ஏக இறைவன் நாடிவிட்டால்...!
- ஒரு லிபிய ஹஜ் பயணியின் நம்பமுடியாத கதை -
உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களின் இலட்சியக் கனவாக இருப்பது, தங்கள் வாழ்க்கையில் எப்படியாவது ஒருநாள், புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்பதாகும். ஹஜ் கடமையை தற்போது மிகவும் எளிமையான முறையில் நிறைவேற்றிட வாய்ப்புகள், வசதிகள் அதிகமாக இருந்தாலும், ஏக இறைவனின் பல்வேறு சோதனைகளை தாண்டி தான் ஹஜ் கடமையை நிறைவேற்றக் கூடிய நிலைகள் இருந்து வருகின்றன. இந்தாண்டு 2025 உலகம் முழுவதும் இருந்து சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா புறப்பட்டு சென்று இருக்கிறார்கள். சவுதி அரேபியாவில் தற்போது கடுமையான வெப்ப காலம். கடும் வெப்பம் என்பது அசாதாரணமான மற்றும் நீண்ட கால வெப்ப நிலையாகும். இது பெரும்பாலும் தொடர்ச்சியான நாட்களுக்கு மேல் நீடிக்கும். இது வெப்ப அலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வெப்ப நிலை, ஒரு குறிப்பிட்ட பகுதியில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பநிலையை கொண்டிருக்கும். இத்தகைய ஒருநிலை வெப்பம் தான் தற்போது மக்கா, மதினா நகரங்களில் இருந்து வருகிறது.
வெப்ப அலை இருந்தாலும், அதைப்பற்றி சிறிதும் கவலைக் கொள்ளாமல் ஹாஜிகள், தங்களுடைய கடமையை நிறைவேற்ற, ஏக இறைவனின் அருளைப் பெற மக்காவில் குவிந்து இருக்கிறார்கள். வரும் ஜுன் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளின் ஹாஜிகளுக்கு மிகவும் முக்கியமான நாட்களாகும். ஹஜ் கடமையை நிறைவேற்ற செய்ய வேண்டிய கடமைகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய நாட்களாகும். கடும் வெயில் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் இருந்தாலும், சவுதி அரேபிய அரசு ஹஜ் பயணிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் தங்கள் கடமையை நிறைவேற்ற ஏற்பாடுகளை செய்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான், ஒரு லிபிய ஹஜ் பயணியின் நம்பமுடியாத கதை ஒன்று தற்போது உலகத்தின் பார்வைக்கு வந்துள்ளது. சோதனைகளுக்கு மத்தியில் அந்த லிபிய பயணி ஹஜ் கடமையை நிறைவேற்ற எப்படி மக்காவிற்கு சென்றார் என்பதை நாம் அறியும்போது, உண்மையில் ஏக இறைவனின் கருணையை நினைத்து மனம் வியப்பு அடைக்கிறது.
நம்பமுடியாத விமான நிலைய சோதனை :
லிபியாவைச் சேர்ந்தவர் இளைஞர் அமீர் அல்-மஹ்தி மன்சூர் அல்-கடாபி. இந்த இளைஞருக்கு எப்படியும் இந்தாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அந்த விருப்பத்தின் பேரில், ஹஜ் கடமையை நிறைவேற்ற அவர் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஹஜ் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தனது நாட்டில் இருந்து அவர் புறப்பட்டார். அவரது பயணம் எதிர்பார்ப்பு மற்றும் ஆன்மீக நோக்கத்தால் நிறைந்த லிபிய விமான நிலையத்தில் இருந்து தொடங்கியது. இருப்பினும், அமீர் அல்-மஹ்தி மன்சூர் அல்-கடாபி விரைவில் எதிர்பாராத ஒரு சோதனையை எதிர்கொண்டார். அவரது குடும்பப்பெயர் "கடாபி" என்று இருந்ததால், குடியேற்ற அதிகாரிகளிடையே குழப்பங்களை ஏற்படுத்தியது. அவர்கள் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக அவரது விமானப் பயணத்தைத் தடுத்து நிறுத்தினர்.
அமீரின் தோழர்கள் அனைவரும் விமானத்தில் ஏறும்போது, அவர் மட்டும் பின்தங்கினார். விமான நிலைய அதிகாரிகள் அவரது ஆவணங்களை மதிப்பாய்வு செய்தபோது பாதுகாப்பு காரணங்களுக்காக கவுண்டரில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டார். விமானம் புறப்பட வேண்டிய நேரம் கடந்துவிட்டது. இறுதியில், விமானத்தின் கதவுகள் அவரது கண்களுக்கு முன்பே மூடப்பட்டன. அவரது குழுவின் மற்ற தோழர்கள் புறப்பட்டிருந்தாலும், அமீரின் நம்பிக்கை அசைக்கப்படாமல் இருந்தது. அமைதியான உறுதியுடன், "இறைவன் நாடினால், நான் ஹஜ்ஜுக்கு புறப்படும் வரை இந்த விமான நிலையத்தை விட்டு வெளியேற மாட்டேன்" என்று அவர் அறிவித்தார். விமான நிலையத்திலேயே காத்திருந்தார்.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு :
அதைத் தொடர்ந்து பின்னர் நடந்ததை அசாதாரணமானது என்று மட்டுமே விவரிக்க முடியும். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், ஆய்வுக்காக மீண்டும் விமான நிலையத்திற்குத் திரும்ப வேண்டியிருந்தது என்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. விமான நிலையத்திற்கு மீண்டும் விமானம் திரும்பிய நிலையில், இந்த நேரத்தில், அமீர் அல்-மஹ்தி மன்சூர் அல்-கடாபி என்ற ஒரு ஹஜ் யாத்ரீகர் விமானத்தில் ஏற அனுமதிக்காமல் பின்னால் விடப்பட்டதாகவும், அவரை இப்போது ஏற அனுமதிக்க முடியுமா என்று விமானியிடம், விமான நிலைய அதிகாரிகளின் குழுவினர் கேட்டனர். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, விமானி மறுத்துவிட்டார்.
நம்பிக்கையை இழக்கவில்லை :
ஆனாலும், அமீர் அல்-மஹ்தி மன்சூர் அல்-கடாபி நம்பிக்கையை இழக்கவில்லை. மக்காவை அடைவேன் என்ற நம்பிக்கையில் அவர் தொடர்ந்து விமான நிலையத்திலேயே காத்திருந்தார். இதன் பின்னர், ஒரு குறிப்பிடத்தக்க திருப்பத்தில், விமானம் மற்றொரு சிக்கலை எதிர்கொண்டது. இதனால் விமானம் மீண்டும் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விமானத்திற்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. விமானத்தை முழுமையாக ஆய்வு செய்தபிறகு, விமானி ஒரு அதிர்ச்சியூட்டும் இன்ப அறிவிப்பை வெளியிட்டார். "அமீர் கடாபி விமானத்தில் ஏறாவிட்டால் இந்த விமானம் மீண்டும் பறக்காது" என்பது தான் அந்த அதிர்ச்சியூட்டும் மகிழ்ச்சியான இன்ப அதிர்ச்சி அறிவிப்பாகும்.
இதன் பின்னர், விரைவில், விமான நிலைய அதிகாரிகள் அமீரின் அனுமதி தொடர்பான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்யும் பணிகளை விரைவுபடுத்தினர். இறுதியாக அமீர் அல்-மஹ்தி மன்சூர் அல்-கடாபி விமானத்தில் ஏறினார். அதன் மூன்றாவது முயற்சியில், விமானம் வெற்றிகரமாக புறப்பட்டது . அமீர் கடாபியும் ஹஜ் யாத்ரீகர்களில் ஒருவராக அந்த விமானத்தில் பறந்துகொண்டு இருந்தார்.
ஏக இறைவனின் விருப்பம் :
அமீர் அல்-மஹ்தி மன்சூர் அல்-கடாபியின் ஹஜ் பயணம் ஒரு உத்வேகத்தின் ஆதாரமாக மாறியுள்ளது. நம்பிக்கை, பொறுமை மற்றும் ஏக இறைவனின் விருப்பத்தின் சக்தியை மக்களுக்கு நினைவூட்டியுள்ளது. அமீரின் கதை தற்போது முஸ்லிம் உலகம் முழுவதும் உள்ள இதயங்களைத் தொட்டுள்ளது. அதைக் கேட்ட பலருக்கு ஆன்மீக பிரதிபலிப்பை மீண்டும் தூண்டியுள்ளது.
இரண்டு முறை விமானம் திரும்பிய பிறகும் கூட அமீர் கடாபி ஹஜ்ஜை செய்ய மக்கா அடைகிறார் என்றால், அது ஏக இறைவனின் விருப்பம் இல்லாமல் நடைபெறாது. ஏக இறைவன் நாடிவிட்டால், பிறகு யார் தான் தடுக்க முடியும். அந்த வகையில் லிபிய ஹஜ் பயணி அமீர் அல்-மஹ்தி மன்சூர் அல்-கடாபியின் இந்த ஹஜ் பயணக் கதையில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஏக இறைவனின் கருணை எத்தகையது என்பதை உலக இஸ்லாமியர்கள் வியப்புடன் அறிந்துகொள்ளும் வகையில் அமீர் கடாபியின் கதை உள்ளது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment