Saturday, July 15, 2023

முஸ்லிம் முதலமைச்சர்கள்....!

 நாட்டின் முன்னேற்றத்திற்கு சேவை ஆற்றிய முஸ்லிம் முதலமைச்சர்கள்....!


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம் சமூகத்தில் இருந்து சிலர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பான சேவை ஆற்றியுள்ளார்கள். பொதுவாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த ஷேக் அப்துல்லா, ஃபாருக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், முஃப்தி முஹம்மது சாயித், உமர் அப்துல்லா,  மஹபூபா முஃப்தி, குலாம் முஹம்மது சாதிக், ஆகியோரைப் பற்றிதான் நாம் அறிந்து அறிந்திருக்கிறோம். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைத் தவிர்த்து, மற்ற சில மாநிலங்களிலும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து சிலர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு இருந்ததை நம் இளம் சமூதாயம் அறிந்துக் கொள்ளாமல் உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மிகச் சிறப்பான முறையில் முதலமைச்சராக பணியாற்றி புகழ்பெற்ற முஸ்லிம்கள் குறித்த தகவல்களை நாம் அறிந்துக் கொள்வது மிகவும் அவசியம். 

ஜனாப் பர்கத்துல்லா கான்:


ராஜஸ்தான் மாநிலத்தில் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பணிபுரிந்துள்ளார் என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கிறது அல்லவா. ஆம், ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 1971-ஆம் ஆண்டு முதல் 1973-ஆம் ஆண்டு வரை அதாவது 2 ஆண்டுகள் 94 நாட்கள் வரை  முதலமைச்சராக ஜனாப் பர்கத்துல்லா கான் இருந்துள்ளார்.  மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அன்பைப் பெற்ற இவர், ராஜஸ்தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஆற்றிய பணிகள், சேவைகள் இன்னும் அம்மாநில மக்களால் நினைத்துப் பார்க்கப்படுகிறது.  ஜனாப் பர்கத்துல்லா கானின் மக்கள் நலப் பணியை கவனித்த இந்திரா காந்தி, லண்டனில் இருந்த அவரை, வரவழைத்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக நியமித்தது அவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

ஜனாப் அப்துல் கபூர் கான்:



பீகார் மாநிலத்திலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருந்துள்ளார்.   காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜனாப் அப்துல் கபூர் கான் கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் 1975-ஆம் ஆண்டு வரை ஓர் ஆண்டு 283 நாட்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து பீகார் மாநிலத்தின் உண்மையான முன்னேற்றத்திற்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் அலிகர் பல்கலைக் கழகத்தில் படித்த இவர், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சிறையும் சென்றுள்ளார். மறைந்த ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, மத்திய அமைச்சராகவும் ஜனாப் அப்துல் கபூர் கான்  இருந்து நாட்டின் வளர்ச்சிக்கு சேவையாற்றியுள்ளார். 

ஜனாப் முஹம்மது கோயா:


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவராக இருந்த ஜனாப் ஜி.எச்.முஹம்மது கோயா, கேரள மாநிலத்தின் முதலமைச்சராக கடந்த 1979 அக்டோபர் முதல் 1979 டிசம்பர் மாதம் வரை, அதாவது 53 நாட்கள் இருந்துள்ளார். குறைந்த நாட்களே முதலமைச்சராக இருந்தபோதும், கேரளாவில் முன்னேற்றத்திற்கு இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். கேரள மாநிலம் தற்போது கல்வி அறிவில் நாட்டில் முதன்மை மாநிலமாக திகழ்வதற்கு முக்கிய காரணம், ஜனாப் முஹம்மது கோயா அறிமுகப்படுத்திய கல்வித் திட்டங்களே ஆகும். ஜனாப் முஹம்மது கோயா கேரளாவில் துணை முதலமைச்சராகவும் இருந்து நல்ல பணிகளை ஆற்றியுள்ளார். 

ஜனாப் எம்.ஓ.ஹசன் பாரூக்:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சர் ஜனாப் எம்.ஓ.ஹசன் பாரூக் மூன்று வரை தேர்வு செய்யப்பட்டு, சிறப்பான பணிகளை ஆற்றியுள்ளார். புதுச்சேரியின் முதலமைச்சராக தனது 29வது வயதில் ஜனாப் எம்.ஓ.ஹசன் பாரூக் தேர்வு செய்யப்பட்டபோது, நாட்டில் தேர்வு செய்யப்பட்ட முதல் இளம் முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார். புதுச்சேரியில் கல்வி, மருத்துவத் துறைகளில் நல்ல வளர்ச்சி ஏற்பட, இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். இரண்டு முறை மத்திய அமைச்சராகவும் ஹசன் பாரூக் இருந்துள்ளார். சவுதி அரேபியாவின் இந்திய தூதராகவும், ஜார்க்கண்ட், கேரளா ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் இவர் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஜனாப் முஹம்மது அலிமுத்தீன்:

தற்போது கலவர பூமியாக மாறியுள்ள மணிப்பூரில், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருந்து, மாநிலத்தின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் சிறப்பான சேவை ஆற்றியுள்ளார் என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கிறது அல்லவா. ஆம், மணிப்பூர் மாநிலத்தின்  முதலமைச்சராக ஜனாப் முஹம்மது அலிமுத்தீன்,  கடந்த 1972-ஆம் ஆண்டு முதல், 1973 ஆம் ஆண்டு வரையும் பின்னர், 1974ஆம் ஆண்டிலும் இரண்டு முறை இருந்துள்ளார். 7 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், மணிப்பூரின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய பணிகள் இன்றும் மக்கள் நினைவில் வைத்துள்ளார்கள். 

மணிப்பூரில் முதல் மருத்துவ கல்லூரி, முதல் பல்கலைக்கழகம் ஆகியவற்றை கொண்டு வந்தவர் ஜனாப் முஹம்மது அலிமுத்தீனே. அத்துடன், மணிப்பூர் சட்ட ஆணையம் மற்றும் மணிப்பூர் தேர்வு வாரியம் ஆகியவற்றையும் இவர் கொண்டு வந்தார். மணிப்பூர் மாநில முதலமைச்சராக மட்டுமல்லாமல், அம்மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராகவும் ஜனாப் முஹம்மது அலிமுத்தீன் சேவை ஆற்றியுள்ளார். 

ஜனாப் அப்துல் ரஹ்மான் அந்துலே:


காங்கிரஸ் தலைவர்களில் புகழ்பெற்ற ஜனாப் அப்துல் ரஹ்மான் அந்துலே, மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு வரை சேவை ஆற்றியுள்ளார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் அன்பை பெற்ற இவர், மாநில சட்ட அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் ஜனாப் அப்துல் ரஹ்மான் அந்துலே பணிபுரிந்து, போலியோ ஒழிப்பில் மிகப்பெரிய அளவுக்கு தனது சேவையை ஆற்றியுள்ளார். ஏழைகளுக்கு இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிராவில் அறிமுகம் செய்து ஏழை மக்களின் அன்பையும் ஜனாப் அப்துல் ரஹ்மான் அந்துலே பெற்றார். அத்துடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் சிறப்பான முறையில் தனது பணிகளை நிறைவேற்றியுள்ளார்.

ஜனாபா சையிதா அன்வாரா தைமூர்:


அசாம் மாநிலத்தின் பெண் முதலமைச்சராக பணிபுரிந்த பெருமை முஸ்லிம் பெண்மணியான ஜனாபா சையிதா அன்வாரா தைமூரையே சேரும்.  இவர் கடந்த 1980 முதல் 1981ஆம் ஆண்டு வரை சுமார் 206 நாட்கள் அசாம் மாநில முதலமைச்சராக இருந்துள்ளார். அசாமின் ஜி.டி.பி. வளர்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஜனாபா சையிதா அன்வாரா தைமூர் ஆற்றிய பணிகள் ஏராளமானவை. 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் ஜனாபா சையிதா அன்வாரா தைமூர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வரலாறு திரும்புமா:

ராஜஸ்தான், பீகார்,  கேரளா, புதுச்சேரி, மணிப்பூர், மகாராஷ்டிரா, அசாம் என பல மாநிலங்களில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு மிகச் சிறப்பான முறையில் அந்த மாநிலங்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் சேவை ஆற்றியுள்ளார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி தற்போது அதிகமாக இருக்கும் நிலையில், நாட்டின் ஒரு மாநிலத்தில் மீண்டும் ஒரு முஸ்லிம் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும் அனைத்து சமூக மக்களின் அன்பை பெற்று ஒரு முஸ்லிம் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் தனது பங்களிப்பை வழங்கி, இஸ்லாமிய சமூகத்திற்கு பெருமை தேடி தர வேண்டும். அந்த வகையில் வரலாறு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பு.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: