*சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குல்களை இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
* அலட்சியமாக செயல்படும் தேசிய தேர்வு முகமையை உடனே கலைத்துவிட வேண்டும்.
* மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் சேருவதற்கான போட்டி தேர்வுகளை நடத்தும் உரிமையை மாநில அரசுகளின் கைகளில் ஒப்படைக்க வேண்டும்.
* நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்.
* கிரிமினல் சட்டங்களை அமல்படுத்தப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
* மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மாநிலங்களவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் கன்னிப் பேச்சு:
புதுடெல்லி, ஜுலை05- மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 2ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர், வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத்தில் கலந்துகொண்டு, உரையாற்றினார். அந்த உரையின் முழு விவரம் இதோ:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்த அவைக்கு நான் வந்து இருக்கிறேன். அதற்காக எங்கள் தலைவர் பனக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றியையும் பாராட்டுதல்களையும் கூறிக் கொள்கிறேன். இ.யூ.முஸ்லிம் லீகின் மாநிலங்களவை தலைவராக இருக்கும் அப்துல் வஹாப் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அவையில் என்னுடைய கன்னிப்பேச்சை பேச எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு அவர் வழங்கி இருக்கிறார். இந்த வாய்ப்பை நான் எப்போது மறக்க மாட்டேன்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத்தில் பங்கேற்று பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குடியரசுத் தலைவர் பதவி என்பது பெண்களுக்கு உரிய அதிகாரம் அளிப்பதுடன் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு பதவி என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தவும் மிகச் சிறந்த முறையில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு அளிக்கும் ஒரு அதிகாரம் அதுவாகும்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம்:
எனினும், மிகவும் வேதனையுடன் நான் இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். அரசு கட்டாயப்படுத்தி ஒரு உரையை குடியரசுத் தலைவரிடம் கொடுத்து வாசிக்க வைத்துள்ளது. பல முக்கிய அம்சங்கள் இந்த உரையில் இடம்பெறவில்லை. அதில் முதலாவதுதாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து இந்த உரையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது அரசியலமைப்பு சட்டம் 64ன்படி, வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். அதன்படி, ஒவ்வொரு 10 ஆண்டுக்கும், அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் அவசியம் நடத்த வேண்டுமெனில், அரசியலமைப்பு சட்டம் 64ல் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசு மற்றும் அரசின் துறைகளில் பங்ககெடுக்க வேண்டுமானால், அதற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு கட்டாயம் நடத்தப்பட்டு, அவர்களின் விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். எனவே தான், அரசியலமைப்பு மற்றும் சமூக மேம்பாடு அமைப்புகள் சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என வலியுறுத்தி வருகின்றன.
இதன் காரணமாக தான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறார். ஆனால் ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் எந்தவித முடிவும் எடுக்காமல் மவுனம் கடைப்பிடித்து வருகிறது.
மாநிலங்களுக்கு உரிய நிதி:
என்னுடைய மாநிலம் தொடர்பாக நான் இங்கு சில விவரங்களை கூற விரும்புகிறேன். பொருளாதாரம் உள்ளிட்ட பல துறையில் கேரள மாநிலம் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு, கேரளாவிற்கு உரிய நிதி பங்களிப்பை வழங்காமல் வளர்ச்சிப் பணிகளுக்கு தடையாக உள்ளது. இதேபோன்று, அண்டை மாநிலமான கர்நாடகாவும் தங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் உச்சநீதிமன்றத்தை அணுகியது. அதன்மூலம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வறட்சி நிவாரண நிதியை ஒன்றிய அரசிடம் இருந்து கர்நாடகா பெற்றது. இந்த அரசியலமைப்பு சட்டத்தின்படி, பன்முகத்தன்மை கொள்கையை கடைப்பிடிக்காமல் ஒன்றிய அரசு செயல்பட்டால், மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகள் எப்படி நடைபெறும்.
தாக்குதல்கள் தடுத்து நிறுத்த வேண்டும்:
தலித் மற்றும் சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜுன் மாதத்தில், பல சம்பங்கள் நடைபெற்று இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பிரதமர் பேசும்போது நாட்டில் உள்ள மக்கள் மட்டுமல்லாமல், உலகமே கூர்ந்து கவனிக்கிறது. ஆனால் பிரதமர் ஒரு சமுதாய மக்களை மட்டும் குறிவைத்து தாக்கி பேசி வருகிறார். இந்த பேச்சுகள் மூலம் சிறுபான்மையின சமுதாய மக்கள் மீதான தாக்குதல்கள் இன்னும் அதிகரிக்ககின்றன. மத்திய பிரதேசம், ராய்ப்பூர், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் இதுபோன்று சம்பவங்கள் நடைபெற்ற உயிரிழப்பு ஏற்பட்டுள்ளன. சிறுபான்மையின மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வீடுகள் புல்டோர் மூலம் இடிக்கப்பட்டன.
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான இதுபோன்ற தாக்குதல் சம்பங்கள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறத்தியுள்ளது. மாநில அரசுகள் தாங்களே முன்வந்து தாக்குல்களை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டப் பிறகும், தாக்குதல் சம்பவங்களையும் வன்முறையும் தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. புலனாய்வு அமைப்புகளும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன.
பிரதமரின் வெறுப்பு பேச்சுகள், சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல்களை மேலும் அதிகரிக்க வழி வகை செய்கிறது. எனவே, நாட்டு மக்களை, இதுபோன்ற வன்முறை தாக்குதல்களில் இருந்து அரசு பாதுகாக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். அதன்மூலம், அரசியலமைப்பு சட்டம், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஆகியவற்றை அரசு பாதுகாக்க வேண்டும். அத்துடன் உச்சநீதிமன்றம்தின் தீர்ப்புக்கு மதிப்பு அளித்து அதை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிரிமினல் சட்டங்கள் மறுபரிசீலனை:
கிரிமினல் சட்டங்கள் குறித்தும் சில கருத்துகளை நான் கூற விரும்புகிறேன். புதிதாக மாற்றம் செய்யப்பட்டு ஜுலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள கிரிமினல் சட்டங்கள், நாட்டு மக்களை மேலும் துன்பங்களுக்கு ஆளாக்கும் சட்டங்களாக உள்ளன. கடந்த 100 ஆண்டுகளாக அமலில் உள்ள சட்டங்களை மாற்றிவிட்டு, புதிய சட்டங்கள் கொண்டு வந்து இருப்பதால், உச்சநீதிமன்றம் மட்டுமல்ல, அனைத்து நீதிமன்றங்களில் ஒவ்வொரு பிரிவு குறித்து சந்தேகங்கள், கேள்விக்குறிகள் ஏற்படும். நாட்டின் சட்டத்தை பாதுகாக்கவும் அமல்படுத்தவும் எவ்வளவு நேரம் பிடிக்கிறது என்பதை வழக்கறிஞராக உள்ள உங்களுக்கு நன்கு தெரியும்.
புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. தாங்கள் குற்றம் செய்து இருக்கிறோமா, அல்லது செய்யாமல் இருக்கிறோமா என்ற சந்தேகங்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளன. ஏனெனில், அவசரக் கோலத்தில் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. எனவே, நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமா, காவல்துறை அதிகாரிகளிடம் செல்ல வேண்டுமா என பல கேள்விகள், சந்தேகங்கள் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள கிரிமினல் சட்டங்கள் மூலம் வழக்கைப் பதிவு செய்வது தொடர்பாகவும் காவல்துறைக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் புதிய கிரிமினல் சட்டங்கள் மூலம் காவல்துறையின் அத்துமீறல்கள் தான் அதிகம் ஏற்படும். போலீஸ் ராஜ்ஜியம் நடைபெறும். எனவே, இந்த விவகாரத்தில் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கிரிமினல் சட்டங்கள் குறித்து நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் பயத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய தேர்வு முகமை தேவையில்லை:
நீட் விவகாரத்தை எடுத்துக் கொண்டால், நீட் தேர்வு நடத்தப்படும் முறையில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக கடின உழைப்பு, பயிற்சி எடுத்து நீட் தேர்வில் கலந்துகொண்ட 24 இலட்சம் மாணவர்கள் தற்போது பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நீட் தேர்வு விவகாரத்தில், அரசு மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், முகவர்கள் செய்த மோசடிகள், முறைகேடுகள் காரணமாக, மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஒரு மாணவர் மட்டுமே முறைகேட்டில் ஈடுபட்டால், அந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை நாம் நன்கு அறிவோம். யார் முறைகேட்டில் ஈடுபட்டு, மருத்துவப் படிப்பில் சேர்ந்து இருக்கிறார் என்பதை நாம் அறிய முடியாது. எனவே, இந்தாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை முழுவதும் ரத்து செய்துவிட்டு, புதிதாக தேர்வை நடத்த வேண்டும். இதன்மூலம் மட்டுமே, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நீதியை வழங்க முடியும்.
தேசிய தேர்வு முகாமை நடத்திவரும் தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே தேசிய தேர்வு முகமையை கலைத்துவிட வேண்டும். மாநில அரசுகளிடம் தேர்வு நடத்தும் உரிமையை அளிக்க வேண்டும். மாநில அரசுகள் மிகச் சிறந்த கல்வி முறையை கடைப்பிடித்து வருகின்றன.
வாக்களிக்கும் உரிமை:
வாக்குரிமை குறித்து தேர்தல் ஆணையம் நல்ல சிந்தனையுடன் இருந்து வருகிறது. வாக்களிக்க உரிமையுள்ள வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிநாடுகளில் வாழும் இந்திய தொழிலாளர்கள் கோடிக்கணக்கான மக்கள், தங்களது வாக்குரிமைய பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்திய மக்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்தும் வகையில் அரசு புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தனது கன்னிப்பேச்சில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான், பல்வேறு விஷயங்கள் குறித்து மிகவும் தெளிவாக உரையாற்றினார்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment