"இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களுடன், நாள்தோறும் பசி, பட்டினியால் செத்து மடியும் காசா மக்கள்"
பாலஸ்தீனியர்கள் தங்களது சொந்த பூமியில் இருந்து வெளியேற்றப்பட்டு 77 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 1948 ஆம் ஆண்டு யூத பயங்கரவாதிகளால், பாலஸ்தீனியர்கள் இன அழிப்பு தொடங்கப்பட்டு இன்னும் அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 1948-இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர், நக்பாவின் விளைவாக பாலஸ்தீனியர்கள் நிரந்தரமாக பெருமளவில் இடம்பெயர்ந்தனர். காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இன்று வரலாறு மீண்டும் நிகழ்கிறது. மீண்டும் திரும்பி இருக்கிறது. காசா பகுதியில் இருந்து பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் அப்பாவி குழந்தைகள், பெண்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். காசா முழுவதும் மக்கள் பசியால் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பாமல், இஸ்ரேல் காசாவை சீல் வைத்து தடுத்துள்ளது.
இத்தகைய கொடுமையான சூழ்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (23.05.2025) அன்று அதிகாலை முதல் காசா முழுவதும் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 76 பேர் கொல்லப்பட்டனர். மேலும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. காசாவின் ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஒரு குடும்ப வீட்டின் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்தியதில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். "இஸ்ரேலிய இராணுவம் வேடிக்கைக்காக பொதுமக்களைக் கொல்கிறது" என்று காசா முஸ்லிம் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மனிதக் கேடயங்களாக பாலஸ்தீனர்கள் :
இஸ்ரேலிய துருப்புக்கள், காசாவில் பாலஸ்தீனியர்களை மனிதக் கேடயங்களாகச் செயல்படுமாறு திட்டமிட்டு கட்டாயப்படுத்துவதாகவும், குண்டுகள் மற்றும் போராளிகளைச் சரிபார்க்க கட்டிடங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்குள் அனுப்புவதாகவும் பல பாலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளனர்.
19 மாதப் போரின் போது இந்த நடைமுறை எங்கும் பரவிவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். இஸ்ரேலிய ராணுவத்தினர், தங்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டபோது மட்டுமே தாம் கட்டப்பட்டிருக்கவில்லை அல்லது கண்களைக் கட்டப்படவில்லை என்று ஒரு பாலஸ்தீனிய நபர் கூறியுள்ளார். "நாங்கள் சொல்வதைச் செய்யுங்கள். இல்லையெனில் நாங்கள் உங்களைக் கொன்றுவிடுவோம்" என்று காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் மிரட்டிக் கொண்டே இருக்கிறது. “அவர்கள் என்னை அடித்து, ‘உனக்கு வேறு வழியில்லை; இதைச் செய் அல்லது உன்னைக் கொன்றுவிடுவோம்’ என்று என்னிடம் சொன்னார்கள்” என்று 36 வயதான காசாவாசி வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், ஐ.நா.வின் அல்பானீஸ் மருத்துவர்களின் குடும்பத்தினரை குறிவைப்பது இனப்படுகொலையின் ‘துரோகப் போக்கை’ காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.வின் கண்துடைப்பான கண்டிப்பு :
கடந்த வெள்ளிக்கிழமை பாலஸ்தீன மருத்துவர்கள் அலா மற்றும் ஹம்டி அல்-நஜ்ஜருக்குச் சொந்தமான வீட்டின் மீது இஸ்ரேல் குண்டுவீசியதை, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களுக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ், கண்டிதுள்ளார். இந்த தாக்குதலில், அலா மற்றும் ஹம்டி அல்-நஜ்ஜர் குடும்பத்தில் 10 குழந்தைகளில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்தில் தன்னார்வத் தொண்டு செய்யும் நார்வே மருத்துவர் மேட்ஸ் கில்பர்ட் வெளியிட்ட வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள அல்பானீஸ், "இந்தத் தாக்குதல் இனப்படுகொலையின் புதிய கட்டத்தின் தனித்துவமான துரோகப் போக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக்" கண்டித்துள்ளார்.
இஸ்ரேலிய குடியேறிகளின் பழிவாங்கும் கும்பல்கள் பாலஸ்தீனியர்களை அவர்களின் வீடுகளில் இருந்து விரட்டியடித்துள்ளன. காசா மீதான போருக்குப் பிறகு, இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்கள் மிகவும் வெட்கக்கேடானதாகிவிட்டன. “எங்கே பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் (இஸ்ரேலிய குடியேறிகள்) கற்கள், மொலோடோவ் காக்டெய்ல்கள் மற்றும் வெடிபொருட்களை வீசினர். அவர்கள் மோதியபோது, கார் உடனடியாக தீப்பிடித்தது” என்று ப்ருகின்னில் வசிக்கும் பாலஸ்தீனிய குடியிருப்பாளரும் கடந்த வெள்ளிக்கிழமை அங்கு நடந்த தாக்குதலுக்கு சாட்சியுமான ஃபாடி சமாரா தெரிவித்துள்ளார். “அவர்கள் சரியாக என்ன பயன்படுத்துகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இதுதான் நீங்கள் உங்கள் முன் காணும் உண்மை. அவர்கள் பல கார்களை எரித்துள்ளனர், ப்ருகினில் மட்டுமல்ல, இந்த பழிவாங்கும் கும்பல்கள் மேற்குக் கரை முழுவதும் பரவியுள்ளன” என்றும் அவர் கூறியுள்ளார்.
தாக்குதல்கள் அதிகரிப்பு:
காசாவில் இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. அத்துடன், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல் அதிகரித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பாலஸ்தீனியர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீது இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்கள் பற்றிய அதிக அறிக்கைகள் வந்துள்ளன. காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து அங்கு குடியேறிகளின் வன்முறை அதிகரித்துள்ளது.
அண்மை காலத்தில் காசா முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் பல கொடிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு (24.05.2025) முதல் குறைந்தது எட்டு பாலஸ்தீனியர்களைக் கொன்றது. இதில் காசா நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு கூடாரத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது, அதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
மத்திய காசாவில் "பல ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்களை" குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலின் இராணுவமும் கூறியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் சிலர், உதவி லாரிகளுக்கு அருகில் நின்ற "ஹமாஸ் செயற்பாட்டாளர்கள்" என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறு பேரும் ஹமாஸ் போராளிகள் அல்ல என்று காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் மறுத்துள்ளது, அவர்கள் "முற்றிலும் மனிதாபிமான பணிகளைச் செய்யும் உதவி பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் ஊடக அலுவலகம் கூறியுள்ளது.
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், காசாவில் போரை நிறுத்துவதற்கான சர்வதேச முயற்சிகள் மற்றும் "பள்ளத்தாக்கு பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க சவுதி, ஜோர்டான், எகிப்து மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை பாரிஸில் சந்தித்தனர். ஆனால் அதில் மிகப்பெரிய அளவுக்கு முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
பசி, பட்டினியால் செத்து மடியும் காசா மக்கள் :
காசாவில் இஸ்ரேல் நடத்திய "கொடூரமான அளவிலான கொலை மற்றும்
அழிவு" குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ
குட்டெரெஸ் எச்சரிக்கை விடுத்தார். சமீபத்திய உதவி விநியோகம்
"இப்போது ஒரு டீஸ்பூன் உதவிக்கு சமம்" என்றும் அவர் வேதனை
தெரிவித்துள்ளார். "காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் இந்த கொடூரமான மோதலின்
மிகக் கொடூரமான கட்டமாக இருக்கிறார்கள்" என்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா.
தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது குட்டெரெஸ் கூறினார்.
இத்தகைய கடுமையான சூழ்நிலையில், "காசாவை முற்றிலுமாக அழித்து அதன் மக்களை
கட்டாயமாக இடம்பெயரச் செய்ய வேண்டும்" என்று இஸ்ரேலிய அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்
வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். "காசாவில் ஒரு கல்லைக்கூட நாங்கள்
விட்டு வைக்க மாட்டோம். நாங்கள் கரையில் எஞ்சியிருப்பதை அழித்து வருகிறோம். கடைசி
பணயக்கைதி திரும்பும் வரை, தண்ணீர் கூட உள்ளே அனுமதிக்கப்படக்கூடாது" என்று
அவர் மனிதநேயம் இல்லாமல் கூறியுள்ளார். காசா மக்களுக்கு
பயனளிக்கக்கூடிய எந்தவொரு உதவியும் நுழையப்படுவதை நிராகரித்த அதேவேளையில், குறைந்தபட்ச
உணவு மற்றும் மருந்து மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் இதுவும் தற்காலிகமாக
மட்டுமே -என்றும் ஸ்மோட்ரிச் அறிவித்துள்ளார். காசாவின்
மக்கள், தெற்கிற்கும், இறுதியில் மூன்றாம் நாடுகளுக்கும் பெருமளவில்
வெளியேற்றப்படுவார்கள் என்றும் அந்த அமைச்சர் கூறியுள்ளார். இந்த அறிக்கைகள்
வெறும் சொல்லாட்சியை மட்டுமல்ல, கூட்டு தண்டனை மற்றும் இன அழிப்பு கொள்கையையும்
பிரதிபலிக்கின்றன . இது சர்வதேச சட்டத்தை நேரடியாக மீறுவதாகும்.
காசாவில் போரை நிறுத்த உலகம் தவறிவிட்டது :
இதுஒருபுறம் இருக்க, பாக்தாத்தில் நடந்த அரபு
உச்சி மாநாட்டில் பேசிய ஜோர்டானிய பிரதமர் ஜாபர் ஹசன், காசாவில் போரின் விளைவுகள்
பல ஆண்டுகள் நீடிக்கும் என்று வேதனையுடன் எச்சரித்துள்ளார், மன்னர் மேலும்,
இரண்டாம் அப்துல்லாவின் சார்பாக, மனிதாபிமான பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர அவர்
அழைப்பு விடுத்தார். அத்துடன், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமில் உள்ள இஸ்லாமிய
மற்றும் கிறிஸ்தவ புனித தளங்களைப் பாதுகாப்பதில் ஜோர்டானின் உறுதிப்பாட்டை
மீண்டும் உறுதிப்படுத்தினார்.
காசாவில் போர் நின்று, அங்குள்ள மக்கள் அமைதியாக வாழ சர்வதேச அமைப்புகள் எந்தவித
உறுதியான முயற்சிகளையும் எடுக்கவில்லை. இஸ்ரேலுக்கு எதிராக உறுதியாக நடவடிக்கைகளை
மேற்கொள்ளவில்லை. மாறாக, இஸ்ரேலின் அடாவடியை, கொடூரங்களைக் கண்ணை மூடி வேடிக்கைப்
பார்த்துக் கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு
மத்தியில் ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்துக் கொண்டும், உணவுக்கு ஏங்கிக் கொண்டும்,
அங்குள்ள பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இல்லை, ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.
ஹிட்லர் என்ற சர்வாதிகாரிக்குப் பிறகு, உலகில் அதிகளவு மக்களை கொன்று குவித்த ஒரு கொடூர மனிதன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு என்றே உறுதியாக கூறலாம். கடைசியாக, ஏக இறைவன் தான் காசா மக்கள் மீது கருணை காட்ட வேண்டும். அவர்களின் துயரங்கள் நீங்கி, மீண்டும் அவர்களின் பூமி அவர்களின் கைகளில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment