Saturday, July 29, 2023

முன்னுதாரணம்...!

இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறையின் மூலம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.....!

இந்தியா உட்பட உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் தாங்கள் தங்களுடைய மார்க்கச் சட்டங்களை  பின்பற்றி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்களா என்ற கேள்வி பொதுவாக இருந்து வருகிறது. மாறிவரும் நவீன காலத்தில் முஸ்லிம்களும் தங்களுடையே வாழ்க்கையை நவீனத்துவமாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள். 

நவீன காலத்தில், பெண்களுக்கான சிறப்பு உரிமைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பெண்கள் உரிமை அமைப்புகள் கூக்குரலிட்டு வருகின்றன. இந்தியாவில் வாழும் முஸ்லிம் பெண்களுக்கு உரிமைகளை வழங்கப்படவில்லை என ஒருசில பாசிச அமைப்புகள் கூச்சலிட்டு வருகின்றன. முத்தலாக் உள்ளிட்ட விவகாரங்களை கையில் எடுத்துக் கொண்டு, முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக தாங்கள் பேசுவதாக கூறிக் கொண்டு, முஸ்லிம் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அந்த அமைப்புகள் பணியாற்றி வருகின்றன. 

இஸ்லாத்தில் பெண் உரிமை:

இஸ்லாத்தின் செய்திக்கு முன், அரேபியர்கள் ஒரு பெண் குழந்தை பிறப்பை அறிவிப்பதைக் கூட தங்கள் கண்ணியத்திற்குக் கீழே கருதினர். புனித குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்கள் தங்கள் மகள்களை உயிருடன் புதைத்தனர். அரேபியர்கள் பெண்களை வீட்டு விலங்குகளைப் போலவே வாங்கவும் விற்கவும் கூடிய ஒரு பொருளாகக் கருதினர். அவர்கள் கொள்கையற்ற பலதார மணத்தை கடைப்பிடித்தனர்.  தங்கள் பெண்களை மக்கள் குறையாக பார்த்தனர். 

ஆனால், இஸ்லாமிய நெறி அரேபிய தீபகற்பத்தில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பரவியபோது, பெண்களுக்கு அவர்களுக்கான கண்ணியம் கிடைத்தது. திருமணங்கள் கூட பெண்ணின் சம்மதத்துடன் ஒரு சமூக ஒப்பந்தமாக நடைபெற்றன. கடுமையான தண்டனைகளின் மூலம் விபச்சாரம் ஒழிக்கப்பட்டது.  திரும்ணம் செய்துக் கொண்டு, தீன்நெறியில் வாழ்வது  எளிதான காரியமாக மாற்றப்பட்டது. 

இஸ்லாத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ்வுடனான உறவைப் பொருத்தவரையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஏனெனில் இருவருக்கும் நல்ல நடத்தைக்கு ஒரே வெகுமதியும் தீய நடத்தைக்கு ஒரே தண்டனையும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் "ஆண்களுக்கு பெண்கள் மீதுள்ள உரிமைகளைப் போலவே பெண்களுக்கும் ஆண்கள் மீதான உரிமைகள் உள்ளன  ” என்று குர்ஆன் கூறுகிறது.(2:226)

பலதார மணத்தைப் பொறுத்த வரையில் இஸ்லாம் அதை அனுமதித்துள்ளது ஆனால் நிபந்தனைகளுடன் கூடியது. 

“அனாதை பெண்களிடம் நீங்கள் நியாயமாக நடந்து கொள்ள மாட்டீர்கள் என்று நீங்கள் அஞ்சினால், இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் நீதியாக இருக்க மாட்டீர்கள் என்று நீங்கள் பயந்தால், உங்கள் வலது கரம் உடையவர்களையோ அல்லது ஒருவரையோ [திருமணம் செய்து கொள்ளுங்கள்]. நீங்கள் [அநீதிக்கு] சாய்ந்துவிடாதிருக்க இது மிகவும் பொருத்தமானது. (அல்குர்ஆன் 4:129)

“அவ்வாறு நீங்கள் முயற்சி செய்தாலும், மனைவிகளுக்கு இடையே சமமாக இருக்க முடியாது. எனவே முழுமையாக [ஒன்று நோக்கி] சாய்ந்து மற்றொன்றை தொங்கவிடாதீர்கள். மேலும் நீங்கள் (உங்கள் விவகாரங்களை) திருத்திக்கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சுவீர்களானால் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்று ஏக இறைவன் கூறுகின்றான். 

எளிமையான திருமணங்கள்:

திருமணம் குறைந்த செலவில் மிகமிக எளிமையாக நடத்தப்பட வேண்டும் என இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது. ஆனால், பொதுவாக அப்படி நடப்பது இல்லை. முஸ்லிம்கள் திருமணங்களுக்கு கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள். இதனால் அல்லாஹ்வின் கட்டளையை மீறுவது மட்டுமல்லாமல், நம் அன்பிற்குரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளுக்கும் எதிராகவும் நடந்துக் கொள்கிறார்கள். 

நம் சமுதாயத்தில் மாற்று மத தோழர்கள் பின்பற்றும் முறைப்படி திருமணங்கள் மிகவும் ஆடம்பரமாக நடைபெறுகின்றன. இஸ்லாமிய நெறிமுறைகளை ஓரளவுக்கு தெரிந்த நபர், இஸ்லாமிய முறைப்படி திருமணங்கள் நடந்தால், வரதட்சணை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக லட்சக்கணக்கான பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் கடன் தொல்லை இருக்காது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். 

ஆனால், முஸ்லிம்களின் வாழ்க்கை அவர்கள் காணும்போது, இவர்களும் நம்மைப் போன்றுதான் இருக்கிறார்கள் என வேதனை அடைகிறார்கள்.  இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி திருமணங்களை மட்டுமே செய்திருந்தால் மற்றவர்களின்  பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதற்கு பதிலாக இஸ்லாமிய பழக்க வழக்கங்களில் உறுதியாக இருந்தால், அதுவே, மற்ற சமுதாய மக்களுக்கு ஓர் அழைப்பு பணியாக இருக்கும் என்பதை முஸ்லிம்கள் மறந்துவிட்டார்கள். 

சொத்துரிமை மற்றும் தலாக்:

இஸ்லாம் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது. இது முதலில் மகள்களின் பங்கை நிர்ணயித்தது. அதன்பின் இரு மடங்கு மகன்களுக்கு வழங்கப்பட்டது, ஏனெனில் மகள்களுக்கும் கணவரின் சொத்தில் உரிமை உண்டு. மேலும், மகன்கள் தங்கள் பெற்றோரைக் கவனித்துக்கொள்வதுடன், தங்களுடைய சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கும் உதவுகிறார்கள்.  இத்தகைய விதிகள் 1950களின் பிற்பகுதியில் மட்டுமே இந்து குறியீட்டு மசோதாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அது கடுமையாக எதிர்க்கப்பட்டது.

உண்மையில் முஸ்லீம் சமூகம் குர்ஆன் வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். நாம் இஸ்லாமிய சட்டங்களை மட்டுமே பின்பற்றியிருந்தால், நமது நாட்டில், இஸ்லாமிய சட்டங்கள் குறித்து தெளிவான மற்றும் உறுதியான ஓர் பார்வை மற்றவர்களுக்கு  கிடைத்து இருக்கும். 

இதேபோன்று தலாக்-விவாகரத்து பிரச்சினையிலும் முஸ்லிம்கள், மார்க்கச் சட்டங்களை பின்பற்றாமல், தங்கள் விருப்பம் போல் நடந்துக் கொள்வதால், மற்றவர்களின் பார்வையில் தலாக் குறித்து தவறான கண்ணோட்டம் உருவாகிறது. எனவே, முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களின் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் போலியான கூச்சலை சிலர் எழுப்புகிறார்கள். 

முஸ்லிம் சமுகம் மாற வேண்டும்:

இஸ்லாமிய வாழ்க்கை முறை தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிவற்றுடன் மட்டுமே முடிந்து விடுவதில்லை. ஒரு முஸ்லிமின் உண்மையான ஈமானிய வாழ்க்கையே, பிற மத சமுதாய மக்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க முடியும். முஸ்லிம்கள் குறித்து அவர்கள் மிகவும் பெருமையாக பேசும் வகையில் இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்க்கையை மார்க்க நெறிமுறைகளுக்கு ஏற்ப வாழ வேண்டும். ஒருமுறை மாற்று மத நண்பர் ஒருவர் என்னிடம் பேசியபோது, இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிந்துக் கொண்டு செல்வதை பார்க்கும்போது, அவர்களை தவறான  கண்ணோட்டத்துடன் பார்க்காமல், கண்ணியத்துடன் பார்க்க முடிகிறது என கூறினார். 

இதேபோன்று, வாக்குறுதி, வட்டி, சகோதரத்துவம், பிறர் நலன் பேணுதல் உள்ளிட்ட பல விவகாரங்களில் முஸ்லிம்களின் பண்புகள் தம்மை கவருகின்றன என்றும் அந்த நண்பர் கருத்து தெரிவித்தார். இப்படி நல்ல இஸ்லாமிய வாழ்க்கையை ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்ந்து, அதன்மூலம் உண்மையான இஸ்லாமிய நெறியை மற்றவர்களுக்கு எளிமையாக எடுத்துக் கூற வேண்டும். நல்ல முஸ்லிமாக வாழ்வதன் மூலம் மட்டுமே, இஸ்லாமியர்கள்  குறித்து தவறாக பரப்பப்படும் கருத்துகள், சர்ச்சைகள் யாரிடும் எடுப்படாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட இஸ்லாமிய வாழ்க்கை நெறியுடன் வாழ்ந்து அழகிய தாவா பணியின் மூலம் நல்ல மாற்றத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். அழகிய வாழ்க்கையின் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: