Sunday, July 2, 2023

பொது சிவில் சட்டம்....!



பொது சிவில் சட்டம் - ஒரு பார்வை.....!

வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான  சிவில் சட்டம், அதாவது யுசிசி எனப்படும்  பொது சிவில் சட்டம் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு முடிவு எடுத்து அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் ஒன்றிய அரசின் சட்ட ஆணையம் கருத்துகளை வரவேற்றுள்ளது. 

பொது சிவில் சட்டம்:

கிரிமினல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்து, முஸ்லிம் என மத அடிப்படையில் தனித்தனி சட்டங்கள் மூலம் இந்த விவகாரங்களில் தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், திடீரென நாட்டு மக்களை குழப்பம் நோக்கில் பொது சிவில் சட்டம் என்ற ஒரு திட்டத்தை பாஜக தற்போது முன்வைத்துள்ளது. 

திருமணம், விவாகரத்து, பரம்பரை மற்றும் தத்தெடுப்பு போன்ற விஷயங்களைக் கையாளும் தனிப்பட்ட சட்டங்களின் பொதுவான தொகுப்பை பொது சிவில் சட்டம் நோக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவரின் மதத்தைப் பொருட்படுத்தாமல் இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் வகையில் இந்த சட்டம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  

கபில் சிபல் கேள்வி:

மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல், பொது சிவில் சட்டம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். பொது சிவில் சட்டத்தின் உண்மையான அம்சங்கள் என்ன என்பதை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் தற்போது உள்ள சட்டங்கள் அனைத்தும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ள நிலையில், புதிதாக பொது சிவில் சட்டம் தேவையா என்றும் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு யாரும் சரியாக எடுத்துக் கூறவில்லை என்றும் அவர் சாடியுள்ளார். 

அத்துடன், ஒன்றிய பாஜக அரசு வீசியுள்ள பொது சிவில் சட்டம் என்ற வலையில், எதிர்க்கட்சிகளும் சிக்கி, குழப்பம் அடைந்து விவாதங்களை நடத்தி கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலை முன்வைத்தே இந்த ஒரு திட்டத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும் கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார். 

கடந்த 9 ஆண்டு காலமாக மவுனமாக இருந்துவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொது சிவில் சட்டம் குறித்து சர்ச்சையை கிளப்ப வேண்டிய அவசியம் ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவின் ஒரே நோக்கம், தேர்தல் நேரத்தில் நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் இலாபம் பெற வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது என்றும் சிபில் சாடியுள்ளார். 

கோல்வால்கர் எதிர்ப்பு:

பாஜக தங்களுடைய குருவாக கருதும், கோல்வால்கர், பொது சிவில் சட்டத்திற்கு எதிரான கருத்து கூறி இருப்பதாக குறிப்பிட்டுள்ள கபில் சிபல், பொது சிவில் சட்டம் நாட்டில் பிளவை ஏற்படுத்திவிடும் என கோல்வால்கர்  அஞ்சியதாகவும் தெரிவித்துள்ளார். கோல்வால்கரை குருவாக கருதும் பிரதமர் மோடி, அவரது கருத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் சிபல் வலியுறுத்தியுள்ளார். 

ஆனல், நாடாளுமன்ற கூட்டத்தில் பொது சிவில் சட்டம் குறித்து விவாதத்தை முன்வைத்து, அதன்மூலம், எதிர்க்கட்சிகளை வாதங்களில் கலந்துகொண்டு கருத்து கூற வைத்து, இதை ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக கொண்டு வர ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் சிபல் கூறியுள்ளார். 

இந்த பிரச்சினையில், எதிர்க்கட்சிகளும் குழப்பம் அடைந்துள்ளதாகவும், சரியான சட்ட நுணுக்கங்களை அறியாமலேயே சில எதிர்க்கட்சிகள், பொது சிவில் சட்டத்தை ஆதரித்துக் கொண்டு இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். 

பாஜகவின் ஒரே திட்டம் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், அதன்மூலம், இந்து-முஸ்லிம் என்ற விவாதத்தை தொடங்கி வைத்து, அரசியல் லாபம் பெற வேண்டும். இதுவே பாஜகவின் முக்கிய நோக்கமாக உள்ளது. 

பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கொண்டு வரப்படும் பொது சிவில் சட்டம், நாடு முழுவதும் செல்லுபடியாகாது என்றும் சிபல் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு:

பொது சிவில் சட்டம் திட்டத்திற்கு, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட நாட்டில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொது சிவில் சட்ட திட்டத்தால் மக்கள் மீது பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டத்தை திணிக்க முடியாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. அதேநேரத்தில் ஆம் ஆத்மி கட்சி  இந்த திட்டத்திற்கு கொள்கை அளவில் ஆதரவை நீட்டித்துள்ளது. 

இதேபோன்று, நாட்டில் பல்வேறு சமூக அமைப்புகள், முஸ்லிம் இயக்கங்கள், நாட்டு நலனில் அக்கறை உள்ள சமூக ஆர்வலர்கள், பொது சிவில் சட்டத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

பொது சிவில் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, இந்துக்களுக்கும் எதிரானது என பல வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் கருத்துகளை கூறியுள்ளனர். எனவே, பொது சிவில் சட்டம் என்ற பிரச்சினையை கைவிட்டு விட்டு, நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், மக்களின் நலன் ஆகியவற்றுக்கான திட்டங்களில் ஒன்றிய பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: