Wednesday, July 10, 2024

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழு ஆறுதல்....!

அலிகரில் சமூக விரோத கும்பலால் படுகொலை செய்யப்பட்ட முகமது ஃபரீத் குடும்பத்தினருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழு நேரில் ஆறுதல்....!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பிரச்சினை எழுப்படும் என  மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் உறுதி...!!

அலிகர், ஜுலை.11-உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகரில் கடந்த ஜுன் மாதம் 18ஆம் தேதி முகமது ஃபரீத் என்ற இஸ்லாமிய இளைஞர், சமூக விரோத கும்பலால், அடித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்கனவே குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 

எனினும், முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகரில் கடந்த ஜுன் மாதம் 18ஆம் தேதி முகமது ஃபரீத் என்ற இஸ்லாமிய இளைஞர், சமூக விரோத கும்பலால், அடித்து படுகொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. 

குடும்பத்தினருக்கு ஆறுதல்:

இந்நிலையில், இ.யூ.முஸ்லிம் லீகின் சார்பு அணியான லாயர் போரத்தின் தேசிய அமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் தலைமையில், இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர், உத்தரப் பிரதேச மாநில தலைவர் டாக்டர் மதீன் கான், முஸ்லிம் யூத் லீக் தேசிய தலைவர் அஸிப் அன்சாரி, பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஃபைசல் பானு மற்றும் முஸ்லிம் மாணவர் அமைப்பைச் சேர்ந்த (எம்.எஸ்.எஃப்.) அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர், படுகொலை செய்யப்பட்ட முகமது ஃபரீதின் இல்லத்திற்கு 10.07.24 அன்று நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். 

மிகவும் துயரமான, நெருக்கடியான நிலையில் இருக்கும் முகமது ஃபரீதின் குடும்பத்திற்கு இ.யூ.முஸ்லிம் லீக் துணையாக இருக்கும் என்றும், அனைத்து வகைகளிலும் தேவையான உதவிகளை மற்றும் நீதியை பெற்றுத் தர நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் இந்த குழு உறுதி அளித்தது. 

ஹாரிஸ் பீரான் பேட்டி:

இந்த சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் எம்.பி., படுகொலை செய்யப்பட்ட முகமது ஃபரீத் குடும்பத்தினரையும், அதிகாரிகளையும் சந்தித்து பேச இ.யூ.முஸ்லிம் லீக் குழு அலிகர் வந்தது. அலிகர் மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் சம்பவம் தொடர்பாக பேசினோம். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடந்த 2ஆம் தேதி மாநிலங்களவையில் நான் பேசும்போது, சுட்டிக் காட்டி பேசி கண்டனம் தெரிவித்தேன். தற்போது முழு விவரங்களை திரட்ட நாங்கள் வந்து இருக்கிறோம்.

எந்தவித காரணமும் இல்லாமல் ஒரு கும்பல் தாக்கி முகமது ஃபரீதை படுகொலை செய்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நாகரீகமற்ற சமுகத்தில் மட்டும் தான் நடைபெறும். இதுபோன்ற படுகொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். படுகொலை செய்யப்ப்டட முகமது ஃபரீத் குடும்பத்தினருக்கு கிடைக்க வேண்டிய நிவாரண உதவிகள் குறித்து நாங்கள் பேசினோம். மாவட்ட ஆட்சியரிடமும் அதுகுறித்து கேட்டறிந்தோம். இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்து இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எங்களிடம் கூறினார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

ஏற்கனவே,  முகமது ஃபரீத் குடும்பத்திற்கு அரசின் சார்பில் நிவாரண நிதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையான கூடுதல் உதவிகள் பெற்று தருவது தொடர்பாக லக்னோவிற்கு கடிதம் எழுதிய இருப்பதாகவும் அரசு உத்தரவு வந்ததும் அந்த நிதியும் வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார். 

பட்ஜெட் கூட்டத் தொடரில் குரல்:

நான் ஏற்கனவே, மாநிலங்களவையில் பேசியபோது, முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி செய்யும் விமர்சனங்கள், தெரிவிக்கும் கருத்துகள் மூலம், சமூக விரோத கும்பலுக்கு தைரியம் வந்துவிடுகிறது. அதன் காரணமாக அவர்கள் இதுபோன்ற படுகொலை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஜுன் 4ஆம் தேதி முடிவுகள் வந்தபிறகு, இதுபோன்ற வன்முறை தாக்குதல்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. 

வரும் 22ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த சம்பவம் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாங்கள் குரல் எழுப்புவோம். சமூக விரோத கும்பல், சமூக அமைப்பை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வதற்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பி, பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ஆட்சியாளர்களை வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

நீதி கிடைக்க வழக்கு:

தொடர்ந்து பேசிய இ.யூ.முஸ்லிம் லீக்  உத்தரப் பிரதேச மாநில தலைவர் டாக்டர் மதீன் கான், படுகொலை செய்யப்பட்ட முகமது ஃபரீத் குடும்பத்தினருக்கு, நீதி கிடைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை நிற்கும். இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் நடத்தி, நியாயம் கிடைக்க முயற்சி செய்வோம். முஸ்லிம்களுக்கு எதிராக இதுபோன்ற வன்முறைகள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க தேவையான ஆக்கப்பூர்வமான பணிகளை இ.யூ.முஸ்லிம் லீக் செய்யும் என உறுதிப்பட கூறினார்.

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: