Thursday, May 22, 2025

வீரப் பெண்மணி கர்னல் சோபியா குரேஷி ....!

 கர்னல் சோபியா குரேஷி என்ற வீரப் பெண்மணி.....!

'ஆபரேஷன் சிந்தூர்' என்ற துணிச்சலான நடவடிக்கை மூலம் நமது இந்தியாவின் புகழை உலகம் முழுவதும் பரப்பிய ஒரு வீரப் பெண்மணி தான் கர்னல் சோபியா குரேஷி. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் (2025) பயங்கரவாதிகள் நடத்திய தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிராக   பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதலைகளை கர்னல் சோபியா குரேஷி மற்றும், விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் சேர்ந்து நடத்தினர். மிகவும் துணிச்சலான இந்த நடவடிக்கைகள் மூலம் துல்லியமாக தாக்குதல்களை நடத்திய இந்த வீரப் பெண்மணிகள், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத முகாம்களை முற்றிலும் அழித்தனர். 

இதன்மூலம், கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர்  இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் தங்களது துணிச்சலான நடவடிக்கை மூலம் புகழ்பெற்றனர். இந்திய ராணுவத்தில் ஒரு முஸ்லிம் பெண் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதை அறிந்து இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டனர். கர்னல் சோபியா குரேஷியின் துணிச்சலை பாராட்டினர். இன்னும் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள். 

நாட்டிற்காக சேவை செய்யும் குடும்பம்:

குஜராத் மாநிலம் வதோதராவில் வாழ்ந்துவரும் கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர், தங்கள் பெண் சோபியா நடத்திய அற்புதமான, துணிச்சலான நடவடிக்கையை அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். "எங்கள் மகள் தேசத்திற்காகச் செய்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது மற்றவர்கள் தங்கள் மகள்களுக்கு கல்வி கற்பிக்க ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன், இதனால் அவர்கள் தேசத்திற்குச் சேவை செய்ய முடியும்," என்று கர்னல் சோபியா குரேஷியின் தாயார் ஹலிமா குரேஷி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும், "தேசத்திற்கு சேவை செய்ய உங்கள் மகள்களுக்கு நல்ல கல்வி கொடுங்கள்" என்றும் அந்த தாய் அறிவுறுத்தியுள்ளார்.

இராணுவ வீரர்களின் நீண்ட வரிசையில் இருந்து வரும் அவரது தந்தை தாஜ் முகமது குரேஷி, "எனது மகள் நாட்டிற்காக மிகப்பெரிய அளவுக்கு  செய்திருப்பதைக் கண்டு நான் மிகவும் பெருமைப்பட்டேன்" என்று  மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சோபியாவின் சகோதரர் முகமது சஞ்சய் குரேஷி, சோபியாவின் பயணம் எவ்வாறு பல தலைமுறை சேவையால் ஈர்க்கப்பட்டது என்பதைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 

"தேசபக்தி எங்கள் இரத்தத்தில் ஓடுகிறது. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, சோபியா வதோதராவில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி மற்றும் பின்னர் உயிர் வேதியியலில் எம்.எஸ்சி படித்தார். ஏனெனில் அவர் ஒரு பேராசிரியராக விரும்பினார். பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் கற்பித்தலும் படித்துக் கொண்டிருந்தபோது, ​​குறுகிய சேவை ஆணையம் மூலம் ராணுவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். என் சகோதரி பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகச் சேர்ந்தார். அதேநேரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.. இதற்கிடையில், அவர் இந்திய ராணுவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தனது முனைவர் பட்டத்தையும் கற்பித்தல் வாழ்க்கையையும் விட்டுவிட்டு படைகளில் சேர முடிவு செய்தார்" என்று சகோதரர் முகமது சஞ்சய் நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடைகிறார். 

நாடே எங்களுக்கு முக்கியம்:

கர்னல் சோபியாவின் இரட்டை சகோதரி, ஷைனா சன்சாரா, மும்பையில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இணைந்து நடத்தி வருகிறார். சோபியாவின் குடும்பமே ஒரு பாரம்பரியமான ராணுவ குடும்பமாகும். நாட்டிற்காக தியாகம் செய்யும், ஒரு துணிச்சலான குடும்பமாகும். அவரது தந்தை தாஜ் முகமது குரேஷி, ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆவார். தம்முடைய மகள் சோபியா குரேஷியின் துணிச்சலான செயல் குறித்து கருத்து கூறியுள்ள தாஜ் முகமது குரேஷி, "எங்களுக்கு நாடு தான் முதன்மையானது. எங்கள் குடும்பம் எப்போதும் தேசப்பற்று மிக்க குடும்பமாக இருந்து வருகிறது. என்னுடைய மகள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாத நடவடிக்கைகளை அழித்ததைக் கண்டு உண்மையில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமை கொள்கிறேன். எங்களுக்கு முதன்மையானது நாடு தான்.  மதம், மொழி அனைத்தும் பிறகு தான்  என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் முதலில் இந்தியர்கள். பிறகு தான் முஸ்லிம்கள்." இப்படி பெருமையுடன் கூறி, தம்முடைய நாட்டுப்பற்றை தாஜ் முகமது குரேஷி மட்டுமல்ல, அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளிப்படுத்தி வருகிறார்கள். 

கர்னல் சோபியா குரேஷி - சில தகவல்கள் :

இந்திய ராணுவத்தின் ஒரு மூத்த அதிகாரியான கர்னல் சோபியா குரேஷி,  ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணியில் இந்தியப் படையை வழிநடத்திய முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் ஆவார். மேலும், 2025 இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது, தனது தலைமைப் பாத்திரத்திற்காக தேசிய கவனத்தைப் பெற்றார். 2016 ஆம் ஆண்டு, பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய இராணுவக் குழுவிற்கு தலைமை தாங்கிய முதல் பெண் அதிகாரியான சோபியா, குஜராத்தின் வதோதரா பகுதியைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் கர்னல் பதவி வகிக்கும், சோபியா குரேஷி, கடந்த 1974ஆம் ஆண்டு பிறந்தவர்.  தற்போது ஜம்மு பிராந்தியத்தில் பணியாற்றுகிறார். அவரது கணவர் தாஜுதீன் பாகேவாடி ஜான்சி பிராந்தியத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார்.

கர்னல் சோபியா குரேஷியின் குடும்பமே இராணுவ பாரம்பரியம் உள்ள குடும்பமாகும். அவரது தந்தை, வங்கதேச  விடுதலை போரில் பங்கு பெற்றவர். அவரது பாட்டனார் இந்திய ராணுவத்தில் பணியாற்றி நாட்டிற்காக சேவை செய்தவர். சோபியாவின் பாட்டி, ராணி லட்சுமி பாய் ராணுவத்தில் கடந்த 1857ஆம் ஆண்டு பணியாற்றி, பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக போராடிய வீரப் பெண்மணி ஆவார். 

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சோபியாவின் கணவர் தாஜுத்தீன் கூட ஒரு ராணுவ அதிகாரியாக தான் பணியாற்றி வருகிறார். இப்படி சோபியா குரேஷியின் குடும்பம் மட்டுமல்லாமல், அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் குடும்பங்கள் கூட, இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பிற்காக உழைத்து வருகிறது. 

மற்றொரு சுவையான தகவல் என்னவென்றால், சோபியாவின் மகன் சமீர் இந்திய விமானப் படையில் சேர வேண்டும் என இலட்சியத்துடன் அதற்காக தம்மை தயார்படுத்தி வருகிறார். இப்படி, கர்னல் சோபியா குரேஷியின் குடும்பமே ஒரு ராணுவ பராம்பரிய குடும்பமாக இருந்து வருவதை அறியும் போது உண்மையில் முஸ்லிம்கள் பெருமை கொள்ள வேண்டும். 

இப்படிப்பட்ட இராணுவ பராம்பரியம் உள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷியை, பயங்கரவாதிகளின் சகோதரி என மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜய் ஷா விமர்சனம் செய்து இருக்கிறார். பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். ஆனால்,  எவ்வளவு கேடுகெட்ட சிந்தனை இருந்தால் இதுபோன்று அவர்கள் ஒரு கர்னலை விமர்சனம் செய்ய முடியும் என்பதையும், பா.ஜ.க.வினர் எத்தகையை எண்ணம் கொண்டவர்கள் என்பதையும்  நாட்டு மக்கள் அறிந்துகொள்ள முடிகிறது. 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: