பாகிஸ்தானுக்கு எதிராக உலகளாவிய பிரச்சாரத்திற்கான இந்தியக் குழுவில் இடம்பெற்றது இ.யூ.முஸ்லிம் லீகிற்கு அளிக்கப்பட்ட ஒரு கௌரவம்....!
தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முகமது பஷீர் எம்.பி. பெருமிதம்...!!
புதுடெல்லி, மே.21- பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய பிரச்சாரத்திற்கான இந்தியக் குழுவில் காங்கிரஸ் தலைமையிலான கேரள ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (யு.டி.எஃப்) முக்கிய அங்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மக்களவைத் தலைவர் இ.டி. முகமது பஷீர் எம்.பி. ஒருவார் ஆவார். அரசியல் ரீதியாக ஆதாயம் பெறுவதற்காக பா.ஜ.க. அடிக்கடி இ.யூ.முஸ்லிம் லீகை குறிவைத்திருந்தாலும், பாகிஸ்தானுக்கு எதிரான உலகளாவிய பிரச்சாரத்திற்கான இந்தியக் குழுவில் சேர மத்திய அரசு பஷீரை விரைவாகத் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தது.
இ.டி.முகமது பஷீர் கருத்து:
ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்த அழைப்பு குறித்து கருத்து கூறியுள்ள இ.டி.முகமது பஷீர், "உலக நாடுகளுக்கு, குறிப்பாக பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் நமது நாட்டிற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு எதிராக நமது தேசிய நோக்கத்தை முன்வைக்க இந்தியக் குழுவில் இடம்பெற்றிருப்பது எனது கட்சிக்கும் எனக்கும் கிடைத்த ஒரு மிகப்பெரிய கௌரவம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இந்தியக் குழுக்கள் பயங்கரவாதத்தின் ஆபத்துகளுக்கு உலகை மேலும் விழிப்புணர்வடையச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தியக் குழுவில் ஒரு உறுப்பினராக, இந்தப் பணிக்கு எனது பங்களிப்பைச் செய்வேன்," என்றும் பஷீர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை ஆதரவு:
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லைபீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட இந்தியக் குழுவில் பஷீர் இடம்பெற்றுள்ளார். ஒன்றிய அரசின் அழைப்பைப் பற்றியும், தாம் இந்தியக் குழுவில் அங்கம் வகிப்பது பற்றியும் இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை மிகவும் நேர்மறையாக இருந்தது என்று கூறியுள்ள பஷிர், ஏனெனில் இது நமது தேசிய நலன் மற்றும் தேசிய நோக்கத்தை உள்ளடக்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சஷி தரூர் உள்ளிட்ட அதன் எம்.பி.க்களை அரசாங்கம் அணுகுவதற்கு காங்கிரஸ் தலைமை ஆட்சேபனை தெரிவித்தது குறித்து கேட்டதற்கு, "இது காங்கிரஸின் உள் விவகாரம்" என்று பஷீர் கூறினார். இருப்பினும், தரூர் மற்றும் ஜான் பிரிட்டாஸ் ஆகியோரும் அவருடன் பிரதிநிதிகளில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முகமது பஷீர் கூறியுள்ளார்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment