Saturday, July 6, 2024

வேலையின்மை அதிகரிப்பு - முக்கிய காரணம்....!

வேலையின்மை அதிகரிப்புக்கு கல்வி, சுகாதாரம் புறக்கணிப்பே முக்கிய காரணம்....!

புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கருத்து.....!!

ஒன்றியத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க., தற்போது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மீண்டும் ஆட்சியை தொடர்கிறது. முந்தைய பத்து ஆண்டு கால தனது ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி, வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க உரிய நடவடிக்கைகளை எதுவும் எடுக்கவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்று தாம் அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ள மோடி, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதன்மூலம் மட்டுமே, நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் ஒளி கிடைக்கும் என அவர்கள் கருத்து கூறுகிறார்கள். ஆனால், அதற்கான முயற்சிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. 

கடந்த பத்து ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு முன்வைத்த வெற்று முழக்கங்கள், தற்போது மீண்டும் தொடர்கின்றன என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது என்றே கூறலாம். இந்த வெற்று முழக்கங்கள் தற்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து அண்மையில் கருத்து கூறியுள்ள பா.ஜ.க. மூத்த தலைவரும் பொருளாதார நிபுணருமான சுப்ரமணியன் சாமி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். 

அமர்த்தியா சென் கருத்து:

இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், நாட்டில் வேலையின்மை அதிகரிப்பு குறித்து தமது வேதனை தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினைக்கு கல்வி, சுகாதாரம் ஆகியவை புறக்கணிப்பு செய்வதே முக்கிய காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் போல்பூரில் தனியார் அறக்கட்டளை ஏற்பாடு செய்த 'நாம் ஏன் பள்ளிக்குச் செல்கிறோம்: ஒத்துழைப்பில் ஒரு பாடம்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய சென், “கல்வி முறை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடையவில்லை. இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம், கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் புறக்கணிக்கப்படுவதே ஆகும்” என உறுதிப்பட தெரிவித்தார். அவர் தனது உரையில், 'சில நாடுகள் கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பிற்கு அதிக வளங்களைச் செய்து வருகின்றன' என்றும் குறிப்பிட்டார்.

'இத்தகைய சூழ்நிலையில், தனியார் ஆராய்ச்சி நிறுவனமான சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகனாமியின் (சிஎம்ஐஇ) சமீபத்திய தரவு, இந்தியாவில் வேலையின்மை விகிதம் இந்த ஆண்டு மே மாதத்தில் 7 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதத்தில் 9 புள்ளி 2 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்திய அரசு, இப்போது வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி கவலைப்படுகிறது. இதனால்தான்  பிரச்சனை நீடிக்கிறது' என்றும் சென் சுட்டிக் காட்டினார். 

கவலை அளிக்கும் கல்வி, சுகாதாரம் நிலை:

ஐரோப்பா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் வேலையின்மை பிரச்சினையை ஏன் சந்திக்கவில்லை என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும். “அவர்கள் கல்வியைப் பெற்று மருத்துவத்தில் கவனம் செலுத்தியதால், படித்த மற்றும் ஆரோக்கியமான ஒருவர் தன்னை வேலைக்குத் தகுதியுடையவராக மாற்ற அதிக முயற்சி எடுக்க முடியும். இந்தியாவில் தற்போதுள்ள கல்வி மற்றும் சுகாதார அமைப்பின் நிலை உண்மையில் கவலைக்குரியது" என்றும் சென் வேதனை தெரிவித்தார். 

ரவீந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனில் உள்ளடங்கிய கல்வி, உலகம் முழுவதிலுமிருந்து ஆசிரியர்களை வரவழைத்து மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியில் கவனம் செலுத்துவதை எவ்வாறு அறிமுகப்படுத்தினார் என்பதை சென் மேற்கோள் காட்டினார். 'ரவீந்திரநாத் தாகூர் பள்ளிக்குச் சென்று தனியாகப் படிக்கவில்லை. ஆனால் ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அவருக்குத் தெளிவான யோசனை இருந்தது. சாந்திநிகேதனில் பள்ளி தொடங்கப்பட்டபோது, ​​எனது குடும்பத்தைச் சேர்ந்த பலர் அதில் இணைந்திருந்தனர். என் அம்மா அமிதா சென் அந்தப் பள்ளியில் படித்தவர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, மாணவிகள் ஜுஜுட்சு (ஜப்பானிய தற்காப்புக் கலை) கற்றுக்கொண்ட பள்ளி இது. என் அம்மா ஜப்பானைச் சேர்ந்த ஒரு பயிற்றுவிப்பாளரிடம் ஜூடோ கற்றுக்கொண்டார். ஜப்பானிய பயிற்றுவிப்பாளர் அந்த இடத்தை விட்டு வெளியேறினார். ஆனால் பாரம்பரியம் தொடர்ந்தது. ஆனால் தற்போது நாட்டில் இத்தகைய நிலை இல்லை' என்றும் அவர் குறிப்பிட்டார்.  

குழந்தைகளின் சிந்தனைகள்:

பள்ளிக்குச் செல்லும் செயல் ஒரு குழந்தையின் சிந்தனையை முக்கியமான வழிகளில் எவ்வாறு வடிவமைக்கும் என்பதைப் பற்றி பேசிய சென், "ஒருவர் பள்ளிக்குச் செல்லும்போது, ​​​​அவர் அல்லது அவள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிறைய நபர்களையும் நண்பர்களையும் சந்திப்பார். இந்தியாவை ஒரு இந்து நாடாக மாற்றலாம் என்று விவாதங்கள் நடந்தாலும், குழந்தைகள் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் வேறுபாடு காட்டவில்லை என்பது உரையாடல்கள் மூலம் தோன்றுகிறது" என்றும் தெரிவித்தார். 

பா.ஜ.க.விற்கு எதிர்ப்பு:

தொடர்ந்து பேசிய சென், 'அண்மையில் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் இந்திய மக்கள் பா.ஜ.க.வின் இந்து நாடு என்ற சிந்தனையை தங்களது தீர்ப்பு மூலம் முறியடித்தனர். நாட்டை ஒரு இந்து ராஷ்டிராவாக மாற்றுவதற்கான முயற்சிகளை மக்கள் விரும்பவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. ராமர் கோவிலின் இல்லமான அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. வெற்றிபெறவில்லை. இதன்மூலம்,  இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றும் முயற்சி  இந்திய வம்சாவளி மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரிய கோவில் கட்டப்பட்ட இடத்தில், ஒரு மதச்சார்பற்ற வேட்பாளர், இந்து ராஷ்டிரத்திற்காக பேசிய ஒருவரை தோற்கடித்தார்' என்று கூறினார்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட புதிய கிரிமினல் சட்டங்கள் அமல்படுத்துவதற்கு முன்பாக விரியான ஆலோசனைகள், விவாதங்கள் மற்றும் ஆய்வுகள் நடைபெறவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார். அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து குறிப்பிட்ட வல்லுநர்களுடன், பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அமர்த்தியா சென் விமர்சனம் செய்தார்.  இந்த கருத்தரங்கில், சென்னுடன் இணைந்து புத்தகங்களை எழுதிய பொருளாதார நிபுணர் ஜீன் டிரேஸ் மற்றும் பல பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: