Monday, July 10, 2023

அமெரிக்காவில் இஸ்லாம்....!

 

மெரிக்காவில் இஸ்லாம் …..!

10 நகரங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.....!

உலகம் முழுவதும் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும், இஸ்லாமிய மார்க்கம், நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில், இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு காரணங்களால் அமைதியை இழந்து தவிக்கும் அமெரிக்க மக்கள், அதற்கான தீர்வை தேடி அலைகிறார்கள். அமெரிக்க மக்களின் இந்த தேடலுக்கு இஸ்லாமிய வாழ்க்கை நெறி நல்ல வழியை காண்பித்து  அத்துடன் தீர்வையும் தருகிறது. இதனால் இஸ்லாமிய நெறிகளால் கவரப்பட்டுவரும் அமெரிக்கர்கள், இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

 



அமெரிக்காவில் இஸ்லாம்:

அமெரிக்கா முழுவதும் முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல நகரங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்களாக இருந்து வருகிறார்கள்.

குறிப்பாக, தலைநகர் வாஷிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது.

வாஷிங்டன்னில் கடந்த 10 ஆண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அங்கு கிட்டதட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

10 நகரங்களில் முஸ்லிம்கள்:

வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட 10 நகரங்களில் முஸ்லிம்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் ஹாம்டிராமக் நகரில் 60 சதவீத மக்கள் முஸ்லிம்களாக இருந்து வருகிறார்கள். வங்கதேசம், யமன் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் இங்கு வசித்து வருகிறார்கள். இங்கு அமெரிக்க இஸ்லாமிக் சென்டர் மற்றும் மிகப்பெரிய பள்ளிவாசல் ஆகியவை உள்ளன. இந்த நகரின் மேயராக அமீர் காலிப் என்ற முஸ்லிம் தேர்வு செய்யப்பட்டு மிகச் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார்.

 


இதேபோன்று, டியர்பார்ன் நகரிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு வசிக்கும் மக்களில் 40 சதவீத பேர் முஸ்லிம்களாக உள்ளனர்.

இஸ்லாமிக் சென்டர், அமெரிக்காவின் மிகப்பெரிய பள்ளிவாசல் ஆகியவை டியர்பார்ன் நகரில் இருந்து வருகிறது.

டல்லாஸ் – அட்லான்டா:

மற்றொரு நகரமான டல்லாஸிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் 7வது நகரமாக டல்லாஸ் இருந்து வருகிறது. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இங்கு இஸ்லாமிய கல்வி நிலையங்கள், பள்ளிவாசல்கள் அதிகமாக உள்ளன. மேலும் முஸ்லிம் சமுகத்திற்கு பல்வேறு சேவைகள் வழங்கும் சென்டர்களும் இங்கு உள்ளன.

இதேபோன்று, அட்லான்டா நகரில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். அமெரிக்காவில் அதிகமாக வாழும் முஸ்லிம்கள் கொண்ட 6-வது நகரமாக அட்லான்டா உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. இங்கு வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் வங்கதேசம், பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேகமான வளர்ச்சி:

அமெரிக்காவில் இஸ்லாமிய மார்க்கம்  மிக வேகமாக வளர்ச்சி அடையும் நகரங்களில் ஒன்றாக பிலடெல்பியா இருந்து வருகிறது. இங்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக இங்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

மற்றொரு முக்கிய நகரமான சிகாகோவிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு சுமார் 4 லட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். அமெரிக்காவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நான்காவது நகரமாக சிகாகோ உள்ளது. இங்கு இஸ்லாமிய உணவு விடுதிகள், இஸ்லாமிக் சென்டர்கள் என இஸ்லாமியர்களுக்கு பயன் அளிக்கும் பல உள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 3 லட்சத்து 71 ஆயிரம் முஸ்லிம்கள் வசித்து வருகிறார்கள். இங்கு 40க்கும் மேற்பட்ட பள்ளிவாசல் உள்ளன. இங்கு வாழும் முஸ்லிம்கள், சமூக, பொருளாதார மற்றும் பல்வேறு சமூக சேவைகளிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.

நெம்பர் ஒன் சிட்டி நியூயார்க்:

இதேபோன்று ஹியூஸ்டன் நகரில் கிட்டதட்ட 5 லட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு 209 பள்ளிவாசல் உள்ளன. அத்துடன் அமெரிக்காவின் மிகப்பெரிய பள்ளிவாசலும் இங்கு உள்ளது அங்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் மிக முக்கிய நகரமான நியூயார்க் நகரில் சுமார் 10 லட்சம் முஸ்லிம்கள் வசித்து வருகிறார்க்.ள கடந்த 5 ஆண்டுகளில் நியூயார்க் நகரில் முஸ்லிம்களின் தொகை 29 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் முதன்மை நகரமாக நியூயார்க் இருந்து வருகிறது.

இஸ்லாத்தில் இணையும் அமெரிக்கர்கள்:

நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்களில் இஸ்லாமிய மார்க்கம் வேகமாக பரவி வரும் நிலையில், அமெரிக்காவின் மற்ற நகரங்களிலும் இஸ்லாமிய நெறியால் மக்கள் கவரப்பட்டு வருகிறார்கள். இதனால், மேற்குறிப்பிட்ட 10 நகரங்களில் மட்டுமல்லாமல், பிற அமெரிக்க நகரங்களிலும் இஸ்லாமிய மார்க்கம் ஒளி வீச தொடங்கியுள்ளது.


-    எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: