Thursday, July 6, 2023

தனிமை.....!

 

தனிமை வரமல்ல மிகப்பெரிய ஆபத்து.....!

உலகம் முழுவதும் மக்களில் தனிமை விரும்பிகள் நிறைய பேர் இருந்து வருகிறார்கள். மக்களோடு இணைந்து செயல்படாமல், அவர்களோடு, பேசி மகிழ்ச்சி அடையாமல், எப்போதும் தனிமையாக இருப்பது சிலருக்கு பிடித்தமான பழக்கமாக இருந்து வருகிறது. தனிமை ஒரு வரம் என்று தனிமை விரும்பிகள் நினைத்துக் கொள்கிறார்கள். இதனால் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். தனிமை ஒரு விதத்தில் சிறிய மகிழ்ச்சியை தந்தாலும், பல நேரங்களில் மிகப்பெரிய ஆபத்துகளை  தனிமை ஏற்படுத்திவிடும்.




தனிமைக் குறித்து இஸ்லாம்:

இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளில் தனிமைக்கு மிகப்பெரிய அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. மனிதன் எப்போதும் தனியாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. தனிமை ஒரு மனிதனை பாவச் செயல்களை செய்ய தூண்டுகிறது என்ற கருத்தை இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் அழமாக தெரிவிக்கிறார்கள்.

“தனிமையில் தனது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு” என திருக்குர்ஆன் கூறுகிறது. மேலும், யார் தனிமையில் இறைவனை அஞ்சுகின்றாரோ அத்தகையவருக்கு மகத்தான, பிரமாண்டமான கூலியைத் தயாரித்து வைத்திருப்பதாக இறைவன் வாக்குறுதி வழங்குகின்றான்.

தனிமை ஒருவித மன நோய் என்றும் மனித வாழ்க்கையில் ஒருவர் எப்போதும் தனிமையாக இருக்கவே கூடாது என்றும் அறிஞர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதன் காரணமாகதான், கூட்டு வாழ்வியல் முறையை இஸ்லாம் ஆதரிக்கிறது. தனியாக தொழுகை மேற்கொள்வதைவிட, ஜமாத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கூட்டுத் தொழுகைக்கு இஸ்லாத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பள்ளிவாசலுக்கு சென்று மக்களோடு இணைந்து ஜமாத் தொழுகை மேற்கொள்வது மிகச் சிறந்த நடைமுறை என்றும், அதன்மூலம், மற்ற மக்கள் மத்தியில் ஒரு அன்பு பாலம் இணைகிறது என்றும் இஸ்லாமிய அறிஞர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

தனிமை ஒரு மனிதனை பாவச் செயல்களை செய்ய தூண்டுகிறது. தவறான எண்ணங்களை எண்ண தனிமை காரணமாக உள்ளது. எனவே தனிமையை இஸ்லாம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை.

தனிமை குறித்து ஆய்வு:

தனிமை குறித்தும் அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அண்ட் டிராபிகல் மெடிசினில் அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் ஐரோப்பிய இதய இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

 

நீரிழிவு நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தனிமையில் இருக்கும் நோயாளிகள் அல்லது சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு, இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் 37 முதல் 73 வயதுக்குட்பட்ட 18 ஆயிரத்து 509 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், இருதய நோய் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், ஆய்வில் பங்கேற்ற அனைவரையும், தனிமை மற்றும் தனிமைப்படுத்தல் மூலம் மதிப்பிடப்பட்டது, அதிக ஆபத்துள்ள அம்சங்கள் ஒவ்வொன்றும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் தனிமையாக இருப்பது அதிக ஆபத்துகளை ஏற்படுத்தும் என தெரியவந்தது.

தனியாக வாழ்வது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை மாதத்திற்கு ஒரு முறைக்கும் குறைவாகவே சந்திப்பது, திருமணம் உள்ளிட்ட நல்ல நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளாமல் இருப்பது மனித வாழ்க்கையை சீர்குலைத்துவிடும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

உடல் செயல்பாடு, உணவு, மது, புகைபிடித்தல் மற்றும் இரத்தக் கட்டுப்பாடு உள்ளிட்ட உறவுகளை பாதிக்கக்கூடிய அம்சங்களைச் சரிசெய்த பிறகு, தனிமை, தனிமைப்படுத்தல் மற்றும் இருதய நோய்களுக்கு இடையிலான தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு உள்ளிட்ட அம்சங்களும் ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆய்வில், தனிமை ஒரு மனிதனை இருத நோயை உருவாக்கிவிடும் என்றும் பக்கவாதம் உள்ளிட்ட மற்ற பிரச்சினைகளும் ஏற்படும் என்றும், தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயாளிகளிடையே, உணவு, உடற்பயிற்சி, புகைபிடித்தல் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றை விட தனிமை இதய நோய்க்கான பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று  ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வேண்டாம் தனிமை:

பல்வேறு வாழ்க்கை முறை பழக்கங்களை விட தனிமை இருதய நோய்க்கான முன்னோடி காரணமாக உள்ளது என்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு, உடல்ரீதியான ஆபத்து காரணங்களின் விளைவு (அதாவது மோசமாக கட்டுப்படுத்தப்பட்ட இரத்த சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, புகைபிடித்தல். மற்றும் மோசமான சிறுநீரக செயல்பாடு) தனிமையில் இருப்பவர்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கிறது என்றும் ஆய்வு ஆசிரியர் லு குய் கூறியுள்ளார். நீரிழிவு நோயாளிகளின் இதய ஆரோக்கியத்திற்கு சமூக தொடர்புகளின் தரம் மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீரிழிவு நோயாளிகளுக்கு இருதய நோய்க்கான ஆபத்து அதிகமாக உள்ளதால், இத்தகைய மக்கள் தனிமையாக ஒருபோதும் இருக்கக் கூடாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

குடும்பத்தில் ஒருவர் எப்போதும் தனிமையாக இருந்தால், அவருக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக, முதியவர்களை தனிமையாக இருக்க அனுமதிக்கக் கூடாது. எப்போதும் கண்காணிப்பில் இருக்கும்படி செய்ய வேண்டும். இதன்மூலம் மட்டுமே, தனிமையால் ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்க முடியும் என்பது மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையாக உள்ளது.

 

-          எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

 

No comments: