முன் காணும் உண்மை. அவர்கள் பல கார்களை எரித்துள்ளனர், ப்ருகினில் மட்டுமல்ல, இந்த பழிவாங்கும் கும்பல்கள் மேற்குக் கரை முழுவதும் பரவியுள்ளன” என்றும் அவர்  கூறியுள்ளார். 

தாக்குதல்கள் அதிகரிப்பு:

காசாவில் இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. அத்துடன், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல் அதிகரித்துள்ளது.  ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பாலஸ்தீனியர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீது இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்கள் பற்றிய அதிக அறிக்கைகள் வந்துள்ளன. காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து அங்கு குடியேறிகளின் வன்முறை அதிகரித்துள்ளது.

அண்மை காலத்தில் காசா முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் பல கொடிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு (24.05.2025)  முதல் குறைந்தது எட்டு பாலஸ்தீனியர்களைக் கொன்றது. இதில் காசா நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு கூடாரத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது, அதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

மத்திய காசாவில் "பல ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்களை" குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலின் இராணுவமும் கூறியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் சிலர், உதவி லாரிகளுக்கு அருகில் நின்ற "ஹமாஸ் செயற்பாட்டாளர்கள்" என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறு பேரும் ஹமாஸ் போராளிகள் அல்ல என்று காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் மறுத்துள்ளது, அவர்கள் "முற்றிலும் மனிதாபிமான பணிகளைச் செய்யும் உதவி பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் ஊடக அலுவலகம் கூறியுள்ளது.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், காசாவில் போரை நிறுத்துவதற்கான சர்வதேச முயற்சிகள் மற்றும் "பள்ளத்தாக்கு பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க சவுதி, ஜோர்டான், எகிப்து மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை பாரிஸில் சந்தித்தனர். ஆனால் அதில் மிகப்பெரிய அளவுக்கு முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. 

பசி, பட்டினியால் செத்து மடியும்  காசா மக்கள் :

காசாவில் இஸ்ரேல் நடத்திய "கொடூரமான அளவிலான கொலை மற்றும் அழிவு" குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்  எச்சரிக்கை விடுத்தார். சமீபத்திய உதவி விநியோகம் "இப்போது ஒரு டீஸ்பூன் உதவிக்கு சமம்" என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். "காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் இந்த கொடூரமான மோதலின் மிகக் கொடூரமான கட்டமாக இருக்கிறார்கள்" என்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது குட்டெரெஸ் கூறினார்.

இத்தகைய கடுமையான சூழ்நிலையில், "காசாவை முற்றிலுமாக அழித்து அதன் மக்களை கட்டாயமாக இடம்பெயரச் செய்ய வேண்டும்" என்று இஸ்ரேலிய அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். "காசாவில் ஒரு கல்லைக்கூட நாங்கள் விட்டு வைக்க மாட்டோம். நாங்கள் கரையில் எஞ்சியிருப்பதை அழித்து வருகிறோம். கடைசி பணயக்கைதி திரும்பும் வரை, தண்ணீர் கூட உள்ளே அனுமதிக்கப்படக்கூடாது" என்று அவர் மனிதநேயம் இல்லாமல் கூறியுள்ளார்.  காசா மக்களுக்கு பயனளிக்கக்கூடிய எந்தவொரு உதவியும் நுழையப்படுவதை நிராகரித்த அதேவேளையில், குறைந்தபட்ச உணவு மற்றும் மருந்து மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் இதுவும் தற்காலிகமாக மட்டுமே -என்றும் ஸ்மோட்ரிச் அறிவித்துள்ளார். காசாவின் மக்கள்,  தெற்கிற்கும், இறுதியில் மூன்றாம் நாடுகளுக்கும் பெருமளவில் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அந்த அமைச்சர் கூறியுள்ளார். இந்த அறிக்கைகள் வெறும் சொல்லாட்சியை மட்டுமல்ல, கூட்டு தண்டனை மற்றும் இன அழிப்பு கொள்கையையும் பிரதிபலிக்கின்றன . இது சர்வதேச சட்டத்தை நேரடியாக மீறுவதாகும்.

காசாவில் போரை நிறுத்த உலகம் தவறிவிட்டது :

இதுஒருபுறம் இருக்க, பாக்தாத்தில் நடந்த அரபு உச்சி மாநாட்டில் பேசிய ஜோர்டானிய பிரதமர் ஜாபர் ஹசன், காசாவில் போரின் விளைவுகள் பல ஆண்டுகள் நீடிக்கும் என்று வேதனையுடன் எச்சரித்துள்ளார், மன்னர் மேலும், இரண்டாம் அப்துல்லாவின் சார்பாக, மனிதாபிமான பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர அவர் அழைப்பு விடுத்தார். அத்துடன், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமில் உள்ள இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ புனித தளங்களைப் பாதுகாப்பதில் ஜோர்டானின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

காசாவில் போர் நின்று, அங்குள்ள மக்கள் அமைதியாக வாழ சர்வதேச அமைப்புகள் எந்தவித உறுதியான முயற்சிகளையும் எடுக்கவில்லை. இஸ்ரேலுக்கு எதிராக உறுதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, இஸ்ரேலின் அடாவடியை, கொடூரங்களைக் கண்ணை மூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியில் ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்துக் கொண்டும், உணவுக்கு ஏங்கிக் கொண்டும், அங்குள்ள பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். இல்லை, ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.

ஹிட்லர் என்ற சர்வாதிகாரிக்குப் பிறகு, உலகில் அதிகளவு மக்களை கொன்று குவித்த ஒரு கொடூர மனிதன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு என்றே உறுதியாக கூறலாம். கடைசியாக, ஏக இறைவன் தான் காசா மக்கள் மீது கருணை காட்ட வேண்டும். அவர்களின் துயரங்கள் நீங்கி, மீண்டும் அவர்களின் பூமி அவர்களின் கைகளில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Friday, May 23, 2025

ஹஜ் பயணத்திற்காக இருவர் செய்த தியாகங்கள்....!

 "புனித ஹஜ் பயணத்திற்காக இருவர் செய்த தியாகங்கள்"

உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களின் மிகப்பெரிய கனவாக இருப்பது, தம்முடைய வாழ்நாளில் எப்படியாவது புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்பதாகும். இதற்காக ஏழை, பணக்காரர் என வித்தியாசம் இல்லாமல் அனைத்து முஸ்லிம்களும், ஒவ்வொரு நாளும் புனித ஹஜ் கடமைக்கான வாய்ப்பை தங்களுக்கு தர வேண்டும் என ஏக இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த அற்புதமான ஒரு வாய்ப்புக்காக பல்வேறு தியாகங்களை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். 

இந்தாண்டிற்கான (2025) புனித ஹஜ் பயணம் தொடங்கிவிட்ட நிலையில், உலகின் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் புனித மக்கா நகருக்கு ஹாஜிகள் வரத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால், மக்கா மாநகரம் ஹாஜிகளின் சங்கமமாக காட்சி அளித்துக் கொண்டு இருக்கிறது. வரும் ஜுன் மாதம் தியாகத் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஹஜ் கடமையை மிகச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், நோக்கத்தில் ஹாஜிகள், ஒவ்வொரு நாளும், ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். உலக அமைதிக்காக, உலகில் எப்போதும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஒளி பிறந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவல் ஹாஜிகள் மத்தியில் இருப்பதால், அவர்கள்,  ஏக இறைவனிடம் கையேந்தி துஆ கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில், இந்தாண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள லட்சக்கணக்கான ஹாஜிகளின் மத்தியில், இரு ஹாஜிகள் குறித்த சுவையான, பொறுமை மற்றும் நம்பிக்கையின் எழுச்சியூட்டும் கதையை நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.  புனித ஹஜ் பயணத்திற்காக இந்த இருவரும் செய்த தியாகங்களை அனைத்து முஸ்லிம்களும் அறிந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் அவர்கள் மத்தியில் கூட, ஹஜ் பயணம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த ஆவல் உருவாகும். அப்படி உருவாகும் ஆவலை நிறைவேற்ற அவர்களுக்கு ஏக இறைவன் வாய்ப்புகளை வழிகளை உருவாக்கி கொடுத்துவிடுவான். 

தூய்மைப் பணியாளரின் ஹஜ் கனவு :

இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் தனது வாழ்நாள் கனவை நிறைவேற்றுவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள இதயங்களைத் தொட்டுள்ளார். தனது 40 வருட இடைவிடாத சேமிப்புக்குப் பிறகு ஹஜ் செய்தல், மிதமான வருவாய் மற்றும் எண்ணற்ற கஷ்டங்கள் இருந்தபோதிலும், அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு அந்தக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தது. இந்த ஊக்கமளிக்கும் பயணம் ஒரு சக்தி வாய்ந்தது. 

இந்தோனேசிய தூய்மைப் பணியாளர் ஹஜ் லெஜிமான் என்பவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒரு அற்புதமான கனவை தனது மனதில் சுமந்துகொண்டே இருந்தார். அந்த கனவு 'தனது வாழ்நாளில் எப்படியாவது ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும்' என்பதாக இருந்து வந்தது. இதற்காக அவரும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு எண்ணற்ற தியாகங்களை, கஷ்டங்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. எனினும், அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு அந்தக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தது. உயிரிப்புடன் வைத்திருந்த கனவை, ஏக இறைவனின் கருணையால், தூய்மைப் பணியாளர் ஹஜ் லெஜிமான் இந்தாண்டு தனது மனைவியுடன் சேர்ந்து நிறைவேற்ற புனித மக்கா நகருக்கு புறப்பட்டுள்ளார். 

ஹஜ் கடமையை நிறைவேற்ற உறுதி :

தனது புனிய பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹஜ் லெஜிமான், "நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.  இறுதியாக காபாவை என் கண்களால் பார்ப்பேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. முதலில் ஏக இறைவனக்கு நன்றி கூறுகிறேன். பின்னர் எங்களுக்கு உதவிய அனைவருக்கும், குறிப்பாக மக்கா சாலை முன்முயற்சியின் பொறுப்பாளர்களுக்கு நன்றி கூறுகிறேன். இது நான் கற்பனை செய்ததை விட செயல்முறையை எளிதாக்கியது.

கடந்த 1986 ஆம் ஆண்டில் இருந்து என் மனைவியின் ஆதரவுடன், நான் ஒரு நாளைக்கு ஆயிரம் இந்தோனேசிய ரூபாயை மட்டுமே சேமிக்கத் தொடங்கினேன். கடினமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் கழிவுகளை சேகரிக்கும் கடின உழைப்பு இருந்தபோதிலும், ஹஜ் செய்யும் எங்கள் கனவை நிறைவேற்ற நாங்கள் உறுதியாக இருந்தோம். நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. ஒன்றாக, இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு பதிவு செய்ய முடியும் வரை நாங்கள் சீராக சேமித்தோம்" என்று தனது ஹஜ் கனவு குறித்தும், அதற்காக தாமும், தம்முடைய மனைவியும் செய்த தியாகங்கள் குறித்தும் லெஜிமான் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருப்பதை கேட்கும்போது உண்மையில் மனம் மகிழ்ச்சி அடைகிறது.

பொறுமை, தியாகம் மற்றும் நம்பிக்கை ஆகியவை மிகவும் புனிதமான மைல்கற்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கான சக்திவாய்ந்த நினைவூட்டலாக இந்த லெஜிமானின் ஊக்கமளிக்கும் பயணம் உள்ளது. உண்மையான நம்பிக்கையால் தூண்டப்படும்போது எந்தக் கனவும் வெகு தொலைவில் இல்லை என்பதைக் காட்டும் கதை, மீள்தன்மை மற்றும் பக்தியின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது

பெல்ஜிய சைக்கிள் வீரரின் ஹஜ் கனவு :

இந்தோனேஷிய தூய்மைப் பணியாளர் லெஜிமான் எப்படி, ஹஜ் செய்ய வேண்டும் என கனவு கண்டு, அதற்காக தியாகங்கள் பல செய்தாரோ, அதேபோன்று, பெல்ஜியத்தைச் சேர்ந்த சைக்கிள் வீரர் ஒருவர் இந்தாண்டு தனது ஹஜ் கனவை நிறைவேற்ற சவுதி அரேபியா சென்றுள்ளார். பெல்ஜியத்தைச் சேர்ந்த 26 வயதான சைக்கிள் வீரர், அனஸ் அல் ரஸ்கி, தம்முடைய வாழ்நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என நாள்தோறும் கனவு கண்டுக் கொண்டே இருந்தார். அதற்காக இந்தாண்டு, பெல்ஜியத்திலிருந்து மக்காவிற்கு சைக்கிளில் புறப்பட்ட அவர்,  மூன்று மாதங்களுக்குள் 13 நாடுகளைக் கடந்து ஹஜ் பயணம் செய்யும் தனது கனவை நிறைவேற்ற சவுதி அரேபியாவை அடைந்துள்ளார்.

இவை அனைத்தும் ஹஜ் பயணம் செய்யும் தனது கனவை நிறைவேற்றுவதற்காக. ரமழானில் தனது தனி பயணத்தைத் தொடங்கி, எல்லைகளைக் கடந்து, சவால்களைத் தாண்டி, இறுதியாக ஜோர்டானுக்கு அருகிலுள்ள ஹலத் அம்மார் வழியாக ராஜ்ஜியத்திற்குள் நுழைந்தார்.  13 நாடுகளில் 7 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான மிதிவண்டி ஓட்டுதலுக்குப் பிறகு, 26 வயதான அனஸ் அல் ரஸ்கி இறுதியாக சவுதி அரேபியாவை வந்தடைந்தபோது, அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது என கூறலாம்.

அவர் பல ஆண்டுகளாகக் கொண்டிருந்த ஒரு கனவை,  ஹஜ் கடமையை நிறைவேற்றுவதைத் துரத்திக் கொண்டே இருந்தார். அதற்காக பல தியாகங்களைச் செய்ய முன்வந்தார்.  அனஸ் அல் ரஸ்கி ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு வழியாக சவாரி செய்து, 2025 ஹஜ் யாத்திரைக்கான நேரத்தில் ஹலத் அம்மார் எல்லையை அடைந்தார்.

26 வயதான பெல்ஜிய சைக்கிள் ஓட்டுநர் அனஸ் அல் ரஸ்கி, மிதிவண்டியில் குறிப்பிடத்தக்க மூன்று மாத பயணத்தை முடித்து, 2025 ஹஜ் கடமையை நிறைவேற்ற சவுதி அரேபியாவை வந்தடைந்தார்.

மாறிவரும் காலநிலை மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைத் தாங்கி, ஆஸ்திரியா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா உள்ளிட்ட 13 நாடுகளில் தனியாகப் பயணம் செய்தார்.

நான் பாக்கியவானாக உணர்கிறேன் :

அவர் ஜோர்டானுக்கு அருகிலுள்ள ஹலாத் அம்மார் எல்லைக் கடவை வழியாக சவுதி அரேபிய ராஜ்ஜியத்திற்குள் நுழைந்தபோது,  ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். "இது ஒரு கனவு. நான் மக்காவில் இருப்பேன் என்று நான் நம்பவில்லை. மக்கா ராஜ்ஜியத்திற்கு வந்ததில் நான் பாக்கியவானாக உணர்கிறேன்." என்று புரிப்புடன் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய  அல் ரஸ்கி, வழியில் மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவின் பங்கை எடுத்துரைத்தார்.

"அவர்கள் என்னைத் தொடர்ந்து வழிநடத்தினர். பல ஆண்டுகளாக நான் போற்றி வந்த ஒரு கனவை நான் நெருங்கி வருவதாக உணர்ந்தேன். இப்போது, ​​காபாவிற்கு மிக அருகில் உள்ள இடத்தை அடைந்து அதை முதல் முறையாகப் பார்க்க விரும்புகிறேன்." என்று பேசிய  அல் ரஸ்கி கூறியதை அறியும்போதும் அவரது தியாகங்கள் எப்படி இருந்தது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. அல் ரஸ்கி மலைகள், சமவெளிகள் மற்றும் நகர்ப்புற மையங்களில் சைக்கிள் ஓட்டிச் சென்றதால், பயணம் ஒரு ஆன்மீகப் பணியாகவும் சகிப்புத்தன்மையின் சோதனையாகவும் இருந்தது. இவை அனைத்தும் ஒரு புனிதமான இலக்கை அடையும் நோக்கில் இருந்தது. 

இருவர் செய்த தியாகங்கள் :

இந்தோனேஷிய தூய்மைப் பணியாளர் ஹஜ் லெஜிமான் மற்றும் பெல்ஜிய சைக்கிள் வீரர் அனஸ் அல் ரஸ்கி ஆகிய இருவரும் ஹஜ் பயணத்திற்காக செய்துள்ள தியாகங்கள், சந்தித்த சவால்கள் மற்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. பொறுமை மற்றும் நம்பிக்கையின் எழுச்சியூட்டும் இவர்களின் கதைகள் மூலம் ஒரு உண்மை மிகத் தெளிவாக தெரியவருகிறது. வாழ்க்கையில் எதுவும் சுலபமாக கிடைத்துவிடாது. அதற்காக கனவு காண வேண்டும். அந்த கனவை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். தியாகங்களை செய்ய முன்வர வேண்டும். சவால்களை சந்திக்க வேண்டும். கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும். அந்த துயரமான நேரங்களில் கனவை மட்டும் விட்டுவிடக் கூடாது. அதை சுமந்துகொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, அந்த திசையை நோக்கிச் சென்றால் மட்டுமே, நம்முடைய கனவுகள் நிறைவேறும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள ஹஜ் லெஜிமான் மற்றும் அனஸ் அல் ரஸ்கி ஆகிய இருவரும் இருந்து வருகிறார்கள்.  ஏக இறைவனாகிய அல்லாஹ் அவர்கள் இருவரின் ஹஜ்ஜை ஏற்றுக்கொள்வானாக. ஆமீன்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்