"ஒரு ஏழை காஷ்மீரியின் ஹஜ் கனவு"
ஏக இறைவன் நாடிவிட்டால், பிறகு யார் தான் தடுக்க முடியும்?
புனித ஹஜ் பயணக் காலம் தற்போது தொடங்கிவிட்டது. மக்காவில் இருக்கும் இறை இல்லத்தைக் கண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் நாடுகளில் இருந்து விமானம் மூலம் ஹஜ் பயணம் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் இருந்தும் ஹஜ் பயண விமானங்கள் புறப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. கர்நாடகா, காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற தேர்வு செய்யப்பட்ட ஹாஜிகள், தங்கள் இனிய பயணத்தை தொடங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி ஹஜ் பயணம் தொடங்கும் ஹாஜிகளை வழியனுப்ப, ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் ஹஜ் இல்லங்களுக்கு அவர்களின் உறவினர்கள் வந்து தங்களது வாழ்த்துகளை கூறி, ஏக இறைவனிடம் தங்களுக்காகவும் துஆ கேட்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். விமான நிலையம் வரை சென்று தங்கள் உறவினர்களின் ஹஜ் பயணம் எந்தவித சிரமமும் இல்லாமல் சிறப்பாக அமைய வேண்டும் என துஆ செய்துவிட்டு, மீண்டும் தங்கள் இல்லங்களுக்கு திரும்புகிறார்கள்.
ஏழை காஷ்மீரியின் ஹஜ் கனவு:
ஹஜ் பயணிகளை வழியனுப்பி வைக்க வரும் உறவினர்கள், நண்பர்கள் தங்களுக்கும் ஹஜ் பயணம் செய்ய ஏக இறைவன் வாய்ப்பு அளிக்க வேண்டும் என ஆசைக் கொண்டு, அதற்காக பிரார்த்தனை செய்கிறார்கள். ஒவ்வொரு முஸ்லிம்களின் முக்கிய கனவாக, விருப்பமாக, ஆசையாக ஹஜ் இருந்து வருகிறது. குறிப்பாக, ஏழை மக்களின் விருப்பமாக ஹஜ் இருந்து வருகிறது. தங்களிடம் வசதி, வாய்ப்பு, செல்வம் இல்லாதபோதிலும், அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள தொடர்ந்து கனவு காண்கிறார்கள். செல்வ வசதி படைத்த பலர், ஹஜ் பயணம் மேற்கொள்ளாமல் இருக்கும் நிலையில், ஏழை முஸ்லிம்களின் மனதில் ஏக இறைவன் ஹஜ் ஆசையை போட்டுவிட்டு, அவர்களுக்கு ஒருவித மகிழ்ச்சியை தொடர்ந்து தந்துகொண்டே இருக்கிறான். இந்த இனிய கனவுகள் மூலம் அவர்களுடைய வாழ்க்கையில் எப்போதும் ஏக இறைவனின் பயம் இருந்துகொண்டே இருக்கிறது. ஒழுக்க வாழ்க்கையை மேற்கொள்ளும் பண்பு அவர்கள் மத்தியில் ஏற்பட்டு தூய இஸ்லாமிய வாழ்க்கையை வாழும் ஒரு நல்ல நிலையை இத்தகைய ஏழை முஸ்லிம்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.
அத்தகைய ஒரு கனவை தான் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்ற முதியவர் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டு தனது மனதில் விதைத்துகொண்டே வந்தார். ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளை வழியனுப்பு அப்துல் ரஹ்மான் ஸ்ரீநகரின் ஹஜ் ஹவுஸின் வாயில்களில் பல தசாப்தங்களாகக் கழித்தார். ஹஜ் பயணம் செய்யும் மற்றவர்களை வழியனுப்பினார். ஒவ்வொரு ஆண்டும், யாத்ரீகர்கள் ஸ்ரீநகரின் ஹஜ் ஹவுஸில் சூட்கேஸ்கள் மற்றும் பிரார்த்தனைகளுடன் கூடியபோது, அப்துல் ரஹ்மான் பக்கத்தில் நின்றார். அவர் எந்த சாமான்களையும் எடுத்துச் செல்லவில்லை. டிக்கெட்டையும் எடுத்துச் செல்லவில்லை. 45 ஆண்டுகளாக, அவர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வரவில்லை. மற்றவர்கள் செல்வதைப் பார்க்க ஆசையோடு வந்தார்.
67 வயதில், ரஹ்மான் நகரத்தின் ஒரு சாதாரண மூலையில் தனியாக வசிக்கிறார். அவருக்கு நிலையான வருமானமோ அல்லது நம்பியிருக்க குடும்பமோ இல்லை. அதற்கு பதிலாக அவர் சுமந்து செல்வது ஒருபோதும் கைவிடாத ஒரு அழகிய ஹஜ் கனவு. "ஒவ்வொரு ஆண்டும் நான் ஹஜ் பயணிகளை பார்க்க வருவேன். எனக்கு அது நிம்மதியைத் தரும். எனக்கு ஏக இறைவன் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என அப்போது ஏங்குவேன். அதற்காக ஹாஜிகளிடம் எனக்கு ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைப்பேன். என் வாழ்நாள் முழுவதும் அந்த அழைப்பிற்காக நான் காத்திருந்தேன்" என்று கண்ணீர் மல்க அப்துர் ரஹ்மான் கூறியது அனைவரின் நெஞ்சத்தையும் தொட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஹாஜிகள் கூட, அப்துர் ரஹ்மானுக்காக துஆ செய்தார்கள்.
இறுதியாக அழைப்பு வந்தது:
ஸ்ரீநகர் ஹஜ் ஹவுஸுக்கு வெளியேஅப்துர் ரஹ்மான் அமைதியாக நிற்கும் ஒரு சிறிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான பிறகு, உள்ளூர் பத்திரிகையாளர்கள் அவரைச் சந்தித்தனர். அவரது ஹஜ் விருப்பம், கனவு குறித்து பேட்டி எடுத்து அதை ஒளிப்பரப்பினார்கள். ஒருசில பத்திரிகையாளர்கள், அப்துர் ரஹ்மானுக்கு ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்தனர். தொலைபேசியில் குப்வாராவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் இருந்தார். அழைத்தவர் அப்துர் ரஹ்மான் இதுவரை சந்தித்திராத ஒருவர். ஆனால் அந்த மருத்துவர், ஏழை அப்துர் ரஹ்மானின் ஹஜ் மற்றும் மருத்துவ செலவுகளுக்கு நிதியுதவி செய்ய முன்வந்தார்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள மருத்துவர் "அவரது சகோதரர் அப்துல் மஜீத் கான் முதியவர் அப்துர் ரஹ்மானின் ஹஜ் கனவு குறித்த வீடியோவை தன்னுடன் பகிர்ந்து கொண்டார்.மேலும் உங்களால் உதவி முடியுமா என்றும் அவர் கேட்டார்" என்று தெரிவித்துள்ளார். "நேர்காணலைப் பதிவு செய்த ஊடக நிபுணர்களைத் தொடர்பு கொண்டு சரிபார்ப்பைக் கேட்டேன். மஸ்ஜித் குழுக்கள் அவரது கதையை உறுதிப்படுத்தியவுடன், நான் மறுமுறை யோசிக்கவில்லை. காபாவை அடைய அவருக்கு உதவ வேண்டும் என்று எனக்கு மனதில் இறைவன் ஒரு உறுதியான எண்ணத்தை போட்டுவிட்டான். நானும் அதற்கு தயாராகிவிட்டேன்" இப்படி அழகிய முறையில் தனது நற்செயல் குறித்து அந்த மருத்துவர் கூறியுள்ளார்.
கண்ணீர் வழிய ஆனந்தம்:
முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு மருத்துவர் தனது ஹஜ் கனவை நிறைவேற்ற உதவி செய்ய முன்வந்து இருப்பதை அறிந்த முதியவர் அப்துர் ரஹ்மான், மனம் உருகிய மருத்துவருக்கும் உதவி செய்ய முன்வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் "ஹஜ் பயணம் செய்ய விரும்பும் அனைவருக்கும் அல்லாஹ் அவர்களின் கனவை நிறைவேற்றுவானாக" என்று அவர் கண்ணீர் வழிய, முகத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, "இன்று, நான் இனி தனியாக உணரவில்லை" என்று கூறி ஆனந்தம் அடைந்துள்ளார்.
பல தசாப்தங்களாக, ரஹ்மான் ஹஜ் இல்ல வாயில்களுக்குச் சென்று திரும்பினார். யாத்ரீகர்களுடன் தனது பிரார்த்தனைகளை அனுப்புவதற்காக அல்ல, புறப்படுவதற்காக அல்ல. பெரும்பாலும், அவர் கூட்டத்திலிருந்து விலகி நின்றார். அவரது இருப்பு "அவர்களின் தூய்மையைக் கெடுக்கும்" என்று பயந்தார். ஏன் ஒருபோதும் விண்ணப்பிக்கவில்லை என்று கேட்டபோது "நான் தகுதியற்றவன்" என்று அவர் கூறுவார். உண்மை எளிமையானது. பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர் காபாவை ஒரு கனவில் கண்டார். இஸ்லாத்தின் புனிதமான தளத்தின் மையத்தில் உள்ள கருப்பு-போர்டட் கனசதுரத்தின் அந்த உருவம். அவரது ஆன்மீக நங்கூரமாக மாறியது. அவர் அதை கடுமையான குளிர்காலம், வேலை இழப்பு மற்றும் முதுமை ஆகியவற்றின் மூலம் தக்க வைத்துக் கொண்டார்.
"இந்த வாழ்க்கையில் இல்லையென்றால், அடுத்த வாழ்க்கை என்று நான் எப்போதும் எனக்குள் சொல்லிக் கொண்டேன்" என்று அப்துர் ரஹ்மான் சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால், அவரது கதை ஸ்ரீநகருக்கு அப்பால் ஒரு நரம்பைத் தாக்கியுள்ளது. ஆன்லைனில், அந்நியர்கள் அவரது வீடியோவைப் பகிர்ந்து கொண்டனர். பலர் ஹஜ் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றாமல் இறந்த உறவினர்களை இந்த வீடியோ நினைவூட்டுவதாகக் கூறினர். மற்றவர்கள் இது கருணை, பொறுமை மற்றும் எதிர்பாராதவற்றின் மீதான தங்கள் நம்பிக்கையைப் புதுப்பித்ததாகக் கூறினர்.
ஏக இறைவன் நாடிவிட்டால்:
தற்போது ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஒரு அறிமுகம் இல்லாத மருத்துவரிடம் இருந்து அப்துர் ரஹ்மானுக்கு கிடைத்து இருக்கிறது. அதை அவர் எப்படி உணர்கிறார் என்று கேட்டபோது, அவர் மெல்லிய புன்னகையுடன் சிரித்தார். “நான் ஏற்கனவே என் இதயத்தில் பதிவுசெய்து விட்டுவிட்டேன்” என்று அவர் கூறினார். ஆனால் உண்மையிலேயே மற்றவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள புறப்பட்டுச் செல்வதைப் பார்த்த முக்கியமான காத்திருப்பு, 45 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக இந்தாண்டு முடிந்தது. ஆம், 67 வயதான அப்துர் ரஹ்மான் கண்ட கனவை ஏக இறைவன் நிறைவேற்றிவிட்டான். அதுவும் அறிமுகம் இல்லாத ஒரு நபரின் உதவியுடன் நிறைவேற்றி இருக்கிறான்.
ஏக இறைவன் நாடிவிட்டால், பிறகு யார் தான் தடுக்க முடியும். இந்த கட்டுரையை எழுதும் எனக்கு கூட ஏக இறைவன் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கிவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. எப்படியாவது இறைவன் உதவி செய்துவிடுவான். முன்பின் அறிமுகம் இல்லாத நல்ல உள்ளங்கள் கூட உதவி செய்ய முன்வந்துவிடுவார்கள். ஹஜ் கனவை நிறைவேற்றி விடுவார்கள். ஹஜ் பயணம் மேற்கொள்ளும் கனவை காணுங்கள். ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து அதற்காக பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம் ஏக இறைவன் உங்களுக்கு உதவ யாரையாவது அனுப்பி வைப்பான். ஏழை காஷ்மீரி அப்துர் ரஹ்மானுக்கு உதவ ஒரு அறிமுகம் இல்லாத மருத்துவரை அனுப்பி வைத்தைப் போல, எனக்கும் உங்களுக்கும் ஏக இறைவன் நிச்சயம் அனுப்பி வைப்பான்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment