Monday, July 1, 2024

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.....!

 

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி – ஒரு பார்வை

 

-             ஜாவீத்  -

 

18வது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, நாட்டின் அரசியல் களம் தற்போது ராக்கெட் வேகத்தில் பயணம் செய்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் சுதந்திரமான அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை மிரட்டி, பா.ஜ.க. மக்ளளவைத் தேர்தலில், வெற்றி பெற்று இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்று இருந்தால், பா.ஜ.க.விற்கு 140 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்து இருக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

எப்படி இருந்தாலும், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக பொறுப்பு ஏற்றக் கொண்டுள்ளார். எனினும், கடந்த பத்து ஆண்டுகளில் பா.ஜ.க. விளையாடிய அரசியல் விளையாட்டுகளை இனி செய்ய முடியாது என்பது, அவர்களின் பலம் குறைந்து இருப்பதன்மூலம் உறுதியாக தெரிகிறது. இருந்தபோதிலும், பழைய பாணியிலேயே மீண்டும் அவர்கள் தங்களது நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி:

 

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி, இந்தியா கூட்டணிக்கு கிடைக்காதபோதும், காங்கிரஸ் கட்சிக்கு 100 இடங்களில் வெற்றி கிடைத்து இருப்பதன்மூலம் எதிர்க்கட்சி அந்தஸ்தை அக்கட்சி மீண்டும் பெற்றுள்ளது. இதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ள ராகுல் காந்தி, எப்படி பணியாற்றுவார் என கேள்விகள் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து வருகிறது. அதற்கு விடை அளிக்கும் வகையில், மக்களவையில் அவர் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

மக்களின் பிரச்சினைகள், மாணவர்களின் பிரச்சினைகள், விவசாயிகளின் பிரச்சினைகள், இளைஞர்களின் பிரச்சினைகள், மகளிர் பிரச்சினைகள் என நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்சினைகள் குறித்து ராகுல் காந்தி, மக்களவையில் குரல் எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு ஏற்று இருப்பது, பா.ஜ.க.விற்கு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது என்பதை உறுதியாக கூறலாம்.

கடந்த 17வது மக்களவையில் ராகுல் காந்தியின் குரலை அடக்க அவர்கள் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. தற்போது ஒருபடி மேலாக, ராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் அமர்ந்துவிட்டு, மோடி, அமித்ஷா ஆகியோரின் கண்களில் விரலைவிட்டு ஆட்டி வருகிறார். ராகுல் காந்தியின் ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு கேள்வியும், ஒவ்வொரு விமர்சனமும் பிரதமர் நரேந்திர மோடியை உளவியல் ரீதியாக பாதிப்பு அடையச் செய்கிறது என்பதை அவரின் முகம் மற்றும் உடல்மொழி அவற்றை காணும்போது அறிய முடிகிறது.

மக்களவையை திணறி அடித்த ராகுல் காந்தி:

 

18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடரில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, அடுக்கடுக்காக பிரச்சினைகளை எழுப்பி, பா.ஜ.க.வை திணறியடித்தார். நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு இந்தியா கூட்டணி ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, எதிர்க்கட்சியாக இருப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்வதாக கூறினார். எதிர்க்கட்சி என்பது அதிகாரத்தை விட உண்மையாக சக்தி வாய்ந்ததது. ஆனால், உங்களுக்கு (மோடி, அமித்ஷா) அதிகாரம் மட்டுமே முக்கியமானது.

இந்து மதம் மட்டுமல்ல, இஸ்லாம், பவுத்தம், சமணம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை போதிக்கின்றன. அமைதியை விரும்புகின்றன. ஆனால், தங்களை இந்துக்கள் என்று கூறிக் கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு, பொய்யை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். 24 மணி நேரமும் வெறுப்பை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இந்துக்களே அல்ல. பா.ஜ.க.வினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். அதனால்தான் அயோத்திலேயே பா.ஜ.க. தோல்வி அடைந்தது. அங்கு பா.ஜ.க.விற்கு மக்கள் பாடம் கற்பித்து விட்டனர்.

பிரதமர் மோடியோ, பா.ஜ.க.வோ, ஆர்.எஸ்.எஸ்.சோ மட்டுமே, ஒட்டுமொத்த இந்து சமுதாயம் கிடையாது. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இந்தியாவின் அடிப்படைக் கருத்துக்களை மீது பா.ஜ.க. திட்டமிட்ட தாக்குதலை நடத்துகிறது. பா,ஜ,.க.வின் யோசனைகளை கோடிக்கணக்கான மக்கள் எதிர்த்துள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல்:

இந்தியாவில் வாழும் சிறுபான்மையின மக்கள் அனைத்துத் துறைகளிலும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆனால், சிறுபான்மையினரை பா.ஜ.க. அச்சுறுத்துகிறது. முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்களுக்கு எதிராக வெறுப்பு, வன்முறையை பரப்புகிறது. தேச பக்தர்கள் என கூறிக் கொண்டு சிறுபான்மையின மக்கள் மீது பா,.ஜ.க. தாக்குதல் நடத்துகிறது. பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் எனக்கு எதிராக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சியில் ஈடுபட்டு இருப்பது பெருமை அளிக்கிறது.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது தொழில்முறை தேர்வு அல்ல. அது பணக்காரர்களுக்காக உருவாக்கப்பட்ட வியாபாரத் தேர்வு. கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன்மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. ஆனால், மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை இல்லாத மோடி அரசு, நாடாளுமன்றத்தில் அந்த பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதிக்கவில்லை. ஒரு சிறந்த மாணவரால் நீட் தேர்வில் முதலிடம் பெற முடியும். ஆனால், அவரிடம் பணம் இல்லையென்றால், மருத்துவக் கல்லூரிக்கு செல்ல முடியாது. நீட் தேர்வு முழுமையாக பணக்கார மாணவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, அக்னிவீர் திட்டமும், இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ட ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக வழங்க மோடி அரசு விரும்பவில்லை. விவசாயிகளை தீவிரவாதிகளாக பா.ஜ.க. அரசு கருதுகிறது.  

இப்படி, சுமார் ஒரு மணி நேரம்40 நிமிடங்கள் ராகுல் காந்தி பேசியபோது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அவையில் அனல் பறந்தது. கடந்த 10 ஆண்டுகளாக எந்த விவாதத்திலும் பங்கேற்காத பிரதமர் மோடி, எழுந்து நின்று ராகுல் காந்திக்கு பதிலளித்தார். இந்துக்கள் குறித்து ராகுல் காந்தி பேசியபோது குறுக்கிட்ட பிரதமர் மோடி, ‘ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று விமர்சிப்பது தீவிரமான பிரச்சினை’ என கூறினார். அதற்கு பதில் அளிக்க ராகுல் காந்தி, மோடி, பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். மட்டுமே இந்துக்கள் இல்லை என்றார். நீங்கள் மட்டுமே இந்துக்கள் என உரிமை கொண்டாடுவதை நாட்டில் உள்ள இந்துக்கள் யாரும் ஏற்க மாட்டார்கள் என்றும் ராகுல் காந்தி பதிலடி கொடுத்தார்.

மக்களவையில் ராகுல் காந்தி பேசியபோது, அமைச்சர்கள், பா.ஜ.க. எம்.பி.க்கள் 50 முறை குறுக்கிட்டனர். மேலும் பலமுறை பா.ஜ.க. எம்.பிக்கள். முழக்கங்களை எழுப்பி ராகுல் காந்தியை பேச விடாமல் செய்தனர்.

சரியான திசையில் பயணம்:

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தியின் இந்த முதல் பேச்சு நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர் ஆகியோர் ராகுல் காந்தியின் பேச்சை வரவேற்று கருத்துகளை கூறி வருகிறார்கள். பிரதமர் மோடியோ, பா.ஜ.க.வோ, ஆர்.எஸ்.எஸ்.சோ மட்டுமே, ஒட்டுமொத்த இந்து சமுதாயம் கிடையாது என்ற ராகுல் காந்தியின் கருத்து மிகப்பெரிய அளவுக்கு விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெரும்பான்மை சமுதாயமான இந்துக்கள் குழப்பி, அரசியல் செய்துவரும் பா.ஜ.க. தற்போது தன்னுடைய பிம்பம் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்துக்கள் குறித்து ராகுல் காந்தி கூறியுள்ள கருத்து, பலரை சிந்திக்க வைத்துள்ளது. குறிப்பாக, வடமாநில மக்களை ராகுல் காந்தியின் பேச்சு சிந்திக்க வைத்துள்ளது என்றே கூறலாம்.

நாடாளுமன்றத்தில் தற்போது வலுவான எதிர்க்கட்சி அமர்ந்துள்ளதால், திணறிவரும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். எனவே, இனி வரும் பயணம்,  ராகுல் காந்திக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளுக்கும் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சரியான திசையில் தனது பயணத்தை தொடங்கியுள்ள ராகுல் காந்தி, ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெறாமல், சிறுபான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ.க. மற்றும் அதன் தலைவர்களை உளவியல் ரீதியாக தாக்கி வருகிறார். நாட்டு மக்கள்,  உங்களை (பா.ஜ.க.வை) நிராகரித்துவிட்டார்கள் என அவர் கூறி வருவது உண்மைதான். 18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள், மீண்டும் பிரதமராக மோடி வரக்கூடாது என்ற தீர்ப்பைதான் வழங்கியுள்ளது. அதன் காரணமாகதான் மோடி அரசு என கடந்த பத்து ஆண்டுகளாக குறிப்பிட்டு வந்த பா.ஜ.க.வினர்,  தற்போது என்.டி.ஏ. (தேசிய ஜனநாயகக் கூட்டணி) அரசு என்று அழைத்து வருகிறார்கள்.

இனி, ராகுல் காந்தி தனது பயணத்தின்போது, ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். நாட்டு மக்களின் சிந்தனையை தூண்டும் வகையில் அவர் செயல்பட வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டும். மகா குரு என்ற மோடியின் பிம்பம் தற்போது உடைந்துவிட்டது. இதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். எனவே, ராகுல் காந்தி, சவால்களை நிறைந்த தனது எதிர்க்கட்சித் தலைவர் என்ற பயணத்தை, துணிச்சலுடன், நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.. இதுதான் அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்கள், நாட்டு நலனின் அக்கறைக் கொண்ட நேர்மையாளர்களின் விருப்பமாக இருக்கிறது.

=====================

 

 

 

 

.

No comments: