Wednesday, January 8, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (43)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் -  43


அறிஞர் அண்ணா விரும்பியபடி மதுவிலக்கைக் கொண்டு வாருங்கள்:

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் வேண்டுகோள்

மதுவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழக தலைவர்களில் குமரி அனந்தன் மிகவும் முக்கியமானவர்.

தமிழகத்தில் மதுவிலக்கைக் கொண்டு வருவது குறித்து அவர் கூறிய சில யோசனைகள் இப்போது பார்க்கலாம்...

மதுவிலக்கு சாத்தியமில்லை என்று தமிழக அரசின் மதுவிலக்கு அமலாக்க அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளைக் கொண்டாடும் நேரத்தில் அறிவித்துள்ளார்.

நிதி பற்றாக்குறையைத் தவிர்க்க மதுக்கடைகளைத் திறக்கலாமே என்று முதல்- அமைச்சர் அண்ணாவிடம் சிலர் ஆலோசனை கூறிய போது, மதுவிலக்கால் வரும் நிம்மதி கோடானுகோடி பெறும் என்று உறுதியாகக் கூறியவர் பேரறிஞர் அண்ணா.

சுசீலா நய்யார் தலைமையின் மதுவிலக்கிற்கு ஆதரவாக சென்னையில் உண்ணாநோன்பு நடைபெற்றபோது, நேரில் சென்று அங்கே அமர்ந்து, மதுவிற்கு எதிரான தன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி ஆசிர்வதித்தார் பேரறிஞர் அண்ணா.

தமிழ்நாட்டைச் சுற்றி மது இருக்கும்போது மதுவிலக்கைக் கொண்டு வந்து தமிழ்நாடு தனித்தீவாக இருக்க முடியுமா? என்ற வினாவைத் தொடுத்துள்ளார் அமைச்சர்.


தமிழ்நாட்டைச் சுற்றி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் மதுக்கடைகள் இருந்தபோது, ராஜாஜி மேயரானவுடன் சேலம் நகரசபையில் உள்ள எல்லா கடைகளையும் மூடி மதுவிலக்கை அந்த நகரில் கொண்டு வந்தாரே!

குஜராத் மாநிலத்தில் செய்ய முடிந்ததை தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவாலும் செய்ய முடியும்- செய்ய வேண்டும்.  

மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாராயம் வந்து விடும், கஜானாவுக்கு வரவேண்டியவனவும் சமூக விரோதிகளுக்குச் சென்று விடும் என்கிறார் அமைச்சர்.

இப்போது மட்டும் என்ன? அரசின் அங்கீகாரம் பெற்ற மதுக்கடைகள் இருக்கின்றன. சென்னை, திருவண்ணா மலை, திருவள்ளூர், தஞ்சாவூர், தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் மட்டும் 12 போலி மது தயாரிக்கும் ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்க முடியாதவை எத்தனையோ?

2011-ல் மட்டும் மதுவிலக்கு சோதனையின் மூலம் 17 ஆயிரத்து 949 பெண்கள் உள்பட, 1 லட்சத்து 930 பேர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளன. 47 லட்சத்து 1,877 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளன. 7 லட்சத்து 95 ஆயிரத்து 22 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


இத்தகவல்களை தெரிவிப்பது தமிழக காவல்துறை அமலாக்கப்பிரிவு கூடுதல் இயக்குநர் காந்திராஜன். ஒரிஜினல் மது இருக்கும்போது ஏன் வந்தது போலி? எனவே மொத்தமாக மது விலக்கைக் கொண்டுவர தமிழக முதல்-அமைச்சர் ஆணை வெளியிட்டு, அண்ணாவின் நினைவையும் பெருமையையும் நிலைநாட்ட வேண்டும்.

மதுவை எதிர்க்கும் தலைவர்களையும், மது கூடாது எனக் கூறும் தொண்டு நிறுவனங்களின் சார்பாளர்களையும் அழைத்து, அவர்களையும் மதுவை ஒழிக்கத் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.


மதுவை ஒழித்துக் கட்டுவதில் தமிழக அரசுக்குத் துணையாக, சொன்ன இடத்தில் நின்று கண்காணித்து காவல் புரியச் சொன்னாலும் என்னைப் போன்றோர் தயாராக உள்ளோம்.

நல்ல யோசனைகள் தந்துள்ளார் குமரி ஆனந்தன்.

மதுவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் குமரி ஆனந்தனுக்கு எமது பாராட்டுகள்..

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (42)

" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"

நாள் -  42


மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?

அதிகமாக மது அருந்துகிறீர்களா? குடியை விட ஆசை, ஆனால் முடியாமல் போகிறதா? அப்படியெனில் தொடர்ந்து இதை கொஞ்சம் படியுங்கள்.

தற்போது குடி என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. மாணவர்கள், அலுவலக வேலையில் உள்ளவர்கள், தொழிலாளிகள் என்று பலரும் மது அருந்துகிறார்கள்.

அதனுடைய பின்விளைவுகளை அறியாது, தானும் கெட்டு, தன் குடும்பத்தையும் நடுத்தெருவுக்கே கொண்டு வந்து விடுகிறார்கள்.

குடியால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ உள்ளன. இதற்கு வீதிக்கு வீதி அமைந்திருக்கும் பார்களும் காரணமாகும்.

குடியை விட்டு விடலாம் என்று மனவுறுதியோடு இருப்பவர்கள் கூட, சரியில்லாத நட்பினால் மீண்டும் மீண்டும் குடியில் தள்ளப்படுகின்றனர்.

தற்போது இந்த குடியால் ஒட்டுமொத்த சமுதாயமே சீரழிந்து கொண்டிருக்கிறது. குடி போதையால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை சர்வ சாதாரணமாகிவிட்டது.

நாடு ஒரு பேரழிவான பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆண்கள் மட்டுமே குடிக்கு அடிமைப்பட்டு கிடந்த நிலை மாறி, பெண்களும் தற்போது இதற்கு அடிமையாகிவிட்டனர்.

குடியால் பல ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதாகவும், இதனால் காலப்போக்கில், உயிர்களின் உற்பத்தி குறைந்து கொண்டே சென்று, ஒரு கட்டத்தில் உயிர்கள் பிறப்பதே நின்றுவிடும் என்று ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது.


இவ்வளவு பேரழிவை தரும் குடியிலிருந்து விடுபட விரும்பினால், உங்களுக்காக இதோ சில குறிப்புகள்..

மனநல ஆலோசகரை அணுகுதல்......

குடியால் ஏற்பட்ட உளவியல் மாற்றம் மற்றும் உணர்ச்சிவசப்படும் நிலைகளைப் போக்க ஒரு நல்ல மனநல ஆலோசகரை அணுகுங்கள். அவர்களது ஆலோசனைகளை பின்பற்றவும்.

திகதியை குறித்துக் கொள்ளுதல்......

குடியை விட சில முக்கிய திகதியை தேர்ந்தெடுக்கவும். இன்றிலிருந்து குடிக்கமாட்டேன் என்று சபதமிடுங்கள். பெரும் குடிகாரராக இருந்தால் படிப்படியாக குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடவும்.

மது பாட்டில்களை தூக்கி எறிதல்......


குடி தொடர்புடைய அனைத்து விதமான கேன்கள், பாட்டில்கள் போன்றவற்றை தூக்கி எறியவும். விருந்தினர்கள் வந்தால் தேவைப்படுமே என்று நினைக்க வேண்டாம். அதற்கு பதில் அவர்களுக்கு தேநீர், காபி அல்லது பழச்சாறுகள் போன்றவற்றைத் தரலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக விடுதல்.....

டியை ஒரே நாளில் விட்டு விட முடியாது. முதலில் சிறிது சிறிதாக விட முயற்சி செய்யுங்கள். அதிகமான குடி காரணமாக பராலிசிஸ், தலைவலி, வாந்தி வருவதாக கற்பனை செய்யுங்கள். பின் இந்த பயமே குடிக்கும் எண்ணத்தை தடுக்கும்.

உணவு மூலம் தவிர்த்தல்......

குடிக்கும் முன் ஏதாவது உணவு அருந்துங்கள். அதனால் குடிப்பதில் உள்ள நாட்டம் குறையும். அப்படியே மீறிக் குடித்தாலும் கொஞ்சமாகத் தான் குடிக்க முடியும்.

வைட்டமின் பி மாத்திரைகள்.....

குடிக்கும் போது வைட்டமின் பி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் திறனை பாதிக்கும் மதுவின் தொடர் விளைவுகளை இந்த தையாமின் மாத்திரைகள் தடுக்கும். வைட்டமின் பி எனப்படும் தையாமின் குறைபாடு, கடுமையான மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மனநிலையை உணர்தல்.....

உண்மையிலேயே குடிப்பதை நிறுத்த விரும்பினால், உங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளவும். கடந்த கால மோசமான நிலைமைகளை அறிந்து கொள்ளவும். தங்கள் பிரச்சனைகளை பரந்த மனதுடன் ஒப்புக் கொள்ளும் நடைமுறையை தொடங்கும் போது, குடியிலிருந்து மீண்டு, வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.


குடியை தூண்டும் நண்பர்களை தவிர்த்தல்.....

குடிக்கத் தூண்டும் மனிதர்களுடன் தொடர்பை உடனடியாக நிறுத்தவும். பாருக்கு போவதை நிறுத்த வேண்டும். மேலும் குடும்பத்தினரிடம் மற்றும் நண்பர்களிடம், குடிப்பதை நிறுத்த விரும்புவதாகக் கூறி, அவர்களது தார்மீக உதவியைப் பெறவும்.

தண்ணீர் குடித்தல்.....

சுத்தமான தூய தண்ணீரின் அற்புதத்தை உணருங்கள். குறைந்தது 5 குவளை தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்திக் கொள்ளவும்.

உணவில்லாமல் பல வாரங்கள் இருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் இரண்டு நாட்கள் கூட இருக்க முடியாது. நிறைய தண்ணீர் குடித்தால், மது அருந்தும் ஆசை குறையும்.

மதுவை படிப்படியாக நிறுத்துவது குறித்து இணையதள நூல் ஒன்றில் படித்த பல குறிப்புகள்தான் இவை...

நல்ல யோசனைகள், ஆலோசனைகள்....

மதுப்பிரியர்கள் படித்து பயன் பெற வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (41)

" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"

நாள் -  41



என் மனைவி உட்பட எந்த பெண்ணையும் மது அருந்துமாறு வற்புறுத்தியது கிடையாது: முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி தகவல்....

இந்திய ஊடகங்களில் கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்தியாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து மேற்குவங்க மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியில் இரூந்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி பதவி விலகினார்.

இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:


என் மீது சுமத்தப்படும குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றது; மாநில மற்றும் மத்திய அரசுகள் எனக்கு எதிராக செயல்படுகின்றன;

தேவையில்லாமல் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது,

நான் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளேன்,

எனக்கு எதிர்ப்புக்கள் அதிகரித்ததால் நான் பதவி விலகினேன்;

என் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒருதலைபட்சமானது;


நான் என் மனைவி உட்பட எந்த பெண்ணையும் மது அருந்த வற்புறுத்தியது கிடையாது.

இந்நிலையில் மது அருந்துமாறு நான் எப்படி ஒருவரை கட்டாயப்படுத்த முடியும்.

நான் அப்பெண்ணை என்னுடன் தங்க வற்புறுத்தவில்லை;

அவள் ஏற்கனவே ஹோட்டலில் தான் தங்கி இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

ஆக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி, தன்னுடைய பேட்டியில் மதுவுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.


தம் மனைவி உட்பட எந்த பெண்ணையும் தாம் மது அருந்த வற்யுறுத்தியது கிடையாது என அவர் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்.

அவர் மீதான பாலியல் புகார்கள் எப்படி இருந்தாலும் மதுவுக்கு எதிராக கருத்து தெரிவித்த நீதிபதி கங்குலியை நாம் பாராட்டுகிறோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Sunday, January 5, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (40)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் - 40


தமிழகத்தில் 'டாஸ்மாக்' கடைகளை அதிக அளவில், அரசு திறப்பதற்கு எதிராக, தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்....!

தமிழகத்தில் 'பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்' என, பாட்டாளி மக்கள் கட்சி,  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உட்பட, சில அமைப்புகள், வலியுறுத்தி வருகின்றன.

ஆனாலும், முன்னர் ஆட்சியில் இருந்த, கருணாநிதி தலைமையிலான, தி.மு.க., அரசும், தற்போதைய, அ.தி.மு.க., அரசும் அதை கண்டு கொள்ளவில்லை.

அண்மையில், விஜயகாந்தின் இளைய மகன், சண்முகபாண்டியன், கதாநாயகனாக நடிக்கும், 'சகாப்தம்' படத்தின் துவக்க விழா, சமீபத்தில் நடந்த போது, 'மதுபானக் கடைகளை திறந்து வைத்திருந்தாலே, இளைஞர்கள் குடிக்கத்தானே செய்வர்' என, 'குடி'மகன்களுக்கு ஆதரவாகவே விஜயகாந்த் பேசினார்.

இதற்கு பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன.இந்தச் சூழலில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உட்பட, பல விஷயங்கள் குறித்து முடிவெடுக்க, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே 5.1.2014 அன்று தே.மு.தி.க., கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.


இந்தக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், கிராமம்தோறும், தெருக்கள் தோறும் மதுக் கடைகள் திறந்தது போதாது என்று, வணிக வளாகங்களில் குளிர்சாதன வசதியுடன் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.

வேலைஇல்லாமல் திண்டாடும் இளைஞர் களுக்கு உரிய வழி வகை செய்யாமல், மதுக்கடைகளை திறந்து, அவர்களின் வாழ்க்கையை அரசு சீரழிப்பது, பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும்.

இதுபோன்று மதுக்கடைகள் திறப்பது கண்டிக்கத்தக்கது என கூறப்பட்டுள்ளது.


இத்தீர்மானம் குறித்து, அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:'டாஸ்மாக்' கடைகளை நடத்துவதற்கு எதிராக, தே.மு.தி.க., பொதுக்குழுவில்,  நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அந்தக் கட்சியினரை மட்டுமின்றி, அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி அளித்து உள்ளது.

அத்துடன், இதுவரை, மதுபான விற்பனைக்கு ஆதரவு தெரிவிப்பது போல பேசி வந்த விஜயகாந்த், இப்போது, இளைஞர்களின் நலனில், அதிக அக்கறை காட்டுவது போலவும், அவர்களைப் பற்றி அதிக கவலை கொள்வது போலவும் பேசியிருப்பது, புதுமையாகவும் உள்ளது.


விரைவில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பெண்கள் ஓட்டுகளை தங்கள் கட்சி பக்கம் கவர்ந்திழுக்கும் வகையில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கலாம். இது, ஒரு அரசியல் தந்திரமே.இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

அரசியல் நோக்கர்கள் எப்படி வேண்டுமானாலும் கூறிக் கொண்டாலும், மதுவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய தேமுதிகவிற்கு எங்களது பாராட்டு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (39)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் : 39


தேர்தலில் பாமகவுக்கு போடப்படும் வாக்குகள் மதுவிற்கு எதிரான
வாக்குகள் .....!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு....!!

விழுப்புரத்தில் பாமக மகளிர் அணி சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது.

அதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மதுவை முற்றிலும் ஒழித்தால் மட்டுமே, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.


மதுவை ஒழிக்க பாமக தொடர்ந்து பாடுபடும் என்று டாக்டர் ராமதாஸ் உறுதி அளித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு போடப்படும் வாக்குகள் மதுவுக்கு எதிரான வாக்குகள் என்றும்  ராமதாஸ் தெரிவித்தார்.

இதேபோன்று, விழுப்புரம் மாவட்ம் திண்டிவனத்தில் நடைபெற்ற பாமக மகளிர் அணி அரசியல் எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் ராமதாஸ்,  சட்டப்பேரவை தேர்தலில் பாமக-வை வெற்றிப் பெறச்செய்தால், தமிழகத்தில்  பூரண மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறினார்.


பாமக ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகளை ஒழிப்பதற்கே முதல் கையெழுத்திடப்படும் என்றும் அவர் கூறினார்.

மதுப்பழகத்திலிருந்து மாணவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Saturday, January 4, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (38)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"

 நாள் - 38



மது விற்பனையை ஊக்கப்படுத்தி இலவசங்கள் எதற்கு?

பிஜேபி தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கேள்வி...!

தமிழகத்தில் மது விற்பனையை ஊக்கப்படுத்தி, வேறொரு பக்கத்தில் இலவசங்களை எதற்கு வழங்க வேண்டும் என பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர் ஓடக்காடு பகுதியில், செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன்,
குஜராத்தை தவிர பெரு வாரியான மாநிலங்களில் மது விற்பனை நடைபெறுகிறது.

மது விற்பனையை பிரதான ஆதாரமாகக் கொண்டிருப்பது தமிழகம்தான்.


கடந்த ஆங்கிலப் புத்தாண்டுக்கு 180 கோடி விற் பனையானது. தற்போது, 270 கோடியாக உள்ளது வேதனை அளிப்பதாக அவர் கூறினார்.

தமிழகத்தில் மது விற்பனையை ஊக்கப்படுத்தி, வேறொரு பக்கத்தில் இலவசங்களை எதற்கு வழங்க வேண்டும்? என்றும் இல.கணேசன் கேள்வி எழுப்பினார்.

அரசு தரும் இலவசம் எல்லாம், மக்களின் வரிப்பணம். அதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இலவசத்துக்காக மதுக்கடைகளா? என்று இல.கணேசன் கேட்டார்.


இல.கணேசனின் கேள்வியில் நியாயம் உள்ளது.

மதுப்பிரியர்கள், பொதுமக்கள் இதனை புரிந்துக் கொள்ள வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Thursday, January 2, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (37)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் :  - 37

மது இல்லாத மாநிலம் தான் மகிழ்ச்சியான மாநிலமாக இருக்க முடியும்....!

பாமக பொதுக்குழுவில் தீர்மானம்.....!!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என போராடி வரும் கட்சிகளில் பாமக முதலிடம் பிடிக்கிறது.

அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதுவுக்கு எதிராக குரல் கொடுக்காத நாள் இல்லை என்றே சொல்லலாம்...

சென்னையில் பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 02.01.2014 அன்று நடைபெற்றது.

அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பிப்பாக  12வது தீர்மானம் மதுவிலக்கு தொடர்பாக இருந்தது.

அந்த 12வது  தீர்மானம் இதோ உங்கள் பார்வைக்கு.....

மது இல்லாத மாநிலம் தான் மகிழ்ச்சியான மாநிலமாக இருக்க முடியும்.

ஆனால், இலவசங்களைக் கொடுத்து மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அதற்கான வருவாயை ஈட்டவும் தெருக்கள் தோறும் மதுக்கடைகளை தமிழக அரசு திறந்து வைத்திருக்கிறது.

மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து வழங்கப்படும் இலவசங்கள் அனைத்துமே கண்களை விற்று வாங்கப்படும் சித்திரங்களாகவே இருக்கும்.


தெருக்கள் தோறும் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் பதின் வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் சிறுவர்கள் கூட மதுக்கடைகளில் அமர்ந்து குடிப்பது சாதாரணமான காட்சியாகிவிட்டது.

எல்லாத் தீமைகளுக்கும் தேவையான மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக கடந்த 25
ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்திருக்கிறது.

இதன் பயனாக மதுவுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.


ஆனால், மக்களின் உணர்வுகளை மதிக்காத தமிழக அரசு, மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கு பதிலாக ’எலைட் மதுக்கடைகள் என்ற பெயரில் ஆடம்பர மதுக்கடைகள் மற்றும் குடிப்பகங்களை திறந்து வருகிறது.

மக்கள் நலன் விரும்பும் அரசு மக்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்ற அரசியல் சாசனக் கடமைக்கு மாறாக மதுவை விற்று மக்களை குடிகாரர்களாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உச்சபட்ச கண்டனங்களைத் தெரிவிக்கிறது.


பாமக பொதுக்குழு நிறைவேற்றியுள்ள இந்த தீர்மானத்தை முழு மனதோடு வரவேற்கிறேன்.

தமிழகத்தில் மது விலக்கு நடைமுறைக்கு நாள் விரைவில் மலர பிரார்த்தனை செய்கிறேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================