Thursday, July 20, 2023

ஓரங்கட்டப்படும் முஸ்லிம் சமுதாயம்....!

              அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்படும்                                       முஸ்லிம் சமுதாயம்....!

நாட்டில் 20 கோடிக்கும் அதிகமான  முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  எனினும், இந்திய நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் தற்போது இல்லாமல் உள்ளது. ஏற்கனவே முஸ்லிம் சமுதாயம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்த நிலையில், தற்போது ஒன்றிய பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் நாள்தோறும் சந்திக்கும் நெருக்கடிகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. 

முஸ்லிம் சமுதாயத்தை குறிவைத்து இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. கல்வி, அரசியல், சமுக மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முஸ்லிம்களின் வளர்ச்சியை தடுக்க  ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பாசிச அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்று வருகின்றன.  முஸ்லிம் சமுதாயத்தை நசுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாஜக உள்ளிட்ட அமைப்புகள் இயங்கி வரும் நிலையில், முஸ்லிம்களுக்கு ஆதரவாக நாட்டில் ஒருசில தலைவர்கள் மட்டுமே குரல் கொடுத்து வருகிறார்கள். நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லிம்களின் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதால், அந்த அவைகளில், நாட்டில் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூற வாய்ப்பு ஏற்படுவதில்லை. இதன் காரணமாக முஸ்லிம்களின் குரல்கள் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டுவதில்லை. 

ஓரங்கட்டப்படும் முஸ்லிம்கள்:

முஸ்லீம் மக்கள் அதிகமாக உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில்,  முஸ்லிம் சமூகத்தின் தேர்தல் பலத்தை நசுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின்  எல்லை நிர்ணய நடவடிக்கையின் மூலம் முஸ்லிம் மக்கள் தொகை மாற்றப்படுகிறது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில்  முஸ்லிம் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை தடுப்பதற்காக கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த எல்லை நிர்ணய மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

மக்கள்தொகை மாற்றத்தைத் தவிர, முஸ்லீம் பெரும்பான்மை மக்கள்தொகை கொண்ட தொகுதிகள் பொதுவாக இந்து தலித்துகளுக்கு  ஒதுக்கப்படுகின்றன. இதன் விளைவாக, இந்தியாவில் உள்ள முஸ்லீம்களில் தலித் இல்லை என்பதால், அத்தகைய தொகுதி அவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் ஒரு முஸ்லிமை ஒருபோதும் தேர்ந்தெடுக்க முடியாது. முஸ்லிம்கள் எம்.பி.க்களாகவும் எம்.எல்.ஏ.க்களாகவும் வர முடியாத நிலையில், முஸ்லிம்களின் குரல்கள் நாட்டின் அரசியல் செயல்பாட்டில் இருந்து பறிக்கப்படுகின்றன. இந்தியாவில்  ஜனநாயகம் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் புத்திசாலித்தனமான விளையாட்டுகள் இவை. 

சில தொகுதிகள் உங்கள் பார்வைக்கு: 

மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, பீகாரின் கோபால்கஞ்சில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 17 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, அதே சமயம் இங்கு தலித்துகள் 12 சதவீதம் மட்டுமே உள்ளனர். ஆனால் இந்த தொகுதி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் முஸ்லிம்கள் 56 சதவீதம் மற்றும் தலித்துகள் 12 சதவீதம் உள்ளனர். அதேநேரத்தில்  இந்த தொகுதியும்  தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூரில் உள்ள நாகினா தொகுதியில் 43 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். இங்கு தலித்துகளின் எண்ணிக்கை 21 சதவீதம் மட்டுமே. ஆனால் இந்த தொகுதி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கட்ச் மற்றும் அகமதாபாத் மேற்குத் தொகுதிகளும் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளாக உள்ளன.  இந்த தொகுதிகள் ஒருசில  எடுத்துக்காட்டுதான். இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம். 

முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளை  தலித் பிரிவில் ஒதுக்குவது என்பது அதிகாரத்தில் இருப்பவர்கள் விளையாடும் சாதுர்யமான விளையாட்டாகும். இதன் விளைவாக, அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்தை அடைய முடியாது.

மற்றொரு விளையாட்டு:

மற்றொரு அரசியல் விளையாட்டும் நடத்தப்பட்டு வருகிறது.  தலித் மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகள் இடஒதுக்கீடு இல்லாத பிரிவில் சேர்க்கப்படுகிறது. பீகாரில் உள்ள அவுரங்காபாத் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதிகளில் இதற்கு உதாரணங்களாகும். ஔரங்காபாத்தில் அதிக எண்ணிக்கையிலான தலித்துகள் உள்ளனர். ஆனால் இந்த இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதேபோல், ரேபரேலியில் 30 சதவீத தலித் மக்கள் உள்ளனர். ஆனால் அது ஒதுக்கப்படாத தொகுதியாக உள்ளது.  இப்படி நாட்டின் பல மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இந்த அரசியல் விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. 

கமிட்டிகள் பரிந்துரை: 

கடந்த 2005ஆம் ஆண்டு மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டியும், பின்னர் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியின் அறிக்கையும் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, தேர்தலில் முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளில் ஒதுக்க வேண்டும் என்றும் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. 

தலித்-பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் அத்தகைய இடங்களை அவர்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. எல்லை நிர்ணய தேர்தல் நடவடிக்கையின் மூலம் முஸ்லிம் பெரும்பான்மை இடங்களை எஸ்சி பிரிவில் ஒதுக்கவும் சச்சார் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், சச்சார் கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகும், நிலைமை மாறாமல் உள்ளது.

மேற்கு வங்கம், அசாம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் 9 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு முஸ்லிம் மக்கள் தொகை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.  ஆனால் இந்த தொகுதிகள்முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படவில்லை. இதேபோன்று, ஜம்மு-காஷ்மீரில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இல்லை. 

வாக்கு வங்கியாக  முஸ்லிம்கள்:

நாடு விடுதலை அடைந்தபிறகு, இந்திய முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் ஒரே இயக்கமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்து வருகிறது. எனினும், அதன் வளர்ச்சியில், அதன் வலிமையில் சமுதாயம் சிறிதும் அக்கறை செலுத்தவில்லை. மாறாக பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி, அரசியல் ரீதியாக செயல்பட்டு வருகின்றன. இதனால் முக்கிய கட்சிகள், இந்திய முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்டுத்தி கொண்டு அரசியல் இலாபம் பெற்று வருகின்றன. 

குறிப்பிட்ட சில கட்சிகள் மட்டுமே, முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கின்றன. எனினும், முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்பட அவர்களுக்கு தனித் தொகுதிகள் இல்லாத காரணத்தால், பொது தொகுதிகளில் நிற்க வேண்டிய கட்டாய சூழ்நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக, தேர்தலில் கடும் சவால்களை முஸ்லிம் வேட்பாளர்கள் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு ஏற்ப தேர்தல் நடைமுறைகள் இல்லாத காரணத்தால், முஸ்லிம்களின் வாக்குகளை பெற, முஸ்லிம் மதகுருமார்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள். அவர்களின் ஆதரவு பெற்றாலே போதும் என்ற எண்ணமும் அரசியல் கட்சிகளிடையே இருந்து வருகிறது. 

பாஜகவின் சூழ்ச்சி:

நாட்டில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க பாஜக திட்டங்களையும், சூழ்ச்சிகளையும் அரங்கேற்றி வருகிறது. அந்த வகையில், பாஜகவின் பார்வையில், முஸ்லிம்களுக்கோ அல்லது அதன் தலைமைக்கோ நாட்டின்  அரசியலில் இடம் இல்லை.  முஸ்லீம்கள் இல்லாத 80-20 ஃபார்முலாவின் அடிப்படையில் மாநிலங்களையும் நாட்டையும்  ஆட்சி செய்ய பாஜக செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதற்காக வாக்குகளைப் பெற்றுத் தரக்கூடிய இடைத்தரகர்களாக மட்டுமே முஸ்லிம்களை  பயன்படுத்திக் கொள்ள பாஜக விரும்புகிறது.  முஸ்லீம்களுடன் இந்த வாக்கு விளையாட்டை பாஜக விளையாடும்போது, இந்து சமூகத்துடன் அதைச் செய்வதில்லை. இது பாஜக  ஆடும் கபட நாடகமாகும்.

முஸ்லிம்கள் விழித்துக் கொள்ள வேண்டும்: 

இந்தியாவில் பெரும்பான்மை சமூகத்திற்கு மட்டுமே அரசியல் ஜனநாயகம் இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தென்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், நாட்டில் முஸ்லிம்களின் எதிர்கால நிலை என்னவாகும்?   தங்களது சொந்த நாட்டிலேயே நிரந்தரமாக ஒதுக்கி வைப்பதற்கான ஒரு மோசமான திட்டம் தற்போது நடைபெற்று வருவதை முஸ்லிம்கள் உணர வேண்டும். மிகவும் சவால்கள் நிறைந்த நெருக்கடியான சூழ்நிலைகள் தற்போது நாட்டில் நிலவி வருவதால், அதை எதிர்கொள்ள முஸ்லிம் சமுதாயம் தயாராக இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் சமூகம் இன்னும் ஆழ்ந்த உறக்கத்திலும் கனவில் இருந்துக் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய நெருக்கடிகளில் இருந்து மீண்டு வர முஸ்லிம்கள் விழித்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: