Thursday, July 20, 2023

அறிவுசார் குழு அவசியம்....!

                        முஸ்லிம்களுக்கான 

         அறிவுசார் குழு மிகவும் அவசியம்....!

இந்திய முஸ்லீம்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நாட்டில் உள்ள தனித்தனி அமைப்புகளால், அவ்வவ்போது தீர்வுகள் காணப்படுகின்றன.  ஆனால், இப்படி காணப்படும் தனித்தனி தீர்வுகள், முழுமையான தீர்வுகளாக இருப்பது இல்லை. அதன் காரணமாக, முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன. 

சமூக, அரசியல், பொருளாதார விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்க நாட்டில் உள்ள பெரிய முஸ்லிம் அமைப்புகளில், அரசியல், பொருளாதார வல்லுநர்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. உலகில் அதிகமாக முஸ்லிம்கள் வாழும் இரண்டாவது நாடாக இந்தியா இருந்து வருகிறது. எனினும் முஸ்லிம் மக்களின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க நல்ல நிபுணர் மன்றங்கள் நாட்டில் இல்லை. இதனால் அவ்வப்போது  ஏற்படும் பிரச்சினைகள், சிக்கல்கள் ஆகியவற்றிக்கு தீர்வு காண நல்ல ஆலோசனைகள் நிபுணர்களால் வழங்கப்படுவதில்லை. 

அறிவுசார் அமைப்பு:

நாட்டில் முஸ்லிம்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் அறிவார்ந்த மற்றும் சித்தாந்த முறையில் ஆலோசனைகள் கிடைப்பது இல்லை. இதனால், நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் விழி பிதுங்கி தனியாக நிற்கும் நிலை உள்ளது. ஒருசில இஸ்லாமிய அமைப்புகள் நல்ல ஆலோசனைகளை வழங்கினாலும், அது அனைத்து தரப்பு முஸ்லிம்களிடமும் சென்று சேருவதில்லை. 

எனவே, முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு அளிக்கும் வகையில் நாட்டில் அறிவுசார் அமைப்பு ஒன்று அமைக்கப்பட வேண்டும். விஞ்ஞானி ஆக, சமூக விவகாரங்களில் நிபுணராக ஆக, அறிவாளி ஆக, வெற்றிகரமான தொழிலதிபராக அல்லது தலைவனாக ஆக, எல்லா மனிதர்களும் செய்ய வேண்டியது கடின உழைப்பாகும். ஆனால் நம் முன்னுரிமையின்படி எவ்வளவு வளங்களை முதலீடு செய்ய வேண்டும் என்பதில் நமக்குள் பல தவறான புரிதல்கள் உள்ளன. நமது தேவைகள் ஏராளம், நமது வளங்கள் குறைவு. ஆபத்துகள், சவால்கள் அதிகம். நேரம் குறைவு. எனவே, எல்லா விஷயங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவது மட்டுமேயான ஒரு அமைப்பை முஸ்லிம்கள் ஏற்படுத்த வேண்டும். அது அறிவுசார் அமைப்பாக இருக்க வேண்டும். 

சிக்கல்களை சந்திக்கும் முஸ்லிம் சமூகம்:

நாட்டில் உள்ள 30 வெவ்வேறு மாநிலங்களில் 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் பரவி வாழ்ந்து வருகிறார்கள். எனவே, அவர்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களும் அந்தந்த மாநிலங்களுடன் தொடர்புடையவை. நாட்டில் வாழும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தங்களை குறித்த அனைத்து தகவல்களையும் சரியான முறையில் திரட்டி, பொது நிகழ்ச்சிகளில் தங்களின் பிரச்சினைகள் குறித்து பேசுகிறார்கள். புதிய திட்டங்கள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை எடுத்துரைக்கிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் மத்தியில் இத்தகைய ஒரு நிலை இல்லை. 

இந்திய முஸ்லீம்களின் வளர்ச்சி நிலை பற்றிய தகவல்களை சேகரிப்பதில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எந்த ஆர்வமும் அக்கறையும் இல்லை. நாட்டில் உள்ள பெரும்பாலான ஊடகங்களும் முஸ்லிம்களின் வறுமை, அவர்களின் வேலைவாய்ப்பு, சமூக, பொருளாதார நிலை ஆகியவற்றை குறித்து எழுதுவதில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. எனவே, முஸ்லிம்களின் சிக்கல்கள் குறித்து  பெரும்பான்மை மக்கள் அறிய வாய்ப்பு கிட்டுவதில்லை. 

முஸ்லிம்களே செய்ய வேண்டும்:

எனவே, தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முஸ்லிம்களே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் முஸ்லிம்களின் பொருளாதார, சமூகப் பிரச்னைகள் குறித்து நிபுணர்கள் குழுவை அமைத்து, மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரம், கிராமம், பகுதி முஸ்லிம்கள் பற்றிய தரவுகளையும் உண்மைகளையும் சேகரிக்கும் பாரம்பரியத்தை ஏற்படுத்த வேண்டும்.

இப்போதை இணைய யுகத்தில் தகவல்களைச் சேமித்து ஒழுங்கமைக்க நேரமும் வளமும் தேவைப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் எல்லா மாவட்டங்களிலும் இதுபோன்ற பணிகள் நடந்தால் நல்ல தகவல்களை நாம் கையில் வைத்துக் கொள்ள முடியும். இதன்மூலம், நாட்டில் உள்ள முஸ்லிம்களின் உண்மையான நிலைமை குறித்து ஆட்சியாளர்களுக்கும், பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றத்திற்கும் நாம் எடுத்துக் கூறலாம். நாட்டில் வாழும் முஸ்லிம்களின் உண்மையான நிலைமையை கண்டு, நல்ல சமூக சிந்தனையாளர்கள் அதிர்ச்சி அடைவார்கள். முஸ்லிம்களின் வளர்ச்சிக்காக குரல் கொடுப்பார்கள். இதற்கு, நீண்ட கால திட்டங்கள் மற்றும் நீண்ட கால இலக்குகள் திட்டமிடப்பட்ட மற்றும் முறையான பரிசீலனை மற்றும் முறையான ஆய்வு தேவை. இதில் பொருளாதார மேம்பாடு பற்றிய பார்வை ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு அல்ல, ஆயிரக்கணக்கான மக்களுக்காக உருவாக்கப்பட வேண்டும். 

வறுமையில் முஸ்லிம் சமூகம்:

வெறும் 40 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாத இளைஞர்கள் கடுமையான வறுமையிலிருந்து கோடீஸ்வரர்களாக உயர்ந்துள்ளனர். ஆனால் முஸ்லிம் இளைஞர்கள் இன்னும் வறுமையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேலைவாய்ப்புகளுக்காக ஒவ்வொரு அலுவலகங்களின் படிகளை ஏறி இறங்குகிறார்கள். அல்லது சிறு வணிகம் செய்து தங்களது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள். 

எனவே, இந்திய முஸ்லிம்கள் குறித்த சரியான தரவுகள் திரப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்கு நூற்றுக்கணக்கான மசூதிகள் மற்றும் மதரஸாக்களின் உதவிகளை முஸ்லிம் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீண்ட காலத் திட்டங்கள் மற்றும் நீண்ட கால இலக்குகளுக்கு, ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மக்களுக்கும் பொருளாதார மேம்பாடு பற்றிய பார்வையை உருவாக்குவதற்கு, திட்டமிட்ட மற்றும் முறையான ஆலோசனை மற்றும் முறையான ஆய்வு தேவைப்படுகிறது. பொருளாதார மற்றும் சமூக எதிர்காலம், அடிமட்டத்தின் முறையான ஆய்வுகளில் கவனம் செலுத்தாததால் முஸ்லிம் சமுதாயம் எந்தவித முன்னேற்றத்தையும் காணாமல் பின்தங்கியே உள்ளது. இந்த தவற்றை நாம் நிறுத்த  வேண்டும். அதற்காக முஸ்லிம் திட்ட கமிஷன் அதாவது முஸ்லிம்கள் மத்தியில் அறிவுசார் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: