சிறப்பான வாழ்க்கைக்கான சில விதிகள்....!
வாழ்க்கை என்பது ஏக இறைவனின் மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றாகும். நம்பிக்கை, வழிகாட்டுதல், ஆரோக்கியம், வாழ்வாதாரம் மற்றும் மரியாதை ஆகிய எண்ணற்ற அம்சங்களை உள்ளடக்கிய ஒரு அழகிய பொக்கிஷம்தான் வாழ்க்கையாகும். ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் வித்தியாசமானது. இயல்பாகவே ஒவ்வொருவருக்கும் அவரவர் தனிப்பட்ட கொள்கைகள் இருக்கும். நிலையான வாழ்க்கையை நடத்துவதற்கும் ஒழுக்கத்தைப் பின்பற்றுவதற்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியம். கொள்கைகளின் அடிப்படையில் வாழும் வாழ்க்கை அழகான வாழ்க்கையாக அமைகிறது.
வாழ்க்கை மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையாக அமைய வேண்டுமானால், ஒவ்வொருவரும் சில விதிகளை தங்களது வாழ்க்கைப் பயணத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த விதிகளின்படி, வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தால், ஓரளவுக்கு நிச்சயம் வாழ்க்கையில் ஆனந்தம் கிடைக்கும். விதிகளின்படி, வாழ்க்கையை நகர்த்திச் சென்றால், குடும்பத்தில் மகிழ்ச்சி குடி புகும்.
நேர்மறையான சிந்தனை:
வாழ்க்கையில் நேர்மறை சிந்தனை எப்போது இருக்க வேண்டும். நேர்மறையான சிந்தனைகளுடன் இருப்பர்கள் எப்போதும் சாதிக்கிறார்கள். 'நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னால் முடியும். ஏக இறைவனின் கருணையால் நிச்சயம் நான் அந்த பணியை நிறைவேற்றிவிடுவேன். நான் எல்லோருரையும் நேசித்து அரவணைத்துச் செல்வேன்' என்ற நேர்மறை சிந்தனைகள் உள்ளவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு சாதனை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் முகங்கள் மட்டுமல்ல உடல் மொழி கூட, பிறரை கவரும் வகையில் அமைந்துவிடுகிறது.
எனவே, வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமானால் எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டு விட்டு, எப்போதும் நேர்மறை சிந்தனைகளுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். நேர்மறையான சிந்தனையுடன் கூடிய வாழ்க்கை வாழ்வதும், நமது வாழ்க்கையை நாமே பாராட்டுவதும், தம் மீதும், ஒருவரின் திறமை மீதும் நம்பிக்கை வைப்பதும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு திறவுகோலாகும். நேர்மறை சிந்தனையுடன் தொடர்ந்து கற்றுக்கொள்வதோடு, எப்போதும் எடுத்த வேலையை முடிப்பதும் வெற்றிக்கு முக்கியமாகும்.
நேர்மறை சிந்தனையுடன் நேரமும் வளங்களும் ஒருவருக்கு கிடைக்கும் மிகவும் விலையுர்ந்த ஆசீர்வாதங்கள் ஆகும். அவற்றை ஒருபோதும் வீணாக்காதீர்கள். ஒருபோதும் நியாயமற்ற போட்டியின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது. தோல்வி மற்றும் இழப்பின் அபாயங்களைக் குறைக்க நிதானத்துடன் செயல்படுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நேரத்தை சரியாக திட்டமிட்டு, பணிகளை செய்து வருபவர்களின் வீட்டுக் கதவுகளை வாய்ப்புகள் தட்டும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான் 'ஆச்கா காம். கல்பர் நா டால்' (இன்றைய வேலையை நாளைக்கு ஒத்திப் போடாதே) என உர்தூவில் மிக அழகாக சொல்வார்கள். அதற்கு முக்கிய காரணம், தற்போது நம்மிடம் இருக்கும் நேரத்தை பயன்படுத்தி, பணிகளை முடித்துவிட வேண்டும். இந்த வாய்ப்பு, நேரம் மீண்டும் கிடைக்கும் என உறுதியாக சொல்ல முடியாது.
பிறர் மீது நமது உரிமைகள்:
நமது வீடு, குடும்பம், உறவினர்கள், அண்டை வீட்டார், பயணிகள், கேள்வி கேட்பவர்கள், ஒவ்வொருவருக்கும் நம்மீது சில உரிமைகள் உள்ளன. கடமைகளையும் உரிமைகளையும் சமநிலைப்படுத்தி, நமது உள்நாட்டு மற்றும் சமூகக் கடமைகளை நிறைவேற்ற முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். பிறர் மீது நமக்கு உள்ள உரிமைகள், கடமைகள் ஆகியவற்றை எந்தவித தயக்கமும் இல்லாமல் செய்ய வேண்டும். இதன் காரணமாக தான் அண்டை வீட்டாரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், சரியாக பராமரிக்கப்பட வேண்டும் என இஸ்லாமிய மார்க்கம் மிக அழகாக அறிவுறுத்துகிறது.
வாழ்க்கையில் சாதித்து, மகிழ்ச்சியாக இருக்க மற்றவர்களின் ஆளுமை மற்றும் செயல்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, உங்களது குணாதிசயங்களையும் ஆளுமையையும் தனித்துவமாக வைத்துக் கொண்டு, உங்களது நற்பண்புகளையும் குணங்களையும் மக்கள் பின்பற்றச் செய்ய முயற்சி செய்யுங்கள். உங்களை நீங்களே சவால் செய்துகொள்வது மற்றும் புதிய மாற்றங்களுக்கு எப்போதும் திறந்திருப்பது உங்களை உந்துதலாக வைத்திருக்க ஒரு சிறந்த வழியாகும். ஏக இறைவன் ஒவ்வொரு மனிதர்களுக்கும், அற்புதமான ஆற்றல்களை வழங்கியுள்ளான். இந்த ஆற்றல்களை மனிதர்கள் யாரும் சரியாக, முறையாக பயன்படுத்துவது இல்லை. இதன் காரணமாக, அவர்களின் வாழ்க்கை ஒரே இடத்தில் தேங்கி கிடக்கிறது. ஏக இறைவன் வழங்கியுள்ள ஆற்றல்களை சரியான நேரத்தில் முறையாகப் பயன்படுத்தினால், நிச்சயம் தனித்துவமாக ஒருவர் பயணிக்க முடியும். பிறரை கவர முடியும்.
ஆரோக்கியம் மிக முக்கியம்:
ஆரோக்கியம் என்பது வாழ்க்கையின் விலைமதிப்பற்ற சொத்தாகும். எனவே உங்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்தை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். ஆரோக்கியமான மனம், இதயத்திலிருந்து வருகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். எப்போதும் பணி, வேலை என்ற நிலையில் இருந்துவிட்டு, உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் இருந்துவிடாதீர்கள். சரியான ஓய்வு, முறையான தூக்கம், ஓரளவுக்கு நல்ல உடற்பயிற்சி, நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் என அனைத்தையும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான முக்கிய அம்சங்களாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்க பணம் மட்டுமே அவசியம் இல்லை. ஆரோக்கியமும் மிகமிக அவசியம். ஆரோக்கியம் இருந்தால் தான், குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி கிடைக்கும்.
ஆரோக்கிய வாழ்க்கைக்கு, ஆரோக்கிய மனநிலை கண்டிப்பாக இருக்க வேண்டும். எனவே, யாரையும் புறக்கணிக்காமல், அனைவருக்கும் மதிப்பு அளித்து, எப்போதும் பழகுவதை உங்கள் குணங்களில் ஒன்றாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பப்படி ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் அடிக்கடி பேசுங்கள். அவர்களிடம் கலந்துரையாடி, ஆலோசனை கேளுங்கள். அவர்கள் தரும் ஆலோசனைகள் பயன் உள்ளதாக இருக்கும் என நீங்கள் கருதினால், அதனை வாழ்க்கையில் செயல்படுத்துங்கள். அதன்படி வெற்றி கிடைத்தால், அந்த ஆலோசனைகளை தந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பாராட்டு கூறி, வாழ்த்து தெரிவியுங்கள். இதன்மூலம், உங்கள் மனம் மட்டுமல்ல, மற்றவர்களுடனான உறவுகளும் மேலும் மேம்படும்.
உளவியல் ரீதியான செயல்கள்:
வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமானால், சில உளவியல் ரீதியான செயல்கள் மிகமிக அவசியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சிலர் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பார்கள். சில பேசவே மாட்டார்கள். இந்த இரண்டு பண்புகளும், ஒருவிதத்தில் பயன் தந்தாலும், அதன்மூலம் ஒருசில நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகிறது. எனவே, தேவைக்கேற்ப பேசுவது நல்லது. இதேபோன்று, எதிர்மறை சிந்தனைகள் கொண்ட மக்களுடன் பழகாமல் இருப்பது நல்லது.
அத்துடன், மற்றவர்களைப் பற்றி ஒருபோதும் ஒரு கருத்தை நாமே உருவாக்கி கொள்ளக் கூடாது. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த கூடாது. உலகில் மிகப்பெரிய அளவுக்கு பிரச்சினைகள் ஏற்பட, மற்றவர்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பதும், அந்த சிந்தனையிலேயே வாழ்வதும் முக்கிய காரணமாக இருக்கிறது என உளவியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மற்றவர்களின் நலனின் மட்டுமே நாம் அக்கறை செலுத்த வேண்டிமே தவிர, அவர்கள் என்ன செய்கிறார்கள் என உளவுப் பார்க்கக் கூடாது. இப்படி உளவுப் பார்ப்பது நமது வாழ்க்கையை சீர்குலைத்துவிடும். மகிழ்ச்சியை பறித்துவிடும்.
எப்போதும், எங்கும் உண்மையை நிலையுடன் நாம் இருக்க வேண்டும். குடும்பத்தில் உண்மையைச் சொல்ல வேண்டும். பொய்யான தகவல்களை சொல்லக் கூடாது. எந்த நிலையிலும் பொய் சொல்லாதீர்கள். உண்மை பேசுவதன் மூலம் குடும்பத்தில் உள்ளவர்கள் மத்தியில் உங்களை குறித்து ஒரு நம்பிக்கை உருவாகும். இது வாழ்க்கையின் வெற்றிக்கு மட்டுமல்ல, மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கும். இதேபோன்ற, உங்களிடம் இருக்கும் தவறுகளைச் சரிசெய்து, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
அத்துடன், உங்கள் ஆளுமை அல்லது மொழியால் யாரையும் புண்படுத்தாதீர்கள். தவறு நடந்தால் சரியான நேரத்தில் மன்னிப்பு கேளுங்கள். எந்த நிலையிலும் பொய் சொல்லாதீர்கள். யாரோ ஒருவர் உங்களிடம் மன்னிப்பு கேட்டால், மன்னிக்கவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பழகுங்கள். இதுபோன்ற, முக்கிய கொள்கைகளை, விதிகளை ஒருவர் வாழ்க்கையில் நான் பின்பற்றினால், நிச்சயம் அவரது வாழ்க்கை ஆனந்த வாழ்க்கையாக, ஓரளவுக்கு நிறைவான வாழ்க்கையாக இருக்கும் என உறுதியாக கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment