Tuesday, July 2, 2024

சுப்ரமணியன் சுவாமி தாக்கு...!

பொருளாதாரம், வேலையில்லா திண்டாட்டம்: உண்மை நிலை என்ன?

*பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பு

*கடந்த இரண்டு  ஆண்டுகளாக ஒன்றிய அரசின் பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளது

*நாடு பொருளாதார வளர்ச்சிப் பெற வேண்டுமானால் பொருளாதார நிர்வாகம் மாற்றி அமைக்க வேண்டும்.  

சுப்ரமணியன் சுவாமி கருத்து.....!

இந்திய பொருளாதரம் குறித்தும். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறித்தும், ஒன்றிய பா.ஜ.க. அரசு, பல்வேறு புள்ளிவிவரங்களையும், தகவல்களையும் அளித்து வருகிறது. அதன் உண்மை நிலை என்ன? என்பது குறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், பிரபல பொருளாதார நிபுணருமான சுப்ரமணியன் சுவாமி, 'தி இந்து ஆங்கில நாளிதழில்' 02.07.2024 அன்று கட்டுரையை எழுதியுள்ளார். அதில், சில அடுக்கடுக்கான பல கேள்விகளையும் சந்தேகங்களையும் அவர் எழுப்பியுள்ளார். அவர் எழுதியுள்ள அந்த கட்டுரையின் சில முக்கிய அம்சங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:

புதிய வேலைவாய்ப்புகள் இல்லை:

இந்தியப் பொருளாதாரத்திற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டரை கோடிக்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். அதன்மூலம் நாட்டில் தற்போது வேலையில்லாமல் இருக்கும் அனைவருக்கும் வேலை கிடைக்கும். நரேந்திர மோடி அரசு, இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம்) கடந்த ஆண்டு 8 சதவீதம் அளவு வேகத்தில் வளர்ந்து இருப்பதாக, கூறிவருகிறது. அந்தக் கூற்று உண்மையாக இருந்தாலும், நாட்டில் தற்போது நிலவும் வேலையின்மை பிரச்சினையை தீர்க்க போதுமான எண்ணிக்கையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதே நிதர்சனமாக உண்மையாகும். 

ஒன்றிய அரசு அண்மையில் வழங்கியுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில்  வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை  கடந்த 2021 ஆம் ஆண்டில் 4 புள்ளி 2 சதவீதம் அளவுக்கு இருந்தது. அது 2023ஆம் ஆண்டில் 3 புள்ளி ஒரு சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. ஆனால் இந்த புள்ளிவிவரத்தை வைத்துக் கொண்டு, ஜிடிபி வளர்ச்சி விகிதம் 8 சதவீதம் அளவுக்கு உயர்ந்துவிட்டது என கூற முடியாது. 

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி தற்போது பா.ஜ.க. பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. பொருளாதார சித்தாந்தங்களில் மாறுப்பட்ட நிலைபாடுகள் கொண்டு கட்சிகளின் இணைந்து பா.ஜ.க. தற்போது ஆட்சி அமைத்துள்ளது. 

இடைவெளி அதிகரிப்பு:

நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளாக, வசதியானவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு இடையிலான இடைவெளி பெரும் அளவுக்கு அதிகரித்துள்ளது. அத்துடன், பா.ஜ.க.வின் கடந்த பத்து ஆண்டு கால ஆட்சியில், நாட்டின் பெரும் அளவுக்கான செல்வம் ஒரு சதவீதம் மக்களிடம் தான் இருந்து வருகிறது. அதாவது, நாட்டின் 40 சதவீத செல்வத்தை ஒரு சதவீத மக்களின் கையில் இருந்து வருகிறது. இதனால் பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஜனநாயக மற்றும் ஸ்திரதன்மை கொண்ட நாட்டிற்கு மிகவும் ஆபத்து விளைவிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  

நாட்டின் பொருளாதாரம், வசதிகள் அனைத்தையும் குறிப்பிட்ட ஒரு சதவீத மக்கள் மட்டுமே அனுபவித்து வருகிறார்கள். அவர்களின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களின் சொத்து மதிப்பு கூடிக் கொண்டே போகிறது. ஆனால், நாட்டில் பெரும்பாலான மக்கள் ஏழ்மை நிலையில் இருந்து வருகிறார்கள். அவர்களின் வருவாய் கூடவில்லை. மாறாக தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. 

உண்மை நிலை என்ன?

நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் அதிகரிப்பு காரணமாக நாட்டில் வறுமை நிலையில் இருந்து, சுமார் 25 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதேபோன்று, அரசு ஆதரவு பொருளாதார நிபுணர்கள் கூட, மோடி அரசு மிகப்பெரிய அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை எட்டி, நாட்டு மக்களை மகிழ்ச்சியில் வைத்து இருப்பதாக கூறி வருகிறார்கள். இந்த வளர்ச்சி விகிதம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தொடரும் என்றும் அவர்கள் கருத்து கூறுகிறார்கள். 

ஆனால், உண்மையில் தேர்தல் முடிவுகள் பல்வேறு கேள்விகளை நம்மிடையே எழுப்பியுள்ளது. அரசும், அதிகாரிகளும் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும் பொருளாதார நாடு என்று கூறிவரும் நிலையில், தேர்தலில் ஏழை மக்களின் ஆதரவு பா.ஜ.க.விற்கு கிடைத்து இருக்க வேண்டும். ஆனால், தேர்தல் முடிவுகள், பா.ஜ.க.வின் பலத்தை வெகுவாக குறைத்துவிட்டது. மக்களவையில் பா.ஜ.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. இரண்டு மாநில கட்சிகளுடன் ஆதரவுடன் தான் பா.ஜ.க. தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. 

நாடு உண்மையான பொருளாதார வளர்ச்சிப் பெற வேண்டுமானால், பா.ஜ.க. அரசின் பொருளாதார நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஆனால், அண்மையில் நியமிக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர்கள் பார்க்கும்போது இந்த நம்பிக்கை உடைந்து போகிறது. 

2023-24ஆம் நிதியாண்டில், நாட்டின் ஜி.டி.பி. 8 புள்ளி சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடையும் என்றும், கடந்த 2022-23ஆம் ஆண்டில் இருந்த 7 சதவீத்தை கடந்து முன்னேற்றம் பெறும் என்றும் மோடி அரசு கூறி வருகிறது. ஆனால், இதை எப்படி கணித்தார்கள் என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெளிவாக கூறப்படவில்லை. 

பொருளாதார வல்லுநர்களின் கருத்து:

இந்தியாவின் பட்ஜெட் கடந்த இரண்டு ஆண்டுகளாக, பற்றாக்குறை பட்ஜெட்டாக இருந்து வருகிறது. செலவை விட, வருவாய் மிகவும் குறைந்து வருகிறது. அத்துடன், தொழில், வேளாண் மற்றும் சேவை உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய அளவுக்கு முதலீடுகள் செய்யப்படவில்லை. இப்படி நிலைமை இருக்கும்போது, ஜிடிபி வளர்ச்சி பெறும் என கூறுவது, பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஒன்றிய நிதியமைச்சகம் கணித்தப்படி நாட்டின் ஜிடிபி வளர்ச்சி என்பது 8 புள்ளி 2 இருக்கும் என்பது, வெறும் கற்பனையில் மட்டுமே இருக்க முடியும். வரும் 2024-25ஆம் நிதியாண்டில் இது தொடரும் என்பதும் சந்தேகமே. நாட்டின் பொருளாதாரம் குறித்து நன்கு ஆய்வு செய்துவரும் பொருளாதார வல்லுநர்கள், வளர்ச்சி விகிதம் குறையும் என கருத்து கூறியுள்ளார்கள். 

கடந்த பத்து ஆண்டுகளாக மோடியும் அவரது அரசும், அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்தங்கள் செய்து வருவதாக கூறி வருகிறார்கள். இதன்முலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் அவர்கள் மார்பு தட்டிக் கொள்கிறார்கள். இது உண்மையாக இருந்து இருந்தால், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு இருக்காது. இதன்மூலம் கடந்த காலங்களில் பின்பற்றிய பொருளாதார நிலைப்பாடுகளை இனி பா.ஜ.க. தொடரக் கூடாது. 

வேளாண் துறையை எடுத்துக் கொண்டால், அமைப்புசாரா துறையில் 92 சதவீத வேலைவாய்ப்புகள் இருந்து வருகின்றன. இதேபோன்று, தொழில், சேவை துறைகளில் 73 சதவீத வேலைவாய்ப்புகள் உள்ளன. எனினும் அரசு மற்றும் தனியார் துறைகள் மூலம் தற்போது 27 சதவீத வேலைவாய்ப்புகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகின்றன. எனவே, நீண்ட கால அணுகுமுறையை கையாண்டு, இந்தியா புதிய பொருளாதார நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தில் தற்போது பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் இல்லாத காரணத்தினாலும், பொருளாதார வல்லுநர்கள், அமைச்சர்களுடன் பொருளாதார நிலை குறித்து வெளிப்படையாக விவாதித்து, உரிய ஆலோசனைகளை வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, பா.ஜ.க.வின் கூற்றுப்படி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.

- நன்றி: சுப்ரமணியன் சுவாமி, தி இந்து ஆங்கில நாளிதழ்

- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: