புனித ஹஜ் பயணத்தின்போது தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிப்பு:
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சார்பில் 13 பேரின் குடும்பங்களுக்கு தலா இரண்டு இலட்சம் ருபாய் நிவாரணத் தொகை அறிவிப்பு.....!
சென்னை, ஜுலை.09-உலகம் முழுவதும் இருந்து இந்தாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களில் ஆயிரத்து 301 பேர், வெப்ப அலை உள்ளிட்ட காரணங்களால் மரணம் அடைந்தனர். இவர்களில் 98 பேர் இந்தியர்கள் ஆவார்கள். இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. அவர்களின் உடல்கள் உறவினர்களின் ஒப்புதல் பெற்ற சவுதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அறிவிப்பு:
இந்நிலையில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மு.அ.சித்தீக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தாண்டு தமிழகத்தில் இருந்து மொத்தம் 5 ஆயிரத்து 801 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.. சவுதி அரேபியாவில் இந்தாண்டு கடுமையான வெயில் நிலவியதால், ஹஜ் நாட்களில் புனித பயணம் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் உடல்நலக் குறைவால் இறப்பு எய்தினர் என்றும் அவர் கூறியுள்ளார். இரண்டு பேர் வாகன விபத்தில் உயிரிந்தனர் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இறந்தவர்களின் விவரம்:
மேலும் இறந்தவர்களின் முழு விவரங்களும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இராமநாதபுரம் மாவட்டம் ரசிக்கா பீவி, திருநெல்வேலி மாவட்டம் மைதீன் பாத்து, சென்னை நசீர் அகமது, கடலூர் மாவட்டம் அப்துல் ரஹீம் இக்பால், திருவாரூர் மாவட்டம் ஆரிப் சின்னதம்பி ராவுத்தர், மயிலாடுதுறை மாவட்டம் ஃபரீதா பேகம், விருதுநகர் மாவட்டம் ஷம்சுதீன் காதர் பாஷா, கரூர் மாவட்டம் லியாகத் அலி, தஞ்சாவூர் மாவட்டம் அப்துல் வாஹித், திருநெல்வேலி மாவட்டம் இஷா முகம்மது கவுஸ், வேலூர் மாவட்டம் சர்தார் கஃபார் ஆகிய 11 பேர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டம் இர்ஷாத் பேகம் ஹனீப், செங்கல்பட்டு மாவட்டம் சாதிக் பாஷா கோட்டு ஹனீப் ஆகிய இரண்டு பேர் வாகன விபத்தில் மரணம் அடைந்தனர்.
நிவாரண தொகை அறிவிப்பு:
தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் மூலம் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட பயணிகளில் மரணம் அடைந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க தமிழ்நாடு மாநில ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது. இந்த தொகை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிதியில் இருந்து மரணம் அடைந்த புனிதப் பயணிகளின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலாளர் மு.அ.சித்தீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment