Tuesday, July 18, 2023

இந்தியா......இனி ஒளிரும்....!

                                                         இந்தியா......இனி ஒளிரும்....!


ஒன்றிய பாஜக ஆட்சியில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாடு மிகவும் நெருக்கடியான நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  இந்த நிலையில், 26 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கர்நாடக தலைநகர் பெங்களூரூவில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டு தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். 

பெங்களூரூவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில், புதிய கூட்டணிக்கு இந்திய தேசிய உள்ளடக்கிய வளர்ச்சி கூட்டணி அதாவது இந்தியா என்ற புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

பாஜக ஆட்சி படுமோசம்:

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சியில், நாட்டில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. மாறாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்களிடையே பிளவை உருவாக்கி அரசியல் இலாபம் பெற பாஜக தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறது. பாஜகவின் இந்த பாசிச திட்டத்திற்கு இந்துத்துவ கொள்கை கொண்ட மக்கள் சிலர் வீழ்ந்து கிடக்கிறார்கள். ஆனால், நாட்டு மக்களில் பெரும்பாலாலோனர், பாஜகவின் சதித் திட்டங்களை தற்போது உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். 

நாட்டில் ஜனநயாக நெறிமுறைகள் குழித்தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில கட்சிகளை உடைத்து, பாஜக அரசியல் செய்து வருகிறது. அமலாகத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து அவர்களை மிரட்டி தங்கள் பக்கம் இழக்க ஒன்றிய பாஜக அரசு காரியங்களை செய்து வருகிறது. நாட்டில் பாஜகவை தவிர வேறு கட்சிகளே இருக்கக் கூடாது என்ற சர்வாதிகார கொள்கையுடன் பாஜக திட்டங்களை அரங்கேற்றி வருகிறது. 

நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோன்று அனைத்துத் துறைகளிலும் ஒன்றிய பாஜக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. அரசு நிறுவனங்கள், தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் சூழ்நிலையில், இந்து-முஸ்லிம் என அடிக்கடி பிரச்சினையை உருவாக்கி, நாட்டில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 

எதிர்க்கட்சிகள் ஆலோசனை:

நாடு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கியுள்ள இந்த தருணத்தில் ஒன்றிய பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி, நாட்டில் ஜனநாயக நெறிமுறைகளையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் திரள முடிவு செய்து, அதன்படி, முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற்றது. பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அணியை மேலும் வலிமைப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் இந்த கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றன. 

கூட்டத்தில் பேசிய அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் சிந்தாந்தத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓர் அணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அதன்மூலம் மட்டுமே நாடு பாசிச கொள்கையில் இருந்து மீட்க முடியும் என்றும் உறுதிப்பட தெரிவித்தனர்.  தற்போது நாடு இரண்டாவது சுதந்திர போராட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டாவது சுதந்திர போராட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் சுயநலம் கைவிட்டு, பாஜகவிற்கு எதிரான எத்தகைய நெருக்கடிகளையும் துணிச்சலுடன் சந்தித்து போராட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கருத்து கூறியுள்ளன. 

ஆக்கப்பூர்வமான விவாதம்:

இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நல்ல ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்றதாக கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சிகளின் பலத்தைக் கண்டு பிரதமர் மோடி அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும், லெட்டர் பேடு கட்சிகளை ஒருங்கிணைத்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு எதிராக டெல்லியில் போட்டி ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று, லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும், பாஜகவை வீழ்த்துவதே தங்களின் ஒரே இலக்கு என உறுதிப்பட கூறியுள்ளனர். 

கூட்டணிக்குப் பெயர் இந்தியா:

இரண்டு நாள் ஆலோசனைக்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு Indian National Developmental Inclusive Alliance - INDIA,  தமிழில் இந்திய தேசிய உள்ளடக்கிய வளர்ச்சி கூட்டணி அதாவது இந்தியா என புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க 11 உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளது. 

நாட்டு மக்கள் வரவேற்பு:

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைக்கப்பட்டு இருப்பதற்கு நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கான மக்கள் தங்களது கருத்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். பாஜக ஆட்சியில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் நாட்டு மக்கள் எதிர்க்கட்சிகளின் இந்தியாவிற்கு நல்ல ஆதரவு வழங்கி வருகிறார்கள். 

நாட்டு மக்களின் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக நல்ல திட்டங்களை உருவாக்கி 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை உடடினயாக தொடங்கி விட வேண்டும். அப்போதுதான், நாட்டு மக்கள் மத்தியில் தொடர்ந்து ஓர் உற்சாகம்  இருந்துக் கொண்டே இருக்கும். நாடு முழுவதும் நல்ல விழிப்புணர்பு ஏற்படும். 

இந்தியா இனி ஒளிரும்:

இனி இந்தியாவிற்கும், என்டிஏ எனப்படும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான் போட்டி. இந்தியாவை யாரும் வீழ்த்த முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். இது உண்மையான கருத்தாகும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கூட்டணியான இந்தியாவை பாஜக உள்ளிட்ட பாசிச சக்திகள் நிச்சயம் வீழ்த்த முடியாது. 

எனினும், பல்வேறு சதி திட்டங்களை இனி பாஜக அரங்கேற்றும். இந்த சதி திட்டங்களை இந்தியா கூட்டணி உடைக்க வேண்டும். தேர்தல் காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இப்படி, சரியான அணுகுமுறையை இந்தியா கூட்டணி கடைப்பிடித்தால், இந்தியா இனி நிச்சயம் ஒளிரும். கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மக்கள் அடைந்து பல்வேறு துன்பங்களும் இனி தொடராது. மேலும் சர்வாதிகார மனப்பான்மை நாட்டில் இருந்து விலகும். ஜனநாயக நெறிமுறைகள் மீண்டும் தழைக்கும்.  அதற்காக இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டு நலனில் உண்மையான அக்கறை கொண்டு, தங்கள் பணிகளை செய்ய வேண்டும்.  இதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 


No comments: