Tuesday, July 9, 2024

பொடுகுத் தொல்லை....!

பொடுகுத் தொல்லையைத் தடுக்க தீர்வு என்ன?

பொடுகு, அல்லது செபொர்ஹெக் டெர்மடிடிஸ் என்பது, மலாசீசியா என்ற ஈஸ்ட் அதிகப்படியான வளர்ச்சியால் ஏற்படும் ஒரு பொதுவான உச்சந்தலை நிலையாகும். மேலும், பொடுகு என்பது வியர்வை, இரசாயன அடிப்படையிலான ஷாம்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் அழுக்கு மற்றும் தூசியின் வெளிப்பாடு போன்ற பல காரணிகளால் ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும். இதை புறக்கணித்தால், அது ஒரு நாள்பட்ட பிரச்சினையாக மாறும். மேலும் இது உதிர்தல் மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கிறது

தற்போது, சிறுவர்கள், பெரியவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து வயதினரையும் பொடுகு பிரச்சினை பாதித்து வருகிறது.  இதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிட்டால், முடி உதிர்வு ஏற்பட்டு, தலை வழுக்கையாகவும் வாய்ப்பு உண்டு. அதோடு சில தோல் வியாதிகள் உருவாக பொடுகு வழிவகுக்கும். 

வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்களாகும். 

தீர்வு என்ன?

“பொடுகு ஒரு பூஞ்சை. இங்கு நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நீங்கள் தலைமுடியை கழுவாத நாட்களில் அது வளரும்.  எனவே, முடி நாள்பட்டதாக மாறாமல் பார்த்துக் கொள்ள ஒருவர், 21 நாட்களுக்கு தொடர்ந்து தினமும் தலையை கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை பொடுகு எதிர்ப்பு ஷாம்பூவைப் பயன்படுத்தினால் மட்டும் இந்தப் பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க முடியாது”  என்று தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் ரஷ்மி ஷெட்டி தெரிவித்துள்ளார். 

“வழக்கமான முடியைக் கழுவுவது, பொடுகுத் தொல்லையை நீக்கி, எண்ணெய் தேங்குவதைக் குறைப்பதன் மூலம், 21 நாட்களுக்கு தினமும் ஷாம்பு போடுவது என்பது பலனளிக்காது. ஒவ்வொருவரின் சருமமும் வித்தியாசமானது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். மேலும் ஒருவருக்கு வேலை செய்வது மற்றொருவருக்கு வேலை செய்யாது”என்று தோல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் சச்சின் குப்தா கூறியுள்ளார். 

பொடுகுத் தொல்லையை நீக்க 21 நாட்களுக்குத் தொடர்ந்து உங்கள் தலைமுடியைக் கழுவுவது அல்லது ஷாம்பு போடுவது தற்காலிகத் தீர்வாகும். உங்கள் பொடுகு காலப்போக்கில் மோசமடையக்கூடும். உங்கள் தலைமுடியை அதிகமாகக் கழுவுவது உங்கள் உச்சந்தலையில் இருந்து அத்தியாவசிய எண்ணெய்களை அகற்றிவிடும். இதன் விளைவாக வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படும். 21 நாட்களுக்கு ரசாயன அடிப்படையிலான பொடுகு எதிர்ப்பு ஷாம்பூவைக் கொண்டு முடியை அதிகமாகக் கழுவுவது, உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும், பின்னர் உடையக்கூடியதாகவும், உறுத்தலாகவும் இருக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

பொடுகுப் பிரச்சினை தனிநபரின் தேவைகள் மற்றும் நிலையின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப மாறுபடுகிறது. லேசான நிகழ்வுகளுக்கு, கெட்டோகனசோல், செலினியம் சல்பைட் அல்லது ஜிங்க் பைரிதியோன் போன்ற செயலில் உள்ள பொருட்கள் கொண்ட பொடுகு எதிர்ப்பு ஷாம்புகளை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். அதேநேரத்தில் அதிக நிலையான அல்லது கடுமையான பொடுகுப் பிரச்சினைக்கு, தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஒவ்வொருவரின் உச்சந்தலை மற்றும் தோலின் தனிப்பட்ட குணாதிசயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனிப்பயனாக்கப்பட்ட கவனிப்பு மூலம் பொடுகுப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள். 

இயற்கை முறையில் நல்ல தீர்வு:

பொடுகுப் பிரச்னைக்கு இயற்கை முறையில் நல்ல தீர்வு இருக்கிறது.  இயற்கை மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளைப் பெற்று அதன்மூலம் பொடுகுப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இயற்கையாக மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கக் கூடிய பொருட்கள், நம் வீட்டுச் சமையல் அறையில் இருக்கும் பொருள்களும்கூட பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு தரக்கூடியவை என்று சித்தா, யுயானி, ஆயுர்வேத மருத்துவர்கள் சொல்கிறார்கள். 

அதன்படி, எலுமிச்சைச் சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்து, இந்தக் கலவையை தலைமுடியில் மசாஜ் செய்வதுபோலத் தேய்த்து, 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ தேய்த்து, தலையை அலச வேண்டும். தேங்காய் எண்ணெய், முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச் சாறு பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும் என்றும், தயிரைத் தலையில் நன்றாகத் தேய்த்துக்கொண்டு, சுமார் ஒரு மணி நேரம் கழித்து குளிக்கலாம். தயிர், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் என்றும், தேயிலை மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுவது, தேயிலை மர எண்ணெய். இது பொடுகை உருவாக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்து போராடக்கூடியது. கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளித்து, முடி உதிர்வையும் தவிர்க்க உதவும். இந்த எண்ணெயைச் சில துளிகள் எடுத்து, தலை முழுக்கத் தடவி, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் குளிப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றும் இயற்கை மருத்துவர்கள் ஆலோசனைகளை தருகிறார்கள். 

மேலும், இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் அதை அரைத்து பின்னர் இதை தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்குக் குளிப்பதன் மூலம் உடல் உஷ்ணம் குறைந்து முடி வளர்ச்சிக்கு உதவி, பொடுகுத் தொல்லை குறையும். இதேபோன்று, வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து பிறகு குளித்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். கைப்பிடி வேப்பிலைகளை பேஸ்ட்போல அரைத்துக்கொண்டு,  இதைத் தலையில் தேய்த்து ஊறவைத்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், இதன் கசப்பு தன்மை, தலையில் உள்ள பாக்டீரியா போன்ற தலைமுடிக்குத் தீங்கிழைக்கும் நுண்ணியிரிகளை அழித்துவிடும் என பல்வேறு அருமையாக ஆலோசனைகள் இயற்கை மருத்துவர்கள் தருகிறார்கள். 

கவலை வேண்டாம்:

பொடுகுப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருப்பது நமது வாழ்க்கை முறையும் என்பதை மறந்துவிடக் கூடாது. மன அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் பொடுகு உருவாவதற்கு முக்கிய காரணங்கள் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் அனுபவித்து வாழ பழகிக் கொள்ள வேண்டும். மனதை எப்போதும் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மன அழுத்தம் வராமல் இருக்க, நமது சூழ்நிலைகளை நல்லவிதமாக அமைத்துக் கொள்ள வேண்டும். பொடுகுப் பிரச்சினைக்கு இயற்கையான முறையில் தீர்வு காண முடியும் என்றாலும்,  மனஅழுத்தம் போன்ற பொடுகு உருவாவதற்கான காரணங்களைக் களையாவிட்டால் முழுமையான பலன் கிடைக்காது. ஆரோக்கியமான, சீரான உணவு மற்றும் முறையான முடி பராமரிப்பு நடைமுறைகள் பொடுகுப்  பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: